என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கிராமப்புற மாணவர்களுக்கு இலவச ஜிம்னாஸ்டிக் பயிற்சி
    X

    கிராமப்புற மாணவர்களுக்கு இலவச ஜிம்னாஸ்டிக் பயிற்சி

    • நீச்சல் மற்றும் கராத்தே பயிற்சிகளும் மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது.
    • மாணவர்களும் நல்ல ஒத்துழைப்பு கொடுத்து பயிற்சியில் கலந்து கொள்வது உற்சாகத்தை அளிக்கிறது என்றார்.

    வருசநாடு:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள மயிலாடும்பாறை கிராமத்தில் உடற்பயிற்சி ஆசிரியர் தனது சொந்த முயற்சியில் கிராமப்புற மாணவர்களுக்கு ஜிம்னாஸ்டிக் பயிற்சி அளித்து வருகிறார்.

    பொதுவாக 5 முதல் 10 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு உடலில் வளைவு சக்தி அதிகமாக இருக்கும். இந்த வயதில் உடற்பயிற்சி எடுத்து பின்னர் ஜிம்னாஸ்டிக் பயிற்சியை அளித்தால் அவர்கள் வளர வளர இதனை எளிதாக செய்ய முடியும்.

    வெளிநாடுகளில் இது போன்ற பயிற்சியை சிறுவயதில் இருந்தே கற்றுக் கொடுக்கின்றனர். நகர்புறங்களில் உள்ள பள்ளிகளில் இதற்கு கட்டணம் வசூலித்து கற்றுக் கொடுக்கின்றனர்.

    ஆனால் மயிலாடும்பாறையில் கிராமப்புற மாணவர்களை நல்வழிப்படுத்தும் நோக்கத்திலும் இளமையிலேயே அவர்கள் தங்கள் உடல் வலிமையை பாதுகாக்க வலியுறுத்தியும் இது போன்ற பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

    முதலில் குறைந்த அளவு மாணவர்களே வந்த நிலையில் தற்போது 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு ஜிம்னாஸ்டிக் பயிற்சி பெற்று வருகின்றனர். காலை மற்றும் மாலை நேரங்களில் இந்த பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.

    இதனுடன் சேர்த்து நீச்சல் மற்றும் கராத்தே பயிற்சிகளும் மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது. பெற்றோர்களும் தங்கள் குழந்தைகளை இந்த பயிற்சிக்கு ஆர்வமுடன் அனுப்பி வைத்து வருகின்றனர்.

    இது குறித்து உடற்பயிற்சி ஆசிரியர் தங்கமுத்துப்பாண்டி தெரிவிக்கையில், நகர்ப்புறங்களில் உள்ள குழந்தைகளை விட கிராமப்புறங்களில் உள்ள குழந்தைகளுக்கு இயற்கையிலேயே நல்ல உடல் திறன், நோய் எதிர்ப்பு சக்தி ஆகியவை கிடைக்கிறது. இதனை பயன்படுத்தி அவர்களுக்கு சிறு வயதிலேயே ஜிம்னாஸ்டிக் உள்ளிட்ட உடல் திறனை வலுப்படுத்தும் பயிற்சி அளிப்பதால் அவர்களை சாதனையாளராக மாற்ற முடியும். தேனி மாவட்டத்தில் இருந்து பல மாணவர்களை இந்த பயிற்சி மூலம் உருவாக்கி பல மாவட்டங்களில் நடந்த போட்டிகளில் பங்கேற்க வைத்துள்ளோம்.

    இதே போல் மாநில அளவிலான போட்டியிலும், தேசிய அளவிலான போட்டியிலும் மாணவர்களை பங்கேற்க வைப்பதை இலக்காக கொண்டு இந்த பயிற்சி நடத்தி வருகிறோம். மாணவர்களும் நல்ல ஒத்துழைப்பு கொடுத்து பயிற்சியில் கலந்து கொள்வது உற்சாகத்தை அளிக்கிறது என்றார்.

    எதிர்பார்ப்பு ஏதுமின்றி கிராமப்புற மாணவர்களை நல்வழிப்படுத்தும் நோக்கில் இது போன்ற பயிற்சி அளித்து வரும் உடற்கல்வி ஆசிரிருக்கு பெற்றோர்கள் மற்றும் தன்னார்வலர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

    Next Story
    ×