என் மலர்tooltip icon

    விருதுநகர்

    ஸ்ரீவில்லிபுத்தூரில் பெண்ணிடம் நூதன முறையில் நகை பறித்து சென்ற 2 பெண்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
    ஸ்ரீவில்லிபுத்தூர்:

    ஸ்ரீவில்லிபுத்தூர் பாஞ்சாலி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மாரி தங்கம் (வயது 50). இவர் ஸ்ரீவில்லிபுத்தூர் பஸ்நிலையம் அருகே உள்ள ஆலயம் அருகே நடந்து வந்து கொண்டு இருந்தார்.

    அப்போது அங்கு அடையாளம் தெரியாத 2 பெண்கள் வந்து, மாரி தங்கத்திடம் பேச்சு கொடுத்தனர். அப்போது அவர்கள் தங்களிடம் 8 பவுன் தங்க நாணயங்கள், காசு மணிகள் உள்ளது. இந்த தங்க நாணயங்களை பெற்று கொண்டு, 5 பவுன் நகை தந்தால் போதும் என ஆசை வார்த்தை கூறினர்.

    அவர்கள் சொன்னதை நம்பிய மாரிதங்கம் தன்னிடம் இருந்த 5 பவுன் நகையை கழற்றி கொடுத்தார்.

    நகையை பெற்றுக்கொண்ட அந்த பெண்கள் 2 பேரும் கண் இமைக்கும் நேரத்தில் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.

    இதனால் சந்தேகம் அடைந்த மாரிதங்கம் அந்த தங்க நாணயங்களை கடைக்கு சென்று சோதனை செய்து பார்த்த போது அத்தனை நகைகளும் போலியானது என்பது தெரியவந்தது.

    இதுகுறித்து மாரிதங்கம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் போலீசார் நூதன முறையில் பெண்ணிடம் இருந்து நகையை பறித்து சென்ற அந்த 2 பெண்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

    மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களையும் ஆய்வு செய்து வருகின்றனர்.
    சாத்தூர் அருகே ரூ.5 ஆயிரம் புகையிலை பாக்கெட் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவத்தில் 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சாத்தூர்:

    சாத்தூர் டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செய்யது இப்ராஹீம் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சாத்தூர் மெயின் ரோட்டில் உள்ள பெட்டி கடை அருகே ரூ.5 ஆயிரம் மதிப்புள்ள தடைசெய்யப்பட்ட புகையிலை பாக்கெட்டுகளை இருசக்கர வாகனத்தில் வைத்திருந்தது தெரியவந்தது. 

    இதையடுத்து புகையிலை வைத்திருந்த சாத்தூரை சேர்ந்த கண்ணன் (வயது 40), ஏழாயிரம்பண்ணையை சேர்ந்த முத்துகுமார் (36) ஆகியோரிடம் இருந்து புகையிலை பாக்கெட்டுகளையும், இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்த போலீசார், அவர்கள் இருவரையும் கைது செய்தனர்.
    டாஸ்மாக் கடைகளில் மது பாட்டில்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்யும் விற்பனையாளர்கள் மீது நடவடிக்கை எடுப்பதோடு அபராதம் விதிக்கப்படும் என டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
    விருதுநகர்:

    டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டில்கள் கூடுதல் விலைக்கு விற்கப்படுவதாக பரவலாக புகார் கூறப்படுகிறது. ஒரு பாட்டிலுக்கு ரூ.10 வரை கூடுதலாக வாங்கப்படுவதாக சொல்லப்படுகிறது. இது பற்றி புகார் கூறப்பட்டாலும் நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை. கூடுதல் விலைக்கு மதுபாட்டில்கள் விற்கப்படும் நடைமுறை தொடரும் நிலை உள்ளது.

    இந்த நிலையில் இது குறித்து கேட்டபோது டாஸ்மாக் நிர்வாகம் கூறியதாவது:-

    மதுபாட்டில்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்யக்கூடாது என ஊழியர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனையும் மீறி கூடுதல் விலைக்கு விற்பனை செய்யும் விற்பனையாளர்கள் மீது உரிய விசாரணை நடத்தி துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.

    ஒரு ரூபாய் கூடுதலாக விற்பனை செய்தால் ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். 10 ரூபாய் கூடுதலாக விற்பனை செய்தால் சரக்கு, சேவை வரி உள்பட ரூ.10,900 அபராதமாக விதிக்கப்படும்.

