என் மலர்
விருதுநகர்
- கோவில் நடைபாதையில் ஆக்கிரமித்து இருப்பதாகவும், அதனை இடிக்க வேண்டும் என்று அதே பகுதியை சேர்ந்த ஒருவர் மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
- கோவிலை இடிக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
அருப்புக்கோட்டை:
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை மணி நகரம் உச்சி செட்டியார் தெரு பகுதியில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் சந்தன மாரியம்மன் கோவில் இருக்கிறது.
30 ஆண்டுகளுக்கும் மேலாக அந்த கோவில் இருப்பதாக கூறப்படுகிறது. தினமும் வழக்கமான பூஜைகள் நடத்தப்பட்டு வரும் இந்த கோவிலில் அனைத்து சமுதாய மக்களும் வழிபாடு நடத்தி வருகின்றனர். சமீபத்தில் இக்கோவிலின் கும்பாபிஷேகம் நடந்து முடிந்துள்ளது.
அந்த கோவில் நடைபாதையில் ஆக்கிரமித்து இருப்பதாகவும், அதனை இடிக்க வேண்டும் என்று அதே பகுதியை சேர்ந்த ஒருவர் மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து கோவிலை இடிக்க நடவடிக்கை எடுக்கக்கூடாது என்று மணிநகரம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மாவட்ட கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் மனு கொடுத்தனர்.
மேலும் வழக்கு தொடர்ந்து தனி நபரை கண்டித்து வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி போராட்டத்திலும் ஈடுபட்டார்கள். இந்நிலையில் அந்த கோவிலை இடிக்க ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இதையடுத்து கோர்ட்டு உத்தரவை செயல்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.
அதன்படி கோவிலை இடிக்க கோர்ட்டு உத்தரவிட்டு இருப்பதாகவும், அதனை செயல்படுத்த ஒத்துழைப்பு தர வேண்டும் என்று மணி நகரம் உச்சி செட்டியார் தெரு மக்க ளிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் கோவிலை இடிக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்த நிலையில் நடைபாதையில் இருப்பதாக கூறப்படும் கோவிலை இடிக்க அருப்புக்கோட்டை நகராட்சி ஆணையாளர் அசோக்குமார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் இன்று வந்தனர். இதையறிந்த அந்த பகுதி ஆண்கள், பெண்கள், மாணவ-மாணவிகள் என அனைவரும் கோவில் உள்ள பகுதியில் திரண்டனர்.
அவர்கள் கோவிலை இடிக்கக்கூடாது என்று வலியுறுத்தி கோவிலை சுற்றி அமர்ந்து கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பொதுமக்கள் போராட்டத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.
வருவாய் துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் கோவிலை இடிக்கக்கூடாது என கூறி அங்கேயே அமர்ந்திருந்தனர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களில் சிலர் கோவிலை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து தங்களது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க போவதாக கூறினார்கள்.
மேலும் ஒரு வாலிபர் அங்கிருந்த வீட்டு மாடியில் ஏறி உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிப்பதாக மிரட்டல் விடுத்தார். அவர்களை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் தடுத்து நிறுத்தி மீட்டனர். இதையடுத்து அங்கு பதட்டம் அதிகரித்தது.
உதவி போலீஸ் சூப்பிரண்டு கருண் காரட், சிவகாசி துணை போலீஸ் சூப்பிரண்டு சபரிநாதன் ஆகியோர் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் , சப்-இன்ஸ்பெக்டர்கள் என நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர்.
போலீஸ் அதிகாரிகளும், வருவாய் மற்றும் நகராட்சி அதிகாரிகளும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தியும் பொதுமக்கள் போராட்டத்தை கைவிட வில்லை. பல ஆண்டுகளாக வழிபட்டு வரும் கோவிலை இடிக்கக்கூடாது என்று வலியுறுத்தினார்கள். இதனால் வெகுநேரம் அந்த பகுதி பரபரப்பாக காணப்பட்டது.
- சுற்றுலா பஸ்-கார் நேருக்கு நேர் மோதியது.
- இதில் 4 பேர் படுகாயம் அடைந்தனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர்
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் இருந்து ராஜபாளையத்தில் நடந்த துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்ள 5 பேர் இன்று அதிகாலை காரில் புறப்பட்டனர். இவர்கள் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே நத்தம்பட்டி பகுதியில் வந்து கொண்டிருந்த போது எதிரே வந்த சுற்றுலா பஸ் எதிர்பாராத விதமாக கார் மீது பயங்கரமாக மோதியது.
