என் மலர்tooltip icon

    விருதுநகர்

    • ஆண்டாள் கோவில் தேரோட்ட திருவிழா ஆலோசனைக்கூட்டம் கலெக்டர் தலைமையில் நடந்தது.
    • 4 ரத வீதிகளும் போக்குவரத்திற்கு வசதியாக பளிச்சென காணப்பட்டது.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் ஆடி தேரோட்டத்தை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்வதற்கான கலந்தாய்வு கூட்டம் விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாத ரெட்டி தலைமையில் நடைபெற்றது.

    கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மனோகர், இந்து சமய அறநிலைத்துறை இணை ஆணையர்கள், ஆண்டாள் கோவில் தக்கார் ரவிச்சந்திரன், நகர் மன்ற தலைவர் தங்கம் ரவி கண்ணன், நகராட்சி ஆணையாளர் ராஜமாணிக்கம் உள்பட உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

    இக்கூட்டத்தில் தேரோட்டம் நடைபெறும் வரை மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. நகராட்சி, காவல்துறை, பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலை துறை, மின் வாரியம், மருத்துவத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். தேரோட்டத்தில் என்னென்ன நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பது தொடர்பாக மாவட்ட கலெக்டர் அனைத்து துறை அதிகாரிகளுக்கும் ஆலோசனை வழங்கினார்.

    ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் தேரோட்டம் வருகிற 1-ந்தேதி நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு 4 ரத வீதிகளிலும் கடைகளுக்கு முன்புள்ள ஆக்கிரப்புகள் அகற்றப்படும் என நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தன்டோரா மூலம் கடைக்காரர்களுக்கு ஏற்கனவே அறிவித்திருந்தனர்.

    இதைத்தொடர்ந்து ஸ்ரீவில்லிபுத்தூர் 4 ரதவீதிகளில் செயல்பட்டு வரும் அனைத்து கடைக்காரர்களும் இன்று தாங்களாகவே முன்வந்து ஆக்ரமிப்புகளை அகற்றினர். இதனால் 4 ரத வீதிகளும் போக்கு வரத்திற்கு வசதியாக பளிச்சென காணப்பட்டது.

    இதனைகண்ட பொதுமக்கள் நெடுஞ்சாலை துறையினர் ஆக்கிரமிப்பு செய்பவர்கள் மீது இதுபோல் கடும் நடவடிக்கை எடுத்தால் 4 ரதவீதிகளிலும் இது போல் போக்குவரத்திற்கு இடைஞ்சல் இல்லாமல் வைத்திருக்கலாம் என்றும், இனிவரும் காலங்களில் ஆக்கிரமிப்பு செய்தால் நெடுஞ்சாலைத்துறையில் இருந்து அனைத்து கடை களுக்கும் நோட்டீசு வழங்கி அவர்களை ஆக்கிரமிப்பு செய்ய விடாமல் பாதுகாத்து போக்குவரத்து நெரிசல் இல்லாமல் இருப்பதற்கு வழிவகை செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    • கிருதுமால் நதி கரையில் மணல் குவாரி அமைக்கக்கூடாது என கலெக்டருக்கு கோரிக்கை மனு அளித்தனர்.
    • மேலும் அருகில் உள்ள கிருதுமால் நதியிலும் மணல் திருட்டு நடக்க வாய்ப்பு உள்ளது.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே உள்ள பி.வாகைக்குளம் பகுதியில் கிருதுமால் நதி ஓடுகிறது. மழைக்காலங்களில் இந்த நதியில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும். இந்த நிலையில் கிருதுமால் நதி கரையில் மணல் குவாரி அமைக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளதாக தெரிகிறது. இதற்கு அந்த கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

