search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பட்டாசு ஆலை வெடிவிபத்து"

    • வெடிவிபத்தில் சண்முகராஜ் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன்.
    • உயிரிழந்தவரின் குடும்பத்திற்கும் அவரது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    சென்னை :

    தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை வட்டம், பனையடிபட்டி கிராமத்தில் இயங்கி வந்த தனியாருக்குச் சொந்தமான பட்டாசு ஆலையில் இன்று காலை எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட வெடிவிபத்தில் கண்டியாபுரத்தைச் சேர்ந்த சண்முகராஜ் (வயது 36) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன்.

    இவ்விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கும் அவரது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, அவரது குடும்பத்திற்கு மூன்று இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன் என கூறியுள்ளார்.

    • வெம்பக்கோட்டை ஒன்றியம் பனையடிப்பட்டி கிராமத்தில் ஜெயபால் என்பவருக்கு சொந்தமான ஜெயதர்ஷினி பட்டாசு ஆலை இயங்கி வருகிறது.
    • தனக்கு ஒதுக்கப்பட்டிருந்த வழக்கமான பணிகளை தொடங்கிய சண்முகராஜ், வெடி குழாய்களுக்குள் மருந்துகளை செலுத்திக் கொண்டு இருந்தார்.

    சிவகாசி:

    தீபாவளி பண்டிகை கடந்த மாதம் 12-ந்தேதி கொண்டாடப்பட்ட நிலையில் அடுத்த ஆண்டுக்கான பட்டாசு உற்பத்தியை சிவகாசி உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இயங்கும் பட்டாசு ஆலைகள் தொடங்கியுள்ளன.

    நடந்து முடிந்த தீபாவளிக்கு ரூ.6 ஆயிரம் கோடிக்கு பட்டாசுகள் விற்பனையானது. அதனை இந்தாண்டு மிஞ்சும் வகையில் இருப்பதற்கான நடவடிக்கைகளில் பட்டாசு ஆலை உரிமையாளர்கள் மும்முரம் காட்டி வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக அடுத்த ஆண்டு தீபாவளிக்காக கடந்த மாதம் (நவம்பர்) 24-ந்தேதி பட்டாசு தயாரிப்பு பணியை ஆலைகள் மீண்டும் தொடங்கின.

    விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி, சாத்தூர், வெம்பக்கோட்டை, தாயில்பட்டி, செவல்பட்டி, ஏழாயிரம் பண்ணை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பட்டாசு தயாரிப்பு பணிகள் தீவிரமடைந்துள்ளன. குறிப்பாக வரப்போகும் கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டங்களை கருத்தில் கொண்டும் பட்டாசு அதிக அளவில் உற்பத்தி செய்யப்படுகிறது.

    இந்த பணிகள் பூஜைகளுடன் தொடங்கும்போதே அடுத்தாண்டு தீபாவளி பண்டிகைக்கு பட்டாசு விற்பனை நன்றாக இருக்க வேண்டும், விபத்தில்லாமல் பட்டாசு ஆலைகளில் உற்பத்தி நடைபெற வேண்டும் என தொழிலாளர்கள் வேண்டிக்கொண்டனர். ஆனாலும் இன்று முதல் விபத்து நடந்துள்ளது. அது பற்றிய விபரம் வருமாறு:-

    சிவகாசி அருகே வெம்பக்கோட்டை ஒன்றியம் பனையடிப்பட்டி கிராமத்தில் ஜெயபால் என்பவருக்கு சொந்தமான ஜெயதர்ஷினி பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. இந்த பட்டாசு ஆலையானது மாவட்ட வெடிபொருள் கண்காணிப்பு துறை உரிமத்துடன் செயல்பட்டு வருகிறது. இங்கு சுமார் 30-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இன்று காலை பனையடிப்பட்டி அருகேயுள்ள உட்கடை கண்டியாபுரம் கிராமத்தை சேர்ந்த பொம்மு ரெட்டியார் மகன் சண்முகராஜ் (வயது 36) என்பவர் முதல் நபராக பணிக்கு வந்தார்.

