என் மலர்
நீங்கள் தேடியது "கோவில் இடிக்க எதிர்ப்பு"
- கோவில் நடைபாதையில் ஆக்கிரமித்து இருப்பதாகவும், அதனை இடிக்க வேண்டும் என்று அதே பகுதியை சேர்ந்த ஒருவர் மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
- கோவிலை இடிக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
அருப்புக்கோட்டை:
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை மணி நகரம் உச்சி செட்டியார் தெரு பகுதியில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் சந்தன மாரியம்மன் கோவில் இருக்கிறது.
30 ஆண்டுகளுக்கும் மேலாக அந்த கோவில் இருப்பதாக கூறப்படுகிறது. தினமும் வழக்கமான பூஜைகள் நடத்தப்பட்டு வரும் இந்த கோவிலில் அனைத்து சமுதாய மக்களும் வழிபாடு நடத்தி வருகின்றனர். சமீபத்தில் இக்கோவிலின் கும்பாபிஷேகம் நடந்து முடிந்துள்ளது.
அந்த கோவில் நடைபாதையில் ஆக்கிரமித்து இருப்பதாகவும், அதனை இடிக்க வேண்டும் என்று அதே பகுதியை சேர்ந்த ஒருவர் மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து கோவிலை இடிக்க நடவடிக்கை எடுக்கக்கூடாது என்று மணிநகரம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மாவட்ட கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் மனு கொடுத்தனர்.
மேலும் வழக்கு தொடர்ந்து தனி நபரை கண்டித்து வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி போராட்டத்திலும் ஈடுபட்டார்கள். இந்நிலையில் அந்த கோவிலை இடிக்க ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இதையடுத்து கோர்ட்டு உத்தரவை செயல்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.
அதன்படி கோவிலை இடிக்க கோர்ட்டு உத்தரவிட்டு இருப்பதாகவும், அதனை செயல்படுத்த ஒத்துழைப்பு தர வேண்டும் என்று மணி நகரம் உச்சி செட்டியார் தெரு மக்க ளிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் கோவிலை இடிக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்த நிலையில் நடைபாதையில் இருப்பதாக கூறப்படும் கோவிலை இடிக்க அருப்புக்கோட்டை நகராட்சி ஆணையாளர் அசோக்குமார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் இன்று வந்தனர். இதையறிந்த அந்த பகுதி ஆண்கள், பெண்கள், மாணவ-மாணவிகள் என அனைவரும் கோவில் உள்ள பகுதியில் திரண்டனர்.
அவர்கள் கோவிலை இடிக்கக்கூடாது என்று வலியுறுத்தி கோவிலை சுற்றி அமர்ந்து கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பொதுமக்கள் போராட்டத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.
வருவாய் துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் கோவிலை இடிக்கக்கூடாது என கூறி அங்கேயே அமர்ந்திருந்தனர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களில் சிலர் கோவிலை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து தங்களது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க போவதாக கூறினார்கள்.
மேலும் ஒரு வாலிபர் அங்கிருந்த வீட்டு மாடியில் ஏறி உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிப்பதாக மிரட்டல் விடுத்தார். அவர்களை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் தடுத்து நிறுத்தி மீட்டனர். இதையடுத்து அங்கு பதட்டம் அதிகரித்தது.
உதவி போலீஸ் சூப்பிரண்டு கருண் காரட், சிவகாசி துணை போலீஸ் சூப்பிரண்டு சபரிநாதன் ஆகியோர் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் , சப்-இன்ஸ்பெக்டர்கள் என நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர்.
போலீஸ் அதிகாரிகளும், வருவாய் மற்றும் நகராட்சி அதிகாரிகளும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தியும் பொதுமக்கள் போராட்டத்தை கைவிட வில்லை. பல ஆண்டுகளாக வழிபட்டு வரும் கோவிலை இடிக்கக்கூடாது என்று வலியுறுத்தினார்கள். இதனால் வெகுநேரம் அந்த பகுதி பரபரப்பாக காணப்பட்டது.






