என் மலர்tooltip icon

    விருதுநகர்

    கால்வாய் பிரச்சினை காரணமாக திருச்சுழி அருகே பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    காரியாபட்டி:

    திருச்சுழி தாலுகா மயிலி கிராமத்திற்கு காரியாபட்டி தாலுகா கீழ இடையன்குளம் கிராமத்திலிருந்து கண்மாய் மூலம் தண்ணீர் வந்து கொண்டிருந்ததாகவும் இந்த கண்மாய் தண்ணீரை கீழ இடையன்குளம் கிராமத்தினர் அடைத்து வைத்து விட்டதாக பிரச்சினை இருந்து வருகிறது.

    இந்த வரத்துக்கால்வாய் பிரச்சினை சம்பந்தமாக இருதரப்பு கிராமத்தை சேர்ந்த மக்களையும் அழைத்து சமாதான பேச்சுவார்த்தை நடத்தியும் எந்தவித உடன்பாடும் ஏற்படவில்லை. இதனால் 2 கிராமத்திலும் கடந்த 2 மாத காலமாக போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    இந்தநிலையில் மயிலி கிராம மக்கள் தங்களது ரேஷன் கார்டுகளை கடந்த டிசம்பர் மாதம் தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்து விட்டனர்.

    பின்னர் மாவட்ட கலெக்டர் நேரடியாக சென்று இந்த பிரச்சினை சம்பந்தமாக பார்வையிட்டு சென்றார். ஆனால் இதுவரை இந்த கால்வாய் பிரச்சினை முடிவுக்கு வராததால் வருவாய் துறையினரை கண்டித்து ஆத்திரமடைந்த மயிலி கிராம மக்கள் அருப்புக்கோட்டை- நரிக்குடி சாலையில் மயிலி விலக்கில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அருப்புக்கோட்டை ஆர்.டி.ஓ. முருகேசன், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு குத்தாலிங்கம், திருச்சுழி துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார், அருப்புக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு சகாய ஜோஸ், திருச்சுழி தாசில்தார் ஆகியோர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமாதான பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.

    அப்போது பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை.

    இதையடுத்து மயிலி கிராம மக்கள் தங்களுடைய வாக்காளர் அடையாள அட்டைகளை திருச்சுழி தாசில்தாரிடம்ஒப்படைத்து விட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    அவ்வாறு கலைந்து சென்ற பொதுமக்கள் மயிலில் இருந்து கீழே இடையன்குளம் செல்லும் சாலையில் கற்கள், மண்ணை வைத்து அடைத்தனர். அப்போது அங்கிருந்த போலீசார் தடுத்தபோது போலீசாருக்கும், பொதுமக்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

    இந்த கால்வாய் பிரச்சினை சம்பந்தமாக மாவட்ட நிர்வாகம் தலையிட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மயிலி கிராம பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த சாலை மறியலால் அருப்புக்கோட்டை - நரிக்குடி சாலையில் 4 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    மாவட்டத்தில் மேலும் 9 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள நிலையில் பரிசோதனை முடிவுகள் தொடர்ந்து தாமதமாகும் நிலை உள்ளது.
    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 3 லட்சத்து 63 ஆயிரத்து 541 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்ததில் 16,399 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருந்தது.

    105 பேர் அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். வீடுகளில் யாரும் தனிமைப்படுத்தப்படவில்லை. 16,065 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.

    1,705 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் 2, 600-க்கும் மேற்பட்டவர்களுக்கு பரிசோதனை முடிவுகள் தெரிவிக்கப்படாத நிலையில் உள்ளது.

    மாவட்டத்தில் நேற்று 9 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16,508 ஆக உயர்ந்துள்ளது.

    மாவட்ட சுகாதாரத்துறை பரிசோதனை முடிவுகளை விரைவுபடுத்த நடவடிக்கை எடுக்காத நிலை தொடர்கிறது. பரிசோதனை முடிவுகள் தாமதப்படுத்தபடுவதால் நோய் பாதிப்பு எண்ணிக்கையும் அதிகரிக்கும் நிலை ஏற்படுகிறது. ஆனாலும் மாவட்டத்தில் நோய் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த போதிய அக்கறை காட்டாத நிலையில் மாவட்ட நிர்வாகம் அதற்கான நடவடிக்கைகளை எடுக்க சம்பந்தப்பட்ட துறையினருக்கு உரிய அறிவுறுத்தல் வழங்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.
    விருதுநகர் அருகே வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    விருதுநகர்:

    விருதுநகர் அய்யனார் நகரை சேர்ந்தவர் ஞானமணி (வயது 23). இவர் அதே பகுதியை சேர்ந்த விஸ்வராஜ் (25) என்பவரை 5 வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்தநிலையில் குடிப்பழக்கத்துக்கு அடிமையான விஷ்வராஜை குடும்பத்தினர் கண்டித்ததால் அவர் பிளேடால் கழுத்தை அறுத்துக் கொண்டார்.

