search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிவகாசியில் பட்டாசு தொழிலாளர்களுடன் கனிமொழி எம்பி கலந்துரையாடினார்
    X
    சிவகாசியில் பட்டாசு தொழிலாளர்களுடன் கனிமொழி எம்பி கலந்துரையாடினார்

    திமுக ஆட்சி அமைந்ததும் பட்டாசு தொழில் பிரச்சினைகளை ஸ்டாலின் தீர்த்து வைப்பார்- கனிமொழி

    “திமுக ஆட்சி அமைந்ததும் பட்டாசு தொழிலுக்கு ஏற்பட்டுள்ள அனைத்து பிரச்சினைகளையும் ஸ்டாலின் தீர்த்து வைப்பார்” என்று கனிமொழி எம்.பி. பேசினார்.
    சிவகாசி:

    தி.மு.க. மகளிர் அணி செயலாளரும், அக்கட்சி நாடாளுமன்ற குழு துணை தலைவருமான கனிமொழி எம்.பி. நேற்று சிவகாசியில் நடந்த ‘விடியலை நோக்கி ஸ்டாலின் குரல்’ என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இதையொட்டி சிவகாசி பஸ் நிலையம் அருகில் உள்ள தனியார் ஓட்டலில் பட்டாசு உற்பத்தியாளர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதில் பட்டாசு தொழில் அதிபர்கள் ராஜசேகர், ஆசைத்தம்பி, அரசன் கணேஷ்குமார், ராஜேஷ், விநாயக மூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். அப்போது பட்டாசு தொழிலை காக்கவும், பட்டாசுகளை வெளி நாட்டிற்கு ஏற்றுமதி செய்யவும், நீரி அமைப்பை கலைக்க மத்திய அரசை வலியுறுத்தவும் கோரிக்கை வைத்தனர்.

    இதற்கு பதில் அளித்து கனிமொழி எம்.பி. பேசியதாவது:-

    சுற்றுச்சூழலை பாதுகாக்கும் முடிவில் யாருக்கும் இருவேறு கருத்து இருக்க முடியாது. நாடு முழுவதும் 1 கோடி பேர் பட்டாசு தொழிலை நம்பி இருக்கிறார்கள். சிலர் அவசரமாக எடுத்த முடிவுகளால் இந்த தொழில் பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. சீனபட்டாசு கள்ளத்தனமாக விற்பனை செய்தபோது அதை தடுக்க நானும் கையெழுத்திட்டேன். பட்டாசு தொழிலுக்கு பிரச்சினை வரும் போதெல்லாம் அதற்கு தீர்வு காண நாடாளுமன்றத்தில் தி.மு.க. குரல் கொடுத்துள்ளது. பசுமை பட்டாசு குறித்து இன்னும் தெளிவான முடிவுகளை நீரி அமைப்பு அறிவிக்கவில்லை.

    பட்டாசு ஏற்றுமதி செய்ய நடவடிக்கை எடுக்க மத்திய அரசை வலியுறுத்துவேன். தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து பட்டாசு கொண்டு செல்ல ஏற்பாடு செய்வேன். இன்னும் 4 மாதங்களில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட போகிறது. தி.மு.க. ஆட்சி அமைக்கும். அப்போது பட்டாசு தொழிலுக்கு ஏற்பட்டுள்ள அனைத்து பிரச்சினைகளையும் ஸ்டாலின் தீர்த்து வைப்பார்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    பின்னர் அங்கிருந்து புறப்பட்டு பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். திருத்தங்கலில் உள்ள ஒரு மண்டபத்தில் பட்டாசு தொழிலாளர்களுடன் கனிமொழி கலந்துரையாடினார்.

    அப்போது, “கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தலா ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் என்று ஸ்டாலின் வலியுறுத்தினார். ஆனால் அப்போது மக்களுக்கு எந்த உதவியும் செய்யாமல் இப்போது பொங்கல் பரிசாக ரூ.2,500 கொடுப்போம் என அறிவித்து இருக்கிறார்கள். இவர்கள் ரூ.20 ஆயிரம் கொடுத்தாலும் இந்த தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற முடியாது” என்று கூறினார்.

    பின்னர் கனிமொழி எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:-

    பட்டாசு தொழில் பிரச்சினை குறித்து மத்திய அரசிடம் கூட தமிழக அரசு பேசவில்லை. பட்டாசு தொழிலை பாதுகாக்க மு.க.ஸ்டாலின் தான் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். எனது சுற்றுப்பயணத்தின்போது நான் அதிக அளவில் மக்களை சந்தித்து வருகிறேன். மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சராக வேண்டும் என்பதில் மக்கள் தெளிவாக இருக்கிறார்கள். 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும். இந்தியா ஜனநாயக நாடு. இங்கு யார் வேண்டும் என்றாலும் கட்சி ஆரம்பிக்கலாம். அதை பற்றி நான் கருத்து சொல்ல முடியாது. யார் கட்சி ஆரம்பித்தாலும் தி.மு.க.வுக்கு எவ்வித பாதிப்பும் கிடையாது. இந்த பகுதியில் ஒரு ரெயில்வே பாலம் அமைக்க 10 வருடமாக இப்பகுதி மக்கள் போராடுகிறார்கள். முதல்-அமைச்சர் அடிக்கல் நாயகனாகத்தான் இருக்கிறார். அவரால் எந்த திட்டமும் கொண்டுவரமுடியவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×