என் மலர்
விருதுநகர்
- சுவரொட்டி கிழிப்பு, மோட்டார் சைக்கிள் எரிக்கப்பட்டதை கண்டித்து பொதுமக்கள் மறியல் செய்தனர்.
- சுமார் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
அருப்புக்கோட்டை
அருப்புக்கோட்டை அருகே தொப்பலாக்கரை கிராமம் உள்ளது. வருகிற 3-ந்தேதி நடைபெற உள்ள வீரபாண்டிய கட்டபொம்மனின் ஜெயந்தி விழாவையொட்டி அந்த கிராமத்தில் பல பகுதிகளில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன.
மர்ம நபர்கள் அந்த பகுதியில் ஒட்டி இருந்த சுவரொட்டியை கிழித்தும், அதே பகுதியைச் சேர்ந்த தர்மலிங்கம் என்பவரின் மோட்டார் சைக்கிளை எரித்தும் தப்பி சென்றுள்ளனர்.
இந்த சம்பவத்தால் ஆத்திரமடைந்த அந்த கிராம மக்கள் மர்ம நபர்களை கைது செய்யக்கோரி பரளச்சி விலக்கு என்ற இடத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதன் காரணமாக இந்த பகுதி வழியாக செல்ல வேண்டிய பஸ்கள், வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.
சாலை மறியல் போராட்டத்தால் அந்த பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டனர். அந்த பகுதி முழுவதும் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டது. தகவல் அறிந்த விருதுநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மனோகர் சம்பவ இடத்திற்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்.
மர்ம நபர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்று அவர் உறுதி அளித்ததை தொடர்ந்து மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இந்த போராட்டம் காரணமாக அந்த பகுதியில் சுமார் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
- ஆஸ்பத்திரி பெண் ஊழியர் உள்பட 4 பேர் மாயமானார்கள்.
- விருதுநகர் மேற்கு போலீசார் விசாரித்து வருகின்றனர்.
விருதுநகர்
திருச்சுழி அருகே உள்ள மறவர் பெருங்குடியை சேர்ந்தவர் அருண்குமார். இவரது சகோதரி ராதா (வயது 21). இவர் மதுரையில் விடுதியில் தங்கி அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரியில் பணியாற்றி வந்தார்.
சம்பவத்தன்று பணிக்கு சென்ற ராதா அதன்பின் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து அருண்குமார் விசாரித்தபோது ராதா, அவரது தோழியான கம்பிக்குடியை சேர்ந்த வைத்தீஸ்வரி வீட்டில் இருந்ததாக தெரிந்தது. இதையடுத்து அருண்குமார் அங்கு சென்று விசாரித்தார். ஆனால் ராதா குறித்த எந்த தகவலும் கிடைக்கவில்லை.
இதுகுறித்து எம்.ரெட்டியபட்டி போலீசில் புகார் செய்யப்பட்டது. அதில், தனது சகோதரி மாயம் தொடர்பாக வைத்தீஸ்வரி மீது சந்தேகம் இருப்பதாக அருண்குமார் புகார் கூறியுள்ளார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராஜபாளையம் அருகே உள்ள சேத்தூர் அருந்ததியர் தெருவை சேர்ந்தவர் கருப்பசாமி (வயது 27), கட்டிட தொழிலாளி. சம்பவத்தன்று வேலைக்கு சென்ற இவர் பின்னர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இதுகுறித்து அவரது மனைவி கவுரி கொடுத்த புகாரின் பேரில் சேத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
திருத்தங்கல் அருகே உள்ள வடமலாபுரம் அண்ணா காலனியை சேர்ந்தவர் சதீஷ்குமார் (27). தனியார் வங்கியில் பணம் வசூல் செய்யும் பிரிவில் பணியாற்றி வந்தார். சம்பவத்தன்று வேலைக்கு சென்ற சதீஷ்குமார் பின்னர் வீடு திரும்பாமல் மாயமானார். அவரது மனைவி சகுந்தலா தேவி கொடுத்த புகாரின் பேரில் திருத்தங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
மதுரை மாவட்டம் கள்ளிக்குடியை சேர்ந்தவர் சிங்காரவேலு. இவரது மனைவி முனியம்மாள் (31). இவர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் முனியம்மாள் சில நாட்களுக்கு முன்பு விருதுநகரில் உள்ள உறவினர் வீட்டில் சென்று தங்கினார். சம்பவத்தன்று அங்கிருந்த முனியம்மாள் திடீரென மாயமானார். பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. விருதுநகர் மேற்கு போலீசார் விசாரித்து வருகின்றனர்.
