என் மலர்tooltip icon

    வேலூர்

    பெற்ற பிள்ளைகள் 9 பேர் இருந்தும் பிச்சையெடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்ட 95 வயது மூதாட்டியை சமூக ஆர்வலர் மீட்டு, முதியோர் காப்பகத்தில் சேர்த்துள்ளார்.
    வேலூர்:

    திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மலை கொழிஞ்சாறையை சேர்ந்தவர் 95 வயது மூதாட்டி அந்தோணியம்மாள். இவரது கணவர் தேவராஜ்.

    கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் அந்தோணியம்மாள் தேவராஜை பார்த்து கொள்வதில் மகன், மகள்களுக்குள் பிரச்சனை ஏற்பட்டது. இதனால் காட்பாடியில் உள்ள தனது மகள் ஜெய்சிராணி வீட்டுக்கு அந்தோணியம்மாள் வந்தார். அவரை மருமகன் நந்தகுமார் நன்றாக கவனித்து வந்துள்ளார்.

    இந்நிலையில், நந்தகுமார் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். அதற்கு பிறகு மகள் ஜெய்சிராணி அந்தோணியம்மாளை கவனிக்க முடியாது என்று கூறி விட்டார். இதனால் வீட்டை விட்டு வெளியில் வந்த அந்தோணியம்மாள் கடந்த 5 ஆண்டுகளாக வேலூர் விண்ணரசி மாதா கோவிலில் பிச்சை எடுத்து வந்தார். அந்த பணத்தையும் அவரது மகள் வாங்கி சென்றுள்ளார்.

    இந்நிலையில் கடந்த மாதம் அந்தோணியம்மாள் கீழே விழுந்தததில் அவரது வலது கால் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதனால் அவதிப்பட்டு வந்த அவரை அங்கிருந்த ஒரு பெண் பாதுகாத்து பணிவிடை செய்து வந்தார்.

    இது குறித்து தகவலறிந்த சமூக ஆர்வலர் மணிமாறன் என்பவர் மூதாட்டியை அழைத்து வந்து கலெக்டரிடம் மனு அளித்தார்.

    அதில் அந்தோணியம்மாளுக்கு உணவு தங்க இடம் வழங்க வேண்டும். இவரை கைவிட்ட உறவுகள் மீது முதியோர் வன்கொடுமை சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என தெரிவித்திருந்தார்.

    இதையடுத்து கலெக்டர் ராமன் மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் சாந்திக்கு தகவல் தெரிவித்து முதியோர் காப்பகத்தில் மூதாட்டியை ஒப்படைக்க உத்தரவிட்டார்.

    எங்களுக்கு 13 குழந்தைகள் பிறந்தன. சிலர் இறந்து விட்டனர். தற்போது 5 மகன்கள், 4 மகள்கள் உள்ளனர். 33 பேரக்குழந்தைகளும் உள்ளனர்.

    20 ஆண்டுகளுக்கு முன்பு என்னையும், எனது கணவரையும் பார்த்துக் கொள்வதில் மகன், மகள்களுக்குள் பிரச்சனை ஏற்பட்டது. எனது மூத்த மகளை வேலூர் காட்பாடியை சேர்ந்த நந்தகுமார் என்ற போலீஸ்காரருக்கு திருமணம் செய்து வைத்தேன். இதையடுத்து அவர் என்னை பார்த்துக் கொள்வதாக கூறி, வேலூர் அழைத்து வந்தார்.

    என்னையும் அவரது தாய் போல் அரவணைத்து பார்த்துக் கொண்டார். அவர் இறந்த பின்பு எனது மகளும், என்னை கைவிட்டு விட்டார். நான் அனாதையானேன். வேலூர் நகரில் பிச்சை எடுத்துத் தான் சாப்பிட்டு வந்தேன். இதுவரை எனது மகன்கள் என்னை பார்க்கவரவில்லை.

