என் மலர்
விருதுநகர்
- தீக்குளித்து 2 பெண்கள் தற்கொலை செய்தனர்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
விருதுநகர்
திருச்சுழி செம்பொன் நெருஞ்சி கிராமத்தை சேர்ந்தவர் பஞ்சவர்ணம் (வயது35). இவர் கந்தசாமி என்பவரை திருமணம் செய்து கொண்டு தூத்துக் குடியில் தங்கி அங்குள்ள உப்பளத்தில் வேலை பார்த்து வந்தார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு ஊர் திருவிழாவுக்காக பஞ்சவர்ணம் தனது கிராமத்துக்கு வந்திருந்தார். சில மாதங்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த பஞ்சவர்ணம் வாழ்க்கையில் விரக்தி யடைந்து தீக்குளித்தார். உறவினர்கள் அவரை மீட்டு அருப்புக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பஞ்சவர்ணம் இறந்தார்.
விருதுநகர் தண்டிய னேந்தல் கிழக்கு தெருவை சேர்ந்தவர் அரியநாச்சி (வயது27). இவர் 2-வதாக அழகர் என்பவரை திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். கடந்த சில மாதங்களாக அழகருக்கும், அரியநாச்சிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதனால் விரக்தியடைந்த அரியநாச்சி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். மல்லாங்கிணறு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர் அருகே உள்ள குப்பாம்பட்டியை சேர்ந்தவர் ஆனந்தன்(49), தொழிலாளி. இவரது மனைவி பொன்னுத்தாயி சில மாதங்களுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த சுந்தரமகாலிங்கம் என்பவருடன் சென்று விட்டார். இதனால் விரக்தியடைந்த ஆனந்தன் விஷம் குடித்தார். மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டிருந்த ஆனந்தன் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து சூலக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- நீட் தேர்வு தோல்வி பயத்தால் மாணவி தவறான முடிவு எடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- சம்பவம் தொடர்பாக கிருஷ்ணன் கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்:
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள கரைவளைந்தான் பட்டியை சேர்ந்தவர் கருப்பசாமி. இவரது மகள் காவ்யா தர்ஷனா(வயது19). இவர் கடந்த 2021-ம் ஆண்டு பிளஸ்-2 தேர்வு எழுதி 476 மதிப்பெண்கள் பெற்றார். காவ்யா தர்ஷனாவுக்கு படித்து டாக்டர் ஆக வேண்டும் என்பது லட்சியம்.
இதன் காரணமாக பிளஸ்-2 முடித்தபின் நீட் தேர்வுக்கு துரிதமாக தயாரானார். இதற்காக பயிற்சி வகுப்பிற்கும் சென்று வந்தார். 2 முறை நீட் தேர்வு எழுதிய காவ்யா தர்ஷனாவால் வெற்றி பெற முடியவில்லை. ஆனாலும் இந்த ஆண்டு நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று மருத்துவ படிப்பில் சேர வேண்டும் என்ற முனைப்புடன் காவ்யா தர்ஷனா மதுரையில் உள்ள தனியார் பயிற்சி மையத்தில் சேர்ந்து படித்தார்.
இந்த நிலையில் கடந்த வாரம் நாடு முழுவதும் நீட் தேர்வு நடந்தது. காவ்யா தர்ஷனா நீட் தேர்வு எழுதினார். ஆனால் இந்த முறையும் அவரால் தேர்ச்சி பெற முடியாது என கருதினார். இதனால் கடந்த சில நாட்களாக மனவேதனையில் இருந்த காவ்யா தர்ஷனா சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அரளி விதையை அரைத்து குடித்து மயங்கினார்.
உயிருக்கு ஆபத்தான நிலையில் அவரை மீட்ட உறவினர்கள் ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக கிருஷ்ணன் கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நீட் தேர்வு தோல்வி பயத்தால் மாணவி தவறான முடிவு எடுத்த சம்பவம் அந்தப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- சிப்பிப்பாறை பெட்ரோல் பங்க்கில் இன்று அதிகாலை டிரைவர் விஜய் லாரியை நிறுத்தி டீசல் நிரப்பினார்.
- வெம்பக்கோட்டை, ஏழாயிரம் பண்ணை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
சிவகாசி:
சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலை சேர்ந்தவர் விஜய் (வயது 45), லாரி டிரைவர். இவர் விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டையில் கட்டிட பணிக்காக பொருட்களை ஏற்றிக்கொண்டு லாரியில் புறப்பட்டார்.