இதில் கார் மற்றும் பஸ்சின் முன் பகுதி கடும் சேதமடைந்தன. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த விஜயலட்சுமி (வயது37), மாலதி(45), சுப்புலட்சுமி (35), மகேந்திரன் (21) ஆகிய 4 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களை நத்தம்பட்டி போலீசார் மீட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் போலீசார் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்த விபத்தில் சுற்றுலா பஸ்சில் பயணித்த யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இந்த விபத்து குறித்து நத்தம்பட்டி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- காரியாபட்டி அருகே வெந்நீர் கொட்டி 3 வயது சிறுமி இறந்தாள்.
- இது தொடர்பாக ஆனந்தவேலு கொடுத்த புகாரின் பேரில் ஏ.முக்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே உள்ள தேனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆனந்தவேலு (வயது 30). கட்டிட தொழிலாளியான இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 3 வயதில் தனுஸ்ரீ என்ற மகள் இருந்தாள். சம்பவத்தன்று ஆனந்தவேலு வேலைக்கு சென்று விட்டார். அவரது மனைவி குழந்தையை வீட்டின் அறையில் விட்டு விட்டு மற்ற வேலைகளை பார்த்துக் கொண்டிருந்தார்.
அப்போது கொதிக்கும் தண்ணீர் இருந்த பாத்திரம் அருகே சிறுமி சென்றாள். அப்போது கொதிக்கும் தண்ணீர் சிறுமி மீது கொட்டியது. வலியால் கதறியழுத மகளை பார்த்து தாய் அதிர்ச்சியடைந்தார். உடனே அக்கம் பக்கத்தினர் குழந்தையை மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு தனுஸ்ரீக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்தாள். இது தொடர்பாக ஆனந்தவேலு கொடுத்த புகாரின் பேரில் ஏ.முக்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கவர்னர் ஒப்புதல் வழங்காதது மக்கள் நலனுக்கு எதிரானது என மாணிக்கம் தாகூர் எம்.பி. குற்றச்சாட்டினார்.
- பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை செயல்பாடு தமிழக மக்களுக்கு எதிராக உள்ளது.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டத்தில் ரூ.43 கோடி கல்விக்கடன் இலக்கை எட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணிக்கம்தாகூர் எம்.பி. வலியுறுத்தினார். கல்விக்கடன் விருதுநகரில் கலெக்டர் அலுவலகத்தில் நிருபர்களுக்கு பேட்டி யளித்த அவர் மேலும் கூறியதாவது:-
விருதுநகர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் மத்திய அரசு திட்ட செயல்பாடுகள் குறித்து மாவட்ட கண்காணிப்பு குழுவினால் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இக்கூட்டத்தில் கலெக்டர் மேகநாத ரெட்டி, துணைத் தலைவர் தனுஷ் குமார் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் சீனிவாசன், ரகுராமன், அசோகன், சிவகாசி மேயர் சங்கீதா இன்பம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மாவட்டத்தில் ரூ. 143 கோடி கல்விக்கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் வரை ரூ. 9 கோடியே 5 லட்சம் மட்டுமே கல்வி கடன் வழங்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை மத்திய அரசு கல்வி கடனில் கவனம் செலுத்தாததை காட்டுகிறது.
கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி காலத்தில் மாவட்டத்தில் ரூ. 120 கோடி வரை கல்விக்கடன் வழங்கப்பட்டது. ரூ.143 கோடி கல்விக்கடன் இலக்கை எட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தேசிய குழந்தை தொழிலாளர் திட்டத்தினை மத்திய அரசு நிறுத்திவிட்ட நிலையில் தமிழக அரசு திட்டத்தினை செயல்படுத்த குழு அமைத்து அதற்கு தேவையான நிதியினை நிதியமைச்சரிடம் பரிந்துரை செய்துள்ளது. எனவே இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும். 100 நாள் வேலை திட்டத்தில் மாவட்டம் முன்னோடி மாவட்டமாக விளங்கும் நிலையில் விவசாய காலம் தவிர பிற நாட்களில் இத்திட்டத்தை செயல்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மக்களுக்கு எதிரான ஆன்லைன் ரம்மிதடை மசோதாவிற்கு கவர்னர் ஒப்புதல் அளிக்காதது மக்கள் நலனுக்கு எதிரானது. இந்த விஷயத்தில் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை செயல்பாடு தமிழக மக்களுக்கு எதிராக உள்ளது. எனவே அந்த நிலையை மாற்றிக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக விருதுநகர் பாத்திமா நகரில் உள்ளூர் பகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் குடிநீர் தொட்டியை மாணிக்கம் தாகூர் எம்.பி. திறந்து வைத்தார்.
