என் மலர்
விருதுநகர்
- சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் தேசிய அளவிலான வணிகவியல் கருத்தரங்கு நடந்தது.
- கோவை பல்கலைக்கழக வணிகவியல் துறை பேராசிரியர் செல்லசாமி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
சிவகாசி
சிவகாசி காளீஸ்வரி கல்லூரியின் முதுகலை வணிகவியல் துறையின் சார்பில் '' நிலையான, உலகளாவிய வணிகம்- தற்போதைய போக்குகள், சவால்கள்'' என்ற தலைப்பில் தேசிய அளவிலான கருத்தரங்கு 2 நாட்கள் நடந்தது.
ஒருங்கிணைப்பாளர் லட்சுமணகுமார் வரவேற்றார். முதல்வர் கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார். துணை முதல்வர்கள் பாலமுருகன், முத்துலட்சுமி வாழ்த்துரை வழங்கினர்.
துணைத்தலைவி அமுதாராணி சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்தார். கோவை பல்கலைக்கழக வணிகவியல் துறை பேராசிரியர் செல்லசாமி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
அவர் பேசுகையில், சிறு, குறு தொழில் நிறுவனங்கள் சந்திக்கும் பல்வேறு சவால்களாக மூலதனம், தொழிலாளர்கள், சந்தைப்படுத்துதல், தொழில் நுட்பம் போன்றவற்றை பட்டியலிட்டு, அந்த சவால்களை தங்களுக்கான வாய்ப்பாக மாற்றி கொள்வதற்கு தேவையான அறிவுரையை வழங்கினார். மேலும் சிறு, குறு தொழில்கள், நிறுவனங்கள்தான் இந்தியாவை உலகளவில் முதல் இடத்திற்கு கொண்டு செல்லும் என்றார்.
மற்றொரு சிறப்பு விருந்தினராக பெங்களூர் ஜெயின் பல்கலைகழகத்தின் முதுகலை வணிக நிர்வாகவியல் துறை இணைப்பேராசிரியர் யவனராணியை, உதவி பேராசிரியர் சரஸ்வதி அறிமுகம் செய்தார்.
2-ம் நாள் கருத்தரங்கில் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்ற பெங்களூர் கிரீஸ்ட் பல்கலைக்கழக வணிக வியல் துறை இணை பேராசிரியர் சுரேசை, உதவி பேராசிரியர் சதீஷ்குமாரும், மதுரை காமராஜர் பல்கலைக்கழக மேலாண்மை துறை பேராசிரியர் விஜயதுரையை, உதவி பேராசிரிரயர் தங்கபாண்டிஸ்வரியும் அறிமுகப்படுத்தினர்.
நிறைவு விழாவில் துறைத்தலைவி அமுதாராணி வரவேற்றார். ெநல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை க்கழகத்தின் மேலாண்மை துறை உதவி பேராசிரியர் மாரிமுத்து பேசினார்.
கருத்தரங்கில் பங்கேற்ற மாணவர்களுக்கு முதல்வர் கிருஷ்ணமூர்த்தி சான்றிதழ்கள் வழங்கினார். ஒருங்கிணைப்பாளர் லட்சுமணகுமார் நன்றி கூறினார். இதில் 7 மாவட்டங்களில் உள்ள 10 கல்லூரிகளில் இருந்து 256 மாணவர்கள் பங்கேற்று ஆய்வு கட்டுரைகளை சமர்ப்பித்தனர்.
- சப்பரம் வளைவில் திரும்பியபோது மரத்தின் மீது மோதி விபத்து.
- விளம்பர பலகை சாய்ந்து விழுந்து மின்சாரம் தாக்கியுள்ளது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள சொக்கநாதன்புத்தூர் பகுதியில் அனைத்து சமுதாயத்தினர் சார்பில் விநாயகர் சதுர்த்தி விழா நேற்று இரவு கொண்டாடப்பட்டது.