சிவகாசி அருகே உள்ள சிப்பிப்பாறை பெட்ரோல் பங்க்கில் இன்று அதிகாலை டிரைவர் விஜய் லாரியை நிறுத்தி டீசல் நிரப்பினார். பின்னர் லாரி எடுத்து சிறிது தூரம் சென்றபோது திடீரென எஞ்சின் பகுதியில் இருந்து கரும்புகை வந்து தீ பிடித்தது.
இதை பார்த்த டிரைவர் விஜய் மற்றும் லாரியில் இருந்த தொழிலாளர்கள் 4 பேர் குதித்து வெளியேறினர். இந்த நிலையில் கண்ணிமைக்கும் நேரத்தில் தீ மளமளவென பரவி லாரி முழுவதும் எரிய தொடங்கியது. அந்த பகுதி மக்கள் உதவியுடன் தீயை அணைக்க முயற்சித்தனர். ஆனால் பலனில்லை.
இதையடுத்து வெம்பக்கோட்டை, ஏழாயிரம் பண்ணை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மாவட்ட தீயணைப்பு நிலைய அலுவலர் செந்தூர்பாண்டி மற்றும் வீரர்கள் சம்பவ இடம் வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீ முற்றிலும் அணைக்கப்பட்டது. ஆனாலும் லாரியில் 70 சதவீத பகுதிகள் தீயில் எரிந்து சேதமடைந்தது.
தீ விபத்து நடந்த இடத்தை மாவட்ட தீயணைப்பு அலுவலர் விவேகானந்தன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த சம்பவம் தொடர்பாக வெம்பக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி தீப்பிடித்து எரிந்ததற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
லாரியில் இருந்து புகை வந்ததும் டிரைவர் உள்ளிட்ட 5 பேரும் குதித்து வெளியேறியதால் காயமின்றி உயிர் தப்பினர்.
- 4 மாதங்கள் முதல் 6 மாதங்கள் வரையிலான குட்டி ஆடுகளை ஓரிடத்தில் கோட்டைச்சாமி அடைத்து வைத்து பராமரித்து வந்தார்.
- 43 குட்டி ஆடுகள் மர்மமான முறையில் இறந்து கிடந்தன.
சிவகாசி:
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே மாரநேரி நதிக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் கோட்டைசாமி. இவர் 100-க்கும் அதிகமான ஆடுகளை வளர்த்து வந்தார்.
இந்தநிலையில் 4 மாதங்கள் முதல் 6 மாதங்கள் வரையிலான குட்டி ஆடுகளை ஓரிடத்தில் கோட்டைச்சாமி அடைத்து வைத்து பராமரித்து வந்தார். இந்தநிலையில் அங்கிருந்த 43 குட்டி ஆடுகள் மர்மமான முறையில் இறந்து கிடந்தன.
இது குறித்து கோட்டைச்சாமி கால்நடை துறைக்கு தகவல் தெரிவித்தார். அதிகாரிகளும், கால்டை டாக்டர்களும் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினார்கள். இறந்து கிடந்த ஆட்டுக்குட்டிகளை ஆய்வு செய்தனர். அப்போது, வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில் போதிய இட வசதி, காற்றோட்டம் இல்லாததால் ஆடுகளுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு இறந்திருக்கலாம் என கூறப்படுகிறது. இருந்தாலும் சம்பவத்துக்கான காரணத்தை அறிய தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. ஆடுகள் இறந்து கிடந்த சம்பவம் பரபரப்பையும், பரிதாபத்தையும் ஏற்படுத்தியது.
- விருதுநகர் அருகே பெண்ணிடம் நகை பறிக்கப்பட்டது.
- ஸ்ரீவில்லிபுத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மடவார் வளாகத்தைச் சேர்ந்தவர் சீதாலட்சுமி (38). இவர் தனது மகளுடன் ஜவுளி கடைக்கு சென்று விட்டு ராஜபாளையம் மெயின் ரோட்டில் நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது அவர்களின் பின்னால் வந்த ஒரு மர்ம நபர் மகள் கழுத்தில் அணிந்திருந்த ஒரு பவுன் தங்கச் சங்கிலியை பறிக்க முயன்றார்.