    அந்த அபராதத்தை சம்பந்தப்பட்ட விற்பனை மையத்தின் மேலாளர், டாஸ்மாக் கணக்கில் செலுத்தி விடுவார். மேலும் அனுமதி இல்லாமல் மது விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் டாஸ்மாக் நிர்வாகம் கண்காணிப்பு குழுக்களை அமைத்து உள்ளது.

    மேலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் டாஸ்மாக் மைய விற்பனை மையங்களிலும், அலுவலகங்களிலும் சோதனை நடத்தி கணக்கில் வராத பணம் பிடிபட்டால் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
    தமிழக மக்களுக்கு பொங்கல் பரிசு கிடைக்க காரணமாக இருந்தவர் தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் தான் என விருதுநகர் வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் தங்கம் தென்னரசு எம்.எல்.ஏ. கூறினார்.
    விருதுநகர்:

    விருதுநகர் முத்துராமன் பட்டியில் ஏ.ஆர்.ஆர். சீனிவாசன் எம்.எல்.ஏ. தலைமையில் மக்கள் கிராமசபை கூட்டம் நடைபெற்றது.

    இக்கூட்டத்தில் விருதுநகர் வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் தங்கம் தென்னரசு எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பேசியதாவது:- அ.தி.மு.க. அரசு நகராட்சி தேர்தல் நடத்தியிருந்தால் நகராட்சி தலைவர், கவுன்சிலர் ஆகியோரிடம் உங்களது குறைகளை எடுத்துக்கூறி பரிகாரம் தேடி இருக்கலாம்.

    ஆனால் நகராட்சி தேர்தல் நடத்தினால் தி.மு.க. வெற்றி பெறும் என்பதற்காக அ.தி.மு.க. அரசு நகராட்சி தேர்தலை நடத்தவில்லை. இந்தநிலையில் உங்களது குறைகளை தீர்க்க இந்த அரசு எந்த நடவடிக்கையும் எடுக்க முன்வரவில்லை. 2006ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்றால் பெண்களுக்கு இலவச ஸ்டவ் அடுப்பு வழங்கப்படும் என தி.மு.க. தலைவர் கருணாநிதி அறிவித்தார். தேர்தலில் வெற்றி பெற்றதும் பெண்களுக்கு இரண்டு அடுப்பு கொண்ட ஸ்டவ் வழங்கப்பட்டது.

    ஆனால் அ.தி.மு.க. ஆட்சியில் மக்களுக்கு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை. ஊரடங்கு காலத்தில் வாழ்வாதாரம் இழந்து தவித்த மக்களுக்கு ரூ. 2,000 உதவித்தொகை வழங்க வேண்டும் என்று தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் வற்புறுத்தினார். ஆனால் தமிழக அரசு ரூ.1,000 மட்டுமே வழங்கியது.

    தற்போது பொங்கல் பரிசாக உங்களுக்கு ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் என தமிழக அரசிடம் மு.க. ஸ்டாலின் வற்புறுத்தினார். அதன்விளைவாக தற்போது அரசு பொங்கல் பரிசாக ரூ.2,500 அறிவித்துள்ளது. இவ்வாறு பொங்கல் பரிசாக ரூ.2,500 கிடைக்க மு.க.ஸ்டாலின் தான் காரணமாக இருந்தார். மக்கள நலனில் அக்கறை கொண்ட தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் தான் மக்கள் நலத்திட்டங்கள் விரைந்து செயல்படுத்தப்படும்.

    மு.க. ஸ்டாலின் முதல்-அமைச்சர் ஆனால் தான் மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். எனவே வருகின்ற தேர்தலில் நீங்கள் தி.மு.க.விற்கு ஆதரவு அளிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கூட்டத்தில் வடக்கு மாவட்டஇளைஞர் அணி செயலாளர் கிருஷ்ணகுமார், மாணவரணி செயலாளர் ராஜகுரு உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
    காரியாபட்டி அருகே ஸ்ரீராம்பூர் கிராமத்தில் நெற்பயிரில் குலை நோய் தாக்கி உள்ளதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.
    காரியாபட்டி:

    காரியாபட்டி அருகே ஸ்ரீராம்பூர் கிராமத்தில் 300-க்கும் மேற்பட்ட ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது தொடர்ந்து பெய்து வரும் மழையால் நெற்பயிரில் குலை நோய் தாக்கி சுமார் 200 ஏக்கருக்கும் மேற்பட்ட நெற் பயிர்கள் சேதமடைந்துள்ளன. இதனால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.