ஊர் மக்கள் சார்பில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. அதனை தொடர்ந்து இரவில் விநாயகர் சிலையை கரைப்பதற்காக அலங்கரிக்கப்பட்ட கோவில் சப்பரத்தில் ஊர்வலமாக எடுத்து சென்றனர்.
அந்த ஊர்வலத்தில் சொக்கநாதன்புத்தூர் பகுதியை சேர்ந்தவர்கள் திரளாக கலந்து கொண்டனர். இரவு 10.30 மணி அளவில் சொக்க நாதன்புத்தூரில் உள்ள குளத்தில் விநாயகர் சிலையை கரைத்தனர். பின்பு ஊர்வலத்தில் பங்கேற்ற அனைவரும் வீட்டிற்கு திரும்பியபடி இருந்தனர்.
விநாயகர் சிலை கொண்டு செல்லப்பட்ட சப்பரத்தை சொக்க நாதன்புத்தூர் யாதவர் தெருவை சேர்ந்த ராசு மகன் முனீஸ்வரன் (வயது 24), கருப்பையா மகன் மாரிமுத்து (33) உள்ளிட்டோர் கோவிலுக்கு இழுத்து சென்றனர்.
தெரு வழியாக சப்பரத்தை இழுத்து சென்று கொண்டிருந்தனர். டிரான்ஸ்பார்மர் இருந்த பகுதி வழியாக சென்றபோது சப்பரத்தின் மேல் பகுதியில் இருந்த இரும்பு கம்பி மேலே சென்ற மின் கம்பியின் மீது உரசியது. இதனால் சப்பரத்தில் மின்சாரம் பாய்ந்தது.
சப்பரத்தை இழுத்து சென்ற முனீஸ்வரன், மாரிமுத்து, செல்வகிருஷ்ணன் (31), செல்லப்பாண்டி (40), முப்பிடாதி (20) ஆகிய 5 பேரும் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டனர். இதையடுத்து அவர்கள் 5 பேரையும் அங்கிருந்தவர்கள் மீட்டு நெல்லை மாவட்டம் சிவகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் ஆஸ்பத்திரி செல்லும் வழியிலேயே முனீஸ்வரன், மாரிமுத்து ஆகிய இருவரும் பரிதாபமாக இறந்தனர். மற்ற 3 பேரும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மின்சாரம் தாக்கி இறந்த 2 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக சிவகிரி அரசு ஆஸ்பத்திரி பிணவறையில் வைக்கப்பட்டது.
மின்சாரம் தாக்கி பலியானவர்கள் மற்றும் காயம் அடைந்தவர்களின் குடும்பத்தினர் மட்டுமின்றி சொக்கநாதன்புத்தூர் பகுதியை சேர்ந்தவர்கள் ஏராளமானோர் சிவகிரி அரசு ஆஸ்பத்திரியில் திரண்டனர். இறந்தவர்களின உடலை பார்த்து குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம்தென்னரசு மற்றும் விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாத ரெட்டி ஆகியோர் சிவகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு இன்று காலை சென்றனர். அவர்கள் பலியான வாலிபர்கள் மற்றும் காயம் அடைந்து சிகிச்சை பெறுவோரின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினர்.
மேலும் காயம் அடைத்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்குமாறு டாக்டர்களுக்கு அறிவுறுத்தினர். விநாயகர் சிலை சப்பரத்தில் மின்சாரம் தாக்கி 2 பேர் பலியான சம்பவம் குறித்து சேத்தூர் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர்கள் முத்துக்குமரன், விஜயகுமார் மற்றும் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விநாயகர் சிலை ஊர்வலத்தில் பங்கேற்று திரும்பியவர்கள் மின்சாரம் தாக்கி பலியான சம்பவம் சொக்கநாதன்புத்தூர் பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.
- மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை கால்களளை கலெக்டர் வழங்கினார்.
- அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது.
