என் மலர்tooltip icon

    விருதுநகர்

    • ராஜபாளையத்தில் நீரோடைகள் தூர்வாரப்பட்டது.
    • பூங்கா ஒன்றில் நீர் தேங்குவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

    ராஜபாளையம்

    ராஜபாளையம் நகராட்சி 42-வது வார்டில் ஆர்.ஆர். நகர் மற்றும் ஆண்டாள்புரம் பகுதிகளில் நீரோடை நீண்டகாலாமாக சுத்தம் செய்யாமல் கிடப்பில் போடப்பட்டு இருந்தன. இதனால் நீரோடைகள் சேறும் சகதியுமாய் புதர்மண்டி கிடந்தது. இது குறித்து அப்பகுதி மக்கள் மேற்படி நீரோடைகளை தூர்வாரி சுத்தம் செய்து தரக் கோரி நகர்மன்ற தலைவி பவித்ரா ஷியாமிடம் கோரிக்கை விடுத்தனர்.

    இதனையடுத்து நகர்மன்ற தலைவி பவித்ராஷியாம் நகர்மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி நீரோடையை தூர்வாரி சுத்தம் செய்ய உரிய நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொண்டார். நவீன கனரக ராட்சத எந்திரம் மூலம் சுத்தம் செய்யும் பணிகள் முழுமையாக முடிக்கப்பட்டது. நீரோடையின் தற்போதைய நிலையை நகர்மன்ற தலைவி பவித்ரா ஷியாம் நகர்மன்ற உறுப்பினர் மற்றும் நிர்வாகிகளுடன் நேரில் பார்வையிட்டார்.

    நீண்ட கால கோரிக்கையை நிறைவேற்றி கொடுத்த அவரை அப்பகுதி மக்கள் பாராட்டி மகிழ்ச்சி தெரிவித்தனர். மேலும் அதே பகுதியில் உள்ள பூங்கா ஒன்றில் நீர் தேங்குவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தனர். விரைந்து நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதி அளித்தார்.

    • வளர்ச்சி திட்டப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று கலெக்டர் அறிவுறுத்தினார்.
    • பேரூராட்சி தலைவர், உறுப்பினர்கள், அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு பகுதிகளில் நடைபெற்றுவரும் வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் ஜெயசீலன் நேரில் ஆய்வு செய்தார்.

    அயன்கரிசல்குளத்தில் ரூ.35 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுவரும் மயான சாலை, அசரப்பட்டியில் ரூ.1.99 லட்சம் மதிப்பில் நடக்கும் நூலக கட்டிட பராமரிப்பு பணி, ரூ.2.15 லட்சம் மதிப்பில் சுகாதார வளாகம் கட்டும் பணி, ரூ.9.578 லட்சம் மதிப்பில் நடக்கும் பட்டத்தரசியம்மன் ஊரணி தூர்வாரும் பணி, தடுப்புச்சுவர், படித்துறை கட்டும் பணிகளையும் கலெக்டர் ஜெயசீலன் ஆய்வு மேற்கொண்டார்.

    தொடர்ந்து இலந்தை குளம், ஆயர்தர்மம், மூவரை வென்றான் உள்ளிட்ட பகுதி களில் அரசின் சார்பில் பல லட்சம் ரூபாய் மதிப்பில் நடக்கும் வளர்ச்சி திட்டப் பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.

    அப்போது அவர் திட்டப் பணிகளை தரமாகவும், விரைவாக முடித்து பொது மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அதி காரிகளுக்கு உத்தரவிட்டார்.

    இந்த ஆய்வின் போது, திட்ட இயக்குநர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) தண்டபாணி, செயற்பொறி யாளர் இந்துமதி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராமராஜ், சத்தியசங்கர், உதவி பொறியாளர்கள் வள்ளிமையில், ஜெயா, ஒன்றிய பணி மேற்பார்வை யாளர்கள் உட்பட அரசு அலுவலர்கள் பலர் உடன் இருந்தனர்.

