என் மலர்
நீங்கள் தேடியது "கிராமப்புற மாணவர்கள்"
- விருதுநகர் மாவட்டத்தில் கிராமப்புற இளைஞர்களுக்கு திறன் பயிற்சி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
- இந்த திட்டத்தின் கீழ் தொழில் சார்ந்த நிறுவனங்களில் வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரப்படுகிறது.
விருதுநகர்
விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாத ரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மத்திய அரசின் ஊரக வளர்ச்சித்துறையின் கீழ் செயல்படுத்தப்படும் ஊரக வாழ்வாதார இயக்கம், மத்திய, மாநில அரசின் 60:40 என்ற நிதி விகிதாச்சார அடிப்படையில் 'தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம்" என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின் மூலம், கிராமப்புற பெண்கள், இளைஞர்கள் மற்றும் சுய உதவிக்குழு உறுப்பினர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இத்துடன், 'ஊரக இளைஞர்களுக்கு திறன் பயிற்சி வழங்குவதற்கான திட்டம்" செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த திட்டத்தின் கீழ், 18 முதல் 35 வயதிற்குட்பட்ட கிராமப்புற இளைஞர்களுக்கு தொழில் சார்ந்த நிறுவனங்களில் வேலைவாய்ப்பு ஏற்படுத்தி, நிலையான வருமானம் ஈட்டும் வகையில் பயிற்சி அளிக்கப்படும். சென்னை நீங்கலாக, தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின் கீழ் சுகாதார பராமரிப்பு, ஆயத்த ஆடை வடிவமைப்பு, ஆட்டோ மோட்டிவ், சில்லரை வணிகம், தளவாடங்கள், கட்டுமானத்துறை, அழகுக்கலை, தகவல் தொழில்நுட்பம், சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் போன்ற தொழில்களில் எளிதில் வேலைவாய்ப்பு பெற இயலும். இதில் 120-க்கு மேற்பட்ட தொழில் பிரிவுகளில் பயிற்சிகள் வழங்கப்பட்டு வேலைவாய்ப்பு ஏற்படுத்தப்படுகிறது.
மொத்த பயிற்சி ஒதுக்கீட்டில், சமூக ரீதியாக பின்தங்கியுள்ள பிரிவினரான பட்டிய லினத்தினருக்கு 62 சதவீதம், மலைவாழ் பழங்குடியினருக்கு 3 சதவீதம், சிறுபான்மை யினருக்கு 16 சதவீதம் என சிறப்பு ஒதுக்கீடு அளித்து பயிற்சி வழங்கப்படுகிறது.
குறைந்தது 3 முதல் 6 மாதங்கள் கொண்ட குறுகிய கால பயிற்சிகள் உணவு, தங்குமிட வசதி, சீருடை, பயிற்சி உபகரணங்கள், கணினி பயிற்சி மற்றும் பயிற்சிக்குப்பின் திறன் பயிற்சி குழுமம் மூலம் அளிக்கப்படும்.
பயிற்சி சான்றிதழ் ஆகிய வசதிகளுடன் எவ்வித கட்டணமும் இன்றி இலவசமாக பயிற்சி அளிக்கப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- கிராமப்புற மாணவர்கள் வி.ஐ.டி.யில் சேர வேண்டும் என்பதற்காக இந்த திட்டம் தொடங்கப்பட்டது.
- தமிழ்நாட்டில் மட்டுமல்லாது ஆந்திரா, மத்திய பிரதேசத்திலும் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
வேலூர்:
வேலூர் வி.ஐ.டி. பல்கலைக் கழகத்தில் ஸ்டார்ஸ் திட்டத்தின் கீழ் உயர்கல்வி பெறும் மாணவர்களுக்கான அறிமுக விழா பல்கலைகழக வளாகத்தில் உள்ள சென்னா ரெட்டி அரங்கில் நடந்தது.
நிகழ்ச்சியில், வி.ஐ.டி பல்கலைகழக வேந்தர் ஜி.விசுவநாதன் தலைமை தாங்கி, புதிதாக தேர்வு செய்யப்பட்ட ஸ்டார்ஸ் திட்ட மாணவர்களுக்கு அனுமதி ஆணைகளை வழங்கினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
வி.ஐ.டி.யில் ஸ்டார்ஸ் திட்டம் 2008-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த திட்டம் வளர்ந்து கொண்டே இருக்கின்றது. இதன் வளர்ச்சியால் கிராமங்கள் வளர்ந்து கொண்டே இருக்கிறது.