    இதுகுறித்து காவிரி-வைகை-கிருதுமால்-குண்டாறு பாசன விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் அர்ச்சுனன் மாவட்ட கலெட்கருக்கு கோரிக்கை மனு அளித்துள்ளார். அதில் மேற்கண்ட பகுதியில் மணல் குவாரி அமைத்தால் விவசாயம் கடுமையாக பாதிக்கும். ஜே.சி.பி. எந்திரம் மூலம் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட அதிக அளவு வாய்ப்பு உள்ளது. மேலும் அருகில் உள்ள கிருதுமால் நதியிலும் மணல் திருட்டு நடக்க வாய்ப்பு உள்ளது. எனவே மேற்கண்ட பகுதியில் மணல் குவாரி அமைக்க அனுமதி அளிக்க கூடாது என தெரிவித்துள்ளார்.

    • அடுத்தடுத்து 3 வீடுகளில் கொள்ளையடித்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
    • சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் கொள்ளையர்களின் தடயங்களை சேகரித்தனர்.

    விருதுநகர்

    விருதுநகர் என்.ஜி.ஓ.காலனி கம்பர் தெருவைச் சேர்ந்தவர் ராஜா. தனியார் கல்லூரியில் பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று இவர் வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்தினருடன் வெளியூர் சென்று விட்டார். இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் நள்ளிரவு நேரத்தில் உள்ளே புகுந்து நகை, பணத்தை கொள்ளையடித்துச் சென்றனர்.

    அங்கிருந்து வெளியேறிய கொள்ளை கும்பல் பக்கத்தில் பூட்டிக்கிடந்த சித்ரா தங்கராஜ் என்பவரது வீட்டின் கதவையும் உடைத்து அங்கும் கொள்ளையடித்துச் சென்றது.

    இதேபோல் அருகில் உள்ள நேரு தெருவில் பூட்டியிருந்த வீட்டிலும் கொள்ளை கும்பல் தங்கள் கைவரிசையை காட்டியுள்ளது. இன்று காலை வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருப்பதை கண்ட அக்கம், பக்கத்தினர் உடனே பாண்டியன் நகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் கொள்ளையர்களின் தடயங்களை சேகரித்தனர். தொடர்ந்து வெளியூர் சென்ற நபர்கள் வந்த பின்பு தான் கொள்ளை போன நகை, பணத்தின் மதிப்பு தெரியவரும்.

    இந்த சம்பவம் தொடர்பாக பாண்டியன் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    • இளம்பெண் மாயமானார்.
    • இதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    விருதுநகர்

    சிவகாசி ஆலங்குளம் அருகே உள்ள இ.டி.ரெட்டியபட்டியைச் சேர்ந்தவர் லட்சுமணன். இவரது 2-வது மகள் பிளஸ்-2 முடித்து விட்டு அதே பகுதியில் உள்ள பட்டாசு ஆலையில் வேலை பார்த்து வந்தார்.

    சம்பவத்தன்று உடல்நலக்குறைவு காரணமாக லட்சுமணன் வேலைக்கு செல்லவில்லை. இந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அந்த பெண் மாயமானார். பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.

    இதுகுறித்து லட்சுமணன் ஆலங்குளம் போலீசில் புகார் செய்தார். அதில், கடந்த சில வாரங்களுக்கு முன்பு எனது மகளை கண்மாய் சூரங்குடியைச் சேர்ந்த மாரிச்சாமி என்பவர் திருமணத்துக்கு பெண் கேட்டு வந்தார். ஆனால் நான் மறுத்து விட்டேன். எனவே மகள் மாயமானதில் அவர் மீது சந்தேகம் இருப்பதாக தெரிவித்துள்ளார். இதன் அடிப்படையில் ஆலங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    விருதுநகர் மாந்தோப்பைச் சேர்ந்த 15 வயதுடைய மாணவி அயன்ரெட்டியபட்டியில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி படித்து வந்தார். சம்பவத்தன்று வீட்டில் இருந்த அவர் திடீரென மாயமானார். மல்லாங்கிணறு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • தேர்வர்கள் குரூப்-4 இலவச மாதிரி தேர்வு எழுதி பயன்பெறலாம்.
    • ஒருவர் எத்தனை முறை வேண்டுமானாலும் தேர்வு எழுதலாம்.