அப்போது அவர் சங்கிலியைப் பிடித்துக் கொண்டதால் பாதி சங்கிலியை மட்டும் எடுத்துக்கொண்டு அந்த மர்ம நபர் தப்பி ஓடிவிட்டார். இது குறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீஸ் நிலையத்தில் சீதாலட்சுமி புகார் செய்தார் அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மனைவியை அரிவாளால் வெட்டியவர் கைது செய்யப்பட்டார்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து பூமாரியப்பனை கைது செய்தனர்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் ராஜாஜி மேற்கு தெருவை சேர்ந்தவர் விஜயலட்சுமி (வயது 40). இவரது கணவர் மாயாண்டி (41). இவருக்கும் சிவகாசி சாட்சியாபுரத்தை சேர்ந்த பாண்டியம்மாள் என்பவருக்கும் தொடர்பு இருந்ததன் காரணமாக கடந்த 8 வருடங்களுக்கு முன்பு மாயாண்டி மனைவியை பிரிந்து சென்று விட்டதாக கூறப்படுகிறது.
இருப்பினும் அவ்வப்போது மது போதையில் விஜயலட்சுமியின் வீட்டிற்கு வந்து மாயாண்டி தகராறு செய்து வந்துள்ளார். இந்த நிலையில் சம்பவத்தன்று நள்ளிரவில் மது போதையில் வந்த மாயாண்டி விஜயலட்சுமி உடன் தகராறு செய்தார். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதில் ஆத்திரமடைந்த மாயாண்டி தான் வைத்திருந்த அரிவாளால் மனைவியை வெட்ட முயன்றார். அப்போது தடுப்பதற்காக ஓடி வந்த அவர்களது மகன் கருப்பசாமிக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு திரண்டனர். அதை பார்த்த மாயாண்டி மனைவிக்கும் மகனுக்கும் கொலை மிரட்டல் விடுத்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றார்.
இது குறித்து சாத்தூர் டவுன் போலீசில் விஜயலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயாண்டியை கைது செய்தனர்.
மற்றொரு சம்பவம்
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே உள்ள செவல்பட்டி நடுத்தெருவை சேர்ந்தவர் அமுதா (40). இவரது கணவர் பூமாரியப்பன். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். பூமாரியப்பன் வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றி வந்தார். மேலும் அடிக்கடி மனைவியிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்து வந்துள்ளார். இந்த நிலையில் சம்பவத்தன்று மனைவியிடம் பூமாரியப்பன் பணம் கேட்டுள்ளார். ஆனால் அவர் பணம் தர மறுத்து விட்டார்.
இப்போது பூ மாரியப்பன் தான் வைத்திருந்த கத்தியால் அமுதாவை தாக்க முயற்சித்தார். இப்போது அருகில் வசிப்பவர்கள் அங்கு வந்து சத்தம் போட்டுள்ளனர். இதைத்தொடர்ந்து மனைவிக்கு கொலைமிரட்டல் விடுத்து விட்டு பூமாரியப்பன் தப்பிச் சென்றார்.
இதுகுறித்து வெம்பக்கோட்டை போலீஸ் நிலையத்தில் அமுதா புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பூமாரியப்பனை கைது செய்தனர்.
- ஜவுளி பூங்காவில் திட்டப்பணிகளை ஒருங்கிணைக்க அதிகாரியை நியமிக்க வேண்டும்.
- மாணிக்கம்தாகூர் எம்.பி. பேசினார்.
விருதுநகர்
விருதுநகர் அருகே வடமலைகுறிச்சி கிராமத்தில் 100 நாள் திட்ட பயனாளிகளிடம் மாணிக்கம் தாகூர் எம்.பி. குறைகளை கேட்டறிந்தார். பின்னர் அவர் கூறியதாவது:-
கர்நாடக சட்டமன்ற தேர்தலை பொறுத்தவரை காங்கிரஸ் கட்சிக்கு மிகப்பெரிய வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. காங்கிரஸ் கட்சி அறிவித்த பல்வேறு திட்டங்கள் மாநில மக்களுக்கு ஏற்புடையதாக இருந்துள்ளது. எனவே பணபலம், மத அரசியல் மற்றும் தேர்தல் கமிஷனின் நடவடிக்கை ஆகியவற்றை மீறி கர்நாடகத்தில் காங்கிரஸ் மிகப்பெரிய வெற்றியை பெறும்.
