என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    ஆலைகள் திறக்காத நிலையில் பட்டாசு தொழிலாளர்கள் கடும் பாதிப்பு

    சிவகாசி பகுதியில் உள்ள பட்டாசு ஆலைகள் கடந்த 1½ மாதங்களாக திறக்கப்படாமல் உள்ளதால் அதில் வேலை செய்து வந்த தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
    சிவகாசி:

    சிவகாசி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் உள்ளன. இந்த ஆலைகளில் தயாரிக்கப்படும் பட்டாசுகள் இந்தியா முழுவதும் அனுப்பி வைக்கப்பட்டு வந்தது.

    கடந்த தீபாவளியின் போது வழக்கமாக பட்டாசு உற்பத்தியில் 30 சதவீதம் கொரோனாவால் குறைந்தது. உற்பத்தி செய்து அனுப்பிவைக்கப்பட்ட பட்டாசுகளில் சுமார் ரூ. 1,000 கோடி மதிப்புள்ள பட்டாசுகள் விற்பனையாகாமல் தேங்கி விட்டது. பல்வேறு இடங்களில் கடன்களை வாங்கி பட்டாசுகளை உற்பத்தி செய்த பட்டாசு உற்பத்தியாளர்களுக்கும், அதை வாங்கி விற்பனைக்கு வைத்த மொத்த வியாபாரிகளுக்கும் இந்த தீபாவளியின் போது பெரிய அளவில் ந‌‌ஷ்டம் ஏற்பட்டது.

    இதனால் 2021-ம் ஆண்டு தீபாவளிக்கு தேவையான பட்டாசுகளை தயாரிக்க உற்பத்தியாளர்கள் இன்னும் முன் விரவில்லை. 2020 தீபாவளிக்கு தயாரிக்கப்பட்ட பட்டாசுகளே தற்போது 30 சதவீதம் இருப்பு வைக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

    இந்தநிலையில் பட்டாசுகளை தயாரிக்க முதலீடு செய்யப்படும் பணம் திரும்ப வருமா? என்ற அச்சம் பட்டாசு உற்பத்தியாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

    சிவகாசி பகுதியில் உள்ள பட்டாசு ஆலைகள் வழக்கமாக தீபாவளி பண்டிகைக்கு பின்னர் 10 நாள் கழித்து பராமரிப்பு பணிகள் அனைத்தும் முடித்த பின்னர் அடுத்த ஆண்டுக்குரிய உற்பத்தியை தொடங்குவார்கள். ஆனால் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை முடிந்து 1½ மாதங்கள் கடந்து விட்டன. ஆனால் இன்னும் பட்டாசு ஆலைகள் திறக்கப்படவில்லை.

    ஆதலால் இந்த ஆலையில் பணியாற்றி வந்த சுமார் 5 லட்சம் தொழிலாளர்கள் வேலை இழந்து தவித்து வருகிறார்கள். தற்போது கடந்த சில நாட்களாக மழை பெய்து வருவதாலும் பட்டாசு ஆலையை திறக்க முடியாத நிலை உள்ளது.

    சிவகாசியில் உள்ள பட்டாசு ஆலைகள் தங்களது உற்பத்தியை தொடங்கினால் தான் இங்குள்ள மற்ற அனைத்து நிறுவனங்களுக்கும் வேலை கிடைக்கும். அதன் மூலம் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படும். எனவே பட்டாசு தொழிலுக்கு ஏற்பட்டுள்ள இடர்பாடுகளை களைய தேவையான நடவடிக்கையை மத்திய, மாநில அரசுகள் எடுக்க வேண்டும் என பட்டாசு தொழிலாளர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

    அதேபோல கடந்த காலங்களில் தீபாவளி பண்டிகை முடிந்தவுடன் தொழிலாளர்கள் நோட்டு, புத்தகம் தயாரிக்கும் பணிக்கு செல்வார்கள். மே மாதம் பள்ளி மற்றும் கல்லூரி திறப்பையொட்டி அங்கு அதிக தொழிலாளர்கள் தேவைப்படுவார்கள். தற்போது கொரோனா ஊரடங்கினால் பள்ளி, கல்லூரிகள் செயல்படாததால் பல கோடி ரூபாய் மதிப்புள்ள நோட்டு, புத்தகங்களும் அப்படியே தேங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×