    விருதுநகர்

    தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் 7,301 காலிபணியிடங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த குடிமை பணிகள் தேர்வு (குரூப் 4) வருகிற 24-ந் தேதி நடக்கிறது.

    இத்தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள தேர்வர்கள் பயன்பெறும் பொருட்டு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை சார்பில், மாநில அளவிலான இலவச குரூப்-4 மாதிரி தேர்வு கடந்த 15-ந் தேதி தொடங்கி நடந்து வருகிறது.

    நாளை (23-ந் தேதி) வரை இணையதளம் வாயிலாக மெய்நிகர் கற்றல் வலைதளத்தில் தேர்வு மேற்கொள்ளலாம். இம்மாதிரி தேர்வு எழுத விரும்பும் தேர்வர்கள் (www.tncareerservices.tn.gov.in) என்ற இணையதளத்தில் நுழைந்து தேர்வு எழுதி பயன் பெறலாம். ஒருவரே எத்தனை முறை வேண்டுமானாலும் தேர்வு எழுதலாம்.

    மேலும் இவ்வலைத ளத்தில் பல்வேறு தேர்வுக ளும் இடம் பெற்றுள்ளன. TNPSC குரூப்-4 தேர்வை பயமின்றி எளிதில் எதிர்கொள்ள இந்த இலவச மாதிரி தேர்வை எழுதி தேர்வர்கள் பயன்பெறுமாறு கலெக்டர் மேகநாதரெட்டி கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் தகவலுக்கு 04562-293613 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டது.

    • இல்லம் தேடி கல்வி திட்ட பெண் தன்னார்வலர்களுக்கு கலெக்டர் பாராட்டு தெரிவித்துள்ளார்.
    • மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மனோகர், சிவகாசி கோட்டாட்சியர் பிரிதிவிராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் இல்லம் தேடி கல்வி திட்ட தன்னார்வலராக இருப்பவர் சிவகாமி.

    இவர் சமீபத்தில் தனது மையத்திற்கு வரும் மாணவர்களை அரசு நூலகத்திற்கு அழைத்துச் சென்று அங்குள்ள நடைமுறைகளை விளக்கியதுடன், அவர்களை உறுப்பினராகவும் சேர்த்தார்.

    மேலும் மாணவர்களை பல்வேறு கல்வி சார்ந்த செயல்பாடுகளில் ஈடுபடுத்தி, ஓய்வு நேரத்தை மாணவர்கள் பயனுள்ளதாக செலவு செய்ய ஆலோசனை வழங்கினார். இது குறித்த தகவல் அறிந்த மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி, ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் தேரோட்ட முன்னேற்பாடு கூட்டத்திற்கு வருகை தந்த போது, தன்னார்வலர்கள் சிவகாமி மற்றும் லாவண்யாதேவியை ஆகியோரை அழைத்து இல்லம் தேடி கல்வித் திட்டத்தில் இவர்களின் சிறந்த பணியை பாராட்டி, கலந்துரையாடி, ஊக்கம் அளித்து பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார்.

    அப்போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மனோகர், சிவகாசி கோட்டாட்சியர் பிரிதிவிராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.

    • டேங்கர் லாரி மீது பஸ் மோதி விபத்து;10 பேர் காயமடைந்தனர்.
    • சிகிச்சைக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    பாளையம்பட்டி

    அருப்புக்கோட்டையில் இருந்து சுமார் 50-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு ஒரு அரசு பஸ் சிவகங்கை நோக்கி சென்று கொண்டிருந்தது.அந்த பஸ்சை கிருஷ்ணன் (வயது52) என்பவர் ஓட்டி சென்றார். ஆத்திபட்டி அருகே பஸ் சென்றபோது பஸ்சின் முன்னால் பால் ஏற்றிச் சென்ற டேங்கர் லாரி ஒன்று சென்றது.