- விருதுநகரில் கல்லூரி மாணவி திடீரென மாயமானார்.
- அதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
விருதுநகர்
விருதுநகர் நாராய ணமடம் தெருவைச் சேர்ந்தவர் செல்வி. இவரது மகள் ஜெயரூபிணி (வயது 20). இவர் அதே பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார்.
இவர் தூத்துக்குடி மாவட்டம் வேம்பார் பகுதியைச் சேர்ந்த மாரி செல்வம் என்பவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த காதல் விவகாரம் ஜெயரூபிணியின் குடும்பத்திற்கு தெரியவர அவர்கள் படிப்பில் கவனம் செலுத்துமாறு அறிவுரை கூறியுள்ளனர்.
இந்த நிலையில் சம்பவத்தன்று கல்லூரிக்கு செல்வதாக கூறிவிட்டுச் சென்ற ஜெயரூபிணி அங்கு செல்லாமல் மாயமானார். பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடிய வில்லை.
இது குறித்து அவரது தாயார் செல்வி பஜார் போலீசில் புகார் செய்தார். அதில், காதலனுடன் சென்றி ருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார். அதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- கலசலிங்கம் பார்மசி கல்லூரியில் சர்வதேச கருத்தரங்கு நடந்தது.
- இதில் பல மாநில மாணவர்கள் 250 பேர்கலந்துகொண்டு பயனடைந்தனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர்
கலசலிங்கம் மருந்தாக்கியல் கல்லூரி, ஐ.பி.ஏ. தென்தமிழக கிளையுடன் இணைந்து 61-வது தேசிய மருந்தியல் வார விழா, சர்வதேச கருத்தரங்கு ''அறிவு காப்புரிமை, மருந்து கண்டுபிடிப்பு, ஆராய்ச்சி, சவால்கள்'' என்ற தலைப்பில் நடத்தியது. கல்லூரி செயலாளர் சசி ஆனந்த் தலைமை தாங்கினார்.
முதல்வர் வெங்கடேசன் வரவேற்றார். அமெரிக்காவின் வெஸ்பீல்ட், பனகர் காப்புரிமை மைய தலைவர், உமேஷ் வி.பனகர் கருத்தரங்கை தொடங்கி வைத்து மலரை வெளியிட்டார். எஸ்.ஆர்.எம். மருந்தியல் துறை தலைவர் இளங்கோ, மலேசியாவின் கே.பி.ஜே ஹெல்த்கேர் யுனிவர்சிட்டி பேராசிரியர் அனந்த ராஜகோபால், கலசலிங்கம் பல்கலைக்கழக பதிவாளர் வாசுதேவன், கலசலிங்கம் மருத்துவ மருத்துவமனை டீன் சேவியர் செல்வ சுரேஷ் ஆகியோர் பேசினர்.
விவாத நிகழ்வில், எஸ்.லட்சுமண பிரபு, கே.இளங்கோ, கே.அனந்த ராஜகோபால் ஆகியோர் உரையாற்றினர். கலசலிங்கம்,மருந்தாக்கியல் கல்லூரிக்கும், அமெரிக்காவின் அறிவு காப்புரிமை பனகர் மையத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதில் பல மாநில மாணவர்கள் 250 பேர்கலந்துகொண்டு பயனடைந்தனர்.
- படுகாயமடைந்த அவரை அங்கிருந்தவர்கள் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர்.
- அருப்புக்கோட்டை பகுதியில் இது போன்ற விபத்துகளை தடுக்க கூடுதல் அரசு பஸ்களை இயக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
அருப்புக்கோட்டை:
தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் காலை மற்றும் மாலை நேரங்களில் பள்ளிக்கு செல்ல போதுமான அரசு பஸ்கள் இயக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. இதன் காரணமாக அரசு பஸ்களில் படியில் நின்று மாணவர்கள் பயணம் செய்யும் நிலை உள்ளது. இதனால் அடிக்கடி உயிர்பலி ஏற்படுகிறது.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் கடந்த மாதம் பஸ்சில் பயணம் செய்த கல்லூரி மாணவர் தவறி விழுந்து பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் நடந்த பின்பும் அந்த பகுதியில் போதிய அளிவில் அரசு பஸ்கள் இயக்கப்படவில்லை.