    தனக்கு ஒதுக்கப்பட்டிருந்த வழக்கமான பணிகளை தொடங்கிய சண்முகராஜ், வெடி குழாய்களுக்குள் மருந்துகளை செலுத்திக் கொண்டு இருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக உராய்வு ஏற்பட்டு பட்டாசுகள் வெடித்து சிதறின. அருகில் குவித்து வைக்கப்பட்டிருந்த வெடி மருந்தில் பற்றிய தீயானது அந்த கட்டிடம் முழுவதும் பரவியது.

    இதில் அந்த கட்டிடம் இடிந்து தரைமட்டமானது. அதன் இடிபாடுகளுக்குள் சிக்கிய சண்முகராஜ் உடல் நசுங்கி பலியானார். விபத்து குறித்த தகவல் அறிந்ததும் உடனடியாக விரைந்து வந்த ஏழாயிரம் பண்ணை தீயணைப்பு நிலைய அலுவலர் கண்ணன் தலைமையில் வந்த வீரர்கள் தீ மேலும் பரவாமல் தடுத்து அணைத்தனர். மேலும் இடிபாடுகளில் சிக்கியிருந்த சண்முகராஜ் உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    பட்டாசு ஆலை விபத்தில் பலியான சண்முகராஜூக்கு திருமணமாகி மனைவி மற்றும் இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். இச்சம்பவம் குறித்து ஏழாயிரம் பண்ணை போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கர் வழக்குப்ப திவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். பட்டாசு ஆலை திறந்த சில நிமிடத்தில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் பலியானதால் அப்பகுதி மக்களிடம் பதட்டம் ஏற்பட்டுள்ளது.

    • மருந்து இருப்பு வைக்கப்பட்டிருந்த ஒரு அறையில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டது.
    • முழுமையாக தயாரிக்கப்படாமல் இருப்பு வைக்கப்பட்டிருந்த பட்டாசு மூலப்பொருட்களில் ஏற்பட்ட தட்பவெப்ப மாற்றம் காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

    சிவகாசி:

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி வேலாயுத ரஸ்தா ரோடு பகுதியை சேர்ந்தவர் பாலாஜி பாபநாசம் (வயது 40). இவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை செங்கமலப்பட்டியில் செயல்பட்டு வருகிறது. நாக்பூர் உரிமம் பெற்ற இந்த பட்டாசு ஆலையில் 100-க்கும் மேற்பட்ட அறைகள் உள்ளன. நேற்று பட்டாசு ஆலைக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது.

    இந்த நிலையில் நேற்று இரவு மருந்து இருப்பு வைக்கப்பட்டிருந்த ஒரு அறையில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இதில் அந்த அறை இடிந்து தரைமட்டமானது. மேலும் அருகில் இருந்த 2 அறைகளும் சேதமானது.

    இதுபற்றி தகவல் கிடைத்ததும் சிவகாசி தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

    முழுமையாக தயாரிக்கப்படாமல் இருப்பு வைக்கப்பட்டிருந்த பட்டாசு மூலப்பொருட்களில் ஏற்பட்ட தட்பவெப்ப மாற்றம் காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

    இதுதொடர்பாக நாரணபுரம் கிராம நிர்வாக அலுவலர் ரேவதி சிவகாசி கிழக்கு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் பட்டாசு ஆலை உரிமையாளர் பாலாஜி பாபநாசம், போர்மேன் கணேசன் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • படுகாயத்துடன் 2 பேர் சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
    • பட்டாசு ஆலை வெடிவிபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சிவகாசி:

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள விளாம்பட்டி ரோடு பூலாவூரணியில் பிரவீன்ராஜா என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. 30-க்கும் மேற்பட்ட அறைகளை கொண்ட இந்த பட்டாசு ஆலைகளில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பெண்கள் உள்பட ஏராளமானோர் வேலை பார்த்து வருகின்றனர்.

    இன்று காலை ஆலை திறக்கப்பட்டு தொழிலாளர்கள் பட்டாசு தயாரிக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டிருந்தனர். அங்குள்ள ஒரு அறையில் தரை சக்கரம் தயாரிக்கும் பணி நடந்து வந்தது.

    இதில் இடையன்குளத்தை சேர்ந்த கருப்பசாமி (வயது 32), தங்கவேல் (55), கருப்பம்மாள் (50) உள்பட 4 பேர் பணியாற்றி வந்தனர். மதியம் பட்டாசு தயாரிப்புக்காக மருந்து கலவை தயார் செய்யப்பட்டது. அப்போது திடீரென மருந்துகள் உரசி தீப்பற்றியது.