    அப்போது டேங்கர் லாரியின் குறுக்கே திடீரென நாய் வந்ததாக கூறப்படுகிறது. இதனால் நாய் மீது மோதாமல் இருப்பதற்காக டேங்கர் லாரி ஓட்டுநர் திடீரென பிரேக் போட்டுள்ளார்.லாரி ஓட்டுநர் திடீரென பிரேக் போட்டதால் பஸ்சின் முன்பகுதி டேங்கர் லாரியின் பின்னால் மோதி விபத்து ஏற்பட்டது.

    இந்த விபத்தில் பஸ்சின் முன்பக்க கண்ணாடி உடைந்து சேதமடைந்தது. அதில் பயணம் செய்த ஜெயசெல்வி (வயது45), ஜெயந்தி (54), கிருஷ்ணன் (52), அருள்ராஜ் (54), முத்து (40), சரவணன் (43), முருகன் (32) உள்பட 20 பேர் காயமடைந்தனர்.

    காயமடைந்தவர்களை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தாலுகா போலீசார் விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    • உசிலம்பட்டியில் சாலை மறியலில் ஈடுபட்ட 150 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • ஊர்வலமாக சென்று ஆர்.டி.ஓ அலுவலகத்தில் கோரிக்கை மனு கொடுத்தனர்.

    விருதுநகர்

    விருதுநகர்-சாத்தூர் ரோட்டில் ரூ. 2 ஆயிரம் கோடி மதிப்பில் ஜவுளி பூங்கா அமைக்க மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    இதேபோல் காரியாபட்டி யில் ரூ. 150 கோடி மதிப்பில் நவீன சாயப்பட்டறை அமைக்கவும் மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. ஆனால் மேற்கண்ட திட்டங்களை செயல்படுத்த தமிழக அரசு ஒப்புதல் வழங்காமல் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    இதை கண்டித்தும், மத்திய அரசு திட்டங்களை செயல்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி சிவகாசியில் இருந்து விருதுநகருக்கு மாநில பொதுச் செயலாளர் சீனிவாசன் தலைமையில் பா.ஜ.க.வினர் பேரணி செல்ல முடிவு செய்திருந்தனர். ஆனால் இதற்கு அனுமதி வழங்காத மாவட்ட போலீசார் சிவகாசியில் தங்கியிருந்த சீனிவாசன், மதுரை புறநகர் மாவட்டத்தலைவர் மகா சுசீந்திரன் மற்றும் நிர்வாகிகள் உள்பட 30 பேரை இன்று காலை கைது செய்தனர்.

    இதேபோல் திருத்தங்கல், ஆமத்தூர் பகுதியில் பேரணிக்கு தயாராக இருந்த 120-க்கும் மேற்பட்ட பா.ஜ.க.வினர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

    இந்த கைதை கண்டித்து உசிலம்பட்டி தேவர் சிலை அருகே இன்று காலை சாலை மறியல் நடந்தது. மாவட்ட துணைத் தலைவர் சொக்கநாதன் மாவட்ட பொது செயலாளர் மொக்கராஜ் ஆகியோர் தலைமையில் ஒன்றிய தலைவர்கள் கருப்பையா சின்னச்சாமி பாக்கியராஜ் நகரச் செயலாளர் முத்தையா மற்றும் பாரதிய ஜனதா கட்சியினர் சாலை மறியல் செய்தனர் போலீசார் இவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்தனர் .ஊர்வலமாக சென்று ஆர்.டி.ஓ அலுவலகத்தில் கோரிக்கை மனு கொடுத்தனர்.

