search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்ட போது எடுத்த படம்.
    X
    பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்ட போது எடுத்த படம்.

    கால்வாய் பிரச்சினை - திருச்சுழி அருகே பொதுமக்கள் சாலை மறியல்

    கால்வாய் பிரச்சினை காரணமாக திருச்சுழி அருகே பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    காரியாபட்டி:

    திருச்சுழி தாலுகா மயிலி கிராமத்திற்கு காரியாபட்டி தாலுகா கீழ இடையன்குளம் கிராமத்திலிருந்து கண்மாய் மூலம் தண்ணீர் வந்து கொண்டிருந்ததாகவும் இந்த கண்மாய் தண்ணீரை கீழ இடையன்குளம் கிராமத்தினர் அடைத்து வைத்து விட்டதாக பிரச்சினை இருந்து வருகிறது.

    இந்த வரத்துக்கால்வாய் பிரச்சினை சம்பந்தமாக இருதரப்பு கிராமத்தை சேர்ந்த மக்களையும் அழைத்து சமாதான பேச்சுவார்த்தை நடத்தியும் எந்தவித உடன்பாடும் ஏற்படவில்லை. இதனால் 2 கிராமத்திலும் கடந்த 2 மாத காலமாக போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    இந்தநிலையில் மயிலி கிராம மக்கள் தங்களது ரேஷன் கார்டுகளை கடந்த டிசம்பர் மாதம் தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்து விட்டனர்.

    பின்னர் மாவட்ட கலெக்டர் நேரடியாக சென்று இந்த பிரச்சினை சம்பந்தமாக பார்வையிட்டு சென்றார். ஆனால் இதுவரை இந்த கால்வாய் பிரச்சினை முடிவுக்கு வராததால் வருவாய் துறையினரை கண்டித்து ஆத்திரமடைந்த மயிலி கிராம மக்கள் அருப்புக்கோட்டை- நரிக்குடி சாலையில் மயிலி விலக்கில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அருப்புக்கோட்டை ஆர்.டி.ஓ. முருகேசன், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு குத்தாலிங்கம், திருச்சுழி துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார், அருப்புக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு சகாய ஜோஸ், திருச்சுழி தாசில்தார் ஆகியோர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமாதான பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.

    அப்போது பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை.

    இதையடுத்து மயிலி கிராம மக்கள் தங்களுடைய வாக்காளர் அடையாள அட்டைகளை திருச்சுழி தாசில்தாரிடம்ஒப்படைத்து விட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    அவ்வாறு கலைந்து சென்ற பொதுமக்கள் மயிலில் இருந்து கீழே இடையன்குளம் செல்லும் சாலையில் கற்கள், மண்ணை வைத்து அடைத்தனர். அப்போது அங்கிருந்த போலீசார் தடுத்தபோது போலீசாருக்கும், பொதுமக்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

    இந்த கால்வாய் பிரச்சினை சம்பந்தமாக மாவட்ட நிர்வாகம் தலையிட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மயிலி கிராம பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த சாலை மறியலால் அருப்புக்கோட்டை - நரிக்குடி சாலையில் 4 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    Next Story
    ×