என் மலர்
விருதுநகர்
விருதுநகர்:
விருதுநகர் மையப்பகுதியில் அமைந்துள்ளது ஸ்ரீ சொக்கநாதர் கோவில். இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான இந்த கோவிலின் நிர்வாக அதிகாரியாக தேவி செயல்பட்டு வருகிறார்.
தினமும் இந்த கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வந்து தரிசனம் செய்வது உண்டு. நேற்று இரவு வழக்கம்போல் பூஜைகள் முடிந்ததும் பணியாளர்கள் கோவிலை பூட்டி சென்றனர்.
இந்த நிலையில் இன்று காலை கோவிலில் வழிபாடு நடத்த அர்ச்சகர் வந்தார். அவர் கோவிலின் முன்பக்க கதவு பூட்டை திறந்து உள்ளே சென்றார். அப்போது அங்கு உள்ள சி.சி.டி.வி. கேமரா சேதப்படுத்தப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுபற்றி கோவில் நிர்வாக அதிகாரி மற்றும் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். தொடர்ந்து கோவிலுக்குள் சுற்றிப் பார்த்த போது பிரகாரத்தில் உள்ள தட்சிணாமூர்த்தி சன்னதியில் உள்ள உண்டியல் உடைக்கப்பட்டு அதில் இருந்த பயணம் கொள்ளை போனது தெரிய வந்தது. ஆனால் கொள்ளை போன நகைகள், பணத்தின் மதிப்பு தெரியவில்லை.
இதுகுறித்து பஜார் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
யாரோ மர்ம மனிதர்கள் நள்ளிரவு நேரம் கோவில் பூட்டை உடைக்காமல் காம்பவுண்டு சுவரை தாண்டி உள்ளே குதித்து வந்துள்ளனர். அவர்கள் சி.சி.டி.வி. கேமராவை உடைத்து சேதப்படுத்தி உள்ளனர்.
அதன் பிறகு தட்சிணா மூர்த்தி சன்னதி முன்பு இருந்த உண்டியலை உடைத்து அதில் இருந்த நகை-பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
நகரின் மைய பகுதியில் உள்ள கோவிலில் மர்ம மனிதர்கள் இரவில் புகுந்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த கோவிலில் இரவு காவலர் பணியில் உள்ளார். ஆனால் அவருக்கு கொள்ளை குறித்து எந்த தகவலும் தெரியவில்லை.
இது தொடர்பாக விருதுநகர் பஜார் போலீசார் தீவிர விசாரணையில் இறங்கி உள்ளனர். கோவிலுக்குள் புகுந்த கொள்ளையர்கள் தட்சிணாமூர்த்தி சன்னதி உண்டியலை மட்டும் உடைத்து பணம்- நகை எடுத்துச் சென்றுள்ளனர்.
மூல தெய்வமான சொக்கநாதர் சன்னதி உண்டியலில் அவர்கள் கைவைக்கவில்லை. இதற்கு காரணம் என்ன என்பது மர்மமாக உள்ளது.
சிவன் உண்டியலை தொடுவதற்குள் ஏதாவது சத்தம் கேட்டு அவர்கள் வெளியேறி விட்டார்களா?அல்லது வேறு ஏதும் காரணமா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் விருதுநகர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
காரியாபட்டி:
விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகே உள்ள வடக்கு நத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (வயது 63). இவர் மைக்செட், சமையல் பாத்திரங்களை வாடகைக்கு விடும் தொழில் செய்து வந்தார்.
அதே ஊரைச் சேர்ந்தவர் வள்ளிமுத்து (45). இவரும் அதே தொழில் செய்து வந்ததால் இருவருக்குமிடையே அடிக்கடி மோதல் இருந்து வந்தது.
தொழில் போட்டி காரணமாக அதே ஊரில் உள்ள ஒரு கட்டிடத்திற்கு இருவரும் பங்கு போட்டு தகராறு செய்து வந்தனர். இதன் காரணமாக அவர்களுக்குள் அடிக்கடி மோதல் ஏற்படுவது உண்டு.
நேற்று பாலசுப்பிரமணியன் வீட்டிற்கு முன்பாக உள்ள தள்ளுவண்டியில் படுத்திருந்தார். சிறிது நேரம் கழித்து அந்த வழியே சென்றவர்கள் தள்ளுவண்டியில் பாலசுப்பிரமணியன் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து பரளச்சி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து பாலசுப்பிரமணியன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து கொலையாளி யார்? என்பது குறித்து விசாரணை நடத்தினர்.