    • அரசு பள்ளியில் சதுரங்க போட்டியை தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
    • தலைமை ஆசிரியர் குணசீலன், தி.மு.க. நகர செயலாளர்கள் ராமமூர்த்தி, மணிகண்டராஜா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் ரெயில்வேபீடர் ரோட்டில் உள்ள சேத்தூர் சேவுகபாண்டியனார் அரசு மேல்நிலைப் பள்ளியில் பள்ளிக் கல்வித்துறை சார்பில் 44-வது சர்வதேச செஸ் போட்டியை முன்னிட்டு ராஜபாளையம் வட்டார அளவிலான சதுரங்க போட்டி நடந்தது.

    இதில் ராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் தங்கப்பாண்டியன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு போட்டிகளை தொடங்கி வைத்தார்.

    அவர் பேசுகையில், புகழ் பெற்ற செஸ் ஒலிம்பியாட் போட்டி இந்தியாவில், தமிழ்நாட்டில் நடக்க இருப்பது முதல்வரின் விடா முயற்சியே காரணம். சதுரங்கபோட்டியானது மன்னர் ஆட்சி காலத்தில் மன்னர்கள் அறிவு கூர்மையை வளர்த்துக் கொள்ள தங்களை தாங்களே சோதித்துக் கொள்ள இந்த போட்டியை தேர்ந்தெடுத்து விளையாடினர். அதுபோல் மாணவசெல்வங்களாகிய நீங்கள் உங்களது அறிவை தீட்டுவதற்கும், கவனத்தை ஒருநிலைப்படுத்தவும் இந்த போட்டி உதவியாக இருக்கும் என்றார்.

    இந்த நிகழ்வில் தலைமை ஆசிரியர் குணசீலன், தி.மு.க. நகர செயலாளர்கள் ராமமூர்த்தி, மணிகண்டராஜா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • ராஜபாளையத்தில் நடந்த ஏ.டி.எம். கொள்ளை முயற்சியில் வட மாநில வாலிபர் கைது செய்யப்பட்டார்.
    • வட மாநிலத்தவர்கள் தங்கி பணி செய்யும் பகுதிகளில் தேடுதல் வேட்டை நடத்தினர்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம்- சத்திரப்பட்டி சாலையில் உள்ள அழகை நகரில் கனரா வங்கியின் ஏ.டி.எம். மையம் செயல்பட்டு வருகிறது. பிரதான சாலை என்பதாலும் ஆட்கள் நடமாட்டம் அதிகம் இருக்கும் பகுதி என்பதாலும் இந்த ஏ.டி.எம். மையத்திற்க்கு காவலர் நியமிக்கப்படவில்லை.

    இதனை நோட்டமிட்ட வட மாநில வாலிபர் கடந்த 18-ந் தேதி காலை ஏ.டி.எம். எந்திரத்தில் உள்ள பணத்தை கொள்ளை அடிக்கும் நோக்கத்தில் கருவியை சேதப்படுத்தி பணத்தை கொள்ளையடிக்க முயற்சி செய்தார்.

    அந்த கருவியை சேதப்படுத்தும் போது சத்தம் வரவே கொள்ளை முயற்சியை கைவிட்டு விட்டு தப்பினார்.

    அக்கம் பக்கத்தினர் ஏ.டி.எம். எந்திரத்தை பார்த்த போது அது சேதப்ப டுத்தப்பட்டுள்ளதும், கொள்ளையடிக்க முயற்சித்ததும் தெரிய வந்தது. இதுகுறித்து ராஜபாளையம் தெற்கு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

    போலீஸ் டி.எஸ்.பி. (பொறுப்பு) சபரிநாதன் தலைமையில் குற்றப்பிரிவு ஆய்வாளர் செல்வகுமார் மற்றும் போலீசார், கைரேகை நிபுணர்கள், ஏ.டி.எம். எந்திரத்தில் உள்ள கண்காணிப்பு காமிரா காட்சி பதிவுகளை வைத்து விசாரணையை தொடங்கினர்.இதில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட வாலிபர் வட மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் ராஜபாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் வட மாநிலத்தவர்கள் தங்கி பணி செய்யும் பகுதிகளில் தேடுதல் வேட்டை நடத்தினர்.

