என் மலர்
விருதுநகர்
- போலீசார் 2 பேரின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
- போலீசார் தற்கொலை செய்த அறையை சோதனை செய்தபோது அங்கு ஒரு கடிதம் சிக்கியது.
விருதுநகர்:
விருதுநகர் எஸ்.வி.பி.என்.எஸ். தெருவை சேர்ந்தவர் கார்த்திக்ராஜா(வயது 41). இவர் அதேபகுதியில் பெயிண்ட கடை நடத்தி வந்தார். இவரது மனைவி அருணா மகேசுவரி(37). இவர்களுக்கு அர்ச்சனா ஸ்ரீ(17), மேகாஸ்ரீ (14) என்ற 2 மகள்கள் உள்ளனர்.
கடந்த சில வாரங்களாக கார்த்திக்ராஜா கடன் பிரச்சினை காரணமாக விரக்தியுடன் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று இரவு 2 மகள்களும் அருகில் உள்ள பாட்டி வீட்டுக்கு தூங்க சென்றனர். பின்னர் அவர்கள் இன்று காலை வீட்டுக்கு வந்தனர். ஆனால் கதவு திறக்கப்படாமல் இருந்தது. 2 பேரும் பலமுறை கதவு தட்டியும் எந்த பதிலும் இல்லை.
இதனால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் விருதுநகர் பஜார் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வீட்டின் கதவுகளை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது கார்த்திக்ராஜா, அவரது மனைவி அருணா மகேசுவரி இருவரும் விஷம் குடித்து இறந்து கிடந்தனர். தொடர்ந்து போலீசார் 2 பேரின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசார் தற்கொலை செய்த அறையை சோதனை செய்தபோது அங்கு ஒரு கடிதம் சிக்கியது. அதில் கடன் பிரச்சினை குறித்து குறிப்பிடப்பட்டிருந்தது. அதனை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முன்னதாக பெற்றோரின் உடல்களை பார்த்து 2 மகள்களும் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது.
- ராஜபாளையம் ராஜூக்கள் கல்லூரி தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு நடந்தது.
- இதில் பள்ளி மாணவ, மாணவிகள் உட்பட 300 பேர் கலந்து கொண்டு தங்களது அறிவியல் கண்டுபிடிப்புகளை செய்து காட்டினார்கள்.
ராஜபாளையம்
ராஜபாளையம் ராஜூக்கள் கல்லூரியின் அக மதிப்பீட்டு குழு, ராஜபாளையம் ரோட்டரி சங்கம், ராஜபாளையம் வட்டார தமிழ்நாடு அறிவியல் கழகம் ஆகியவை இணைந்து விருதுநகர் மாவட்ட 30-வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு ராஜூக்கள் கல்லூரியில் நடத்தியது.
மாநாட்டின் கருப்பொருளாக ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்கான சுற்றுச்சூழல் அமைப்பை புரிந்து கொள்வதை அடிப்படையாகக் கொண்டு நடைபெற்றது. ராஜபாளையம் வட்டாரத்தில் இருந்து 10-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் உட்பட 300 பேர் கலந்து கொண்டு தங்களது அறிவியல் கண்டுபிடிப்புகளை செய்து காட்டினார்கள்.
நிகழ்ச்சியில் தமிழ்நாடு அறிவியல் குழுவின் விருதுநகர் மாவட்ட ஆலோசகர் சுரேஷ் தளியத் தலைமை உரையாற்றினார். ராஜபாளையம் எக்ஸட் ஜே.சி.ஐ. பட்டய தலைவர் மாடசாமி வரவேற்புரை நிகழ்த்தினார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சுதா பெரியத்தாய் ேபசினார். மாநிலச் செயலாளர் பரமசிவம் அறிமுக உரையாற்றினார். இதயம் நிறுவனங்கள் மேனேஜிங் டைரக்டர் முத்து, கல்லூரி ஆட்சி மன்ற குழுச் செயலர் சிங்கராஜ் மற்றும் ராஜபாளையம் ரோட்டரி சங்க தலைவர் வைமா திருப்பதி செல்வன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மிகச் சிறப்பான திட்டத்தை வெளிப்படுத்திய மாணவ மாணவியர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றி தழ்களை வழங்கினர்.
