search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நினைவகமாக மாற்றப்பட்ட வீடு
    X
    நினைவகமாக மாற்றப்பட்ட வீடு

    பெருந்தலைவரின் பெருந்தொண்டர் இவர்... சொந்த வீட்டையே நினைவகமாக மாற்றினார்

    காமராஜர் குறித்த சான்றுகளை ஆவணப்படுத்தி அவற்றை எதிர்கால சந்ததியினருக்கு கொண்டு சேர்ப்பதே தன்னுடைய நோக்கம் என கூறுகிறார் எஸ்.பி.கணேசன்.
    விருதுநகர்:

    அன்று பழைய ராமநாதபுரம் ஜில்லாவுடன் விருதுபட்டி இணைந்து இருந்தது. தற்போது விருதுநகராக வளர்ச்சி பெற்றுள்ளது. இந்த பகுதி பெரும்பாலும் தீப்பெட்டித் தொழில் மற்றும் பட்டாசுத் தொழிலையே முதன்மையாக கொண்டுள்ளது. இந்த பகுதியில் பிறந்த கர்மவீரர் காமராஜர், தனது ஆட்சிக்காலத்தின்போது கொண்டு வந்த இலவச மதிய உணவு திட்டம், அப்போது அங்கிருந்த ஏழை எளிய குடும்பத்தைச் சேர்ந்தவர்களின் குழந்தைகளின் பசியைப் போக்க வழிவகை செய்தது. இவர் கொண்டுவந்த நீர்ப்பாசனத் திட்டங்கள் இன்றளவும் தமிழகத்தின் நீராதாரம், விவசாயம் மற்றும் குடிநீர்த் தேவைகளுக்கு பேருதவியாக உள்ளன.

    தமிழக மக்களின் நலனுக்காகவும் வாழ்வாதார மேம்பாட்டிற்காகவும் காமராஜர் எவ்வளவோ அரும்பணிகளை செய்திருக்கிறார். தனக்கென வாழாமல், மக்கள் சேவைக்காக தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்தவர் காமராஜர். அவரது பிறந்த நாளான இன்று, அவரது அருமை பெருமைகளை அனைத்து தரப்பினரும் நினைவுகூர்ந்தவண்ணம் உள்ளனர். 

    காமராஜரின் தொண்டர் எஸ்.பி.கணேசன்

    இந்த நன்னாளில், காமராஜரின் சொந்த ஊரான விருதுநகரைச் சேர்ந்த எஸ்.பி.கணேசன் என்பவர், காமராஜரின் சாதனைகளையும் அதன் விவரங்களையும் ஆராய்ந்து அவற்றை ஆவணப்படுத்துவதைப் பற்றி பார்ப்போம்...

    தலைவர்களுக்கு அரசு சார்பிலோ, சம்பந்தப்பட்ட அமைப்புகள் சார்பிலோ நினைவிடங்கள் அமைக்கப்பட்டு, பராமரித்து வருவதை குறித்து நாம் அறிந்திருப்போம். ஆனால், எஸ்.பி.கணேசன் தனது சொந்த முயற்சியில், காமராஜர் தொடர்பான சான்றுகளையும், அவரது சாதனைகளையும், நடைமுறைபடுத்திய திட்டங்களையும், அவரின் அரிய புகைப்படத் தொகுப்புகளையும் தேடித் தேடி கண்டுபிடித்து அவற்றைத் தொகுத்து வரலாற்று சின்னங்களாக பாதுகாக்கிறார். இதற்காக தனது சொந்த வீட்டையே ஒரு அருங்காட்சியகமாக மாற்றியிருக்கிறார். காமராஜர் காட்சியகத்தை மக்கள் இலவசமாக பார்வையிடலாம். 

    ஆண்டுதோறும் காமராஜர் பிறந்தநாள் விழா நடத்தி பள்ளி, மாணவ மாணவிகளிடையே போட்டிகளை நடத்தி பரிசுகளையும் வழங்கிவருகிறார். இதன்மூலம் காமராஜரைப் பற்றி மாணவர்கள் அறியும் ஆர்வத்தை அதிகரிக்கச் செய்யலாம் என்று அவர் கூறுகிறார்.

    மாபெரும் பொருட்செலவில் தான் அமைத்திருக்கும் நினைவகத்தில் கோவில்களில் உள்ளதுபோன்று விமானம், தூண்கள், மேடையில் அமர்ந்த கோலத்தில் காமராஜர் சிலை மற்றும் அதைச்சுற்றிக் கீழே தண்ணீரில் வண்ண வண்ண மீன்கள் என்றெல்லாம் அமைத்து அசத்தியிருக்கிறார் எஸ்.பி.கணேசன். 

    சுதந்திரப் போராட்டத்தில் பங்குபெற்ற வாஞ்சிநாதன், திருப்பூர் குமரன், வ.உ.சிதம்பரம், கக்கன் போன்றவர்களின் குடும்பங்களிலிருந்து சிலரை, காமராஜர் காட்சியக திறப்பு விழாவின் போது மரியாதை செய்து கவுரவப்படுத்தியுள்ளார். இதன்மூலம், இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டில் பெருந்தலைவர் காமராஜரின் பெருந்தொண்டராக வாழ்கிறார் எஸ்.பி.கணேசன்.

    காமராஜர் குறித்த சான்றுகளை ஆவணப்படுத்தி அவற்றை எதிர்கால சந்ததியினருக்கு கொண்டு சேர்ப்பதே தன்னுடைய நோக்கம் என கூறுகிறார் எஸ்.பி.கணேசன். இது போன்ற சமூகத் தொண்டாற்றும் நபர்களை அரசு அடையாளம் கண்டு அவர்களுக்கான அங்கீகாரங்களை வழங்க வேண்டும்.
    Next Story
    ×