    தீவிர தேடுதல் வேட்டையில் பொன்ன கரம் பகுதியில் கட்டிட வேலைக்காக 10 நாட்க ளுக்கு முன்பு வேலைக்குச் சேர்ந்த பீகார் மாநிலம் சோமனப்பள்ளி தாலுகா விற்கு உட்பட்ட பூர்ணியா ஜில்லாவைச் சார்ந்த ராஜு ரிஷிதேவ் என்பவரது மகன் சதானந்த் என்பவன் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டது தெரியவந்தது.

    போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    • தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை நடக்கிறது.
    • தனியார் வேலைவாய்ப்பு முகாம் மூலம் பணிநியமனம் பெற்றவர்களது வேலை வாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு எவ்விதத்திலும் பாதிக்கப்படாது.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி விடுத்துள்ள செய்திக்கு றிப்பில் கூறியிருப்பதாவது:-

    விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் வாயிலாக மாதத்தின் 2-ம் மற்றும் 4-ம் வெள்ளிக்கிழமைகளில் தனியார்துறை வேலை வாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி படித்த வேலை தேடும் மனுதாரர்களுக்காக வருகிற 22-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10 மணி முதல் 2 மணி வரை தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் விருதுநகர் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

    இதில் 20-க்கும் மேற்பட்ட பிரபல முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு 8-ம் வகுப்பு தேர்ச்சி முதல் பட்டப்படிப்பு மற்றும் ஐ.டி.ஐ., டிப்ளமோ ஆகிய கல்வித்தகுதி உடையவர்கள், விருதுநகர், சிவகாசி, கோவை, தென்காசி , தூத்துக்குடி மற்றும் சென்னை ஆகிய இடங்களில் பணியமர்த்தம் செய்ய பணியாளர்களை தேர்வு செய்ய உள்ளனர். இந்த வாய்ப்பினை பயன்படுத்த விரும்பும் வேலைநாடுநர்கள் 22-ந் தேதி அன்று வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்வதற்கு முன்பு www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் கல்வித்தகுதியை பதிவு செய்துவிட்டு வர வேண்டும்.

    இதில் கலந்து கொள்ள விரும்பும் தனியார்துறை நிறுவனங்கள் விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் வருகை புரிந்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலரை தொடர்பு கொள்ள வேண்டும்.

    தனியார் வேலைவாய்ப்பு முகாம் மூலம் பணிநியமனம் பெற்றவர்களது வேலை வாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு எவ்விதத்திலும் பாதிக்கப்படாது.

    இவ்வாறு அதில் கூறப்ப ட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஆடி அமாவாசை திருவிழா வருகிற 28-ந்தேதி நடைபெறுகிறது.
    • காலை 6 மணி முதல் மாலை 4 மணி வரை மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.
    • பக்தர்கள் பிளாஸ்டிக் பைகள் கொண்டு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    விருதுநகர் மாவட்டம் தாணிப்பாறை அடிவார பகுதியில் இருந்து சுமார் 5.5 கி.மீ தொலைவில் வனப்பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் சுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் நடைபாதை தாணிப்பாறை அடிவாரத்தில் இருந்து வன உயிரினச்சரணாலய பகுதியில் 4.75 கி.மீ தூரத்திற்கு செல்கிறது. சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் ஆடி அமாவாசை திருவிழா வருகிற 28-ந்தேதி நடைபெறுகிறது. இத்திருவிழாவில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    திருவிழாவை முன்னிட்டு வருகிற 26-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) முதல் 29-ந்தேதி (வெள்ளிக் கிழமை) வரையிலான 4 நாட்கள் மட்டும் காலை 6 மணி முதல் மாலை 4 மணி வரை மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். மேலும் பக்தர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் செய்யப்பட்டுள்ளது.