இதனால் தற்போது வரை மாணவ-மாணவிகள், வேலைக்கு செல்வோர் ஆகியோர் படியில் நின்றுகொண்டு பயணம் செய்யும் அவலநிலை உள்ளது. இன்று காலை அவ்வாறு பயணம் செய்த அரசு பள்ளி ஆசிரியை தவறி விழுந்து படுகாயம் அடைந்தார். அதன் விவரம் வருமாறு:-
விருதுநகர் கட்டபொம்மன் தெருவை சேர்ந்தவர் கணேசன். இவரது மனைவி வளர்மதி(வயது 51). இவர் அருப்புக்கோட்டை அருகில் உள்ள மலைப்பட்டியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இன்று காலை விருதுநகரில் இருந்து பாலவநத்தத்துக்கு அரசு பஸ்சில் வந்த அவர் அங்கிருந்து மலைப்பட்டி வழியாக அருப்புக்கோட்டைக்கு செல்லும் டவுன் பஸ்சில் ஏறினார்.
அந்த பஸ்சில் கூட்டம் அதிகமாக இருந்ததால் வளர்மதியால் உள்ளே செல்ல முடியவில்லை. இதனால் அவர் படியில் நின்று கஷ்டப்பட்டு பயணம் செய்தார். மலைப்பட்டி அருகே பஸ் வந்தபோது கைப்பிடி நழுவி வளர்மதி தவறி கீழே விழுந்தார. படுகாயமடைந்த அவரை அங்கிருந்தவர்கள் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர்.
அருப்புக்கோட்டை பகுதியில் இது போன்ற விபத்துகளை தடுக்க கூடுதல் அரசு பஸ்களை இயக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
- விருதுநகர் மாவட்ட பஞ்சாயத்து நிலைக்குழு தலைவர்கள்-உறுப்பினர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
- பஞ்சாயத்து கூட்டம் தலைவர் வசந்தி தலைமையில் நடைபெற்றது.
விருதுநகர்
விருதுநகர் மாவட்ட பஞ்சாயத்து கூட்டம் தலைவர் வசந்தி தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்ட பஞ்சாயத்துக்கான 5 நிலைக்குழு ஏற்படுத்தப்பட்டு இதற்கான தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமனம் செய்யப்பட்டனர்.
அதன் விவரம் வரு மாறு:-
* உணவு மற்றும் மேலாண்மைக்குழு தலைவர்-மச்சராஜா, உறுப்பினர்கள்- நர்மதா, நாகராஜன், வேல்ராணி (எ) உமா லட்சுமி.
* தொழில் மற்றும் தொழிலாளர் குழு தலைவர்-பாரதிதாசன், உறுப்பினர்கள்-சிவக்குமார், தமிழ்வாணன், மகாலட்சுமி.
* பொதுப்பணிக்குழு தலைவர்-வேல்முருகன், உறுப்பி னர்கள்-மகா லட்சுமி, கண்ணன், புவனா.
* கல்விக்குழு தலைவர்-சுபாசினி, உறுப்பினர்கள்-பாலச்சந்தர், பகவதி, மாலதி
இந்த 4 குழுக்களுக்கும் பதவி வழி உறுப்பினராக மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வசந்தி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
* மதுவிலக்கு உள்ளடங்கல் மற்றும் மக்கள் நல்வாழ்வு நிலைக்குழு தலைவர்- வசந்தி (மாவட்ட பஞ்சாயத்து தலைவர்), உறுப்பினர்கள்-இந்திரா, முத்துச்செல்வி, போஸ், பாரதிதாசன்.
- சிவகாசி பி.எஸ்.ஆர்.கல்லூரியில் நடந்த பட்டமளிப்பு விழாவில் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் 540 மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கி பேசினார்.
- ஆண்களுக்கு நிகராக பெண்களும் அனைத்து துறைகளிலும் சிறக்க வேண்டும் என்றார்.
சிவகாசி
சிவகாசி பி.எஸ்.ஆர். கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு பட்டமளிப்பு விழா நடந்தது. பி.எஸ்.ஆர். கல்வி குழுமங்களின் தாளாளர் ஆர்.சோலைசாமி தலைமை தாங்கினார்.
