என் மலர்
விருதுநகர்
வத்திராயிருப்பு மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளான கான்சாபுரம், கூமாபட்டி, மகாராஜபுரம், தம்பிபட்டி, இலந்தைகுளம், கோட்டையூர், சுந்தரபாண்டியம் ஆகிய பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
தற்போது இப்பகுதியில் பயிரிடப்பட்டுள்ள நெற்பயிர்கள் விளைந்து ஒரு சில பகுதிகளில் அறுவடைக்கு தயாராகவும், ஒரு சில பகுதிகளில் அறுவடை பணிகளும் நடைபெற்று வருகிறது.
இந்தபகுதியில் அறுவடை செய்யப்படும் நெல்களை அரசு நெல் கொள்முதல் நிலையத்தில் கொள்முதல் செய்தால் விவசாயிகளுக்கு ஓரளவிற்கு லாபம் கிடைக்கும்.
இந்நிலையில் அறுவடை பணிகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில் கான்சாபுரம் பகுதியில் நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படாததால் அப்பகுதி விவசாயிகள் நெல்லை கொள்முதல் செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர்.
நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படாததால் ஒரு மூடை ரூ. 1,350 போகவேண்டிய நிலையில் இடைத்தரகர்கள் வெறும் ரூ. 1,100 மட்டுமே நெல்லை கொள்முதல் செய்வதாக விவசாயிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.
உடனே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நெல் கொள்முதல் நிலையத்தை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் வத்திராயிருப்பு மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் பெரும்பாலான பகுதிகளில் நெல் கொள்முதல் நிலையம் இல்லை.
ஆதலால் தேவையான இடங்களில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்க சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள மாரனேரி அம்மாபட்டியை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். இவரது மனைவி ஜெயலட்சுமி. இவர்களது மகன் முகேஷ் (வயது 7).
இவன் அதே பகுதியில் உள்ள பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்தான். தற்போது கொரோனா பரவல் காலகட்டம் என்பதால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில் சிறுவன் முகேஷ் அதே பகுதியில் உள்ள கல் கிடங்கில் தேங்கி இருந்த தண்ணீரில் குளித்ததாக கூறப்படுகிறது.
அப்போது எதிர்பாராதவிதமாக கல் கிடங்கு தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்ததாக கூறப்படுகிறது. உடனே அவரது உறவினர்கள் சிறுவனின் உடலை மீட்டு சென்று எரித்து விட்டதாக கூறப்படுகிறது.
இயற்கைக்கு மாறான முறையில் யார் உயிரிழந்தாலும் போலீசுக்கு உரிய தகவல் தெரிவிக்க வேண்டிய நிலையில் முகேஷ் குடும்பத்தினர் போலீசுக்கு உரிய தகவல் கொடுக்காமல், பிரேத பரிசோதனை செய்யாமல் உடலை எரித்ததாகவும் புகார் எழுந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்த அம்மாபட்டி ஊர் தலைவர் சுப்புகாளை மாரனேரி போலீசுக்கு தகவல் தெரிவித்தார். அதன்படி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.
சிறுவன் முகேஷ் இறந்ததாக கூறப்படும் கல் கிடங்குக்கு சென்று ஆய்வு செய்தனர். பின்னர் உரிய தகவல் கொடுக்காமல் சிறுவன் உடலை எரித்ததாக சிறுவனின் தந்தை ராமகிருஷ்ணன், தாய் ஜெயலட்சுமி, உறவினர்கள் சுப்பிரமணியன், நாகராஜ் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
வழக்கமாக புத்தாண்டு தொடங்கினால் ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை பரிமாறிக்கொள்வதோடு டைரிகளையும் கொடுப்பார்கள். ஆனால் இந்த ஆண்டு கொரோனா ஊரடங்கு காரணமாக டைரி உற்பத்தி குறைந்ததால் பெரும்பாலானோர் நண்பர்கள், உறவினர்களுக்கு டைரி கொடுக்க முடியாமல் போய் விட்டது.
தமிழகத்தில் பட்டாசு நகரமாக திகழும் விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் ஏராளமான டைரி உற்பத்தி நிறுவனங்கள் உள்ளன. வழக்கமாக ஜூன் மாதம் இவர்கள் டைரி உற்பத்தியை தொடங்குவார்கள்.
ஆனால் இந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் கொரோனா ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் உற்பத்தியாளர்கள் டைரி தயாரிப்பு பணியை ஒத்திவைத்தனர். தீபாவளி பண்டிகைக்கு பிறகு தான் அவர்கள் டைரி உற்பத்தியை தொடங்கினார்கள். இந்த ஆண்டு காகித விலை குறைந்தாலும் டைரி உற்பத்தி விலை குறையவில்லை.