விருதுநகர்
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள ஊரக வளர்ச்சி முகமை அலுவலகக் கூட்டரங்கில் ஊரக வளர்ச்சித் துறை மூலம் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின்கீழ், பணிபுரியும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் அனைத்து மாற்றுத்திற னாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. கலெக்டர் மேகநா தரெட்டி தலைமை தாங்கினார்.
விருதுநகர் மாவட்டத்தில் சுமார் 25 ஆயிரம் மாற்றுத்திறனாளிகள் வசித்து வருகின்றனர். அவர்களின் குறைகளை தீர்ப்பதற்கும்,
அவர்களுக்கு தேவையான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கும் வகையிலும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின்கீழ், பணிபுரியும் மாற்றுத்திறனாளிகளின் குறைகளை தீர்க்கும் வகையிலும் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது.
இதில், வேலைவாய்ப்பு, சுயதொழில் கடனுதவி, வீட்டுமனை பட்டா, வீடு, உதவித்தொகை, இருசக்கர வாகனம், 3 சக்கர வண்டி, குடும்ப அட்டை, திறன் பயிற்சி, அடையாள அட்டை, மாற்றுத்திறனாளி உபகரணங்கள், மகாத்மா காந்தி தேசிய ஊரக உறுதி திட்ட அடையாள அட்டை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக சுமார் 500 மனுக்கள் பெறப்பட்டன.
இந்த மனுக்களுக்கு தீர்வுகாணுமாறு, கலெக்டர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மனு அளித்த கால்களை இழந்த 2 மாற்றுத்திறனாளிகளுக்கு முதல்-அமைச்ச ர் காப்பீட்டு திட்டத்தின் கீழ், நவீன செயற்கை கால்களையும், ஊன்றுகோல் வேண்டி மனு அளித்த பார்வையற்ற மாற்றுத்திறனாளிக்கு நவீன ஊன்றுகோல் மற்றும் மூக்கு கண்ணாடியையும் கலெக்டர் மேகநாதரெட்டி வழங்கினார்.
இதில் திட்ட இயக்குநர்கள் திலகவதி, தெய்வேந்திரன், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம் ) ஜெயராணி, வேளாண்மை இணை இயக்குநர் உத்தண்டராமன், மருத்துவப்பணிகள் இணை இயக்குநர் முருகவேல், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) சங்கர்நாராயணன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் சந்திரசேகர், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் பாண்டிசெல்வன், உதவி கலெக்டர் (பயிற்சி) ஷாலினி மற்றும் பல ர் கலந்து கொண்டனர்.
- இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் ரூ.3.22 கோடியில் குடியிருப்பு வளாகம் கட்டும் பணியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்.
- பரம்பரை அறங்காவலர் குழு தலைவர் ஆகியோர் ரிப்பன் வெட்டி திறந்துவைத்தனர்.
சாத்தூர்
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் ரூ.3.22 கோடி மதிப்பீட்டில் அர்ச்சகர்கள் மற்றும் பணியாளர்களுக்கு குடியிருப்பு வளாகம் கட்டப்படுகிறது. இதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்.
இதில் சாத்தூர் ஒன்றிய சேர்மன் நிர்மலா கடற்கரை ராஜ், சாத்தூர் ஒன்றிய செயலாளர் முருகேசன் ஆகியோர் கலந்துகொண்டு குத்து விளக்கேற்றினர். இருக்கன்குடி பஞ்சாயத்து தலைவர் செந்தாமரை, கோவில் நிர்வாக அலுவலர் கருணாகரன், பரம்பரை அறங்காவலர் குழு தலைவர் ராமமூர்த்தி பூசாரி மற்றும் அறங்காவலர் குழு பூசாரிகள், அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்ச்சிக்கு பிறகு கோவில் வளாகத்தில் உபயதாரர் நிதி ரூ.43.80 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட உள்துறை அலுவலகம், பாதுகாப்பு அறை மற்றும் வாகன மண்டபம் ஆகியவற்றை சேர்மன் மற்றும் பரம்பரை அறங்காவலர் குழு தலைவர் ஆகியோர் ரிப்பன் வெட்டி திறந்துவைத்தனர்.