    முன்னதாக விருதுநகர் மாவட்டம் எஸ்.கொடிக்குளம் பேரூராட்சி அலுவலகத்தில் அரசின் திட்டப்பணிகள் குறித்து ஆலோசனை கூட்டம் கலெக்டர் ஜெயசீலன் தலைமையில் நடைபெற்றது. இதில் பேரூராட்சி தலைவர், உறுப்பினர்கள், அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    • தி.மு.க. அரசின் சாதனை விளக்க தெருமுனை கூட்டம் நடந்தது.
    • தொண்டர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    திருச்சுழி

    திருச்சுழி அருகே நரிக்குடி ஒன்றியம் இருஞ்சிறை கிராமத்தில் தி.மு.க. சார்பில் அரசின் சாதனை விளக்க தெருமுனைக்கூட்டம் நடை பெற்றது. விருதுநகர் வடக்கு மாவட்ட தி.மு.க. இளைஞரணி அமைப்பாளர் கிருஷ்ண குமார் தலைமை வகித்தார்.

    நரிக்குடி வடக்கு ஒன்றிய செயலாளர் கண்ணன் முன்னிலை வகித்தார். வடக்கு ஒன்றிய இளை ஞரணி துணை அமைப்பா ளர்கள் சிதம்பர பாரதி,சேகர் மற்றும் ஜெகன் ஆகியோர் நிகழ்ச்சியினை ஒருங்கி ணைக்க நரிக்குடி வடக்கு ஒன்றிய இளை ஞரணி அமைப்பாளர் கிருஷ்ண மூர்த்தி வரவேற்றார்.

    விருதுநகர் வடக்கு மாவட்ட செயலா ளரும்,தமிழக நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சருமான தங்கம் தென்ன ரசுவின் அறிவுறுத்தலின் பேரில் தி.மு.க. தலைமை கழக பேச்சாளர் நெல்லை முத்தையா அரசின் ஈராண்டு சாதனைகள் குறித்து சிறப்புரை நிகழ்த்தினார். இந்த ஏற்பாடுகளை இருஞ்சிறை தி.மு.க. கிளை செயலாளர் கர்ணன் வீரபாண்டி மற்றும் கூட்டுறவு சங்க செயலாளர் சண்முகம் ஆகியோர் தலைமையிலான நிர்வாகிகள் திறம்பட செய்திருந்தனர்.

    இந்த கூட்டத்தில் முன்னாள் சேர்மன் சந்திரன், மாவட்ட கவுன்சிலர் கமலிபாரதி, முன்னாள் கவுன்சிலர் மகேந்திரன், பார்வதிநாதன், சிக்கந்தர், கண்ணன், பிச்சைமணி தங்கப் பாண்டியன், வீரசோழன் மாரிமுத்து, முன்னாள் ஊராட்சி மன்றத்தலைவர் ஜெயச்சந்திரன் மற்றும் பல்வேறு பிரிவு அணிகளின் நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கழுத்து உள்ளிட்ட இடங்களில் வெட்டுக்காயம் அடைந்த இளம்பெண் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
    • மனைவியை கொலை செய்த மதிமன்னன் போலீசில் சரணடைந்தார். அவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    ராஜபாளையம்:

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள மேலஆவாரம்பட்டியை சேர்ந்தவர் மதிமன்னன் (வயது28). விவசாய கூலி தொழிலாளியான இவர் முதல் மனைவியை பிரிந்து 2-வதாக பாண்டிச்செல்வி (22) என்பவரை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இவர் அதே பகுதியில் உள்ள நூற்பாலையில் வேலை பார்த்து வந்தார்.

    கடந்த சில மாதங்களாக கணவன்-மனைவி இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டது. இன்று காலை சமையல் செய்வது தொடர்பாக மதிமன்னவனுக்கும், பாண்டிச்செல்விக்கும் பிரச்சினை ஏற்பட்டது.