இயக்குநர் விக்னேசுவரி அருண்குமார் முன்னிலை வகித்தார். கல்லூரி கல்வி சார் இயக்குநர் கோபால்சாமி வரவேற்றார். முதல்வர் சுந்தரராஜ் விழாவை தொடங்கி வைத்தார். டீன் மாரிச்சாமி வரவேற்றார்.
பட்டமளிப்பு விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் 540 மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார். ஒவ்வொரு துறையிலும் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ-மாணவிகளுக்கு பரிசு, பதக்கம், சான்றி தழ்களையும் வழங்கினார். பின்னர் அமைச்சர் பேசியதாவது:-
பி.எஸ்.ஆர். கலை மற்றும் அறிவியல் கல்லூரியானது பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள கிராமத்தில் இருந்து ஏழை, எளிய மாணவ, மாணவிகள், பயன்பெறும் வகையில் மூத்த தகப்பனாராக இருந்து தாளாளர் சோலைசாமி சிறப்பாக நடத்தி வருகிறார். மாணவர்கள் மருத்துவம், பொறியியல் மட்டுமின்றி கலை அறிவியல் துறையிலும் சிறந்து விளங்க முடியும். மனதிற்கு பிடித்த துறையை தேர்ந்தெடுத்து படிக்க வேண்டும். போட்டிகள் நிறைந்த உலகமாக மாறி வருவதால் மாணவ-மாணவிகள் அதை கவனத்தில் கொண்டு சிறப்பாக படித்து வாழ்வில் முன்னேற வேண்டும்.
அரசு வேலை மட்டுமின்றி தொழில் முனைவோ ராகவும் மாணவர்கள் மாற முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். இந்த வாய்ப்பை பயன்படுத்தி மாணவர்கள் வாழ்வில் முன்னேற்றம் காண வேண்டும்.
நகரம் மற்றும் கிராமத்தில் படிக்கும் மாணவ -மாணவிகளுக்கு வித்தியாசம் உள்ளது. நகரத்தில் படிக்கும் மாணவ- மாணவிகள் பெற்றோர்கள் படித்தவர்களாக இருப்பார்கள். பெற்றோர்கள் குறைந்தபட்ச கல்வித் தகுதி பெற்றவர்களாக இருப்பார்கள்.
அவர்களின் குடும்பத்தை சேர்ந்த மாணவ-மாணவிகள் பட்டம் பெறுவதை தமிழக அரசின் சார்பில் பாராட்டுகிறேன். கல்லூரி படிப்புடன் நிறுத்தி விடாமல் போட்டித் தேர்வுகளில் பங்கேற்று அதிலும் வெற்றி பெற்று பல்வேறு சாதனைகளை புரிந்து வாழ்வில் முன்னேற்றம் காண வேண்டும். ஆண்களுக்கு நிகராக பெண்களும் அனைத்து துறைகளிலும் சிறக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் ராஜபாளையம் எம்.எல்.ஏ. தங்கபாண்டியன், சாத்தூர் கடற்கரை ராஜ், வெம்பக்கோட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் ஜெய பாண்டியன், கிழக்கு ஒன்றிய செயலாளர் கிருஷ்ண குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கல்லூரி நிர்வாகத்தினர் ஒருங்கி ணைப்பாளர்கள் சிவகுமார், பிரேம்குமார், ஜெயபாலன் மற்றும் பேராசிரியர்கள் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
- கண்டக்டர்- தொழிலாளி விபத்தில் சிக்கி பலியானார்கள்.
- இதுகுறித்து சூலக்கரை கிழக்கு போலீசார் விசாரித்து வருகின்றனர்.
விருதுநகர்
திருச்சுழி அருகே உள்ள முத்துராமலிங்கபுரத்தைச் சேர்ந்தவர் விஜிக்குமார் (வயது 26). தனியார் பஸ் கண்டக்டரான இவர் சம்பவத்தன்று முத்துராமலிங்கபுரம் பஸ் நிலையம் அருகே விபத்தில் சிக்கி படுகாயங்களுடன் உயிருக்கு போராடினார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி விஜிக்குமார் பரிதாபமாக இறந்தார்.