கிராமப்புற மாணவர்கள் வி.ஐ.டி.யில் சேர வேண்டும் என்பதற்காக இந்த திட்டம் தொடங்கப்பட்டது. தற்போது தமிழ்நாட்டில் மட்டுமல்லாது ஆந்திரா, மத்திய பிரதேசத்திலும் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்ததிட்டத்தின் கீழ் இதுவரை 1,046 மாணவ, மாணவிகள் பயன் பெற்றுள்ளனர். இது மட்டுமின்றி அனைவருக்கும் உயர்கல்வி திட்டத்தின் மூலம் வேலூர் மாவட்டத்தில் 10 ஆண்டுகளில் 8,600 மாணவர் களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது.
கல்விக்கு நிதி அதிக அளவில் ஒதுக்க வேண்டும். தற்போது 1 லட்சம் கோடி கல்விக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் வெளிநாடுகளில் அதிகமாக ஒதுக்கப்படுகிறது. ராணுவ தடவாளங்கள் வாங்குவதில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. அதேபோல, அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தப் படியாக ராணுவத்துக்கான நிதி ஒதுக்கீட்டில் இந்தியா 3-வது இடத்தில் உள்ளது.
அதுவே கல்விக்கான நிதி ஒதுக்கீட்டில் இந்தியா 155-வது இடத்தில் உள்ளது. இந்த நிலை மாறவேண்டும். மத்திய, மாநில அரசுகள் கல்விக்கான நிதியை அதிக அளவில் ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
சந்திரயான்-3 திட்ட இயக்குநர் வீரமுத்துவேல் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசியதாவது:-
வேலூர் வி.ஐ.டி. வேந்தர் ஜி.விசுவநாதன் அனைவருக்கும் ஒரு வாழும் உதாரணமாக இருக்கிறார். சந்திரயான்-3 அனுபவத்தை உங்களிடம் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன். சந்திரயான்-2 தோல்வியில் முடிந்தது. அதன் பிறகு சந்திரயான்-3 உருவாக்கும்போது என்னை, திட்ட இயக்குநராக நியமித்தபோது பல சவாலான விஷயங்களை சந்திக்க வேண்டியிருந்தது. சந்திரயான்-2 தோல்விக்கான காரணத்தை முதலில் கண்டுபிடித்தோம். அந்த குறைகள் சந்திரயான் 3-ல் இல்லாமல் பார்த்துக்கொண்டோம்.
அதேபோலதான் வாழ்க்கையில் தினந்தோறும் ஏற்ற இறக்கங்கள், மேடு, பள்ளங்கள் உள்ளது. நாம் நம்முடைய வேலையை தெளிவாக செய்ய வேண்டும். வகுப்பறையில் ஆசிரியர்கள் பாடம் நடத்தும்போது மாணவர்களாகிய நீங்கள் பாடங்களை முதலில் புரிந்து கொண்டு படிக்க வேண்டும். மாணவர்கள் ஆராய்ச்சி கூடத்தை பயன்படுத்த வேண்டும்.
சந்திரயான்-3 திட்டத்தில் கடைசி 19 நிமிடம் ஒரு சவாலாக இருந்தது. லேண்டரை நிலவில் இறக்குவதற்கு முன்பு அதிக பரிசோதனைகளை செய்தோம். அப்போது, அதிக சவால்கள் எங்களுக்கு காத்திருந்தது. சந்திரயானை தென் துருவத்தில் இறக்குவதில் நிறைய சவால்கள் இருந்தது. கடின உழைப்புக்கு ஈடு இணை எதுவும் இல்லை. தினசரி உழைக்க வேண்டும். ஒழுக்கமாக இருக்க வேண்டும். 4 ஆண்டு கல்வியில் கவனம் செலுத்தினால் நீங்கள் சாதனையாளர்களாக வருவீர்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதையடுத்து, மாற்றம் அறக்கட்டளை நிறுவனர் சுஜித் குமார் கவுரவ விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். விழாவில் துணைத் தலைவர்கள் சங்கர் விசுவநாதன், ஜி.வி. செல்வம், துணை வேந்தர் காஞ்சனா பாஸ்கரன், இணை துணை வேந்தர் பார்த்தசாரதி மல்லிக், பதிவாளர் ஜெயபாரதி, வேலைவாய்ப்பு இயக்குநர் சாமுவேல் ராஜ்குமார், உடற் கல்வி இயக்குநர் தியாகசந்தன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பேசினர்.