அதே சமயம் தேவை அதிகமாக இருந்த போதிலும் டைரி உற்பத்தி தாமதமாக தொடங்கியதால் 50 சதவீதம் டைரிகள் மட்டுமே தயாரிக்கப்பட்டது. இதனால் முழுமையாக டைரி உற்பத்தியை பூர்த்தி செய்ய முடியவில்லை.
ஒவ்வொரு ஆண்டும் பெரிய நிறுவனங்கள் முதல் சிறிய நிறுவனங்கள் வரை பெரிய டைரி உற்பத்தியாளர்களிடம் டைரிகளை கொள்முதல் செய்வார்கள்.
இந்த ஆண்டும் பல நிறுவனங்களிடம் இருந்து டைரி ஆர்டர்கள் வந்த போதிலும் உற்பத்தியாளர்களால் குறித்த நேரத்தில் டைரிகளை தயாரித்து வழங்க முடியாமல் போய் விட்டது. இதனால் டைரி உற்பத்தியாளர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
இதே போல் பல நிறுவனங்கள் மற்றும் கடைகள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு டைரிகளை கொடுக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. கடைகளுக்கும் குறைந்த அளவே டைரிகள் விற்பனைக்காக வந்துள்ளன. இந்த டைரிகளும் வேகமாக விற்பனை ஆனதால் டைரிகள் தட்டுப்பாடு ஏற்பட்டது. இந்த ஆண்டாவது தங்களுக்கு சிறப்பான ஆண்டாக அமையும் என்ற நம்பிக்கையில் டைரி உற்பத்தியாளர்கள் உள்ளனர்.
விருதுநகர்:
மதுரை சண்முகா நகரைச் சேர்ந்தவர் உமாதேவி (வயது71). இவர் விருதுநகர் நகராட்சி நிர்வாகத்திற்கு ஒரு கடிதம் அனுப்பி உள்ளார். அதில், விருதுநகர் ராமமூர்த்தி ரோடு பகுதியில் நாங்கள் முன்பு வசித்து வந்தோம்.
1989-ம் ஆண்டு அக்டோபர் மாதம் விருதுநகரில் புதிய பஸ் நிலையம் அமைக்க எங்களுக்கு சொந்தமான இடத்தை மாற்று இடம் தருவதாக கூறி நகராட்சி நிர்வாகம் கேட்டது.
விருதுநகரில் உள்ள பழைய குப்பை கிடங்கு பகுதியில் இடம் தருவதாக அப்போது உறுதி அளிக்கப்பட்டது. அதன்படி எங்களுக்கு சொந்தமான இடத்தை புதிய பஸ் நிலையம் அமைக்க வழங்கினோம். ஆனால் நகராட்சி நிர்வாகம் இதுவரை எங்களுக்கு மாற்று இடம் தரவில்லை.
இதுதொடர்பாக கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு நிலுவையில் உள்ளது. இதற்கிடையில் கடந்த 2016-ம் ஆண்டு எனது கணவர் பாலசுப்பிரமணியம் இறந்து விட்டார். தற்போது எனக்கும் 71 வயதாகி விட்டது. 31 ஆண்டுகளாக மாற்று இடம் தராமல் நகராட்சி நிர்வாகம் இழுத் தடித்து வருகிறது.
இன்னும் ஒரு மாதத்திற்குள் மாற்று இடம் வழங்காதபட்சத்தில் எங்களுக்கு சொந்தமான இடத்தை (புதிய பஸ் நிலையம்) வேலி அமைத்து அடைத்து விடுவோம் என குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து நகராட்சி அதிகாரிகள் கூறும்போது, மாற்று இடம் வழங்குவது தொடர்பாக மாவட்ட கலெக்டரின் ஒப்புதலுடன் நகராட்சி நிர்வாக ஆணையருக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
மேலும் புதிய பஸ் நிலையத்தில் தற்போதையை நிலமதிப்பு குறித்தும் கேட்கப்பட்டுள்ளது. விரைவில் இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.
சிவகாசி அருகே உள்ள விளாம்பட்டியை சேர்ந்தவர் குருராஜ் (வயது 29 ). இவருக்கு திருமணமாகி ஓராண்டு ஆகிறது.