- பொதுமக்களை மிரட்டிய 4 ரவுடிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
- பெண்களை கேலிக்கிண்டல் செய்வது, பொதுமக்களை மிரட்டி பணம் பறிப்பது போன்றவை அதிகரித்துள்ளன.
ராஜபாளையம்
ராஜபாளையம் அம்பலப்புளி பஜார் முருகன் கோவில் தெரு குடியிருப்புகள் நிறைந்த பகுதியாகும். இங்கு சம்பவத்தன்று அதே பகுதியைச் சேர்ந்த முனியராஜ், கார்த்தி, சக்திவேல் உள்பட 4 பேர் பட்டாக்கத்தியை காட்டி அந்த வழியாக வந்த பொதுமக்களை மிரட்டி தகாத வார்த்தைகளில் பேசினர்.
அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் ஒரு பெண்ணுடன் வந்த வாலிபரை கும்பல் மறித்தது. தொடர்ந்து அந்த பெண்ணை பொது இடத்தில் கேலி கிண்டல் செய்து அவதூறாக பேசினர். 4 பேரும் ஆயுதங்களை வைத்திருந்ததால் அப்பகுதி மக்கள் அவர்களை தட்டி கேட்க வில்லை.
பொது இடத்தில் ஆயுதங்களை வைத்து பொதுமக்களை மிரட்டிய சம்பவம் அப்பகுதியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்து ராஜபாளையம் தெற்கு போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீஸ் இன்ஸ்பெக்டர் மன்னவன் வழக்குப்பதிவு செய்து பொதுமக்களை ஆயுதங்களை காட்டி மிரட்டிய 4 ரவுடிகளை தேடி வருகிறார்.
ராஜபாளையம் அம்பலப்புலி பஜார் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் சமூக விரோதிகள் இது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். தனியாக செல்லும் பெண்களை கேலிக்கிண்டல் செய்வது, பொதுமக்களை மிரட்டி பணம் பறிப்பது போன்றவை அதிகரித்துள்ளன. எனவே போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
- மாவட்ட அளவிலான ஆக்கி போட்டி நடந்தது.
- வெற்றி பெற்ற அணிகளுக்கு கலெக்டர் பரிசு வழங்கினார்.
விருதுநகர்
இந்தியாவின் சிறந்த ஆக்கி வீரராக திகழ்ந்த தியான் சந்த்தைப் பெருமைப்படுத்தும் வகையில் அவரது பிறந்த நாளான ஆகஸ்டு 29-ந் தேதியை இந்திய தேசிய விளையாட்டு நாளாக கடைபிடிக்கிறது.
அதனப்படையில், விருதுநகர் மாவட்ட விளையாட்டு அரங்க மைதானத்தில் 14-வயதிற்குட்பட்ட மாணவ-மாணவி களுக்கான மாவட்ட அளவிலான ஆக்கி போட்டி நடந்தது. இதை கலெக்டர் மேகநாதரெட்டி தொடங்கி வைத்தார்.
இதில் விருதுநகர் சத்ரியா பெண்கள் மேல்நிலைப்பள்ளி, சிவகாசி இந்து நாடார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, அருப்புக்கோட்டை எஸ்.பி.கே. பெண்கள் மேல்நிலைப்பள்ளி, கல்லூரணி எஸ்.பி.கே. பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் விருதுநகர் காமராஜர் அகாடமி ஆகிய பள்ளிகளைச் சேர்ந்த மாணவிகளும், 14-வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கான ஆக்கி போட்டியில், விருதுநகர் கே.வி.எஸ். ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, சிவகாசி இந்து நாடார் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, அருப்புக்கோட்டை எஸ்.பி.கே. ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, கல்லூரணி எஸ்.பி.கே. ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் ராஜபாளையம் அகாடமி ஆகிய பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களும் கலந்து கொண்டனர்.
