search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கலெக்டர் கண்ணன்
    X
    கலெக்டர் கண்ணன்

    தாட்கோ மூலம் பொருளாதார மேம்பாட்டு திட்டங்களுக்கு விண்ணப்பிக்கலாம்- கலெக்டர் தகவல்

    தாட்கோ திட்டம் மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான பொருளாதார மேம்பாட்டு திட்டங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் கண்ணன் தெரிவித்துள்ளார்.
    விருதுநகர்:

    தாட்கோ திட்டம் மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான பொருளாதார மேம்பாட்டு திட்டங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் கண்ணன் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

    நடப்பு வருட அரசாணையில் தாட்கோ மூலம் பொருளாதார மேம்பாட்டு திட்டங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்களுக்கு வயது வரம்பு 18 முதல் 65 வயது வரை இருக்க வேண்டும் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.42 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

    இதேபோன்று பயனாளிகளின் தகுதிக்கு ஏற்பவும், தேர்வு செய்யப்படும் திட்டத்திற்கு ஏற்பவும், திட்ட தொகையை வங்கிகள் அதிகப்படுத்தி கொள்ளலாம் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

    அதிகபட்சமாக தாட்கோ மானியம் வழங்குவதற்கு திட்டத்தொகையில் உச்சவரம்பு ரூ.7½ லட்சம் வரை நிர்ணயிக்கப்பட்டு, அதிகபட்சமாக ரூ.2½ லட்சம் வரை மானியத்துடன் வங்கி கடன் வழங்க பரிந்துரைக்கப்படுகிறது.

    பொருளாதார மேம்பாட்டுத்திட்டத்தில் நிலம் வாங்கும் திட்டம், நிலம் மேம்பாட்டு திட்டம், துரித மின் இணைப்பு திட்டம், தொழில் முனைவோர் திட்டம், இளைஞர்களுக்கான சுய வேலைவாய்ப்புத்திட்டம், சுய உதவிக்குழுக்களுக்கான பொருளாதார கடனுதவியில் ரூ.50 ஆயிரம் மானியம் வழங்கும் திட்டம், கலெக்டரின் விருப்புரிமை நிதி, தாட்கோ தலைவரின் விருப்புரிமை ஆகியவற்றின் கீழ் ரூ.50 ஆயிரம் வழங்குதல், இந்திய குடியுரிமைப்பணி தமிழ்நாடு தேர்வாணையத்தின் முதல் தகுதி தேர்வு எழுதுவதற்காக ரூ.50 ஆயிரம் நிதி உதவி வழங்குதல், சட்ட பட்டதாரிகள், பட்டயக்கணக்கர், செலவு கணக்கர், நிறுவனச்செயலர் ஆகியோருக்கு அலுவலகம் அமைக்க ரூ. 50 ஆயிரம் நிதி உதவி ஆகியவை வழங்கப்பட உள்ளது.

    மேற்கண்ட அனைத்து திட்டங்களுக்கும் விண்ணப்பதாரர் முகவரி, சாதி சான்றிதழ், இருப்பிட சான்றிதழ் ஆகியவை வழங்கப்பட்ட நாள், வழங்கப்படுவதற்கான காரணம் மற்றும் திட்ட அறிக்கை, பட்டா விண்ணப்பதாரர் மின்னஞ்சல் முகவரி ஆகிய ஆவணங்கள் விண்ணப்பத்துடன் இணைக்கப்பட வேண்டும்.

    தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி இல்லாதவர்களுக்கு விதிவிலக்கு அளிக்கப்படும். மேற்குறிப்பிட்ட ஆவணங்கள் தவிர திட்டங்களுக்கு ஏற்றாற்போல தேவைப்படும் ஆவணங்களையும் சமர்ப்பிக்க வேண்டும். மேற்கண்ட விவரங்களை இணையதளத்தில் கண்டிப்பாக பதிவேற்றம் செய்ய வேண்டும். விண்ணப்பம் பதிவேற்றம் செய்யப்பட்ட பின்பு விண்ணப்பதாரர்களுக்கு ஒப்புகை ரசீது வழங்கப்படும். இதற்காக விண்ணப்பம் ஒன்றிற்கு பயனாளிகளிடம் இருந்து ரூ.60 கட்டணமாக வசூலிக்கப்படும்.

    விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்தோ, நகலினையோ, கைப்பிரதி விண்ணப்பங்களையோ சமர்ப்பிக்க வேண்டியதில்லை.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×