    பக்தர்களின் சிரமத்தை தவிர்க்கும் பொருட்டும், போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் விதமாகவும், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி, சாத்தூர், விருதுநகர், டி.கல்லுப்பட்டி, உசிலம்பட்டி மற்றும் மதுரை ஆகிய இடங்களிலிருந்து வாகனங்களுக்கு தாணிப்பாறை விலக்கு வரை இரு வழிச் சாலைகளும், தாணிப்பாறை விலக்கில் இருந்து தாணிப்பாறை அடிவாரத்தின் அருகில் உள்ள தற்காலிக பஸ் நிலையம் வரை வாகனங்கள் வருவதற்கும் மகாராஜபுரம் விலக்கு வழியாக திரும்பிச் செல்வதற்கும் என ஒரு வழி சாலைகள் அமைக்கப்பட்டுள்ளது.

    மேலும் தாணிப்பாறையில் இருந்து 5 கிலோ மீட்டருக்கு முன்பாகவே ஒரு தற்காலிக பஸ் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் அருகிலேயே ஆட்டோ, வேன், கார் மற்றும் இரு சக்கர வாகனங்கள் நிறுத்துவதற்கு என்று தனித்தனியாக வாகன நிறுத்தங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

    மேலும் அரசு பஸ்சை பயன்படுத்துபவர்களுக்கு என்று தாணிப்பாறையை அடுத்து கோவில் நுழைவு வாயிலுக்கு 800 மீட்டர் முன்பாக மற்றொரு தற்காலிக பஸ் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த இடம் வரை அரசு வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும், தனியார் வாகனங்களுக்கு அனுமதி கிடையாது.

    கோவிலுக்குச் செல்ல கோவில் நுழைவுச் சீட்டு ஏதும் வழங்கப்படாது. பக்தர்கள் யாத்திரை செல்லும்போது ஏதேனும் அசம்பாவிதங்கள் நேரிடும் பட்சத்தில் அருகில் உள்ள அரசு அதிகாரிகள் கொண்ட குழுக்களிடம் தகவல் தெரிவிக்கலாம்.

    மேலும் பக்தர்களுக்கென அமைக்கப்பட்ட அடிப்படை வசதிகள், பஸ் நிறுத்துமிடங்கள், வாகனங்கள் முறையாக எந்தெந்த வழித்தடங்கள் வழியாக செல்ல வேண்டும் போன்ற விவரங்கள் அடங்கிய விளம்பர பதாகைகள் அழகாபுரி, மகாராஜபுரம் விலக்கு, தாணிப்பாறை விலக்கு, வத்திராயிருப்பு பஸ் நிறுத்தம் மற்றும் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள அனைத்து பஸ் நிறுத்தங்களிலும் வைக்கப்பட்டுள்ளது.

    பக்தர்களின் வசதிக்காக ஆங்காங்கே மருத்துவ வசதி, கழிப்பிட வசதிகள் மற்றும் குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளது. குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். வனப்பகுதியில் பக்தர்கள் பிளாஸ்டிக் பைகள் கொண்டு செல்வதற்கு தடை செய்யப்பட்டுள்ளது. மேலும் பக்தர்கள் இரவு நேரங்களில் கோவிலிலும், வனப்பகுதியிலும் தங்குவதற்கு அனுமதி கிடையாது,

    பக்தர்களின் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டு, கோவிலிருந்து (தற்காலிக பஸ் நிலையத்திலிருந்து) மாவட்டத்தின் முக்கிய பகுதிகளுக்கு 24 மணி நேரமும் இரவு நேரங்களில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படும். ஆனால் மற்ற பகுதிகளில் இருந்து இரவு நேரங்களில் கோவில் செல்வதற்கு பஸ்கள் இயக்கப்படாது என தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.

    திருவிழாவை சிறப்பாக கொண்டாடுவதற்கு பொது மக்கள் நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும், மேலும் வனப்பகுதியை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைத்திருக்க முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என மாவட்ட கலெக்டர் மேகநாத ரெட்டி கேட்டுக் கொண்டுள்ளார்.

    ×