கல்லூரி முதல்வர் வெங்கடேஸ்வரன், சத்யா கல்வி குழும தலைவர் குமரேசன், ராஜபாளையம் ரோட்டரி சங்க செயலர் பார்த்தசாரதி, துளிகள் அமைப்பு மாவட்ட பொருளாளர் ஜெயந்தி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். வட்டார செயலாளர் மாரியப்பன் நன்றியுரை கூறினார். இந்த நிகழ்ச்சியில் கல்லூரி பேராசிரியர்கள் கலந்து கொண்டு சிறந்த திட்டத்தை தேர்வு செய்தனர்.
- பழமையான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பதிவுகள் குறித்து தெரிவிக்க வேண்டும் என்று கலெக்டர் வலியுறுத்தினார்.
- இத்தகைய பதிவுகளை சரிசெய்தல் மற்றும் டிஜிட்டல் மயமாக்குதல் செயல்முறைகள் செயல் படுத்தப்பட உள்ளது.
விருதுநகர்
தமிழகத்தில் தமிழ் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் தொடர்பான அனைத்து விஷயங்களையும் பாதுகாத்தல் மேம்படுத்துதல் மற்றும் பரப்புதல் ஆகியவற்றில் மிகுந்த முக்கியத்துவத்தை முதல்-அமைச்சர் அளித்து வருகிறார். முதல் கட்டமாக பழைய மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பதிவுகளை தனியார் நிறுவனங்களிடமிருந்தும், தனி நபர்களிடமிருந்தும் சேகரித்து தமிழ்நாடு ஆவண காப்பகத்தின் கீழ் கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்ள குழு அமைக்கப்பட்டுள்ளது.
வரலாற்று மதிப்புமிக்க பதிவுகள் நமது செழுமையான தேசிய பாரம்பரியத்தின் ஒரு பகுதியாக மாற்றும் விதமாக தனி நபர்களிடமிருக்கும் இத்தகைய பதிவுகளை சரிசெய்தல் மற்றும் டிஜிட்டல் மயமாக்குதல் செயல்முறைகள் செயல்படுத்தப்பட உள்ளது.
கலாசாரம் மற்றும் பராம்பரியத்தின் பெரிய தடயங்களை கால மாறுதல்கள் மற்றும் மனித அலட்சியம் ஆகியவற்றிலிருந்து பாதுகாக்கும் பொருட்டு தனி யார்களிடம் உள்ள பதிவேடு களின் தேசிய பதிவேட்டில் இணைக்குமாறு தெரிவிக்க ப்பட்டுள்ளது. பதிவுகள் மேற்கொள்ளும் பொருட்டு கோவை, சேலம், திருச்சி ராப்பள்ளி, கடலூர், தஞ்சாவூர், மதுரை ஆகிய இடங்களில் மாவட்ட பதிவு அலுவலகங்கள் செயல்பட உள்ளது.
எனவே விருதுநகர் மாவட்டத்தில் தனியார் நிறுவனத்தினரிடமோ மற்றும் தனி நபர்களிடமோ பழமையான மற்றும் வராலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பதிவுகள் ஏதேனும் இருப்பின் அப்பதிவுகளை மாவட்ட கலெக்டர் அலுவலக தொலைபேசி எண்கள் 04562-252601, 252602, 252603-மற்றும் 9445008161 ஆகியவற்றின் மூலம் மாவட்ட கலெக்ட ரின் நேர்முக உதவியா ளரை (பொது) தொடர்பு கொண்டும் அல்லது அவர்களை நேரில் தொடர்பு கொண்டு தெரி விக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மேற்கண்ட தகவலை கலெக்டர் மேகநாதரெட்டி தெரிவித்துள்ளார்.
- ராஜபாளையம் அருகே கோவிலுக்கு சீல் வைக்க சென்ற தாசில்தாரை பெண்கள் முற்றுகையிட்டனர்.
- சாமி கும்பிடுவதில் இருதரப்பினருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரச்சினை வளர்ந்தது.
ராஜபாளையம்
ராஜபாளையம் அருகே உள்ள சுந்தரராஜபுரம் பகுதியில் ஒரே சமுதாயத்தை சேர்ந்தவர்கள் மேல தெரு கீழத்தெரு என பிரித்து 500 குடும்பங்களாக வசித்து வருகின்றனர். இந்த மக்கள் அங்குள்ள மாரியம்மன் கோவிலில் ஓராண்டு மேல தெருவுக்கு என்றும், அடுத்த ஆண்டு கீழ தெருவுக்கு என்றும் முறை வைத்து சாமி கும்பிட்டு வருகின்றனர்.