    படுகாயமடைந்த அவர் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற பின்னர் மாமியார் வீட்டில் இருந்தார். இதையடுத்து இரவில் வீட்டுக்கு செல்வதாக கூறிச் சென்றவர் கதவை பூட்டிக்கொண்டு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றிய புகாரின் பேரில் விருதுநகர் மேற்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
    வத்திராயிருப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையினால் பிளவக்கல் அணையின் நீர்மட்டம் 2 அடி உயர்ந்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
    வத்திராயிருப்பு:

    வத்திராயிருப்பு மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியிலும், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியிலும் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் சாரல் மழையால் வத்திராயிருப்பு அருகே உள்ள பிளவக்கல் பெரியாறு மற்றும் கோவிலாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

    பிளவக்கல் பெரியாறு அணையின் நீர்மட்டம் 22 அடியில் இருந்து 2 அடி உயர்ந்து தற்போது 24 அடியாக உள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

    வத்திராயிருப்பை சுற்றி உள்ள 40 கண்மாய்களில் 12 கண்மாய் முழு கொள்ளளவை எட்டி உள்ளது.

    20 கண்மாய் 50 சதவீதம் முதல் 75 சதவீதம் வரை நீர் நிரம்பி உள்ளது. மீதமுள்ள 8 கண்மாய்களுக்கு தண்ணீர் பற்றாக்குறை உள்ளதாகவும் அணைக்கு நீர் வரத்து வருவதை பொறுத்து தண்ணீர் பற்றாக்குறையில் உள்ள கண்மாய்களுக்கு தண்ணீர் திறந்து விடப்படும் எனவும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    வத்திராயிருப்பு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும், மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளிலும் பெய்து வரும் மழையால் நீர்பிடிப்பு பகுதிகளில் நீர் வரத்து அதிகரித்து உள்ளது.

    பிளவக்கல் பெரியாறு மற்றும் கோவிலாறு அணைகள் மூலம் வத்திராயிருப்பு தாலுகா பகுதியில் 8 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. கடந்தாண்டு பெய்த மழையை விட இந்த ஆண்டு கூடுதலாக மழை பெய்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியுடன் உள்ளனர்.
    சிவகாசி நகராட்சிக்கு நிரந்தரமாக என்ஜினீயரை உடனே நியமிக்க வேண்டும் வேண்டும் என காங்கிரஸ் கட்சியினர் வலியுறுத்தி உள்ளனர்.
    சிவகாசி:

    சிவகாசி நகர்மன்ற முன்னாள் தலைவரும், காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுக்குழு உறுப்பினருமான சபையர் ஞானசேகரன், முதல்-அமைச்சருக்கு அனுப்பி உள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-

    விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பெரிய நகராட்சி சிவகாசி ஆகும். இங்குள்ள நகராட்சி என்ஜினீயர் கடந்த 1½ மாதங்களாக விடுமுறையில் இருக்கிறார். அவருக்கு பதில் ராஜபாளையம் நகராட்சியில் பணியாற்றும் என்ஜினீயர் வாரத்திற்கு ஒரு முறை வந்து தனது பணியினை செய்துவிட்டு செல்கிறார். இதனால் சிவகாசி நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் செய்யும் வளர்ச்சி பணிகள் தாமதம் ஆகிறது. மேலும் சிவகாசி நகராட்சியின் நூற்றாண்டு நிதியாக ரூ.50 கோடி அரசு ஒதுக்கி உள்ளதாக கூறப்படுகிறது. எனவே சிவகாசி நகராட்சிக்கு நிரந்தரமாக என்ஜினீயரை உடனே நியமிக்க வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
    வத்திராயிருப்பு அருகே வ.புதூர் கிராமத்தில் சுகாதார வளாகம் அமைக்க சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடு்க்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    வத்திராயிருப்பு:

    வத்திராயிருப்பு தாலுகா மகாராஜபுரம் ஊராட்சிக்கு உட்பட்டது வ.புதூர். இந்த பகுதியில் உள்ள மக்கள் தங்கள் அன்றாட பணிகளுக்காக சிவகாசி, ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய பகுதிகளுக்கு செல்கின்றனர்.