    இதுகுறித்து விவசாயிகள், காரியாபட்டி வேளாண்மை துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

    அதன்பேரில் காரியாபட்டி வேளாண்மை உதவி இயக்குனர் செல்வராணி, வேளாண் அலுவலர் முருகேசன் மற்றும் வேளாண்துறை அதிகாரிகள் நேரில் சென்று பாதிக்கப்பட்ட பயிர்களை ஆய்வு செய்தனர்.

    அப்போது பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு உரிய நிவாரணம் பெற்று தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளிடம், விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் கூறினர்.

    விருதுநகர் அருகே சேலையில் தீப்பிடித்து மூதாட்டி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    விருதுநகர்:

    விருதுநகர் கொல்லர் தெருவை சேர்ந்தவர் லட்சுமி அம்மாள் (வயது 81). தனியாக வீட்டில் வசித்து வந்த இவர் நேற்று முன்தினம் இரவு வீட்டில் சமையல் செய்தபோது ஸ்டவ் அடுப்பில் இருந்த மண்எண்ணெய் கசிந்து மூதாட்டியின் சேலையில் பட்டு தீப்பிடித்தது. அவரது அலறல் சத்தத்தை கேட்ட அக்கம் பக்கத்தினர் அவரது மகன் மகேஸ்வரனுக்கு தகவல் தெரிவித்தனர். 

    பலத்த தீக்காயங்களுடன் சிவகாசி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட லட்சுமி அம்மாள் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்தார். இதுபற்றி அவரது மகன் மகேஸ்வரன் கொடுத்த புகாரின் பேரில் மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் பனங்கிழங்கு அறுவடை பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஆனால் விற்பனை மந்தமாக உள்ளது.
    ஸ்ரீவில்லிபுத்தூர்:

    ஸ்ரீவில்லிபுத்தூர், மம்சாபுரம், செண்பகத்தோப்பு, ராஜபாளையம் ஆகிய பகுதிகளில் பனைமரங்கள் அதிகமாக உள்ளன.

    மேலும் ஆண்டாள் கோவிலுக்கு சொந்தமான சாலியன் தோப்பு பகுதிகளில் ஆயிரக்கணக்கான பனை மரங்கள் ஒரே இடத்தில் உள்ளன.

    ஆதலால் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதிகளில் பனை ஏறும் தொழிலாளர்கள் அதிக அளவில் உள்ளனர்.

    இந்த பனை மரங்கள் அவர்களுக்கு நல்ல வருமானமும், வேலை வாய்ப்பையும் பெற்று தருகிறது.

    பனங்கிழங்கு, நுங்கு, பதநீர், கருப்பட்டி என பனை மரத்தில் இருந்து கிடைக்கும் அனைத்து பொருட்களும் மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது.

    இந்தநிலையில் தை பொங்கலுக்கு கிடைக்கும் வகையில் இந்த பகுதியில் அதிக அளவில் பனங்கிழங்கு போடப்பட்டு இருந்தது. கிழங்குகள் அறுவடை பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த கிழங்குகளை தற்போது விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது.

    இங்குள்ள கிழங்குகள் சேலம், மதுரை, விருதுநகர் மாவட்டம் என தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

    இதுகுறித்து வியாபாரி சந்தனகாளை கூறியதாவது:-

    தை மற்றும் மாசி மாதம் கிடைக்கக்கூடிய இந்த பனங்கிழங்கில் அதிக அளவு நார்ச்சத்து உள்ளது. மேலும் சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் திறனும் இ்ந்த கிழங்கிற்கு உண்டு. எனவே மருத்துவ குணம் வாய்ந்த இந்த கிழங்கை அனைவரும் வாங்கி செல்கின்றனர்.

    ஒரு கட்டு பனங்கிழங்கு (எண்ணம்25) ரூ.130 முதல் ரூ.250 வரை விற்பனை செய்யப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு பனங்கிழங்கு வழக்கத்தை காட்டிலும் நிறைய இடங்களில் போடப்பட்டதால் தற்போது வரத்து அதிகரித்து உள்ளது.