சாமி கும்பிடுவதில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரச்சினை வளர்ந்த நிலையில், நேற்று ஒரு பிரிவினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இருதரப்பினரையும் அழைத்து ராஜபாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வைத்து அமைதி கூட்டம் நடத்தப்பட்டது. தற்காலிகமாக கோவிலை மூடி சீல் வைப்பது என்று இருதரப்பு நாட்டாமைகள் மற்றும் பொதுமக்கள் முன்னி லையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு கோர்ட்டு மூலம் தீர்ப்பு கிடைத்த பின்னர் கோவிலை திறந்து கொள்ளலாம் என்று முடிவெடுத்து கையெழுத்து போட்டுள்ளனர்.
அதன் அடிப்படையில் நேற்று கோவிலுக்கு சீல் வைப்பதற்காக ராஜ பாளையம் மண்டல துணை வட்டாட்சியர் கோதண்ட ராமன் சென்றார். அவரை முற்றுகையிட்ட பெண்கள் கோவிலுக்கு சீல் வைக்க கூடாது என கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சில பெண்கள் சாமி ஆடி கோவிலுக்கு சீல் வைக்கக் கூடாது, சீல் வைத்தால் விளைவுகளை சந்திப்பீர்கள் என சத்தமிட்டு பிரச்சினையில் ஈடுபட்டனர்.
அவர்களிடம் ேபாலீசார் பேச்சுவார்த்தை நடத்தி கோவிலுக்கு சீல் வைத்து செல்கிறோம், நீங்கள் கோர்ட்டு மூலம் பார்த்துக் கொள்ளுங்கள் என்று கூறினர். 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு கோவிலுக்கு அதிகாரிகள் சீல் வைத்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
- குடும்ப அட்டைதாரர்களுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகத்தை விருதுநகர் கலெக்டர் தொடங்கி வைத்தார்.
- இந்த அரிசி போலிக் அமிலம், கருவளர்ச்சிக்கும், ரத்த உற்பத்திக்கும் பயன்படுகிறது.
விருதுநகர்
விருதுநகர் வட்டம், கட்டையாபுரம் நுகர்ப்பொருள் வாணிப கழக நியாயவிலை கடையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகத்தை கலெக்டர் மேக நாதரெட்டி தொடங்கி வைத்தார்.
பின்னர் அவர் பேசியதாவது:-
முதல்-அமைச்சர் குடும்ப அட்டைதாரர்களுக்கு, செறிவூட்டப்பட்ட அரிசியை குழந்தைகள் வளர்ச்சி திட்டம் மற்றும் மதிய உணவு திட்டங்களுக்கு வழங்க அறிவுறுத்திருந்தார். அதனடிப்படையில், இன்று தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக கட்டையா புரம் நியாயவிலை கடையில் குடும்ப அட்டை தாரர்களுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் 992 நியாயவிலை கடைகள் செயல்பட்டு வருகிறது. அதில் 48,575 ஏ.ஏ.ஒய். குடும்ப அட்டைத்தாரர்கள் மற்றும் 2,44,128 பி.எச்.எச். குடும்ப அட்டைதாரர்களுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி மாதத்திற்கு 6582.685 மெட்ரிக் டன் தேவைப்படுகிறது. இந்த செறிவூட்டப்பட்ட அரிசியானது 1:100 என்ற விகிதத்தில் கலக்கப்பட்டு (அதாவது ஒரு டன் செறிவூட்டப்பட்ட அரிசி குருணைகள் 100 மெ.டன் அரிசியுடன் கலக்கப்பட்டு) சமமான செறிவூட்டப்பட்ட அரிசியாக தயாரிக்கப்பட்டு பொதுமக்களுக்கு பொது விநியோகத்திட்ட அங்காடிகள் மூலம் விலையின்றி வழங்கப்பட்டு வருகிறது.
செறிவூட்டப்பட்ட அரிசியானது ரத்தசோகையை தடுக்கிறது. போலிக் அமிலம், கருவளர்ச்சிக்கும், இரத்த உற்பத்திக்கும் பயன்படுகிறது. வைட்டமின் பி12 நரம்பு மண்டலத்தில் இயல்பான செயல்பாட்டிற்கும் உதவுகிறது.