    நான் சிறிது, சிறிதாக சேர்த்து வைத்த பணத்தையும் எனது மகள் அவ்வப்போது வந்து வாங்கிச் சென்று விடுவாள். சில மாதங்களுக்கு முன்பு நான் கீழே விழுந்தேன். இதனால் எனது கால்கள் முறிந்து விட்டன. எழுந்து நடக்க முடியவில்லை. பிச்சை எடுக்கக்கூட என்னால் எங்கும் செல்ல முடியவில்லை.

    தற்போது நான் தங்கியிருக்கும் இடத்தில், ஒரு பெண் தான் என்னை தாய் போல் பார்த்துக் கொள்கிறாள். நான் இயற்கை உபாதைகளை கழித்தால், முகம் சுழிக்காமல், என்னை சுத்தப்படுத்துவாள். சாகும் வரை நான் அவளுடன் இருந்து கொள்கிறேன். நான் இறந்தால் பெற்ற பிள்ளைகளோ, பேரன்களோ யாரும் வரவேண்டாம் என்றார். அப்போது அவர் அவரையும் அறியாமல் கதறி அழுதார்.

    சமூக சேவகர் மணிமாறன் கூறுகையில், கடந்த சில மாதங்களுக்கு முன் அந்தோணியம்மாள் இறந்து விட்டதாக பொய்யான தகவல் கொடுத்தோம். அப்போது நேரில் வந்த உறவினர்கள் இவர் உயிரோடு இருப்பதை பார்த்து எங்களை திட்டினர். இறந்தால் சொல்லி அனுப்புங்கள். அவரை எங்களுடன் அழைத்து செல்ல முடியாது என்று கூறிவிட்டு சென்று விட்டனர் என்றார். 
    கல்வி, சுகாதாரம் கிடைக்க மக்கள்தொகை பெருக்கத்தை கட்டுப்பாட்டுக்குள் வைக்கவேண்டும் என்று கலெக்டர் ராமன் பேசினார்.
    வேலூர்:

    உலக மக்கள்தொகை தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது. வேலூரில் குடும்பநலத்துறை சார்பில் விழிப்புணர்வு ஊர்வலம் மற்றும் கருத்தரங்கு நடந்தது. பழைய பஸ்நிலையம் அருகே நடந்த கருத்தரங்குக்கு கலெக்டர் ராமன் தலைமை தாங்கி, போட்டிகளில் வெற்றிபெற்ற கல்லூரி மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பேசினார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    1951-ல் நடத்தப்பட்ட கணக்கெடுப்பின்படி இந்தியாவின் மக்கள் தொகை 36 கோடி. இன்று 130 கோடியாக உள்ளது. இதனால் சராசரி வயது 28 ஆக உள்ளது. இதன்காரணமாக இளைஞர்கள் அதிக அளவில் இருக்கிறார்கள். மக்கள் தொகை பெருக்கத்தை தடுக்க முடியாது. ஆனால் கட்டுப்படுத்தலாம்.

    தமிழ்நாட்டில் 8 கோடி மக்கள் உள்ளனர். ஆண்டுக்கு 11 லட்சம் குழந்தைகள் பிறக்கின்றன. மக்கள்தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்துவதில் பெண்களின் பங்கு பிரதானமாக இருக்கிறது. ஆண்களின் பங்கு குறைவாகவே இருக்கிறது. ஒரு குடும்பத்தில் 2 குழந்தைகளுக்கு மேல் 3-வது, 4-வது குழந்தை பிறப்பதை குறைக்கவேண்டும். அதற்கு பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

    மக்கள்தொகை பெருகினால் தண்ணீர், காற்று குறைந்து சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும். 2022-ம் ஆண்டில் குடிக்கக்கூட தண்ணீர் இல்லாமல் போகும் நிலை ஏற்பட வாய்ப்பு உள்ளது. 2050-ம் ஆண்டுக்கு பிறகு உணவுகூட கிடைக்காத நிலை ஏற்படும். எனவே நமக்கு தேவையான கல்வி, சுகாதாரம் தேவையான அளவு கிடைக்க மக்கள்தொகை பெருக்கத்தை கட்டுப்பாட்டுக்குள் வைக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    முன்னதாக காந்திசிலையில் இருந்து புறப்பட்ட விழிப்புணர்வு ஊர்வலத்தையும் அவர் தொடங்கி வைத்தார்.