மாணவிகளுக்கான இறுதிப்போட்டியில் விருதுநகர் சத்ரியா பெண்கள் மேல்நிலைப்பள்ளி அணி வெற்றி பெற்றது. அந்த அணியை சேர்ந்த மாணவிகளுக்கு பதக்கங்கள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை கலெக்டர் மேகநாதரெட்டி வழங்கினார்.
தொடர்ந்து போதை ஒழிப்பு விழிப்புணர்வை வலியுறுத்தி, ஆக்கி விளையாடியபடி சிவகாசி உழவர் சந்தை முதல் சாட்சியாபுரம் வரை சென்று நோபல் உலக சாதனை பெற்ற வி.எஸ்.கே.டி. பதின்ம மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த 9 வயதான ஜியாஸ்ரீ கலெக்டரை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- தேவதானம் கோவில் குளத்தை சீரமைக்கும் பணியை மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
- தெப்பத்தை சீரமைத்து தெப்பத் திருவிழா நடத்த வேண்டும் என்று தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. 4 வருடங்களாக தொடர்முயற்சி மேற்கொண்டார்.
ராஜபாளையம்
ராஜபாளையம் தொகுதியில் உள்ள தேவதானம் சொக்கநாதன்புத்தூர் முகவூர் போன்ற பல்வேறு கிராமமக்களின் நீண்ட கால கோரிக்கையாக இருந்த பெரியகோவில் தெப்பத்தை சீரமைத்து தெப்பத் திருவிழா நடத்த வேண்டும் என்று தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. 4 வருடங்களாக தொடர்முயற்சி மேற்கொண்டார்.
இதையடுத்து தெப்பத்தை சீரமைக்க ரூ. 3.95 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.கோவில் குளத்தை சீரமைக்கும் பணியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார். இதில் தனுஷ் குமார் எம்.பி., தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ., ஒன்றிய சேர்மன் சிங்கராஜ், முன்னாள் எம்.எல்.ஏ. தனுஷ்கோடி, மாவட்ட மீனவரணி அமைப்பாளர் நவமணி, கவுன்சிலர் ஏசம்மாள் அரிராம்சேட் மற்றும் மிசா நடராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- கல்லூரி மாணவி உள்பட 3 பேர் மாயமானார்கள்.
- ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
விருதுநகர்
சிவகாசி அருகே உள்ள ஆலமரத்துப்பட்டியை சேர்ந்தவர் மாசாணமுத்து. இவரது மகள் மாரீஸ்வரி (20). இவர் அதே பகுதியில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.
சம்பவத்தன்று கல்லூரிக்கு சென்ற மாரீஸ்வரி பின்னர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் பலனில்லை. இதுகுறித்த புகாரின் பேரில் சிவகாசி கிழக்கு போலீசார் விசாரித்து வருகின்றனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் கீழபட்டியை சேர்ந்தவர் மோகனலட்சுமி (22). தையல் முடித்திருந்த இவர் சம்பவத்தன்று திடீரென மாயமானார். இதுகுறித்து அவரது தந்தை பசுபதி கொடுத்த புகாரின் பேரில் ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
விருதுநகர் அருகே உள்ள பாவாலி காமாட்சி நகரை சேர்ந்தவர் வளர்மதி. இவரது மகள் முத்துலட்சுமி (25). இவருக்கு திருமணமாகி கணவர் மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். சம்பவத்தன்று வீட்டிலிருந்த முத்துலட்சுமி திடீரென மாயமானார். இதுகுறித்து அவரது தாயார் ஆமத்தூர் போலீசில் புகார் செய்தார். அதில் உறவினர் குமார் என்பவருடன் மகள் சென்றிருக்கலாம் என கூறப்படுகிறது. இதன் அடிப்படையில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
- இளையான்குடி சாகிர் உசேன் கல்லூரி சார்பில் தென்னிந்திய அளவிலான கால்பந்து போட்டி நடந்தது.