- கட்டபொம்மன் சிலைக்கு அ.தி.மு.க. சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படுகிறது.
- கயத்தாறில் கட்டபொம்மன் நினைவிடத்திலும் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படும்.
விருதுநகர்
விருதுநகர் மேற்கு மாவட்ட அதிமுக செயலாளர் கே.டி.ராஜேந்திர பாலாஜி தலைமையில் மாநில எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் கலாநிதி, விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளர் கே.கே.கண்ணன் மற்றும் ராஜகம் பள சமுதாய நல சங்கத்தினர் அதிமுக இடைக்கால பொதுச்செ யலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்தனர்.
பின்னர் அவர்கள் ஜனவரி 3-ந் தேதி சுதந்திர போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மனின் பிறந்த தினத்தன்று மதுரையில் உள்ள அவரது சிலைக்கும், சயத்தாறில் அவர் நினைவிடத்தில் உள்ள உருவச்சிலைக்கும் அதிமுக சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்த வேண்டும் என மனு அளித்தனர்.
இதனை ஏற்றுக்கொண்ட எடப்பாடி பழனிசாமி கூறுகையில், மதுரையில் முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார், கே.டி.ராஜேந்திர பாலாஜி, கடம்பூர் ராஜூ மற்றும் ராஜன் செல்லப்பா ஆகியோர் தலைமையில் கட்டபொம்மன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படும்.
கயத்தாறில் கட்டபொம்மன் நினைவிடத்திலும் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படும் என்று தெரிவித்தார்.
- ராகுல்காந்தியின் நோக்கம் நாட்டு மக்களின் நலன் தான் என்று மாணிக்கம் தாகூர் எம்.பி. கூறினார்.
- சிவஞானபுரம் பஞ்சாயத்து தலைவர் கிருஷ்ணமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
விருதுநகர்
விருதுநகரில் மாணிக்கம் தாகூர் எம்.பி. நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற நாடாளுமன்ற குழு பரிந்துரை குறித்து அனைத்து கட்சிகளும் கலந்து பேசி முடிவு எடுக்க வேண்டிய ஒன்று. ராகுல் காந்தி நடைப்பயணத்தை கொச்சைப்படுத்தும் வகையில் பா.ஜ.க.தலைவர் அண்ணாமலை பேசி உள்ளார்.
108 நாட்கள் 2,800 கிலோ மீட்டர் நடைபயணத்தை மேற்கொண்டுள்ள ராகுல்காந்தியின் நோக்கம் நாட்டு மக்களின் நலன் தான். ஆனால் இதுபற்றி அண்ணாமலை பேசியுள்ளது வேதனை அளிக்கும் வகையில் உள்ளது. ராகுல்காந்தியுடன் கமல்ஹாசனும் சித்தாந்த அடிப்படையில் ஒரே பார்வை கொண்டவர்கள்.
இதனால் தேர்தல் கூட்டணி ஏற்படுமா? என்று இப்போது சொல்ல முடியாது. ராகுல் காந்திக்கு நாட்டு மக்களின் நலன் தான் முக்கியம். மற்ற தலைவர்களின் பலத்தையும், பலவீனத்தையும் பற்றி கவலை இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக சின்னமூப்பன் பட்டி கிராமத்தில் தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்ட பஸ் நிறுத்தத்தை திறந்து வைத்தார். தொடர்ந்து வடமலைக்குறிச்சியில் காங்கிரஸ் கொடியை ஏற்றி வைத்தார்.
இந்நிகழ்ச்சிகளில் ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன் எம்.எல்.ஏ., யூனியன் தலைவர் சுமதிராஜசேகர், மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள் ஸ்ரீராஜா சொக்கர், ரங்கசாமி, முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவர் மீனாட்சி சுந்தரம், சிவஞானபுரம் பஞ்சாயத்து தலைவர் கிருஷ்ணமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- காளீஸ்வரி கல்லூரியில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
- உதவி பேராசிரியர் கிருபா சேகர் நன்றி கூறினார்.