    கருத்தரங்கில் குடும்பநலத்துறை துணை இயக்குனர் சாந்தி வரவேற்றார். அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் சாந்திமலர், சுகாதார பணிகள் துணை இயக்குனர் சுரேஷ் ஆகியோர் பேசினர். முடிவில் மாவட்ட மக்கள் கல்வி தகவல் அலுவலர் லோகநாதன் நன்றி கூறினார். 
    அரக்கோணம் அருகே திருத்தணியில் இருந்து கொண்டு வரப்பட்ட சத்துணவு முட்டை விற்கப்படுவதாக வந்த புகாரின் அடிப்படையில் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    அரக்கோணம்:

    அரக்கோணம் அருகே காவனூர், நரசிங்கபுரம் உள்ளிட்ட கிராம பகுதிகளில் சத்துணவு முட்டை விற்கப்படுவதாக அதிகாரிகளுக்கு தகவல் வந்தது. இதையடுத்து வேலூர் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) பிச்சாண்டி, வட்டார வளர்ச்சி அலுவலர் சாந்தி, மேலாளர் சாந்தி ஆகியோர் நரசிங்கபுரம் பகுதியில் நேரடியாக சென்று பொதுமக்களிடம் விசாரணை நடத்தினார்கள்.

    பொதுமக்கள் எங்கள் பகுதியில் மூதாட்டி ஒருவர் முட்டை விற்பதாக தெரிவித்தனர். அந்த மூதாட்டியிடம் விசாரணை நடத்தியபோது நான் முட்டை விற்கவில்லை என்றார். இதையடுத்து அதிகாரிகள் நடத்திய விசாரணையில் திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருகே தாழவேடு கிராமத்தில் இருந்து சிலர் சத்துணவு முட்டைகளை வாங்கி வந்து விற்பனை செய்வது தெரிய வந்தது.

    இதுகுறித்து கலெக்டரின் நேர்முக உதவியாளர் பிச்சாண்டி கூறியதாவது:-

    அரக்கோணம் அருகே கிராமங்களில் சத்துணவு முட்டை விற்கப்படுவதாக வந்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்தி வருகிறோம். அரக்கோணம் தாலுகா பகுதியில் இருந்து சத்துணவு முட்டை எதுவும் விற்கப்படவில்லை.

    திருவள்ளூர் மாவட்டத்தில் இருந்துதான் சத்துணவு முட்டைகளை சிலர் வாங்கி வந்து விற்பதாக தகவல் கிடைத்தது. இதுகுறித்து திருவள்ளூர் மாவட்ட கலெக்டருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் அரக்கோணம் ஒன்றியத்தில் உள்ள 81 சத்துணவு மையங்கள், நகராட்சியில் உள்ள 10 மையங்களில் சத்துணவு முட்டை இருப்பு விவரம் குறித்து ஆய்வு செய்து அறிக்கை தருமாறு அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

    அறிக்கையில் சத்துணவு முட்டை இருப்பில் தவறு நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    மேலும் அரக்கோணம் பகுதியில் சத்துணவு முட்டையை யாராவது கொண்டு வந்து விற்பனை செய்தால் உடனடியாக எங்களுக்கு தகவல் தெரிவிக்கலாம். அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். #tamilnews
    பேரணாம்பட்டில் 2 குட்டிகளுடன் சிறுத்தை நடமாடுவதால் கிராம மக்கள் பீதியில் உள்ளனர்.
    பேரணாம்பட்டு:

    பேரணாம்பட்டு வனச்சரத்திற்குட்பட்ட உள்ளி வனப்பகுதியையொட்டி உள்ளி, பரவக்கல், பொகளூர், செம்பேட்டு, வளத்தூர், பட்டு வாம்பட்டி, சிங்கல்பாடி, அலங்காநல்லூர் என பல்வேறு கிராமங்கள் உள்ளன. பல்லலக்குப்பம் காப்புக்காடு அருகிலேயே இருப்பதால், சிறுத்தை உள்பட பல்வேறு வனவிலங்குகள், உள்ளி வனப்பகுதிக்குள் புகுந்து சுற்றி திரிகின்றன.