முன்னதாக ஸ்டார்ஸ் திட்ட ஒருங்கிணைப்பாளர் மீனாட்சி வரவேற்றார். முடிவில், திட்ட இணை ஒருங்கிணைப்பாளர் கோவர்தன் நன்றி கூறினார்.
- நீச்சல் மற்றும் கராத்தே பயிற்சிகளும் மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது.
- மாணவர்களும் நல்ல ஒத்துழைப்பு கொடுத்து பயிற்சியில் கலந்து கொள்வது உற்சாகத்தை அளிக்கிறது என்றார்.
வருசநாடு:
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள மயிலாடும்பாறை கிராமத்தில் உடற்பயிற்சி ஆசிரியர் தனது சொந்த முயற்சியில் கிராமப்புற மாணவர்களுக்கு ஜிம்னாஸ்டிக் பயிற்சி அளித்து வருகிறார்.
பொதுவாக 5 முதல் 10 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு உடலில் வளைவு சக்தி அதிகமாக இருக்கும். இந்த வயதில் உடற்பயிற்சி எடுத்து பின்னர் ஜிம்னாஸ்டிக் பயிற்சியை அளித்தால் அவர்கள் வளர வளர இதனை எளிதாக செய்ய முடியும்.
வெளிநாடுகளில் இது போன்ற பயிற்சியை சிறுவயதில் இருந்தே கற்றுக் கொடுக்கின்றனர். நகர்புறங்களில் உள்ள பள்ளிகளில் இதற்கு கட்டணம் வசூலித்து கற்றுக் கொடுக்கின்றனர்.
ஆனால் மயிலாடும்பாறையில் கிராமப்புற மாணவர்களை நல்வழிப்படுத்தும் நோக்கத்திலும் இளமையிலேயே அவர்கள் தங்கள் உடல் வலிமையை பாதுகாக்க வலியுறுத்தியும் இது போன்ற பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
முதலில் குறைந்த அளவு மாணவர்களே வந்த நிலையில் தற்போது 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு ஜிம்னாஸ்டிக் பயிற்சி பெற்று வருகின்றனர். காலை மற்றும் மாலை நேரங்களில் இந்த பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.
இதனுடன் சேர்த்து நீச்சல் மற்றும் கராத்தே பயிற்சிகளும் மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது. பெற்றோர்களும் தங்கள் குழந்தைகளை இந்த பயிற்சிக்கு ஆர்வமுடன் அனுப்பி வைத்து வருகின்றனர்.
இது குறித்து உடற்பயிற்சி ஆசிரியர் தங்கமுத்துப்பாண்டி தெரிவிக்கையில், நகர்ப்புறங்களில் உள்ள குழந்தைகளை விட கிராமப்புறங்களில் உள்ள குழந்தைகளுக்கு இயற்கையிலேயே நல்ல உடல் திறன், நோய் எதிர்ப்பு சக்தி ஆகியவை கிடைக்கிறது. இதனை பயன்படுத்தி அவர்களுக்கு சிறு வயதிலேயே ஜிம்னாஸ்டிக் உள்ளிட்ட உடல் திறனை வலுப்படுத்தும் பயிற்சி அளிப்பதால் அவர்களை சாதனையாளராக மாற்ற முடியும். தேனி மாவட்டத்தில் இருந்து பல மாணவர்களை இந்த பயிற்சி மூலம் உருவாக்கி பல மாவட்டங்களில் நடந்த போட்டிகளில் பங்கேற்க வைத்துள்ளோம்.
இதே போல் மாநில அளவிலான போட்டியிலும், தேசிய அளவிலான போட்டியிலும் மாணவர்களை பங்கேற்க வைப்பதை இலக்காக கொண்டு இந்த பயிற்சி நடத்தி வருகிறோம். மாணவர்களும் நல்ல ஒத்துழைப்பு கொடுத்து பயிற்சியில் கலந்து கொள்வது உற்சாகத்தை அளிக்கிறது என்றார்.
எதிர்பார்ப்பு ஏதுமின்றி கிராமப்புற மாணவர்களை நல்வழிப்படுத்தும் நோக்கில் இது போன்ற பயிற்சி அளித்து வரும் உடற்கல்வி ஆசிரிருக்கு பெற்றோர்கள் மற்றும் தன்னார்வலர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.