எனவே மாவட்டத்தில் இன்று முதல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் செறி வூட்டப்பட்ட அரிசியானது வழங்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் மண்டல மேலாளர் விஜயகுமார், இணைப்பதிவாளர் (கூட்டுறவு சங்கங்கள்) செந்தில்குமார், துணை மேலாளர் கண்ணன், துணை மேலாளர் (கணக்கு) பழநி, உதவி மேலாளர் (வாணிபம்) அழகர்சாமி, உதவி மேலாளர் (தரக்கட்டுப்பாடு) மணிபாரதி மற்றும் அரசு அலுவலர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- விருதுநகர் மாவட்டத்தில் முதியவர் உள்பட 3 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
- இந்த சம்பவம் குறித்து திருத்தங்கல் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
விருதுநகர்
சிவகாசி ஹவுசிங் போர்டு லட்சுமி நகரை சேர்ந்தவர் நந்தீஸ்வரன் (62). இவர் தொடர் மூட்டு வலி காரணமாக அவதி அடைந்தார். வாழ்க்கையில் விரக்தி அடைந்த நந்தீஸ்வரன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். திருத்தங்கல் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
திருத்தங்கலை சேர்ந்தவர் ராஜேஸ்கண்ணன் (43). தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் மருந்து விற்பனை பிரதிநிதியாக வேலை பார்த்து வந்தார். வங்கியில் பெற்ற கடனை செலுத்துமாறு அவருக்கு நெருக்கடி கொடுத்ததாக தெரிகிறது. இந்தநிலையில் ராஜேஸ்கண்ணனுக்கு உடல் நலபாதிப்பும் ஏற்பட்டது. இதில் விரக்தியடைந்த அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது மனைவி பஞ்சவர்ணம் கொடுத்த புகாரின் பேரில் திருத்தங்கல் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
அருப்புக்கோட்டை ராமானுஜபுரத்தை சேர்ந்தவர் முத்து (45). குடிப்பழக்கம் காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்ட இவர் தற்கொலை செய்து கொண்டார்.
- ராஜபாளையத்தில் பின்னோக்கி நடந்து சிறுவன் சாதனை படைத்தான்.
- இவனது சாதனையை நோபல் உலக சாதனை ஆசிய (நோபல் வேர்ல்ட் ரெக்கார்ட்) புத்தகத்தில் பதிவு செய்தனர்.
ராஜபாளையம்
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் செயல்பட்டு வரும் தனியார் பஸ் கம்பெனியின் உரிமையாளர் முத்துராம்குமார்ராஜா-ஜெய் ஹரிணி தம்பதியினரின் மகன் ரத்தினஜெய்ராஜா (வயது8). இவர் பயிற்சியாளர் அய்யப்பன் உதவியுடன் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வந்தார். அவர் ராஜபாளையம் சின்மயா வித்தியாலயா பள்ளி சாலையில் 5 கிலோ மீட்டர் தூரம் பின்னோக்கி நடந்து பாக்ஸிங் செய்தவாறு சாதனை நிகழ்த்தினார். முன்னதாக இந்த நிகழ்ச்சியை மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
ரத்தினஜெய்ராஜா சாதனையை நோபல் உலக சாதனை ஆசிய (நோபல் வேர்ல்ட் ரெக்கார்ட்) புத்தகத்தில் நடுவர்கள் ரஞ்சித், பரணிதரன் ஆகியோர் பதிவு செய்தனர். சாதனை மாணவர் நடுவர்கள் முன்னிலையில் 8 ஆயிரத்து 130 முறை பாக்ஸிங் செய்து 1 மணி நேரம் 4 நிமிடத்தில் 5 கிலோமீட்டர் பின்னோக்கி நடந்து சாதனை படைத்தார். மாணவருக்கு சான்றிதழ்களை மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத் வழங்கினார்.
- விருதுநகர் மாவட்டத்தில் ஆண்களுக்கான நவீன குடும்ப நல கருத்தடை சிகிச்சை முகாம் நடக்கிறது.
- குழந்தை பிறப்பிற்கு மட்டுமே தடை, இல்லற இன்பத்திற்கு எவ்வித தடையும் இருக்காது.
விருதுநகர்
கலெக்டர் மேகநாத ரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
விருதுநகர் மாவட்டத்தில் ஆண்களுக்கான நவீன குடும்ப நல கருத்தடை சிகிச்சை முகாம் வருகிற 3-ந் தேதி நடக்கிறது. இதில் கலந்து கொண்டு நவீன குடும்ப நல கருத்தடை சிகிச்சை செய்யும் ஆண்களுக்கு ரூ.3 ஆயிரத்து 300 வழங்கப்படும்.