    இப்படி சுற்றித்திரியும் சிறுத்தை உள்ளிட்ட வன விலங்குகள், வனப்பகுதியை சார்ந்துள்ள உள்ளி மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்களுக்குள் புகுந்து கோழி, ஆடு, மாடு உள்ளிட்ட கால் நடைகளை கொடூரமாக கடித்து வேட்டையாடி கொல்கின்றன. இதனால் கிராம மக்கள் எப்போதும் அச்சமுடன் இருக்கின்றனர்.

    வனப்பகுதியையொட்டி ஆடு, மாடுகளை மேய்ச்சலுக்கும், விறகு சேகரிக்கவும் செல்ல தயங்குகின்றனர். வனப்பகுதியையொட்டி விவசாய நிலங்கள் இருப்பதால் விவசாயம் செய்ய முடியாமல் தவிக்கின்றனர். இதனால், உள்ளி உள்ளிட்ட 8-க்கும் மேற்பட்ட கிராம மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், உள்ளி கிராமத்தை சேர்ந்த 2 பேர் இன்று காலை வனப்பகுதியை ஒட்டி சென்றனர். அப்போது சிறுத்தை உறுமும் சத்தம் கேட்டது. பீதியடைந்த அவர்கள், ஒரு பாறை அருகில் இருந்த புதரை எட்டி பார்த்தனர். 2 குட்டிகளுடன் ஒரு பெரிய தாய் சிறுத்தை படுத்திருந்தது.

    இதையடுத்து, உடனடியாக அவர்கள் கிராமத்திற்குள் ஓடி சென்று தகவல் கொடுத்தனர். சிறுத்தை ஊருக்குள் புகுந்துவிடுமோ என்ற அச்சத்தில் கிராம மக்கள், வீதியில் விளையாடிய குழந்தைகளை உடனடியாக வீட்டிற்குள் அழைத்து சென்று கதவை உள் பக்கமாக பூட்டி தஞ்சமடைந்தனர். கோழி, ஆடு, மாடுகளை பாதுகாப்பாக பட்டியில் அடைத்தனர்.

    இதுப்பற்றி பேரணாம்பட்டு வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். வனவர் முருகன் தலைமையிலான வனத்துறையினர் விரைந்து வந்தனர். சிறுத்தை நடமாடிய பகுதியை பார்வையிட்டனர். அதில், உள்ளி கிராமத்தில் இருக்கும் ரெயில்வே பாலம் அருகே உள்ள புதரில் குட்டிகளுடன் சிறுத்தை பதுங்கி இருந்தது தெரியவந்தது.

    அந்த பாலம் அருகில் ஒரு தனியார் பள்ளி உள்ளது. பள்ளிக்கு இன்று மாணவ, மாணவிகள் வந்திருந்தனர். எனவே, சுற்றித்திரியும் சிறுத்தையின் நடமாட்டத்தை வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

    காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கருத்து மூலம் பேரறிவாளன் குற்றமற்றவர் என நிரூபணமாகியுள்ளது என்று பேரறிவாளனின் தாய் அற்புதம்மாள் கூறி உள்ளார். #Rahulgandhi #Arputhammal #Perarivalan
    வேலூர்:

    டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை, டைரக்டர் பா.ரஞ்சித் சந்தித்தார். அப்போது, பேரறிவாளன் விடுதலைக்கு உதவி செய்ய வேண்டுமென ராகுல் காந்தியிடம் அவர் கேட்டுக் கொண்டார்.