    கண்ணிமைக்கும் நேரத்தில் தீ அங்கு ஏற்கனவே தயாரித்து வைக்கப்பட்டிருந்த பட்டாசுகளில் பரவி பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதில் சிறிது நேரத்தில் அந்த அறை மற்றும் அருகில் இருந்த மற்றொரு அறை முழுவதுமாக இடிந்து தரைமட்டமானது.

    இந்த விபத்தில் அந்த அறையில் இருந்த கருப்பசாமி, தங்கவேல் ஆகியோர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். காயம் அடைந்த கருப்பம்மாள் உள்பட 2 பேரை சக தொழிலாளர்கள் மீட்டு சிவகாசி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த சிவகாசி தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து போராடி தீயை அணைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக மாரனேரி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி உள்ளிட்ட இடங்களில் 100-க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் செயல்பட்டு வருகின்றன.
    • சில ஆலைகளில் அடிக்கடி வெடிவிபத்து ஏற்பட்டு தொழிலாளர்கள் பலியாவது தொடர்ச்சியாக நடந்து வருகிறது.

    சாத்தூர்:

    விருதுநகர் மாவட்டம் சிவகாசியை சேர்ந்தவர் மாரியப்பன். இவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை சாத்தூரை அடுத்த ஒத்தையால் பகுதியில் உள்ளது. இங்கு 10-க்கும் மேற்பட்ட அறைகளில் பட்டாசுகள் தயாரிக்கப்பட்டுள்ளது.

    இந்தநிலையில் பட்டாசு ஆலையின் உரிமம் காலாவதி ஆகிவிட்டதால் அதனை புதுப்பிக்க பதிவு செய்துள்ளனர். இதன் காரணமாக கடந்த 10 நாட்களாக பட்டாசு தயாரிக்கும் பணிகள் நடைபெறவில்லை.

    ஒரு அறையில் மட்டும் பட்டாசுகள் தயாரிக்க தேவைப்படும் மூலப்பொருளான சல்பர் அதிகளவில் சேமித்து வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையே மழை பெய்ததால் சல்பர் வைக்கப்பட்டிருந்த அறைக்குள் மழைநீர் புகுந்ததால் நேற்று இரவு வெடி விபத்து ஏற்பட்டது.

    இதில் 3 அறைகள் இடிந்து தரைமட்டமானது. இந்த தீ விபத்து பற்றி சாத்தூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு படை வீரர்கள், தீ மேலும் பரவாமல் அணைத்தனர்.

    இதுகுறித்து சாத்தூர் தாலுகா போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தீ விபத்து நடந்தபோது ஆலையில் தொழிலாளர்கள் யாரும் இல்லாததால், அதிர்ஷ்டவசமாக உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை.

    விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி உள்ளிட்ட இடங்களில் 100-க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. அவற்றில் சில ஆலைகளில் அடிக்கடி வெடிவிபத்து ஏற்பட்டு தொழிலாளர்கள் பலியாவது தொடர்ச்சியாக நடந்து வருகிறது.

    எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பட்டாசு ஆலைகளை அடிக்கடி ஆய்வு செய்து, அவை தகுந்த பாதுகாப்பு கட்டமைப்புகளுடன் செயல்பட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • பட்டாசு தொழிற்சாலை மற்றும் குடோனில் ஏற்பட்ட வெடிவிபத்தில் சிக்கி 9 பேர் உயிரிழந்த சம்பவம் பேரதிர்ச்சியளிக்கிறது.
    • மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் அனைவருக்கும் தலா ரூ. 2 லட்சம் அரசு வழங்க வேண்டும்.