    2 பேருக்கும் கடும் வாக்குவாதம் முற்றவே பாண்டிச்செல்வி அருகில் உள்ள தனது பாட்டி வீட்டிற்கு சென்று கதவை சாத்தி தாழிட்டுக் கொண்டார். அங்கு வந்த மதிமன்னன் மனைவியை வீட்டிற்கு வருமாறு அழைத்துள்ளார். ஆனால் அவர் மறுத்ததாக கூறப்படுகிறது.

    இதனால் ஆத்திரமடைந்த மதிமன்னன் வீட்டின் பின்புற காம்பவுண்டு சுவரை ஏறி குதித்து உள்ளே சென்றார். பின்னர் அங்கிருந்த மனைவி பாண்டிச்செல்வியை சரமாரியாக கத்தியால் குத்தினார்.

    இதில் கழுத்து உள்ளிட்ட இடங்களில் வெட்டுக்காயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே இறந்தார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த மதிமன்னன் அங்கிருந்து தப்பினார்.

    கொலை குறித்து தகவலறிந்த ராஜபாளையம் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ்கண்ணன், சப்-இன்ஸ்பெக்டர் சந்திரமோகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பாண்டிச் செல்வி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதற்கிடையில் மனைவியை கொலை செய்த மதிமன்னன் போலீசில் சரணடைந்தார். அவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    • பெண்ணிடம் மோசடி செய்த வடமாநில வாலிபர்கள் சிக்கினர்.
    • ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் சீனியாபுரம் தெருவை சேர்ந்தவர் சபரிஅம்மாள் (வயது 40). நேற்று காலை இவரது வீட்டின் முன்பு 2 வடமாநில வாலிபர்கள் வந்தனர். அவர்களிடம் சபரி அம்மாள் விசாரித்தபோது,   பாலீஷ் செய்து தருவதாக கூறி உள்ளனர்.

    அதனை நம்பிய சபரி அம்மாள் தனது 4 பவுன் தாலி செயினை எடுத்து பாலீஷ் செய்வதற்காக அவர்களிடம் கொடுத்தார். சிறிது நேரம் கழித்து நகையை பாலீஷ் போட்டு சபரி அம்மாளிடம் அந்த வாலிபர்கள் கொடுத்தனர்.

    அப்போது நகையின் எடை குறைந்திருப்பதாக சபரி அம்மாள் உணர்ந்தார். அதுகுறித்து அந்த வாலிபர்களிடம் கேட்டார். அப்போது அவர்கள் சரிவர பதில் அளிக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த சபரிஅம்மாள் அவர்களிடம் மீண்டும் கேட்டுள்ளார்.

    உடனே அந்த வாலிபர்கள் அங்கிருந்து ஓட முயற்சித்தனர். அதில் ஒரு வாலிபரின் கையை சபரிஅம்மாள் இறுக்கி பிடித்துக் கொண்டு சத்தம் போட்டுள்ளார். அந்த வாலிபர் சபரி அம்மாளின் கையை உதறி விட்டு ஓடி உள்ளார்.

    சபரிஅம்மாளின் சத்தத்தை கேட்டு திரண்ட அக்கம் பக்கத்தினர் விரட்டி சென்றனர். அப்போது அந்த வாலிபர்கள் நிலைதடுமாறி கீழே விழுந்தனர். உடனே அங்கிருந்தவர்கள் அவர்களை பிடித்து ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீசில் ஒப்படைத்தனர்.

    போலீசார் விசாரணை நடத்தியதில் அவர்கள் மிதுன்குமார், சர்வன்குமார் என்பது தெரியவந்தது. நகையை எடைபோட்டு பார்த்தபோது 26 கிராம் மட்டுமே இருந்துள்ளது. இதையடுத்து சபரி அம்மாள் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சிவகாசியில் காங்கிரஸ் கட்சி கருத்தரங்கம் நடந்தது.
    • முன்னாள் இளைஞர் காங்கிரஸ் கிழக்கு மாவட்ட தலைவர் மீனாட்சி சுந்தரம் தலைமை வகித்தார்.