    அதற்கு ராகுல்காந்தி, பேரறிவாளன் உள்ளிட்டோர் விடுதலைக்கு தனிப்பட்ட முறையில் நான் தடையாக இருக்க மாட்டேன். தன் தந்தை கொலை தொடர்பான சதித்திட்டங்கள் மற்றும் சட்ட சிக்கல்களுமே அவர்களின் விடுதலைக்கு தடையாக இருக்கும் என கருதுவதாக ராகுல் காந்தி கூறியதாக பா.ரஞ்சித் தெரிவித்தார்.

    ராகுல் காந்தியின் கருத்து தொடர்பாக பேரறிவாளனின் தாய் அற்புதம்மாள் கூறியதாவது:-

    பாதிக்கப்பட்ட குடும்பத்தை சேர்ந்த ராகுல் காந்தியே பேரறிவாளன் விடுதலைக்கு நான் தடையாக இருக்க மாட்டேன் என்று சொல்லி விட்டார். இதன் மூலம் ராஜீவ்காந்தி கொலையில் பேரறிவாளன் சம்பந்தப்படவில்லை என்று வெளிப்பட்டுள்ளது.

    திசை மாறிபோன இந்த வழக்கை, சரியான திசை நோக்கி கொண்டு சென்றது பேரறிவாளன் தான். இந்த வழக்கில் ஏகப்பட்ட குளறுபடிகள் இருக்கிறது. அது தற்போது ராகுல்காந்தி கருத்து மூலம் வெளிப்பட்டிருக்கிறது.



    கடந்த 27 ஆண்டுகளாக பேரறிவாளன் உள்ளிட்டோரை ஜெயிலில் அடைத்திருப்பது, இந்தியாவிலேயே வேறு எந்த வழக்குகளிலும் குற்றவாளிகள் இதுபோன்று தண்டிக்கப்படவில்லை.

    தடா வழக்கில் இருந்தவர்களை கூட மாநில அரசு விடுதலை செய்துள்ளது. அப்போது எதிர்க்காத மத்திய அரசும், ஜனாதிபதியும் தற்போது பேரறிவாளன் விடுதலைக்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்கு, ராஜீவ்காந்தி முன்னாள் பிரதமர் என்ற ஒரே ஒரு பதவி தான் காரணம்.

    எத்தனை நூற்றாண்டு கடந்தாலும் ராஜீவ்காந்தி முன்னாள் பிரதமர் தான். இன்னும் எத்தனை வருடம் இந்த காரணத்தை சொல்லி இந்த வழக்கை கொச்சைப்படுத்த போகிறார்கள். ராகுல் காந்திக்கு, ராஜீவ்காந்தி கொலை வழக்கு விபரம் முழுமையாக தெரியும்.

    பேரறிவாளன் உள்பட அனைவரையும் பற்றி தெரிந்த பிறகே ராகுல்காந்தி விடுதலை சம்பந்தமான கருத்துகளை தெரிவித்திருக்கிறார். இன்னும் காலம் தாழ்த்தினால் உலக நாடுகளில் இந்த வழக்கு கேவலப்பட்டு நிற்கும்.

    எல்லா அரசியல்வாதிகளும் ஆதாயத்திற்காகவே பேசுகின்றனர். இந்த 27 ஆண்டுகளில் நான் கற்றுக்கொண்டது அது தான். டைரக்டர் பா.ரஞ்சித்தை பற்றி தவறாகவே சொல்ல மாட்டேன். எப்பவும் எங்கள் மீது பாசமாக இருப்பார். நாங்கள் உயிர் வலி ஆவண படம் தயார் செய்யும் போது எங்களை வலுக்கட்டாயமாக அழைத்து பணம் உதவி செய்தவர் பா.ரஞ்சித்.