தமிழக அமைச்சரவை மாற்றத்தில் விருதுநகர் மாவட்டத்தின் அமைச்சர் தங்கம் தென்னரசு நிதி பொறுப்பை ஏற்றுள்ளது மாவட்டத்திற்கு பெருமை யளிக்கிறது. மேலும் டெல்டா மாவட்டத்திற்கு கூடுதல் பிரதிநிதித்துவம் அளிக்கும் வகையில் டி.ஆர்.பி. ராஜாவுக்கு தொழில் துறை வழங்கப்பட்டுள்ளது வரவேற்புக்குரியது.
பழனிவேல் தியாக ராஜன் இலாகா மாற்றம் அவரது ஆடியோ சர்ச்சை அடிப்படையில் என்று கூறுவது ஏற்புடையதல்ல. இதற்கு ஏற்கனவே முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு விட்டது.
விருதுநகர் மாவட்டத்தில் ரூ. 2 ஆயிரத்து 400 கோடி மதிப்பீட்டில் தொழில்பூங்கா தொடங்கப்படும் என்று மத்திய தொழில் மந்திரி பியூஷ்கோயல் அறிவித்துள்ளது குறித்து மத்திய இணை மந்திரி முருகனிடம் விவாதித்துள்ளேன். தற்போது மத்திய மந்திரி பியூஷ் கோயலை சந்தித்து இந்த திட்டத்தின் செயல்பாடு மற்றும் விரைவில் தொடங்கு வதற்கான நடவடிக்கை குறித்து விவாதிக்க உள்ளேன்.
விருதுநகர் மாவட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ள ஜவுளி பூங்காவில் திட்டப் பணிகளை ஒருங்கிணைக்க அதிகாரியை நியமிக்க வேண்டும். ஆனைக்குட்டம் புனரமைப்புக்கு ரூ.49 கோடி நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். சிவகாசி சாட்சி யாபுரம், திருத்தங்கல் ெரயில்வே மேம்பாலங்கள் தொடர்பான வழக்குகள் முடிக்கப்பட்டுள்ளன. விரைவில் பணிகள் தொடங்கும்.
விருதுநகர் மாவட்டத்தில் கோடைகால குடிநீர் பிரச்சினையை சமாளிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது காங்கிரஸ் நிர்வாகிகள் மீனாட்சி சுந்தரம், சிவகுரு நாதன், வக்கீல் சீனிவாசன், சிவஞானபுரம் பஞ்சாயத்து தலைவர் கிருஷ்ணமூர்த்தி, தி.மு.க. ஒன்றிய செயலாளர் ஆவுடையம்மாள் ஆகியோர் உடனிருந்தனர்.
- நரிக்குடி பகுதியில் தொடர் திருட்டில் ஈடுபட்ட வாலிபர் சிக்கினார்.
- இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.
திருச்சுழி
நரிக்குடி அருகே உள்ள உவர்குளம் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ராஜாக்கிளி என்பவரது வீட்டில் 20 பவுன் நகை, ரூ. 21 ஆயிரம் கொள்ளை போனது. மேலும் நரிக்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர் கொள்ளை சம்பவங்கள் நடந்து வந்தன. இதுதொடர்பாக போலீசார் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வந்தனர்.
இந்த நிலையில் முடுக்கன்குளம் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டபோது அந்த வழியாக வந்த வாலிபரை பிடித்து விசாரித்த போது முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவரிடம் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில் அவர் முடுக்கன்குளத்தை சேர்ந்த திருமேனி மகன் பிரவீண்குமார் (18) எனவும், இவர் உவர்க்குளம் வீட்டில் கொள்ளையடித்தது மற்றும் தொடர் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.
- தொல்லியல் கண்காட்சி 13-ந் தேதி தொடங்குகிறது.
- கண்காட்சியை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தொடங்கி வைக்க உள்ளார்.
சிவகாசி
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை வைப்பாற்றின் வடக்கு கரையோரத்தில் விஜய கரிசல்குளத்தில் கடந்த ஆண்டு முதல் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் நடந்தன.