இதில் முன் விரோதம் காரணமாக வள்ளிமுத்து தான் கடப்பாரையால் தாக்கி கொலை செய்தது தெரிய வந்தது. அதன்பேரில் போலீசார் அவரை கைது செய்தனர்.
வெம்பக்கோட்டை ஒன்றியத்திற்குட்பட்ட சல்வார்பட்டி, ஏழாயிரம்பண்ணை, சுப்ரமணியபுரம், அன்பின் நகரம், பாறைப்பட்டி, பூசாரி நாயக்கன்பட்டி, சிப்பிபாறை, சத்திரம், குகன்பாறை, துலுக்கன்குறிச்சி, செவல்பட்டி, அம்மையார்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் 4,500 ஏக்கர் பரப்பில் மானாவாரி பயிராகவும், 500 ஏக்கர் பரப்பில் நீர் பாசன முறையிலும் நித்தியகல்யாணியை இப்பகுதி விவசாயிகள் பயிரிட்டுள்ளனர்.
எந்த விதமான தட்பவெப்ப நிலைகளிலும் வாடாமல் வளர்ந்து பூத்துக்குலுங்கும் தன்மையில் உள்ளதால் இதற்கு நித்தியகல்யாணி என பெயர் சூட்டப்பட்டுள்ளது. எல்லா தட்பவெப்பநிலையிலும் வளருவதால் இதனை விவசாயிகள் விரும்பி சாகுபடி செய்கின்றனர்.
நித்தியகல்யாணியில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. புற்றுநோய், உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு மருந்து தயாரிக்க இந்த செடியை பயன்படுத்துகின்றனர்.
இந்த செடி நடப்பட்டு 3 மாதத்தில் பலன் தரக்கூடியது ஆகும். இந்த செடியின் இலை, பூ, தண்டு முதல் வேர் வரை அனைத்து பாகங்களிலும் மருத்துவ குணம் நிறைந்துள்ளது. பராமரிப்பு செலவும் மிக குறைவானதாகும்.
இதுகுறித்து விவசாயி செந்தாமரை கூறியதாவது:-
வெம்பக்கோட்டை மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் நித்திய கல்யாணி சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
இங்கு சாகுபடி செய்யப்படும் செடிகள் இங்கிருந்து பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. கொரோனாவுக்கு முன்பு வரை கிலோ ரூ.70-க்கு விற்பனை ஆனது. ஆனால் தற்போது ெகாரோனா காரணமாக வெளிநாட்டுக்கு ஏற்றுமதிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டதால் நித்திய கல்யாணி செடிகள் ரூ.45-க்கு விற்பனை செய்யப்படுகிறது. விலை குறைந்துள்ளதாலும், ஏற்றுமதி இல்லாததாலும் நாங்கள் மிகவும் சிரமப்படுகிறோம்.

சிவகாசி பழனியாண்டவர் தெருவைச் சேர்ந்தவர் கதிரேசன் (வயது 70). இவர் சாத்தூர் அருகே சிந்நபள்ளி கிராமத்தில் பட்டாசு ஆலை நடத்தி வருகிறார். இங்கு பேன்சி ரக பட்டாசு வெடிகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.
நேற்று வழக்கம் போல் ஊழியர்கள் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பட்டாசுகளுக்கு இடையே ஏற்பட்ட உராய்வு காரணமாக வெடி விபத்து ஏற்பட்டது.
இதில் இங்கு பணியாற்றிய சுந்தரகுடும்பன்பட்டியைச் சேர்ந்த முகேஷ் கண்ணன் (25) பலத்த காயமடைந்தார். அவரை உடனடியாக சிவகாசி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி முகேஷ் கண்ணன் பரிதாபமாக இறந்தார். இது குறித்து சாத்தூர் டவுண் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாத ரெட்டி கூறியதாவது:-
மாவட்டத்தில் பொருளாதார ரீதியில் நலிவுற்ற, வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு சொந்தமாக தொழில் தொடங்குவதற்கு 25 சதவீத மானியத்துடன் கூடிய வங்கி கடனுதவி வழங்கும் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் மாவட்ட தொழில் மையம் மூலம் செயல்படுத்தப்படுகிறது.
இத்திட்டத்தின் மூலம் கடனுதவி பெற விரும்புபவர்கள் 18 வயதுக்கு மேற்பட்ட அதிகபட்சம் 35 வயது வரை உள்ள இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் தகுதி உடையவர் ஆவர். சிறப்புப்பிரிவினரான ஆதிதிராவிடர், பழங்குடியினர், பின்தங்கிய வகுப்பினர், மிகவும் பின்தங்கிய வகுப்பினர், சிறுபான்மையினர், மகளிர், முன்னாள் படைவீரர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகள் ஆகியோருக்கு வயது வரம்பு 45 வரைதளர்த்தப்பட்டுள்ளது.