    பேரறிவாளன் உள்ளிட்டோரின் விடுதலையை செயல் வடிவமாக மாற்றுவதற்கு மத்திய அரசு மற்றும் சுப்ரீம் கோர்ட்டு தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். விரைவில் என் பிள்ளையை விடுதலை செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #Rahulgandhi #Arputhammal #Perarivalan



    ராணிப்பேட்டை போலீஸ் நிலைய வாசலில் பாதுகாப்பு கேட்டு வந்த கள்ளக்காதலியை வாலிபர் வெட்டிக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    வாலாஜா:

    வேலூர் மாவட்டம் வாலாஜா அடுத்த செங்காடு அருந்ததியர் பாளையத்தை சேர்ந்தவர் சுகுணா (வயது 45). கணவரை இழந்து தனியாக வசித்த இவருக்கும், செங்காடு அடுத்த வாங்கூரை சேர்ந்த விவசாயி சுரேந்திரனுக்கும் (35) கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. சுகுணாவை விட சுரேந்திரன் 10 வயது சிறியவர்.

    இருவரும் கணவன், மனைவியை போல் நெருங்கி பழகினர். கள்ளக்காதல் விவகாரம் சுரேந்திரனின் மனைவி மற்றும் குடும்பத்தினருக்கு தெரியவந்தது. கடந்த வாரம் சுகுணா வீட்டில் இருந்த சுரேந்திரனை மனைவி மற்றும் குடும்பத்தினர் மிரட்டி அழைத்துச் சென்றனர்.

    இனிமேல் சுரேந்திரனுடன் பேசக்கூடாது. கள்ளத்தொடர்பை துண்டித்துக் கொள் என சுகுணாவையும் அவரது குடும்பத்தினர் எச்சரித்து சென்றனர். இதையடுத்து, சுரேந்திரனுடன் பேசி பழகுவதையும், சந்திப்பதையும் சுகுணா தவிர்த்தார்.

    ஆனாலும், சுரேந்திரன் அடிக்கடி சுகுணா வீட்டிற்கு சென்று கள்ளத்தொடர்பை நீட்டிக்குமாறு கூறி தகராறு செய்தார். சுகுணா பிடிகொடுக்காததால் கொலை செய்து விடுவதாக மிரட்டி வீட்டில் இருந்த பொருட்களை அடித்து நொறுக்கினார்.

    இதையடுத்து, தனது உயிருக்கு ஆபத்து இருப்பதால் பாதுகாப்பு வழங்கக் கோரி சுகுணா, ராணிப்பேட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு நேற்று மாலை சென்று சுரேந்திரன் மீது புகார் அளித்தார். சுரேந்திரனிடம் போனில் பேசிய போலீசார் விசாரணைக்காக அழைத்தனர்.

    இதனால் ஆத்திரமடைந்த சுரேந்திரன், சுகுணாவை போலீஸ் நிலையத்தில் வைத்தே வெட்டி கொலை செய்ய அரிவாளை எடுத்துக் கொண்டு பைக்கில் வந்தார். அப்போது, போலீஸ் நிலைய வாசலில் சுகுணா நின்றுக் கொண்டிருந்தார்.

    சுகுணாவிடம் உன்னிடம் தனியாக பேச வேண்டும். வந்து பைக்கில் உட்காரு என்று அழைத்தார். சுகுணா பைக்கில் ஏற மறுத்தார். அப்போது ஆத்திரத்தில் இருந்த சுரேந்திரன், மறைத்து எடுத்துவந்த அரிவாளால் சுகுணாவை சரமாரியாக வெட்டினார். இதில் தலை, முகம், கழுத்தில் பலத்த வெட்டு விழுந்ததில் சுகுணா ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்து சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார்.