இதில் தங்க அணிகலன், திமிலுடன் கூடிய காளை உருவம், சுடு களிமண்ணால் ஆன அழகிய வேலைப்பாடு களுடன் கூடிய அழகிய குடுவை, யானைத் தந்தத்தால் செய்யப்பட்ட அழகிய வேலைப்பாடு களுடன் கூடிய கழுத்தில் அணியும் பதக்கம், பெண் சிற்பங்கள், சங்கு வளை யல்கள், கண்ணாடி மணிகள், யானை தந்தத்தால் செய்யப்பட்ட அணிகலன், சுடுமண்ணாலான தொங்கட்டான், பகடைக்காய், செப்பு நாணயம் உள்ளிட்ட 3 ஆயிரத்து 254 பழங்கால பொருட்கள் கண்டு எடுக்கப்பட்டன.
இதனை தொடர்ந்து 2-ம் கட்ட அகழாய்வு பணிகள் கடந்த ஏப்ரல் 6-ந் தேதி முதல் நடைபெற்று வருகிறது. முதல் கட்ட அகழாய்வில் கண்டெடுக்க ப்பட்ட தொன்மையான பொருட்களை காட்சிப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து தற்போது கோடை விடுமுறையில் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் தொல் பொ ருட்களை பார்வையிட்டு தொன்மையான மனிதர்க ளின் வரலாற்றை அறியும் வகையில் தொல்லியல் கண்காட்சி நடத்த ஏற்பாடு செய்யப்ப்பட்டுள்ளது.
அகழ்வாராய்ச்சி தளத்தில் காட்சிப்படுத்து வதற்கான அரங்குகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த கண்காட்சி வருகிற 13-ந்தேதி (சனிக்கிழமை) முதல் தொடங்க உள்ளதாக தொல்லியல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
கண்காட்சியை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தொடங்கி வைக்க உள்ளார்.
- புகையிலை பொருட்களை காரில் கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
- கடத்தலுக்கு பயன்படுத்திய கார் பறிமுதல் செய்யப்பட்டது.
ஸ்ரீவில்லிபுத்தூர்
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கிருஷ்ணன்கோவில் பகுதியை சேர்ந்தவர் தவமணி(29). இவர் தனது கடையில் தடைசெய்யப் பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை விற்பனை செய்தார்.
அதேபோல் சுந்தர பாண்டியம் பகுதியை சேர்ந்தவர் கருப்பையா(43), இவர் தனது கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்தார்.இவர்கள் மீது கிருஷ்ணன்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர்.
வத்திராயிபுருப்பு அருகே கோட்டையூர் பகுதியில் போலீசார் வாகன சோதனை நடத்தினர். அப்போது கோட்டையூர் பஸ் நிறுத்தம் அருகே சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த காரை சோதனை செய்தனர். அதில் தடை செய்யப் பட்ட குட்கா பொருட்களை கடத்தி வந்தது தெரியவந்தது.
இது தொடர்பாக கோட்டையூரை சேர்ந்த வீரகுமார்(33), ராஜ பாளையம் அடுத்த சொக்க நாதன்புத்தூரை சேர்ந்த சந்தான நல்ல ஜெகன்(33) ஆகிய பேரையும் வத்திரா யிருப்பு போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 221 பாக்கெட் குட்கா மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய கார் பறிமுதல் செய்யப்பட்டது.
- சுதாரித்துக்கொண்ட போலீசார் தனி அறையில் கைதிகளை அடைத்து காப்பற்றினர்.
- விக்னேசுவரன் கொடுத்த புகாரின்பேரில் விருதுநகர் கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
விருதுநகர்:
திண்டுக்கல் மாவட்டம் வேடபட்டியை சேர்ந்த சின்னதம்பி, பூண்டு வியாபாரியான இவர் அதே பகுதியை சேர்ந்த குணா என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் சேர்க்கப்பட்டிருந்தார். இந்நிலையில் குணாவின் ஆதரவாளர்கள் சம்பவத்தன்று சின்னதம்பியை வெட்டி கொலை செய்தனர். இது தொடர்பாக திண்டுக்கல் மாவட்ட போலீசார் 2 பெண்கள் உள்பட 6 பேரை கைது செய்தனர். இதில் யுவராஜ், விக்னேசுவரன் ஆகிய 2 பேர் விருதுநகர் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில் அவர்களுக்கு உடல்நல பாதிப்பு இருந்ததால் விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் மார்ச் மாதம் 22-ந் தேதி சேர்க்கப்பட்டனர். அவர்களுக்கு ஆயுதப்படை போலீசார் அழகுராஜ், சிலம்பரசன் ஆகியோர் பாதுகாப்புக்காக பணியமர்த்தப்பட்டனர்.