சிவகாசி
சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் கணினி பயன்பாட்டியல் துறையின் திருத்தங்கள் தமிழா மென்பொருள் நிறுவனம் இணைந்து புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளும் நிகழ்ச்சி நடந்தது.
கல்லூரி முதல்வர் பாலமுருகன் தலைமை தாங்கினார். துணை முதல்வர் முத்துலெட்சுமி வாழ்த்துரை வழங்கினார்.
உதவி பேராசிரியர் முத்து சீனிவாசன் வரவேற்றார். மென்பொருள் நிறுவனத்தில் தலைமை நிர்வாக அதிகாரி தமிழா கார்த்திக் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.
உதவி பேராசிரியர் கிருபா சேகர் நன்றி கூறினார்.
- விருதுநகரில் மகளிர் குழுக்களுக்கு ரூ.83.79 கோடி கடனுதவிகளை ஏழை மக்களின் பொருளாதார முன்னேற்றத்திற்கான திட்டங்கள் திறம்பட செயல்படுத்தப்படுகிறது.
- அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் பேசினார்.
விருதுநகர்
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திருச்சி மாவட்டத்தில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்குக் கடனுதவிகள் வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
அதனை தொடர்ந்து, விருதுநகர் மருத்துவ கல்லூரி கலையரங்கத்தில் மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் கலெக்டர் மேகநாதரெட்டி தலைமையில், மகளிர் குழுக்களுக்கு கடனுதவி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
விருதுநகர் எம்.பி. மாணிக்கம் தாகூர், எம்.எல்.ஏ.க்கள் சீனிவாசன், அசோகன் முன்னிலை வகித்தனர். இதில் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கலந்து கொண்டு விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த 1591 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.83.79 கோடி மதிப்பிலான கடனுதவி களை வழங்கினார்.
பின்னர் அவர் பேசியதாவது:-
கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதார மேம்பாடு மற்றும் தன்னம்பிக்கை மூலம் மகளிரின் நிலையை மேம்படுத்தும் நோக்கில் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் தொடங்கப்பட்டது.
இந்தியாவிலேயே முதன்முறையாக 1989ம் ஆண்டு தர்மபுரி மாவட்டத்தில் மகளிர் சுய உதவிக் குழு இயக்கத்தை முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி தொடங்கி வைத்தார். தற்போது தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் சுய உதவிக் குழுக்கள் உருவாக்கப்பட்டு, ஊரக மற்றும் நகர்ப்புரங்களில் உள்ள ஏழை மக்களின் பொருளாதார முன்னேற்றத்திற்கான திட்டங்கள் திறம்பட செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த திட்டம் வெற்றி கரமாக செயல்படுத்தப்பட்டு தற்போது சமூக பொரு ளாதார மேம்பாட்டை அடைவதற்கு மகளிரைக் கொண்டு சுய உதவிக் குழுக்கள் மற்றும் கூட்ட மைப்புகளை உருவாக்கி முறையான பயிற்சிகள் வழங்கி வருமானம் ஈட்டும் தொழில் தொடங்க வங்கிக் கடன் இணைப்புகள் ஏற்படுத்தி சுய உதவிக் குழு இயக்கத்தை வலுப்படுத்தி வருகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
இதில் திட்ட இயக்குநர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) திலகவதி, திட்ட இயக்குநர்(தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம்) தெய்வேந்திரன், விருதுநகர் நகர்மன்றத்தலைவர் மாதவன், அருப்புக்கோட்டை நகர்மன்ற தலைவர் சுந்தரலட்சுமி சிவப்பிரகாசம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- விருதுநகரில் மைனர் பெண்ணை திருமணம் செய்து கர்ப்பமாக்கிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
- கர்ப்பிணியான சிறுமி சிகிச்சைக்காக ஸ்ரீவில்லி புத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றுள்ளார்.