பெண்களுக்கு செய்யும் குடும்ப நல கருத்தடை அறுவை சிகிச்சையை விட ஆண்களுக்கான நவீன குடும்ப நல கருத்தடை சிகிச்சை பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டது.
இந்த சிகிச்சை மிக மிக எளிமையானது. மிகவும் பாதுகாப்பானது. பயப்பட தேவையில்லை. மயக்க மருந்து கொடுப்ப தில்லை. 5 நிமிடங்களில் செய்யப்படுகிறது. அறுவை சிகிச்சை கிடையாது. தையல் போடுவது கிடையாது. மருத்துவமனையில் தங்க வேண்டியது இல்லை, சிகிச்சை முடிந்தவுடன் வீடு திரும்பலாம். குழந்தை பிறப்பிற்கு மட்டுமே தடை, இல்லற இன்பத்திற்கு எவ்வித தடையும் இருக்காது. எப்போதும் போல உறவு கொள்ளலாம்.
அலுவலர்கள், பணியாளர்கள், பஞ்சாலை தொழிலாளர்கள், விவசாய வேலை செய்வோர், சுமை தூக்கும் தொழிலாளர்கள், வெடி மருந்து கம்பெனி மற்றும் பிரிண்டிங் பிரஸ் போன்ற கடினமான வேலை செய்வோர்கள் கூட செய்து கொள்ளலாம்.
கருத்தடை சிகிச்சைக்கு பின்னரும் முன்னர் செய்த அதே வேலையினை எவ்வித களைப்பும் இன்றி எப்போதும் போல இயல்பாக செய்ய முடியும். இதில் ஆண்மைக்குறைவு என்ற பேச்சுக்கே இடமில்லை.
குறிப்பாக ரத்த சோகை, இதய நோய் மற்றும் பிற மருத்துவ காரணங்களினால் கருத்தடை அறுவை சிகிச்சை செய்து கொள்ள முடியாத தாய்மார்களின் கணவன்மார்கள் தாமாக முன் வந்து கருத்தடை சிகிச்சை செய்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- விருதுநகர் மாவட்டத்தில் கிராமப்புற இளைஞர்களுக்கு திறன் பயிற்சி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
- இந்த திட்டத்தின் கீழ் தொழில் சார்ந்த நிறுவனங்களில் வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரப்படுகிறது.
விருதுநகர்
விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாத ரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மத்திய அரசின் ஊரக வளர்ச்சித்துறையின் கீழ் செயல்படுத்தப்படும் ஊரக வாழ்வாதார இயக்கம், மத்திய, மாநில அரசின் 60:40 என்ற நிதி விகிதாச்சார அடிப்படையில் 'தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம்" என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின் மூலம், கிராமப்புற பெண்கள், இளைஞர்கள் மற்றும் சுய உதவிக்குழு உறுப்பினர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இத்துடன், 'ஊரக இளைஞர்களுக்கு திறன் பயிற்சி வழங்குவதற்கான திட்டம்" செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த திட்டத்தின் கீழ், 18 முதல் 35 வயதிற்குட்பட்ட கிராமப்புற இளைஞர்களுக்கு தொழில் சார்ந்த நிறுவனங்களில் வேலைவாய்ப்பு ஏற்படுத்தி, நிலையான வருமானம் ஈட்டும் வகையில் பயிற்சி அளிக்கப்படும். சென்னை நீங்கலாக, தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின் கீழ் சுகாதார பராமரிப்பு, ஆயத்த ஆடை வடிவமைப்பு, ஆட்டோ மோட்டிவ், சில்லரை வணிகம், தளவாடங்கள், கட்டுமானத்துறை, அழகுக்கலை, தகவல் தொழில்நுட்பம், சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் போன்ற தொழில்களில் எளிதில் வேலைவாய்ப்பு பெற இயலும். இதில் 120-க்கு மேற்பட்ட தொழில் பிரிவுகளில் பயிற்சிகள் வழங்கப்பட்டு வேலைவாய்ப்பு ஏற்படுத்தப்படுகிறது.