சம்பவத்தன்று இரவு ஆஸ்பத்திரியில் புகுந்த 8 பேர் கொண்ட கும்பல் போலீஸ்காரர்கள் மீது மிளகாய் பொடி தூவி கைதிகள் யுவராஜ், விக்னேசுவரனை வெட்டி கொலை செய்ய முயன்றது. அப்போது சுதாரித்துக்கொண்ட போலீசார் தனி அறையில் கைதிகளை அடைத்து காப்பற்றினர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக விக்னேசுவரன் கொடுத்த புகாரின்பேரில் விருதுநகர் கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் விசாரணை நடத்தியதில் திண்டுக்கல் வேடபட்டியை சேர்ந்த சின்னதம்பியின் ஆதரவாளர்கள் கைதிகளை கொல்ல முயற்சித்தது தெரியவந்தது.
இதையடுத்து இந்த சம்பவத்தில் தொடர்புடைய வேடபட்டியை சேர்ந்த ஆனந்த(35), ராம சந்திரன்(36), சிலம்பரசன்(37) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் சிலரை தேடி வருகின்றனர்.
- சாலைகளில் தேங்கிய தண்ணீரால் பொதுமக்கள்-வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர்.
- சாலைகளில் பள்ளம் தோண்டுவது பெரும்பாலான இடங்களில் நடந்து வருகிறது.
ராஜபாளையம்
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் நேற்று மாலை கருமேகங்கள் திரண்டன. 5 மணிக்கு இடி மின்னலுடன் கனமழை பெய்தது. ஒரு மணி நேரம் பெய்த இந்த மழை காரணமாக சங்கரன் கோவில் முக்கு, காந்தி கலைமன்றம், சத்திரப்பட்டி ரோடு, பழைய பஸ் நிலையம், பஞ்சு மார்க்கெட் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழைநீர் சாலைகளில் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது.
மாலை நேரத்தில் பெய்த மழையால் கல்லூரி மற்றும் வேலை முடிந்து வீட்டுக்கு சென்றவர்கள் கடும் அவதியடைந்தனர். நேற்று பெய்த ஒரு மணி நேர பலத்த மழையால் ராஜபாளையம்-சத்திரப்பட்டி சாலையில் மழைநீர் குளம்போல் தேங்கியது.
இங்கு கடந்த 2018-ம் ஆண்டு முதல் ரெயில்வே மேம்பாலம் கட்டும் பணி நடந்து வருகிறது. ஆமை வேகத்தில் நடக்கும் இந்த பணிகள் தற்போது வரை முடியவில்லை. இதன் காரணமாக ராஜபாளையம்-சத்திரப்பட்டி சாலைகள் குண்டும், குழியுமாக காட்சியளிக்கின்றன. நேற்று பெய்த கனமழையால் இந்தப்பகுதியில் சாலைகளில் குளம்போல் தண்ணீர் தேங்கியது. இதனால் அந்த வழியாக சென்ற பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அப்பகுதியை கடந்துசெல்ல முடியாமல் கடும் சிரமம் அடைந்தனர்.
இதேபோல் சத்திரப்பட்டி, ஆலங்குளம், வெம்பக்கோட்டை ஆகிய பகுதிகளுக்கு செல்லும் கணபதியாபுரம் ரெயில்வே தரைபாலத்திலும், மலையடிப்பட்டி சாலையிலும் தண்ணீர் முழங்கால் அளவுக்கு தேங்கியது. இதனால் அந்த வழியே சென்ற கனரக வாகனங்கள் மிகுந்த சிரமத்துடன் கடந்து சென்றன.
ராஜபாளையம் நகரில் கடந்த சில ஆண்டுகளாக வளர்ச்சி திட்டப்பணிகள் என்ற பெயரில் சாலைகளில் பள்ளம் தோண்டுவது பெரும்பாலான இடங்களில் நடந்து வருகிறது. இதனால் நகரில் பெரும்பாலான சாலைகள் குண்டும், குழியுமாக காட்சியளிக்கின்றன.
மழை நேரத்தில் இந்த பள்ளங்களில் தண்ணீர் தேங்கிவிடுவதால் பாதசாரிகளும், வாகன ஓட்டிகளும் கடும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர்.