    விருதுநகர்

    காங்கிரஸ் கட்சி சார்பில் சிவகாசியில் கருத்தரங்கம் நடைபெற்றது.

    முன்னாள் இளைஞர் காங்கிரஸ் கிழக்கு மாவட்ட தலைவர் மீனாட்சி சுந்தரம் தலைமை வகித்தார்.

    வழக்கறிஞர்கள் முருகானந்தம், குப்பை யாண்டி, ராம்குமார் முன்னிலை வகித்தனர்.

    தலைமைப்பண்பு குறித்து பேராசிரியர் சிவனேசன் பயிற்சி அளித்தார்.

    இந்த நிகழ்ச்சியில் நகர காங்கிரஸ் துணைத்தலைவர் முத்துமணி, வட்டார காங்கிரஸ் தலைவர் தர்மராஜ், நிர்வாகிகள் கணேசன், குருசாமி, ஷேக், பச்சையாத்தான், முத்துக்கிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • வளர்ச்சி திட்ட பணிகளை ஆய்வு செய்த கலெக்டர்
    • பொறியாளர் கோமதிசங்கர் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் நகராட்சி யில் நடைபெற்றுவரும் அரசின் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    ராஜபாளையம் ஏஞ்சல் மெட்ரிக் பள்ளிமுதல் திருவனந்தபுரம் ஊரணி வரை நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.80 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட தார் சாலையினையும், சங்கரன்கோவில் சாலையில் அமைந்துள்ள பொது மயானத்தில் கலைஞர் நகர்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.148.80 லட்சம் மதிப்பில் நவீன எரிவாயு தகன மேடை அமைக்கப்பட்டு வரும் பணிகளையும் கலெக்டர் ஆய்வு செய்தார்.

    ராஜபாளையம் நகராட்சி குட்பட்ட காமராஜர் நகர், நகராட்சி குடிநீர் தொட்டி அருகில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் கீழ் ரூ.7.80 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட பொது சமை யலறை கட்டிடங்களையும் கலெக்டர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து, பணிகளை விரைந்தும், தரமாகவும் முடித்து, பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என சம்மந்தப்பட்ட அரசு அலுவலர்களை அறிவுறுத்தினார்.

    இந்த ஆய்வின் போது, இராஜபாளையம் நகராட்சி பொறியாளர் ரத்தினவேல், வட்டாட்சியர் ராமசந்திரன், இளநிலை பொறியாளர் கோமதிசங்கர் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • விஷ பூச்சி கடித்து ஆடு மேய்த்தவர் பலியானார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள அச்சம்தவிர்த்தான் அக்ரகார தெருவை சேர்ந்தவர் சுப்பையா (வயது 29). இவருக்கு கடந்த வாரத்தில் காய்ச்சல் இருந்துள்ளது. இதனால் ஸ்ரீவில்லிபுத்தூர் மடவார் வளாகத்தில் வசிக்கும் சகோதரி பாண்டீஸ்வரி வீட்டிற்கு சென்றார்.

    அவர் சுப்பையாவை அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார். அங்கு சிகிச்சை பெற்று சுப்பையா ஊருக்கு சென்று விட்டார். 2 நாட்கள் கழித்து மீண்டும் உடல்நிலை சரியில்லாமல் சுப்பையா சகோதரி வீட்டிற்கு வந்தார். அவரை மீண்டும் தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றபோது, அரசு மருத்து வமனைக்கு செல்லுமாறு கூறி உள்ளனர்.

    உடனடியாக பாண்டீ ஸ்வரி தம்பி சுப்பையாவை ஸ்ரீவில்லி புத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்காமல் தலைமை டாக்டர் இல்லாததால் மறுநாள் வரும்படி கூறி உள்ளனர்.