- போட்டிகளை கால்பந்து ரசிகர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் கண்டுகளித்தனர்.
மானாமதுரை
75-வது சுதந்திர தினத்தையொட்டி சிவகங்கை மாவட்டம், இளையான்குடி டாக்டர் சாகிர் உசேன் கல்லூரியில் தென்னிந்திய அளவிலான கால்பந்து போட்டி 3 நாட்கள் நடந்தது. கேரளா, கர்நாடகா மற்றும் தமிழ்நாட்டை சேர்ந்த 20 அணிகள் பங்கேற்றன.
மழை காரணமாக கல்லூரி மைதானத்தை பயன்படுத்த இயலாத நிலையில் அனைத்து போட்டிகளும், இளையான்குடி ஸ்டார் முஸ்லீம் கால்பந்தாட்ட மைதானத்தில் நடத்தப்பட்டது. சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி போட்டியை பார்வையிட்டு வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.
நிறைவு விழாவில் கல்லூரி ஆட்சிக்குழு தலைவர் (பொறுப்பு), பொருளாளர் அப்துல் அஹது தலைமை தாங்கினர். முதல்வர் அப்பாஸ் மந்திரி வரவேற்றார். ஆட்சிக்குழு செயலர் ஜபருல்லா கான் தலைமையுரையாற்றினார்.
சிவகங்கை மாவட்டம், கண்டரமாணிக்கம் கிராமத்தை சேர்ந்த முன்னாள் இந்திய கால்பந்தாட்ட வீரர் ராமன் விஜயன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். வெற்றி பெற்ற அணியினருக்கு பரிசுகோப்பை, சான்றிதழ் மற்றும் ரொக்கப்பரிசுகளை வழங்கினார்.
இறுதி போட்டியில் கேரள மாநிலத்தின் கிருஷ்ணா கல்லூரி அணி முதலிடம் பெற்று 7 அடி உயர பரிசு கோப்பையையும், ரூ. 25 ஆயிரம் ரொக்கப்பரிசையும் வென்றது. கோவை ரத்தினம் கல்லூரி அணி 2-ம் இடத்தை பெற்று 6 அடி உயர பரிசு கோப்பையையும், ரூ.15 ஆயிரம் ரொக்கப்பரிசையும் வென்றது.
கேரள மாநிலம் திருச்சூர் எம்.டி.கல்லூரி அணி 5 அடி உயர பரிசுகோப்பையுடன், ரூ. 10 ஆயிரம் ரொக்கப்பரிசு பெற்று 3-ம் இடம் பெற்றனர். 4-ம் இடத்தை இளையான்குடி டாக்டர் சாகிர் உசேன் கல்லூரி அணி கைப்பற்றி 4 அடி உயர பரிசு கோப்பையையும், ரூ. 5ஆயிரம் ரொக்கப்பரிசையும் பெற்றது.
சிறந்த வீரருக்கான பரிசை கோவை ரத்தினம் கல்லூரி அணி வீரர் முஹம்மது ஷானானும், சிறந்த கோல்கீப்பர் பரிசை சாகிர் உசேன் கல்லூரி அணி வீரர் ஆல்வினும் பெற்றனர். கல்லூரி ஆட்சிக்குழு உறுப்பினர் அபூபக்கர் சித்திக், சிராஜுதீன், அப்துல் சலீம், சுயநிதி பாடப்பிரிவு இயக்குநர் ஷபினுல்லாஹ் கான், சாகிர் உசேன் கல்வியியல் கல்லூரி முதல்வர் முஹம்மது முஸ்தபா, ஸ்டார் முஸ்லீம் கால்பந்தாட்ட குழு தலைவர் முஹம்மது அலி, செயலாளர் அப்துல் ரஜாக் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
விளையாட்டு போட்டிகளை கல்லூரி உடற்கல்வி இயக்குநர் காளிதாசன், உடற்கல்வி ஆசிரியர்கள் காஜா நஜிமுதீன், வெற்றி, ஜென்சி, கோகுல் ஆகியோருடன் இணைந்து இளையான்குடி, ஸ்டார் முஸ்லீம் கால்பந்தாட்ட குழுவினர் செய்திருந்தனர். போட்டிகளை கால்பந்து ரசிகர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் கண்டுகளித்தனர்.
- உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல தமிழ் பெயர் வையுங்கள்.
- சிறிய குழந்தைகளிடம் செல்போன் கொடுக்காதீர்கள்
அருப்புக்கோட்டை:
அருப்புக்கோட்டை அருகே ஆத்திப்பட்டியில் நடந்த ம.தி.மு.க பிரமுகர் இல்ல திருமண விழாவில் வைகோ கலந்து கொண்டு பேசியதாவது:-
வாழ்க்கையில் ஓர் ஒழுங்கு வேண்டும். அந்த ஒழுங்கை கற்றுக்கொண்டால் தான் வாழ்க்கையை முறைப்படுத்தி நடத்தமுடியும். 50 வருடங்களுக்கு முன்பு விவகாரத்து செய்து கொண்டார்கள் என்ற செய்தியே கிடையாது. ஆனால் இன்றைக்கு திருமணமான 3 மாதத்திற்குள் வாழ்க்கை கசந்து விடுகிறது. கணவன்-மனைவி இடையே பிரிவினை வந்து நீதிமன்றத்திற்கு போய் விவகாரத்து பெற்று சென்று விடுகிறார்கள்.
இப்போது நான் சொல்வதற்கு காரணம், இப்போது இருக்கிற சமுதாயத்தில் இளைஞர்கள் ஒன்றை தெரிந்து கொள்ளுங்கள்.கணவன்-மனைவி வாழ்க்கை என்பது ஒர் உயர்தரமான இல்லற வாழ்க்கை. இந்த இல்லற வாழ்க்கையில் நீங்கள் ஒருவருக்கொருவர் ஆதரவாக அன்போடு இருந்து நீங்கள் காட்டுகிற அந்த அன்பில் தான் உங்கள் பிள்ளைகள் பெற்றோரை மதிப்பார்கள்.
தற்போது 18 வயதுடைய சிறுவர்கள்தான்.கொலை செய்கிறார்கள். சமூகம் மிகவும் கெட்டுப் போய் விட்டது. இதே நிலை நீடிக்குமானால் 10 ஆண்டுகாலத்தில் நிலைமை படுமோசமாகி விடும். சட்டங்கள் கடுமையாக்கப்பட வேண்டும். திருக்குறளில் உள்ள கருத்துக்கள் எந்த புத்தகத்திலும் கிடையாது.எந்த மதத்திலும் கிடையாது. திருக்குறளுக்கு நிகரான ஒர்சிந்தணை கருவூலம் உலகில் எந்த மொழியிலும் கிடையாது.
ஆனால் சாதுர்யமாக பிரதமர் மோடி திருக்குறளை பற்றி பேசுகிறார். வட நாட்டில் இருந்து வருபவர்கள் திருக்குறளில் 2 திருக்குறளை சொல்லி விட்டால் தமிழர்கள் ஏமாந்து விடுவார்கள் என நினைக்கிறார்கள். அது தவறு.
உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல தமிழ் பெயர் வையுங்கள்.ஒழுக்கத்தை கற்பியுங்கள்.தற்போது வாழ்க்கையே துன்பமாகி விட்டது.சிறிய குழந்தைகளிடம் செல்போன் கொடுக்காதீர்கள்.செல்போனால் கெட்டுப் போகிறார்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
- விபத்து குறித்து தகவல் அறிந்த அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன், மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி, போலீஸ் சூப்பிரண்டு மனோகர் ஆகியோர் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று மாணவ-மாணவிகளை சந்தித்து ஆறுதல் கூறினர்.