குறைந்தபட்சம் 3 ஆண்டுகளுக்கு குறையாமல் விருதுநகர் மாவட்டத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.5 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
திட்டத்தின் கீழ் உற்பத்தித்தொழில்களுக்கு அதிகபட்ச முதலீட்டு தொகை ரூ.15 லட்சமும் சேவை மற்றும் வியாபாரத்தொழில்களுக்குகளுக்கு அதிக பட்ச முதலீட்டுதொகை ரூ.5 லட்சமும் கடனுதவியாக வழங்கப்படுகிறது. இந்த கடனுக்கு 25 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூபாய் 2.5 லட்சம் மானியமாக பெற்று பயனடையலாம். ஜவுளி வியாபாரம், பலசரக்கு மற்றும் அனைத்து வியாபாரம் சார்ந்த தொழில்கள் உள்பட சேவை சார்ந்த தொழில்கள் தொடங்கலாம். மேலும் கொரோனா காரணமாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
தகுதிவாய்ந்த விண்ணப்பங்கள் தேர்வு செய்து நேரடியாக வங்கிக்கு பரிந்துரைக்கப்படும். நடப்பு நிதியாண்டில் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து நகர்ப்புற மற்றும் கிராமப்புற பகுதிகளுக்கு பயனாளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு விண்ணப்பங்கள் வங்கிக்கு பரிந்துரைக்கப்பட்டு வருவதால் ஆர்வமுள்ள இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் இதற்கான இணையதளத்தில் விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் விவரங்களுக்கு பொது மேலாளர் மாவட்ட தொழில் மையம் விருதுநகர் (045 62 282 739,252 308) என்ற முகவரியில் அணுகி பயன் பெறலாம்.
வத்திராயிருப்பு தாலுகா பகுதியில் பெரியகுளம் கண்மாய், விராகசமுத்திரம் கண்மாய், பூரிப்பாறை குளம், புங்கங்குளம், குணவந்த நேரி, பாதரங்குளம், வில்லவராயன்குளம் உள்பட 40 கண்மாய்கள் உள்ளன. இந்தநிலையில் கூமாப்பட்டி நெடுங்குளம் பகுதியில் உள்ள புங்கங்குளம் கண்மாயை நம்பி 200 ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.
வத்திராயிருப்பு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும், மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளிலும் பெய்த தொடர்மழையினால் இப்பகுதியில் உள்ள நீர் நிலைகள், ஆறுகளில் நீர்வரத்து தொடர்ச்சியாக வந்து கொண்டு இருக்கிறது.
வத்திராயிருப்பு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள 40 கண்மாய்களும் நீர் நிரம்பி உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியுடன் சாகுபடி பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தநிலையில் நெடுங்குளம் பகுதியில் உள்ள புங்கங்குளம் கண்மாய்க்கு மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தொடர்ச்சியாக பெய்த தொடர் மழையின் காரணமாக இந்த கண்மாயில் ஓரளவிற்கு நீர் உள்ளது. இந்நிலையில் தற்போது இந்த கண்மாயை நம்பியுள்ள விவசாயிகள் விவசாய பணிகளை மேற்கொண்டு வரும் சூழ்நிலையில் இந்த கண்மாயில் உள்ள மதகின் ஷட்டர் பழுதாகி காணப்படுகிறது.
இதனால் இந்த கண்மாயில் இருக்கிற நீர் தொடர்ச்சியாக வெளியேறி வீணாகி அருகில் உள்ள விவசாய நிலங்களுக்கு செல்கிறது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
எனவே மாவட்ட நிர்வாகம் உடனே நடவடிக்கை எடுத்து கண்மாயில் உள்ள மதகுகளை சீரமைத்து தண்ணீர் வீணாவதை தடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 30 கொரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையில் பாதிப்பு எண்ணிக்கை 45,112 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 44,050 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 495 பேர் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருவதோடு வீடுகளிலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். நேற்று நோய் பாதிப்புக்கு யாரும் பலியாகவில்லை.
நேற்று மாவட்டத்தில் காரியாபட்டி, அருப்புக்கோட்டை, சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், சிவகாசி, வெம்பக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் நோய் பாதிப்பு ஏற்பட்டது. மாவட்ட பட்டியலில் 7 பேருக்கு நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலப் பட்டியலில் 30 பேருக்கு நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.