விருதுநகர் அல்லம்பட்டி அனுமன் நகரைச் சேர்ந்தவர் முனியராஜ் (33). இவர் அதே பகுதியில் ஒர்க்ஷாப் நடத்தி வந்தார். கடந்த சில மாதங்களாக வேலைக்கு செல்லாமல் மது குடித்து வந்துள்ளார். சம்பவத்தன்று மோட்டார் சைக்கிளில் வெளியே சென்ற முனியராஜ் அருப்புக்கோட்டை-விருதுநகர் ரோட்டில் சென்று கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத வாகனம் மோதியது.
இதில் படுகாயமடைந்த முனியராஜ் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அவரது மனைவி தனலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் சூலக்கரை கிழக்கு போலீசார் விசாரித்து வருகின்றனர்.
- விருதுநகரில் ஆசிரியை-கல்லூரி மாணவிகள் மாயமானார்கள்.
- சிவகாசி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்
விருதுநகர்
ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்தவர் முத்துலட்சுமி. இவரது மகள் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். நேற்று பள்ளிக்கு சென்ற அவர் மதியம் விடுப்பு எடுப்பதாக கூறிவிட்டு சென்றார். ஆனால் அவர் வீட்டுக்கு செல்லாமல் மாயமானார். பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்த புகாரின்பேரில் ஸ்ரீவில்லிபுத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கல்லூரி மாணவிகள்
வத்திராயிருப்பு அருகே உள்ள குன்னூர் ராஜீவ் காலனியை சேர்ந்தவர் ஜெயபாண்டியன். இவரது மகள் கிருஷ்ணன் கோவில் பகுதியில் உள்ள கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார். சம்பவத்தன்று கல்லூரிக்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற அவர் பின்னர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்த புகாரின்பேரில் கிருஷ்ணன்கோவில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சிவகாசி பள்ளப்பட்டி ரோட்டை சேர்ந்தவர் ஜெயந்தி. இவரது மகள் நர்சிங் கல்லூரியில் படித்து வந்தார். வீட்டு வேலைகளை செய்யவில்லை என குடும்பத்தினர் கண்டித்துள்ளனர். இதனால் விரக்தியில் இருந்த அவர் திடீரென மாயமானார். சிவகாசி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்
- மொட்டைச்சாமி தனது அண்ணனுடன் சொத்து தொடர்பாக பிரச்சினையில் ஈடுபட்டார்.
- அண்ணனை கத்தியால் குத்தி கொலை செய்த மொட்டைச்சாமி எதுவும் நடக்காததது போல் வீட்டிற்கு சென்று விட்டார்.
விருதுநகர்:
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள ஒ.மேட்டுப்பட்டி வைரவசாமி கோவில் தெருவை சேர்ந்தவர் பொன்ராஜ் (வயது58).
இவர் அதே பகுதியில் செருப்பு கடை வைத்து வியாபாரம்செய்து வந்தார். இவரது தம்பி மொட்டைச்சாமி (55). இவருக்கும், பொன்ராஜூக்கும் கடந்த சில வருடங்களாக சொத்து பிரச்சினை இருந்து வருகிறது.
இதனால் இவர்களுக்குள் அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டது. நேற்றும் மொட்டைச்சாமி தனது அண்ணனுடன் சொத்து தொடர்பாக பிரச்சினையில் ஈடுபட்டார். இந்த நிலையில் இன்று காலை பொன்ராஜ் வழக்கம் போல் கடையை திறந்து வியாபாரத்திற்கான முன்னேற்பாடு பணிகளை செய்து கொண்டிருந்தார்.
அப்போது அங்கு மொட்டைச்சாமி குடிபோதையில் வந்தார். அவர் அண்ணன் பொன்ராஜூடன் தகராறு செய்தார். அப்போது அவர், தான் மறைத்து வைத்து கொண்டு வந்த கத்தியை எடுத்து கண் இமைக்கும் நேரத்தில் பொன்ராஜின் வயிற்றில் குத்தினார்.
இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். அண்ணனை கத்தியால் குத்தி கொலை செய்த மொட்டைச்சாமி எதுவும் நடக்காததது போல் வீட்டிற்கு சென்று விட்டார்.
பொன்ராஜ் கொலை செய்யப்பட்டு கிடந்ததை பார்த்த பக்கத்து கடைக்காரர்கள், அது குறித்து சாத்தூர் தாலுகா போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்ல பாண்டியன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பொன்ராஜ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த கொலை தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி மொட்டைச்சாமியை கைது செய்தனர். கொலைக்கான காரணம் குறித்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.