இந்த நிலையில் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த குருராஜ் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து மாரனேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அருப்புக்கோட்டை:
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் 3-வது கட்ட பிரசாரத்தை திருச்சியில் தொடங்கி நேற்று இரவு விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில் முடித்தார். அருப்புக்கோட்டை தனியார் மண்டபத்தில் கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களுடன் கலந்துரையாடல் கூட்டம் நடத்தினார். அப்போது அவர் பேசியதாவது:-
எனக்கு கூட்டம் புதிதல்ல, உங்கள் தயவால் புகழும் புதிதல்ல. உங்கள் தயவால் 5 வயதில் இருந்தே புகழை அனுபவித்து வருகிறேன். உங்கள் ஆசி இருந்தால் தமிழ் நாட்டின் ரேகையை மாற்றி விடுவேன். எனது எஞ்சிய வாழ்க்கை உங்களுடன் தான்.
உங்கள் அன்பை உணர்கிறேன், அன்புக்காக கடமைப்பட்டு இருக்கிறேன். தமிழன் தலை நிமிர வேண்டும், நெஞ்சை நிமிர்த்தி ஓட்டு போட வேண்டும். நிறைய பேச வேண்டும் என்று இருக்கிறது. செயலில் இறங்கி காட்டுவோம்.
உங்கள் வாழ்வை தாக்கும் அரசியலில் உங்கள் தாக்கம் இருக்க வேண்டும். நேர்மையை போற்றுங்கள், உங்கள் நாட்டை மாற்றுங்கள், குறிப்பாக தமிழ்நாட்டை மாற்றுங்கள். இந்திய நாடு நம் தமிழகத்தை திரும்பிப் பார்க்க வேண்டும். இந்தியாவின் தலைவாசலாக தமிழகம் மாற வேண்டும்.
இல்லத்தரசிகளுக்கான திட்டம், மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு திட்டம் என பல திட்டங்கள் கொண்டு வரப்படும்.
அருப்புக்கோட்டை தொகுதி பெரிய தலைவர்களை தேர்ந்தெடுத்த தொகுதி. வரும் சட்டமன்ற தேர்தலில் நல்லவரை பார்த்து தேர்ந்தெடுங்கள். நாளை நமதே இளைஞர்கள் அரசியலுக்கு வரவேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக கமல்ஹாசன் தனது சொந்த ஊரான பரமக்குடியிலும் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அரசியலுக்கு வரக்கூறிய எனது தந்தையின் ஆசையை நிறைவேற்றி உள்ளேன் என்றார்.
விருதுநகர் மாவட்டத்தில் 3 லட்சத்து 53 ஆயிரத்து 421 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்ததில் 16 ஆயிரத்து 317 பேருக்கு நோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருந்தது. 16 ஆயிரம் பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 3 ஆயிரத்து 739 பேரின் மருத்துவ பரிசோதனை முடிவுகள் தெரிவிக்கப்படவில்லை. 83 பேர் அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். வீடுகளில் யாரும் தனிமைப்படுத்தப்படவில்லை.
இம்மாவட்டத்தில் நேற்று புதிதாக 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் பாதிப்பு எண்ணிக்கை 16 ஆயிரத்து 229 ஆக உயர்ந்துள்ளது. 1,685 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. நேற்று முன் தினம் 2 ஆயிரம் பேருக்கு முடிவுகள் அறிவிக்கப்படாத நிலையில் நேற்று 1,700 பேரின் மருத்துவ பரிசோதனை முடிவுகள் அறிவிக்கப்பட வில்லை.
பரிசோதனை முடிவுகளை அறிவிப்பதில் மாவட்ட சுகாதாரத்துறை போதிய அக்கறை கொள்ளாத நிலையே உள்ளது. தமிழக அரசு மருத்துவப் பரிசோதனைகளை அதிகப்படுத்தவும், பரிசோதனை முடிவுகளை உடனுக்குடன் தெரிவிக்கவும் அறிவுறுத்தியுள்ள நிலையில் மாவட்ட சுகாதாரத்துறை தொடர்ந்து அதற்கான நடவடிக்கைகளை எடுக்காத நிலையே நீடிக்கிறது.
மேலும் பஸ் நிலையம் போன்ற பொது இடங்களில் முற்றிலுமாக கிருமிநாசினி தெளிக்கும் நடைமுறை உள்ளாட்சி அமைப்புகளால் கைவிடப்பட்டது. மாவட்ட நிர்வாகமும் இதற்கான உரிய அறிவுறுத்தல்களை வழங்காத நிலையே உள்ளது. மொத்தத்தில் மாவட்டத்தில் நோய் தடுப்பு நடவடிக்கைகளும், நோய் தடுப்பு விதிமுறைகளும் முறையாக கடைபிடிக்கப்படாத நிலை உள்ளது. மாவட்ட நிர்வாகம் இது குறித்து சுகாதாரத் துறை, உள்ளாட்சி அமைப்புகளுக்கு உரிய அறிவுறுத்தல்கள் வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.