    சென்னை :

    பெருந்தலைவர் மக்கள் கட்சித்தலைவர் என்.ஆர்.தனபாலன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-

    காஞ்சிபுரம் அடுத்த வளத்தோட்டம் பகுதியில் உள்ள பட்டாசு தொழிற்சாலை மற்றும் குடோனில் ஏற்பட்ட வெடிவிபத்தில் சிக்கி 9 பேர் உயிரிழந்த சம்பவம் பேரதிர்ச்சியளிக்கிறது. உயிரிழந்தவர்களின் ஆத்மா சாந்தியடையவும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

    காஞ்சிபுரம் பட்டாசு விபத்தில் உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு அரசு அறிவித்துள்ள 3 லட்சம் போதுமானதல்ல, தொழிலாளர்களின் உயிர் இழப்பு என்பது ஈடுசெய்ய முடியாதது என்பதை அரசு கருத்தில் கொண்டு குறைந்தபட்சம் தலா 10 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும், மேலும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் அனைவருக்கும் தலா ரூ. 2 லட்சம் அரசு வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • மதுரா, சிவனார்புரம் கிராமத்தில் இயங்கிவந்த தனியார் ஆலை வெடிபொருள் தயாரிக்கும் பாதிக்கப்பட்டது.
    • வெடிவிபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

    சென்னை:

    கடலூர் மாவட்டத்தில் பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவியை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது:

    கடலூர் மாவட்டம் மற்றும் வட்டம் மதலப்பட்டு மதுரா, சிவனார்புரம் கிராமத்தில் இயங்கிவந்த தனியார் வெடிபொருள் தயாரிக்கும் ஆலையில் நேற்று எதிர்பாராத விதமாக ஏற்பட்ட வெடிவிபத்தில் புதுச்சேரி மாநிலம் அரியாங்குப்பத்தைச் சேர்ந்த திருமதி மல்லிகா, (60) என்பவர் உயிரிழந்தார் என்ற செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன்.

    இவ்விபத்தில் கடுமையான மற்றும் லேசான தீக்காயங்களுடன் கடலூர் அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் திருமதி.சுமதி (45), திருமதி. பிருந்தாதேவி. (35), செல்வி. லட்சுமி. (24), செல்வி. செவ்வந்தி, (19), மற்றும் செல்வி. அம்பிகா, த/பெ.இராஜேந்திரன் (18), ஆகியோருக்கு சிறப்பான சிகிச்சை அளிக்க அறிவுறுத்தியுள்ளேன்.

    உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கும் அவரது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு 3 இலட்சம் ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு தலா ஐம்பதாயிரம் ரூபாயும், முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து நிதியுதவி வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    #Maalaimalar

    -------------

    • பட்டாசு ஆலை வெடி விபத்தில் பலி எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.
    • விபத்தில் சிக்கிய 5 பேரும் பலியாகி இருப்பது சிவகாசியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    சிவகாசி:

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள தாயில்பட்டி கனஞ்சாம் பட்டியில் மாயக்கண்ணன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. இங்கு 40-க்கும் மேற்பட்ட அறைகளில் பேன்சி ரக பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு வந்தன.

    கடந்த 19-ந் தேதி வழக்கம் போல் தொழிலாளர்கள் பட்டாசு தயாரிப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இதில் அங்கு பணிபுரிந்த சத்திரப்பட்டியை சேர்ந்த முனீஸ்வரி, அமீர்பாளையத்தைச் சேர்ந்த சங்கர் ஆகிய 2 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பலியானார்கள்.

    வெடி விபத்தில் சிவகாசியை சேர்ந்த கருப்பசாமி (வயது26), மாரிமுத்து (50), ராஜ்குமார் (35) ஆகிய 3 பேர் படுகாயம் அடைந்தனர். 60 சதவீதத்துக்கு மேல் தீக்காயம் அடைந்த இவர்கள் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் ஆபத்தான நிலையில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி 21-ந் தேதி மாரிமுத்து, கருப்பசாமி ஆகிய 2 பேர் பரிதாபமாக இருந்தனர்.

    ராஜ்குமார் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனாலும் அவரும் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை பரிதாபமாக இறந்தார். இதையடுத்து பட்டாசு ஆலை வெடி விபத்தில் பலி எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. விபத்தில் சிக்கிய 5 பேரும் பலியாகி இருப்பது சிவகாசியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    இதுதொடர்பாக ஏற்கனவே வெம்பக் கோட்டை போலீசார் பட்டாசு ஆலை உரிமையாளர் மாயக்கண்ணன், அவரது மனைவி ஆறுமுகத்தாய், ஒப்பந்ததாரர் கந்தசாமி, போர் மேன் கண்ணன் ஆகியோர் மீது 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    ×