    இந்தநிலையில் இந்த பகுதியில் மெயின்ரோடு மற்றும் பல்வேறு தெருக்களில் உள்ள கழிவுநீர் வாருகால்கள் முறையாக பராமரிக்கப்படவில்லை. ஆதலால் ஆங்காங்கே கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது.

    இதனால் துர்நாற்றம் வீசுவதுடன், கொசுக்களின் தொல்லையும் அதிகமாக உள்ளது. மேலும் தொற்றுநோய் பரவும் அபாய நிலையும் நிலவுகிறது.

    அதேபோல இந்த பகுதியில் போதுமான தெருவிளக்குகள் இல்லை. சுகாதார வளாகம் இல்லாததால் இந்த பகுதியில் உள்ள பெண்கள் திறந்தவெளியை கழிவறையாக பயன்படுத்தி வருகின்றனர்.

    இவ்வாறு அடிப்படை வசதிகள் எதுவுமின்றி இந்த பகுதியில் உள்ள மக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகின்றனர்.

    எனவே அடிப்படை வசதிகளான குடிநீர், கழிவுநீர் வாருகால், மகளிர் சுகாதார வளாகம், தெரு விளக்கு ஆகியவை அமைத்து தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்ைக எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    சேத்தூரில் நெல் கொள்முதல் நிலையம் திறக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கலெக்டரிடம் மனு அளித்துள்ளனர்.
    விருதுநகர்:

    சேத்தூர் பகுதி விவசாயிகள் கலெக்டரிடம் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    சேத்தூர், முத்துசாமிபுரம், மேட்டுப்பட்டி, சோலைசேரி ஆகிய கிராமங்களில் 2000 ஏக்கர் நிலப்பரப்பில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. எனவே சேத்தூரிலேயே நெல் கொள்முதல் நிலையம் திறந்தால் விவசாயிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும். எனவே சேத்தூரில் நெல் கொள்முதல் நிலையம் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
    சிவகாசி அருகே உள்ள புதுக்கோட்டை ஊராட்சி மன்ற தலைவருக்கு கொலை மிரட்டல் விடுத்தது தொடர்பாக 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சிவகாசி:

    சிவகாசி அருகே உள்ள புதுக்கோட்டை ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவர் காளீஸ்வரி (வயது 29). இவருக்கும் அதே ஊரை சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சந்திரன் என்பவருக்கும் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் இருந்து பிரச்சினை இருந்து வருவதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் ஊராட்சி மன்ற தலைவர் காளீஸ்வரி குறித்து சந்திரன் தரப்பினர் சமூக வலை தளங்களில் அவதூறாக தகவல் பரப்பியதாக கூறப்படுகிறது. 

    இதுகுறித்து காளீஸ்வரி கடந்த சில நாட்களுக்கு முன்னர் சந்திரனின் மகன்கள் சத்தியராஜ், சங்கர், உறவினர் நந்தீஸ்வரன், முத்துக்குமார் ஆகியோரிடம் கேட்ட போது அவர்கள் பஞ்சாயத்து தலைவரை அசிங்கமாக பேசி, கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து காளீஸ்வரி எம்.புதுப்பட்டி போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் சத்தியராஜ் உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    சிவகாசி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட சுக்கிரவார்பட்டி பஞ்சாயத்து அலுவலகத்தின் மேற்கூரை பூச்சு பெயர்ந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
    சிவகாசி:

    சிவகாசி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்டது சுக்கிரவார்பட்டி. இந்த பஞ்சாயத்து அலுவலகம் தற்போது ஒரே ஒரு அறையில் இயங்கி வருகிறது. கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட இந்த பஞ்சாயத்து கட்டிடம் போதிய பராமரிப்பு இன்றி பழுதடைந்து காணப்படுகிறது. புதிதாக பதவி ஏற்ற தலைவர் மற்றும் துணைத்தலைவர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பஞ்சாயத்து கூட்டத்தின் போது புதிய அலுவலகம் கட்ட தீர்மானம் நிறைவேற்றி மாவட்ட நிர்வாகத்துக்கு தகவல் அனுப்பி வைத்தனர். 