விருதுநகர்
வத்திராயிருப்பு அருகே உள்ள சேது நாராயணபுரத்தை சேர்ந்த 17 வயது சிறுமி 6-ம் வகுப்பு படித்துவிட்டு வீட்டில் பெற்றோருக்கு உதவியாக இருந்து வந்தார். அவரது வீட்டுக்கு உறவினர் சுந்தர் என்பவர் அடிக்கடி வந்து சென்றார். அப்போது சிறுமிக்கும், சுந்தருக்கும் காதல் ஏற்பட்டதாக தெரி கிறது.இதற்கு இரு குடும்பத்தினரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
வீட்டை விட்டு சிறுமியுடன் வெளியேறிய சுந்தர் அங்குள்ள ஒரு கோவிலில் திருமணம் செய்து கொண்டார். பின்னர் சிறுமியுடன் சுந்தர் வத்திராயிருப்பில் தனி குடித்தனம் நடத்தி வந்தார். இதன் காரணமாக அந்த சிறுமி கர்ப்பமானார்.
கர்ப்பிணியான சிறுமி சிகிச்சைக்காக ஸ்ரீவில்லி புத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றுள்ளார். அங்கு அவரது வயது குறித்து அறிந்த டாக்டர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது தொடர்பாக ஸ்ரீவில்லி புத்தூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தி மைனர் பெண்ணை திருமணம் செய்து கர்ப்பிணியாக்கிய சுந்தர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
- விருதுநகர் அருகே விஷம் குடித்து பெண் உள்பட 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
- இந்த சம்பவம் குறித்து வச்சக்காரப்பட்டி, ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
விருதுநகர்
விருதுநகர் அருகே உள்ள காமராஜபுரத்தை சேர்ந்தவர் கவுண்டம்மாள் (வயது55). தனியாக வசித்து வருகிறார். இவருக்கு சில ஆண்டுகளாக உடல் நலம் பாதிப்பு இருந்து வந்தது. இந்த நிலையில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அக்கம் பக்கத்தினர் மீட்டு விருதுநகர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். வச்சக்காரப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள கம்பத்துபட்டியை சேர்ந்தவர் முனியாண்டி (54). ஆவின் பாலகத்தில் வேலை பார்க்கிறார். டாஸ்மாக் கடை அருகே விஷம் குடித்து மயங்கி கிடந்துள்ளார். இவரை அங்கிருந்தவர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இது குறித்து அவரது மகன் வினோத்குமார் அளித்த புகாரின் பேரில் ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
- நகைக்காக பெண் கொலை செய்யப்பட்டார்.
- இந்த கொலையில் சம்பந்தப்பட்ட வாலிபருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.
ஸ்ரீவில்லிபுத்தூர்
விருதுநகர் அருகே அல்லம்பட்டியை சேர்ந்தவர் சரவணபாண்டியன் (43). காவலாளியாக பணிபுரிந்து வந்த இவர் கடந்த 2016-ம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த குருவம்மாள்(54) என்பவரை நகைக்காக கொலை செய்தார். சூலக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து சரவணபாண்டியனை கைது செய்தனர்.
வழக்கு விசாரணை திருவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட விரைவு மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி பகவதியம்மாள், குற்றவாளி சரவணபாண்டியனுக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.14 ஆயிரம் விதித்து உத்தரவிட்டார்.
- விருதுநகரில் 2023-24-ம் ஆண்டிற்கான கடன் திட்ட அறிக்கையை கலெக்டர் வெளியிட்டார்.
- விவசாயத்தில் நீண்ட கால கடன் வழங்குவதற்கான சாத்தியக்கூறுகளை இத்திட்டம் விளக்குகிறது.
விருதுநகர்
விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் 2023-24-ம் ஆண்டிற்கான வளம் சார்ந்த கடன் திட்ட அறிக்கையை கலெக்டர் மேகநாதரெட்டி வெளியிட்டார். பின்னர் அவர் பேசியதாவது:-
தமிழகத்தின் வேளாண் மற்றும் ஊரக வளர்ச்சி பணியில் முக்கிய பங்கு வகிக்கும் நபார்டு வங்கி, விருதுநகர் மாவட்டத்தில் கிடைக்கப்பெற்ற வளம் சார்ந்த தகவல்களை சேகரித்து அதன் மூலம் ரூ 9672.35 கோடி அளவுக்கு கடனாற்றல் உள்ளது என மதிப்பீடு செய்துள்ளது. விவசாயத்தில் நீண்ட கால கடன் வழங்குவதற்கான சாத்தியக்கூறுகளை இத்திட்டம் விளக்குகிறது.