- காயமடைந்த மாணவ-மாணவிகளுக்கு உரிய சிகிச்சை அளிக்குமாறு டாக்டர்களுக்கு அமைச்சர் உத்தரவிட்டார். விபத்து தொடர்பாக வச்சக்காரபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்:
விருதுநகர் அருகே உள்ள துலுக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்த 2 மாணவிகள், 8 மாணவர்கள் என 10 பேர் இன்று காலை ஆட்டோவில் ஆவுடையாபுரத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிக்கு புறப்பட்டுச் சென்றனர். ஆட்டோவை நாகராஜன் என்பவர் ஓட்டினார். ஆவுடையாபுரம் ரெயில்வே கேட் பகுதியில் ஆட்டோ சென்ற போது எதிரே வந்த பட்டாசு ஆலை வேன் எதிர்பாராதவிதமாக ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதியது. இதில் ஆட்டோவின் முன்பகுதி சேதமடைந்தது.
அதில் பயணித்த மாணவ-மாணவிகள் பாண்டீஸ்வரி (வயது 15), ராம் பிரியா (14), அபினேஷ் (11), கருப்பசாமி (11), லோகேஷ் (11), மற்றொரு கருப்பசாமி (11), ரித்திஷ் (எ) முனியாண்டி (11), அஜய் மற்றும் முருகன் மகன் கருப்பசாமி, ஆட்டோ டிரைவர் நாகராஜன் உள்பட 11 பேர் காயமடைந்தனர். அவர்களை அங்கிருந்தவர்கள் விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு மாணவ-மாணவிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
விபத்து குறித்து தகவல் அறிந்த அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன், மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி, போலீஸ் சூப்பிரண்டு மனோகர் ஆகியோர் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று மாணவ-மாணவிகளை சந்தித்து ஆறுதல் கூறினர்.
அப்போது காயமடைந்த மாணவ-மாணவிகளுக்கு உரிய சிகிச்சை அளிக்குமாறு டாக்டர்களுக்கு அமைச்சர் உத்தரவிட்டார். விபத்து தொடர்பாக வச்சக்காரபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ராஜபாளையம் அருகே சொத்து தகராறில் வாலிபர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
- இன்ஸ்பெக்டர் மன்னவன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
ராஜபாளையம்
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்ைதயடுத்த மங்காபுரத்தை சேர்ந்தவர் சமுத்திரம். இவரது சகோதரர் முருகன். இவர்களுக்கு இடையே குடும்ப சொத்து தொடர்பாக கோர்ட்டில் வழக்கு நடந்து வருகிறது.
இந்த நிலையில் அதே பகுதியில் வீரம்மாள் என்பவர் இறந்து விட்டார். இதையொட்டி துக்கம் விசாரிப்பதற்காக சமுத்திரம் சென்றார். அப்போது அங்கு முருகனும் வந்தார். அவரை கண்ட சமுத்திரம் தகாத வார்த்தையில் பேசியதாக கூறப்படுகிறது.இதுபற்றி அறிந்த முருகனின் மகன் சரவணன் மற்றும் உறவினர்கள் ஆத்திரமடைந்தனர். இதைத்தொடர்ந்து அவர்கள் சமுத்திரத்தின் மகன் நாகராஜ் (வயது 23) கொண்டேரி கண்மாய் மாரியம்மன் கோவில் பூக்குழி திடல் பகுதியில் சென்ற போது அவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுபற்றி ராஜபாளையம் தெற்கு போலீசில் புகார் செய்யப்பட்டது.
அதன்பேரில் இன்ஸ்பெக்டர் மன்னவன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.