    ஆனால் மாவட்ட நிர்வாகம் புதிய பஞ்சாயத்து அலுவலகம் கட்ட போதிய நிதி ஒதுக்கி ஆணை பிறப்பிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று காலை வழக்கம் போல் பஞ்சாயத்து அலுவலகத்தில் தலைவர் பாண்டியம்மாள், துணைத்தலைவர் அதீவிரன்பட்டி செல்வம் மற்றும் பஞ்சாயத்து ஊழியர்கள் இருந்தனர். அப்போது திடீரென பஞ்சாயத்து அலுவலகத்தின் மேற்கூரையில் உள்ள பூச்சு பெயர்ந்து விழுந்தது. இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. எனவே சுக்கிரவார்பட்டி பஞ்சாயத்து அலுவலகத்தை பார்வையிட்டு புதிய அலுவலகம் கட்ட நடவடி்க்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    சிவகாசி பகுதியில் உள்ள பட்டாசு ஆலைகள் கடந்த 1½ மாதங்களாக திறக்கப்படாமல் உள்ளதால் அதில் வேலை செய்து வந்த தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
    சிவகாசி:

    சிவகாசி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் உள்ளன. இந்த ஆலைகளில் தயாரிக்கப்படும் பட்டாசுகள் இந்தியா முழுவதும் அனுப்பி வைக்கப்பட்டு வந்தது.

    கடந்த தீபாவளியின் போது வழக்கமாக பட்டாசு உற்பத்தியில் 30 சதவீதம் கொரோனாவால் குறைந்தது. உற்பத்தி செய்து அனுப்பிவைக்கப்பட்ட பட்டாசுகளில் சுமார் ரூ. 1,000 கோடி மதிப்புள்ள பட்டாசுகள் விற்பனையாகாமல் தேங்கி விட்டது. பல்வேறு இடங்களில் கடன்களை வாங்கி பட்டாசுகளை உற்பத்தி செய்த பட்டாசு உற்பத்தியாளர்களுக்கும், அதை வாங்கி விற்பனைக்கு வைத்த மொத்த வியாபாரிகளுக்கும் இந்த தீபாவளியின் போது பெரிய அளவில் ந‌‌ஷ்டம் ஏற்பட்டது.

    இதனால் 2021-ம் ஆண்டு தீபாவளிக்கு தேவையான பட்டாசுகளை தயாரிக்க உற்பத்தியாளர்கள் இன்னும் முன் விரவில்லை. 2020 தீபாவளிக்கு தயாரிக்கப்பட்ட பட்டாசுகளே தற்போது 30 சதவீதம் இருப்பு வைக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

    இந்தநிலையில் பட்டாசுகளை தயாரிக்க முதலீடு செய்யப்படும் பணம் திரும்ப வருமா? என்ற அச்சம் பட்டாசு உற்பத்தியாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

    சிவகாசி பகுதியில் உள்ள பட்டாசு ஆலைகள் வழக்கமாக தீபாவளி பண்டிகைக்கு பின்னர் 10 நாள் கழித்து பராமரிப்பு பணிகள் அனைத்தும் முடித்த பின்னர் அடுத்த ஆண்டுக்குரிய உற்பத்தியை தொடங்குவார்கள். ஆனால் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை முடிந்து 1½ மாதங்கள் கடந்து விட்டன. ஆனால் இன்னும் பட்டாசு ஆலைகள் திறக்கப்படவில்லை.

    ஆதலால் இந்த ஆலையில் பணியாற்றி வந்த சுமார் 5 லட்சம் தொழிலாளர்கள் வேலை இழந்து தவித்து வருகிறார்கள். தற்போது கடந்த சில நாட்களாக மழை பெய்து வருவதாலும் பட்டாசு ஆலையை திறக்க முடியாத நிலை உள்ளது.

    சிவகாசியில் உள்ள பட்டாசு ஆலைகள் தங்களது உற்பத்தியை தொடங்கினால் தான் இங்குள்ள மற்ற அனைத்து நிறுவனங்களுக்கும் வேலை கிடைக்கும். அதன் மூலம் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படும். எனவே பட்டாசு தொழிலுக்கு ஏற்பட்டுள்ள இடர்பாடுகளை களைய தேவையான நடவடிக்கையை மத்திய, மாநில அரசுகள் எடுக்க வேண்டும் என பட்டாசு தொழிலாளர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