இக்கடன் திட்ட அறிக்கை, பல அரசு துறைகள், வங்கிகள், மற்றும் அனைத்து துறை சார்ந்த அதிகாரிகளின் ஆலோசனை மற்றும் புள்ளி விவர அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ளது.
வங்கிகள் மதிப்பிடப்பட்ட கடன் திறன்களை உணர பின்பற்ற வேண்டிய யுக்திகள் இந்த திட்ட ஆவணத்தில் விவரிக்கப்பட்டுள்ளன. மேலும், வங்கிகள் தங்கள் இலக்குகளை அடைய திட்ட ஆவணத்தை பயன்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ரவிக்குமார், நபார்டு வங்கி மாவட்ட வளர்ச்சி மேலாளர் ராஜா சுரேஷ்வரன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் பாண்டி செல்வன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் கணித மேதை ராமானுஜம் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
- முதலாமாண்டு முதுகலை கணித மாணவி மேகாஸ்ரீ ‘‘கணிதத்தில் ராமனுஜத்தின் பங்களிப்பு’’ என்ற தலைப்பிலும் பேசினர்.
சிவகாசி
சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் ''காளீஸ் கணித மன்றம்'' சார்பில் கணித மேதை சீனிவாச ராமானுஜத்தின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.
முதல்வர் பாலமுருகன் தலைமை தாங்கினார். துணை முதல்வர் முத்துலட்சுமி வாழ்த்துரை வழங்கினார். மூன்றாமாண்டு இளங்கலை கணித மாணவி காந்திமதி ''ராமானுஜத்தின் வாழ்க்கை வரலாறு'' என்ற தலைப்பிலும், முதலாமாண்டு முதுகலை கணித மாணவி மேகாஸ்ரீ ''கணிதத்தில் ராமனுஜத்தின் பங்களிப்பு'' என்ற தலைப்பிலும் பேசினர்.
மாணவர்களுக்கு மாயசதுரம், குறுக்கெழுத்துப் புதிர், வடிவங்கள் எண்ணுதல், கம்பி வடிவ புதிர், மூளை கணக்கு போன்ற போட்டிகள் நடத்தப்பட்டன. துறைத்தலைவர் லலிதாம்பிகை, வரவேற்றார். உதவிப்பேராசிரியர் காளீஸ்வரி நன்றி கூறினார்.
- விபத்து குறித்து தகவல் அறிந்த சாத்தூர் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
- விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விபத்தை ஏற்படுத்திய வாகனத்தை தேடி வருகின்றனர்.
சாத்தூர்:
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள அம்மன்கோவில்பட்டியை சேர்ந்தவர் கருப்பசாமி (வயது 49). இவர் அதே பகுதியில் ஓட்டல் நடத்தி வருகிறார். இவர் வருடந்தோறும் திருச்செந்தூருக்கு பாதயாத்திரை செல்வது வழக்கம்.
அதன்படி இந்த ஆண்டு கருப்பசாமி திருச்செந்தூர் செல்ல மாலை அணிந்து விரதம் இருந்து வந்தார். நேற்று இரவு இவரது தலைமையில் அந்தப்பகுதியைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்டோர் திருச்செந்தூருக்கு பாதயாத்திரையாக புறப்பட்டனர். இன்று அதிகாலை பாதயாத்திரைக்கு சாத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தது.
புல்வாய்பட்டி விலக்கு அருகே சென்றபோது அடையாளம் தெரியாத வாகனம் நடந்து சென்று கொண்டிருந்த கருப்பசாமி மற்றும் சிவகாசி மீனாட்சி காலனியை சேர்ந்த சங்கரன் (45) ஆகியோர் மீது மோதிவிட்டு சென்றது. இதில் தூக்கி வீசப்பட்ட 2 பேரும் படுகாயமடைந்தனர்.
ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய கருப்பசாமி, சங்கரன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.
விபத்து குறித்து தகவல் அறிந்த சாத்தூர் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விபத்தை ஏற்படுத்திய வாகனத்தை தேடி வருகின்றனர். பாதயாத்திரை சென்ற 2 பேர் விபத்தில் பலியானது சிவகாசி பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.