மொத்த பயிற்சி ஒதுக்கீட்டில், சமூக ரீதியாக பின்தங்கியுள்ள பிரிவினரான பட்டிய லினத்தினருக்கு 62 சதவீதம், மலைவாழ் பழங்குடியினருக்கு 3 சதவீதம், சிறுபான்மை யினருக்கு 16 சதவீதம் என சிறப்பு ஒதுக்கீடு அளித்து பயிற்சி வழங்கப்படுகிறது.
குறைந்தது 3 முதல் 6 மாதங்கள் கொண்ட குறுகிய கால பயிற்சிகள் உணவு, தங்குமிட வசதி, சீருடை, பயிற்சி உபகரணங்கள், கணினி பயிற்சி மற்றும் பயிற்சிக்குப்பின் திறன் பயிற்சி குழுமம் மூலம் அளிக்கப்படும்.
பயிற்சி சான்றிதழ் ஆகிய வசதிகளுடன் எவ்வித கட்டணமும் இன்றி இலவசமாக பயிற்சி அளிக்கப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- ராஜபாளையத்தில் கலைதிருவிழா தொடக்க நிகழ்ச்சி நடந்தது.
- தனுஷ்குமார் எம்.பி., தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. ஆகியோர் போட்டியை தொடங்கி வைத்தனர்.
ராஜபாளையம்
ராஜபாளையம் தொகு தியில் பள்ளிக்கல்வி துறை சார்பில் கலைத்திருவிழா நடைபெற உள்ளது. இதன் தொடக்க விழா மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஞானகௌரி தலைமையில் நடந்தது. இதில் தனுஷ்எம்குமார் எம்.பி., தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. ஆகியோர் போட்டியை தொடங்கி வைத்து வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினர். அப்போது எம்.எல்.ஏ. பேசுகையில், வட்டார அளவிலுள்ள போட்டிகளில் வெற்றி பெற்று பின் மாவட்ட அளவில் வெற்றி பெற்று மாநில அளவில் வெற்றி பெறும் 200 மாணவ- மாணவிகளை வெளி நாட்டிற்கு சுற்றுலா அழைத்து செல்ல தமிழக முதல்வர் ஏற்பாடு செய்துள்ளார். இந்தியாவிலே கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருவது தமிழக முதல்வர் தான் என்றார்.
இந்த நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியர் நகர செயலாளர்கள் ராமமூர்த்தி, மணிகண்ட ராஜா, ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
- ராஜபாளையத்தில் போலீசார் அபராதம் விதிப்பதை கண்டித்து ஓட்டுநர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
- டாஸ்மார்க் கடையில் உள்ள பார்கள் 24 மணி நேரமும் செயல்படுகிறது. அதை கண்டு கொள்ளவில்லை என ஆர்ப்பாட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
ராஜபாளையம்
ராஜபாளையம் மற்றும் சுற்று வட்டார கிராம பகுதிகளான தளவாய்புரம், முகவூர், செட்டியார்பட்டி, தேவதானம் , சத்திரப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட ஓட்டுநர்கள் காவல்துறை அத்து மீறி அபராதம் விதிப்பதை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஜவகர் மைதானத்தில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தின்போது ராஜபாளையம் காவல்துறை தமிழகத்தில் எங்கும் இல்லாத அளவிற்கு 2 கிலோ மீட்டருக்கு ஒரு இடத்தில் நின்று ஆன்லைன் அபராத கட்டண வசூல் செய்கின்றனர் என குற்றம் சாட்டினர்.
ராஜபாளையத்தில் சாலை வசதிகள் சரி செய்யவில்லை. ஆனால் வசூலில் தீவிரம் காட்டும் காவல்துறை சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதேபோல் ராஜபாளையம் நகர் பகுதி முழுவதும் நூற்பாலைகள் அதிக அளவில் உள்ளது. இரவு நேரங்களில் டீக்கடைகள் திறந்தால் சட்டவிரோத செயல்கள் நடைபெறும் எனக்கூறி டீக்கடைகளை திறங்க எதிர்ப்பு தெரிவிக்கும் காவல்துறை நகர் முழுவதும் டாஸ்மார்க் கடையில் உள்ள பார்கள் 24 மணி நேரமும் செயல்படுகிறது. அதை கண்டு கொள்ளவில்லை என ஆர்ப்பாட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
மேலும் தொடர்ந்து இதுபோன்று செயல்களில் ஈடுபட்டால் ஓட்டுநர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவ கத்தில் வாகனங்களை ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் தெரிவித்தனர்.