    மறுநாள் சென்றபோது அவரை பரிசோதித்த தலைமை டாக்டர் உடலில் விஷம் பரவி இருப்பதாக கூறி பூச்சி எதுவும் கடித்ததா? என சுப்பையா விடம் விசாரித்தார். அப்போது தான் ஆடு மேய்த்து கொண்டிருந்த போது பூச்சி கடித்ததாக சுப்பையா கூறினார். அவருக்கு சிகிச்சை அளித்த தலைமை டாக்டர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சுப்பையா பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாண்டீஸ் வரி வன்னியம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • கோவில் திருவிழாவில் கல்லூரி மாணவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
    • சாத்தூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள அமீர்பாளையம் பகுதியை சேர்ந்தவர் மனோஜ் (வயது 20). அரசு கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.

    நேற்று அந்த பகுதியில் ராஜகாளியம்மன் கோவில் திருவிழா நடந்தது. அங்கு முளைப்பாரி எடுத்து செல்வதை மனோஜ் பார்த்து கொண்டிருந்தார். அவர் காலில் செருப்பு அணிந்திருந்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த ராஜபாண்டி என்பவர் செருப்பு அணிந்து பந்தலுக்குள் நிற்கக்கூடாது என கூறி வெளியே செல்லும்படி கூறி உள்ளார். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.

    இதில் ஆத்திரம் அடைந்த ராஜபாண்டி, மனோஜை கீழே தள்ளி தாக்கியதாக கூறப்படுகிறது. காயம் அடைந்த மனோஜ் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.

    அவர் கொடுத்த புகாரின்பேரில் சாத்தூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார்.

    திருச்சுழி

    விருதுநகர் அருகே உள்ள திருச்சுழி முத்துராமலிங்கம் தெருவை சேர்ந்தவர் சூர்யபிரகாஷ். இவரது மனைவி கனகா(வயது28). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கடந்த சில மாதங்களாக கனகாவுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. மேலும் மனநல பாதிப்பில் இருந்த அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் கனகா மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து திருச்சுழி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • விஷம் குடித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
    • பரளச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    ராமநாதபுரம் மாவட்டம் கமுதி தாலுகா முத்தக்குறிச்சியை சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவரது மகன் சங்கரலிங்கம் (19). வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றி வந்துள்ளார். கடந்த 22-ந்தேதி சங்கரலிங்கத்தின் சகோதரிக்கு திருமணம் நடந்தது. அப்போது சங்கரலிங்கம் செலவுக்கு பணம் கேட்டு தந்தையிடம் தகராறு செய்தார். ஆனால் ராமச்சந்திரன் பணம் கொடுக்கவில்லை. இதனால் மனவருத்தத்தில் இருந்த சங்கரலிங்கம் சகோதரிக்கு சீர்கொடுக்க செல்லாமல் இருந்து விட்டார்.

    இந்த நிலையில் அருப்புக்கோட்ைட அருகே உள்ள செங்குளம் பகுதியில் சங்கரலிங்கம் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அங்கிருந்தவர்கள் மீட்டு அவரை அருப்புக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து ராமச்சந்திரன் கொடுத்த புகாரின்பேரில் பரளச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இளம்பெண் மாயமானார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து இளம்பெண்ணை தேடி வருகிறார்கள்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள பாலையம்பட்டியை சேர்ந்தவர் கணேசன். இவரது மனைவி மலைக்கனி. இவர்களுக்கு 17 வயதில் மகள் உள்ளார். இவர் பிளஸ்-2 முடித்து விட்டு வீட்டில் இருந்தார். சம்பவத்தன்று மலைக்கனி வேலைக்கு சென்று விட்டு திரும்பியபோது மகள் வீட்டில் இல்லை. பல இடங்களில் தேடி பார்த்தும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்து மலைக்கனி அருப்புக்கோட்டை டவுன் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து இளம்பெண்ணை தேடி வருகிறார்கள்.

    ×