search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடிவிபத்து- 3 அறைகள் தரைமட்டம்
    X

    சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடிவிபத்து- 3 அறைகள் தரைமட்டம்

    • விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி உள்ளிட்ட இடங்களில் 100-க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் செயல்பட்டு வருகின்றன.
    • சில ஆலைகளில் அடிக்கடி வெடிவிபத்து ஏற்பட்டு தொழிலாளர்கள் பலியாவது தொடர்ச்சியாக நடந்து வருகிறது.

    சாத்தூர்:

    விருதுநகர் மாவட்டம் சிவகாசியை சேர்ந்தவர் மாரியப்பன். இவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை சாத்தூரை அடுத்த ஒத்தையால் பகுதியில் உள்ளது. இங்கு 10-க்கும் மேற்பட்ட அறைகளில் பட்டாசுகள் தயாரிக்கப்பட்டுள்ளது.

    இந்தநிலையில் பட்டாசு ஆலையின் உரிமம் காலாவதி ஆகிவிட்டதால் அதனை புதுப்பிக்க பதிவு செய்துள்ளனர். இதன் காரணமாக கடந்த 10 நாட்களாக பட்டாசு தயாரிக்கும் பணிகள் நடைபெறவில்லை.

    ஒரு அறையில் மட்டும் பட்டாசுகள் தயாரிக்க தேவைப்படும் மூலப்பொருளான சல்பர் அதிகளவில் சேமித்து வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையே மழை பெய்ததால் சல்பர் வைக்கப்பட்டிருந்த அறைக்குள் மழைநீர் புகுந்ததால் நேற்று இரவு வெடி விபத்து ஏற்பட்டது.

    இதில் 3 அறைகள் இடிந்து தரைமட்டமானது. இந்த தீ விபத்து பற்றி சாத்தூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு படை வீரர்கள், தீ மேலும் பரவாமல் அணைத்தனர்.

    இதுகுறித்து சாத்தூர் தாலுகா போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தீ விபத்து நடந்தபோது ஆலையில் தொழிலாளர்கள் யாரும் இல்லாததால், அதிர்ஷ்டவசமாக உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை.

    விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி உள்ளிட்ட இடங்களில் 100-க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. அவற்றில் சில ஆலைகளில் அடிக்கடி வெடிவிபத்து ஏற்பட்டு தொழிலாளர்கள் பலியாவது தொடர்ச்சியாக நடந்து வருகிறது.

    எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பட்டாசு ஆலைகளை அடிக்கடி ஆய்வு செய்து, அவை தகுந்த பாதுகாப்பு கட்டமைப்புகளுடன் செயல்பட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×