    நாங்கள் எதிர்பார்த்த அளவிற்கு இல்லாமல் விற்பனை மந்தமாக உள்ளது. தற்போது ஒரு கட்டு ரூ.110 முதல் ரூ. 150 வரை விற்கப்படுகிறது. பொங்கலையொட்டி விற்பனையும், விலையும் அதிகரிக்கும் என நம்புகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
    ராஜபாளையம் அருகே அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கலந்து கொண்டு மினி கிளினிக்கை திறந்துவைத்து பெண்களுக்கு மருத்துவ உபகரணங்கள் வழங்கினார்.
    ராஜபாளையம்:

    ராஜபாளையம் அருகே சுந்தரராஜபுரம் கிராமத்தில் அ.தி.மு.க. வடக்கு ஒன்றியம் சார்பில் அம்மா மினி கிளினிக் திறப்பு விழா நடைபெற்றது. இதில் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கலந்து கொண்டு மினி கிளினிக்கை திறந்துவைத்து பெண்களுக்கு மருத்துவ உபகரணங்கள் வழங்கினார். இதில் வடக்கு ஒன்றிய செயலாளர் தேவதானம் குருசாமி, ஒன்றிய இணைச் செயலாளர் செல்வகுமார், ஒன்றிய பேரவை செயலாளர் ராஜ்குமார், தகவல் தொழில்நுட்ப மாவட்ட இணைச்செயலாளர் ராஜ் பிரியம், தெற்கு ஒன்றிய செயலாளர் நவரத்தினம், கிழக்கு ஒன்றிய செயலாளர் குறிச்சியார் பட்டி மாரியப்பன், ஒன்றிய இணைச் செயலாளர் சுமதி சமுத்திரம், ஒன்றிய கவுன்சிலர் மாரியம்மாள், போக்குவரத்து துறை மண்டல பொறுப்பாளர் குருசாமி, ஒன்றிய மாணவரணி பால்பாண்டி, சேத்தூர் நகர செயலாளர் பொன்ராஜ் பாண்டியன், சேத்தூர் கூட்டுறவு சங்கத்தலைவர் பட்டுராஜன், செட்டியார்பட்டி நகர செயலாளர் அங்கு துரைபாண்டியன் மற்றும் ஒன்றிய நிர்வாகிகள், மகளிர் அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    சிவகாசி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட அனுப்பன்குளம் பஞ்சாயத்து பகுதியில் நடைபெற்ற விழாவில் எம்.எல்.ஏ. ராஜவர்மன் கலந்து கொண்டு புதிய கட்டிடங்கள் கட்டும் பணியினை தொடங்கி வைத்தார்.
    சிவகாசி:

    சிவகாசி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட அனுப்பன்குளம் பஞ்சாயத்து பகுதியில் ரத்தினகிரி நகரில் ரூ.5 லட்சம் செலவில் பஸ் நிறுத்தம் அமைக்கவும், ராமசாமி நகரில் ரூ.5 லட்சம் செலவில் நவீன கழிப்பிடம் கட்டவும் முடிவு செய்யப்பட்டது. 

    இதற்கான பூமி பூஜை நடைபெற்றது. இதில் சாத்தூர் எம்.எல்.ஏ. ராஜவர்மன் கலந்து கொண்டு புதிய கட்டிடங்கள் கட்டும் பணியினை தொடங்கி வைத்தார். 

    இந்த நிகழ்ச்சியில் பஞ்சாயத்து தலைவர் கவிதா, சமூக ஆர்வலர் பாண்டியராஜன், குருசாமி, சந்திரன், சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக பஞ்சாயத்து அலுவலகம் வந்த ராஜவர்மன் எம்.எல்.ஏ. புத்தாண்டை யொட்டி அப்பகுதியில் உள்ள வீடுகளுக்கு காலண்டர்களையும், பொதுமக்களுக்கு இனிப்பையும் வழங்கினார்.
    விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 6 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.
    விருதுநகர்:

    மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 3 லட்சத்து 59 ஆயிரத்து 402 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்ததில் 16,344 பேருக்கு நோய் பாதிப்பு உறுதியானது.