    அதேபோல கடந்த காலங்களில் தீபாவளி பண்டிகை முடிந்தவுடன் தொழிலாளர்கள் நோட்டு, புத்தகம் தயாரிக்கும் பணிக்கு செல்வார்கள். மே மாதம் பள்ளி மற்றும் கல்லூரி திறப்பையொட்டி அங்கு அதிக தொழிலாளர்கள் தேவைப்படுவார்கள். தற்போது கொரோனா ஊரடங்கினால் பள்ளி, கல்லூரிகள் செயல்படாததால் பல கோடி ரூபாய் மதிப்புள்ள நோட்டு, புத்தகங்களும் அப்படியே தேங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
    விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ரூ.154 கோடி செலவில் பொங்கல் பரிசு பொருட்கள் வழங்க இருப்பதாக அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கூறினார்.
    சிவகாசி:

    பொங்கல் பண்டிகையையொட்டி தமிழகம் முழுவதும் அரிசி பெறும் ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரூ.2,500 கொடுக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி விருதுநகர் மாவட்டத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நேற்று காலை சிவகாசி சோலை காலனியில் உள்ள ரேஷன் கடையில் நடைபெற்றது.

    அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கலந்து கொண்டு பொதுமக்களுக்கு ரொக்க பணத்தையும், பொங்கல் பரிசு தொகுப்பினையும் வழங்கினார்.

    அப்போது அவர் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசிய தாவது:-

    விருதுநகர் மாவட்டம் முழுவதும் 5 லட்சத்து 77 ஆயிரத்து 792 பேர் அரிசி பெறும் ரேஷன் கார்டுகள் வைத்துள்ளனர். இவர்கள் அனைவருக்கும் பொங்கல் பரிசாக ரூ.2,500, பச்சரிசி, சர்க்கரை, உலர்திராட்சை, முந்திரி, ஏலக்காய், கரும்பு, வேட்டி-சேலை ஆகியவை வழங்கப்படும். இதற்காக தமிழக அரசு விருதுநகர் மாவட்டத்துக்கு மட்டும் ரூ.154 கோடியே 8 லட்சத்து 26 ஆயிரத்து 816 செலவு செய்துள்ளது. ஏழை மக்கள் மகிழ்ச்சியுடன் பொங்கல் பண்டி கையை கொண்டாட முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இந்த அருமையான திட்டத்தை அறிவித்துள்ளார். நான் தற்போது இதை தொடங்கி வைத்துள்ளேன்.

    கடந்த காலங்களில் பொங்கல் பண்டிகையின் போது ரூ.100, 200, 500, 1000 என கொடுக்கப்பட்டது. தற்போது அதிகபட்சமாக ரூ.2,500 வழங்கப்படுகிறது.

    பொதுமக்களின் தேவை அறிந்து திட்டங்களை முதல்-அமைச்சர் அறிவிக்கிறார். இதை சிலர் விமர்சிக்கிறார்கள். ஆனால் முதல்-அமைச்சர் அறிவித்த திட்டத்தால் பல லட்சம் ஏழை மக்கள் பலன் பெறுவார்கள். பொங்கல் பண்டிகைக்காக விருதுநகர் மாவட்டத்துக்கு ரூ.154 கோடி நிதி ஒதுக்கிய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு இந்தமாவட்ட மக்கள் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதில் கலெக்டர் கண்ணன், கூட்டுறவு மண்டல இணை இயக்குனர் திலீப்குமார், சிவகாசி சப்-கலெக்டர் தினேஷ்குமார், தாசில்தார் வெங்கடேசன், வட்ட வழங்கல் அலுவலர் முனியாண்டி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 14 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 3 லட்சத்து 60 ஆயிரத்து 786 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்ததில் 16,385 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.

    இதில் 16,049 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 2,660 பேரின் மருத்துவ பரிசோதனை முடிவுகள் அறிவிக்கப்படவில்லை.

    மாவட்டத்தில் நேற்று மேலும் 14 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16,399ஆக உயர்ந்துள்ளது.

    107 பேர் அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். வீடுகளில் யாரும் தனிமைப்படுத்தப்படவில்லை. 996 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் 2,600-க்கும் மேற்பட்டோரின் மருத்துவ பரிசோதனை முடிவுகளை தெரிவிக்காத நிலையில் உள்ளது.

    தொடர்ந்து மாவட்டத்தில் பரிசோதனை முடிவுகள் அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டு வரும் நிலையில் அதனை விரைவுபடுத்த மாவட்ட நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலை உள்ளது.

    இதனால் நோய் பரவல் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

    பரிசோதனை முடிவுகளை விரைந்து அறிவிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுப்பதுடன் நகர்புறங்களில் பொது இடங்களில் கிருமி நாசினி தெளித்து தூய்மைப்படுத்த உள்ளாட்சி அமைப்புகளுக்கு உரிய அறிவித்தல் வழங்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.
    ×