    16,011 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனர். 3,954 பேரின் மருத்துவ பரிசோதனை முடிவுகள் அறிவிக்கப்படவில்லை. மாவட்டத்தில் நேற்று மேலும் 6 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16,350 ஆக உயர்ந்துள்ளது.

    104 பேர் அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். வீடுகளில் யாரும் தனிமைப் படுத்தப்படவில்லை.

    நேற்று 1,574 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் 3,900-க்கும் மேற்பட்டோருக்கு முடிவுகள் அறிவிக்கப்படவில்லை. தொடர்ந்து மாவட்டத்தில் அதிக எண்ணிக்கையில் மருத்துவ பரிசோதனை முடிவுகள் அறிவிக்கப்படாத நிலை உள்ளது.

    மருத்துவ பரிசோதனை முடிவுகளை விரைந்து அறிவிக்க எந்த நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை. ஓரளவு மருத்துவ பரிசோதனை எண்ணிக்கையை அதிகரித்து இருந்தாலும் முடிவு தெரிவதில் தாமதம் ஏற்படுவதால் நோய் பரவ வாய்ப்பு ஏற்படும். எனவே மாவட்ட நிர்வாகம் பரிசோதனை முடிவுகளை விரைந்து அறிவிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.

    மேலும் நோய் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த பொது இடங்களில் விதிமுறைகளை முறையாக பின்பற்றப்படும் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகும்
    சிவகாசி அருகே டிரைவரை தாக்கிய 10 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சிவகாசி:

    சிவகாசி அருகே உள்ள ஆலமரத்துப்பட்டியை சேர்ந்தவர் சுந்தரம் மகன் துரைப்பாண்டி (வயது 31). இவர் பூலாவூரணியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் டிரைவராக வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் அந்த நிறுவனத்துக்கு வரும் மூலப்பொருட்களை அதே பகுதியை சேர்ந்த சுமை தூக்கும் தொழிலாளர்கள் முத்துராஜ், அழகர், நந்து, பாலமுருகன், அலெக்ஸ், மாயா, பாண்டி, சக்கையா, கார்த்தி, பாலமுருகன் ஆகியோர் இறக்கியதாக கூறப்படுகிறது. அப்போது சில பொருட்கள் சேதம் அடைந்துள்ளது. இதை தொடர்ந்து முத்துராஜ் உள்ளிட்ட 10 சுமை தூக்கும் தொழிலாளர்களை இனி நிறுவனத்திற்குள் அனுமதிக்க வேண்டாம் என்று நிர்வாகம் அறிவித்துள்ளது.

    இதை சம்பந்தப்பட்ட சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு துரைப்பாண்டி தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த 10 பேரும், துரைப்பாண்டியை நாரணாபுரம் முனீஸ்வரன் கோவில் அருகில் வழிமறித்து கடுமையாக தாக்கி உள்ளனர். இதில் காயம் அடைந்த அவர் சிவகாசி கிழக்கு போலீசில் புகார் தெரிவித்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    சிவகாசி அருகே மது விற்ற 14 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சிவகாசி:

    சிவகாசி உட்கோட்டத்தில் நேற்று முன்தினம் காலையில் அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் குடிமகன்களின் கூட்டம் அதிகமாகவே இருந்தது. இருந்த போதும் பல கிராமங்களில் டாஸ்மாக் கடைகள் இல்லாததால் சிலர் நகரப்பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகளில் இருந்து மதுபாட்டில்களை மொத்தமாக வாங்கி சென்று விற்பனை செய்தனர். இது குறித்து கிடைத்த ரகசிய தகவல் அடிப்படையில் போலீசார் பல்வேறு இடங்களில் திடீர் சோதனை செய்தனர். இதில் மாரீஸ்வரன் (வயது 23), முருகன் (33), கருத்தப்பாண்டியன் (37), அழகர்சாமி (38), ஆனந்தராஜ் (26), முனீஸ்வரன் (29), முத்தையா (55), அயனந்தன் (69), பழனிசாமி (42), ஈஸ்வரன் (38), பாண்டிராஜ் (51), கந்தசாமி (38), முனியாண்டி (59), பாலமுருகன் (58) ஆகிய 14 பேரை கைது செய்து அவர்களிடம் இருந்து 102 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
    ×