    இதையடுத்து, கொலைக்கு பயன்படுத்திய அரிவாளை அங்கேயே வீசி விட்டு சுரேந்திரன் பைக்கில் ஏறி தப்பிச் சென்றார். டி.எஸ்.பி. கலைசெல்வன் மற்றும் போலீசார், சுகுணாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய சுரேந்தினை பிடிக்க தீவிரம் காட்டி வருகின்றனர். பாதுகாப்பு கேட்டு வந்த பெண் போலீஸ் நிலைய வாசலில் வெட்டி கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை, பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.
    கே.வி.குப்பம் அருகே வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
    குடியாத்தம்:

    கே.வி.குப்பம் அருகே கீழ்ஆலத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் லூகாஸ். இவரது மகன் இந்திரகுமார் (வயது 19), சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர் என கூறப்படுகிறது. இந்திரகுமார் நேற்று முன்தினம் இரவு தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். உடனடியாக அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து கே.வி.குப்பம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வடிவேலன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    தற்கொலை செய்து கொண்ட இந்திரகுமார் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மூதாட்டியை பாலியல் கொடுமை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. 
    காட்பாடி ரெயில் நிலையத்தில் வாலிபர் ஒருவர் சினிமா பட பாணியில் பெற்றோருடன் ரெயிலில் இருந்த காதலியின் கையை பிடித்து இழுத்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
    வேலூர்:

    சென்னையில் இருந்து ஆலப்புழா- டாடாநகர் எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று இரவு 7.45 மணியளவில் காட்பாடி ரெயில் நிலையத்துக்கு வந்தது. ரெயிலில் இருந்த ஒரு பெட்டியில் ஆந்திராவை சேர்ந்த இளம்பெண் தனது பெற்றோர் மற்றும் உறவினர்களுடன் அமர்ந்திருந்தார்.

    அப்போது திடீரென ஒரு வாலிபர் அந்த பெட்டியில் ஏறி இளம்பெண்ணின் கையை பிடித்து இழுத்துக் கொண்டு வெளியே வந்தார். இதைப் பார்த்த இளம் பெண்ணின் தந்தை அந்த வாலிபரை தடுக்க முயற்சித்தார். ஆனால் அவரை தள்ளிவிட்டார். இதனால் அவரது உறவினர்கள் கூச்சலிட்டனர். அதற்குள் இளம்பெண்ணை அந்த வாலிபர் இழுத்துக் கொண்டு ரெயிலில் இருந்து கீழே இறங்கினார்.

    தொடர்ந்து பிளாட்பாரத்திலிருந்து இளம்பெண்ணை இழுத்தபடி ஓட்டம் பிடித்தார். இளம் பெண்ணும் அவருடன் ஓடி சென்றார்.

    இந்த சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் இளம் பெண்ணை யாரோ மர்ம நபர்கள் கடத்தி செல்கின்றனர் என கூச்சலிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    அதிர்ச்சி அடைந்த ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் மற்றும் பயணிகள் வாலிபரை விரட்டி சென்றனர். அவர்களை காட்பாடி- குடியாத்தம் சாலையில் மடக்கி பிடித்தனர்.

    அவர்களிடம் நடத்திய விசாரணையில் போலீசார் கூறியதாவது:-

    ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியை சேர்ந்தவர் ஸ்வேதா (24). இவரும் அதே பகுதியை சேர்ந்த ராயடு (24) என்பவரும் காதலித்துள்ளனர். இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள். காதல் விவகாரத்தை அறிந்த ஸ்வேதாவின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். எதிர்ப்பை மீறி ஸ்வேதாவும், ராயடுவும் அடிக்கடி சந்தித்து பேசி வந்தனர்.

    இதனை அறிந்த பெற்றோர், ஸ்வேதாவை வெளியே விடாமல் வீட்டிலேயே பூட்டி வைத்தனர். மேலும் ராயடுவுடன் பேசுவதை தடுக்க அவரது செல்போனையும் பறித்துக் கொண்டனர். காதலனை சந்திக்க முடியாமல் பரிதவித்த ஸ்வேதா ஒருகட்டத்தில் வீட்டில் இருந்து வெளியேறியுள்ளார். இதையடுத்து இருவரும் பதிவு திருமணம் செய்துள்ளனர்.

    பட்டதாரிகளான இருவரும் தங்களுக்கு வேலை கிடைத்தவுடன் திருமணத்தை பற்றி மற்றவர்களுக்கு தெரிவிக்கலாம் என்றும், அதுவரை இருவரும் தங்களது பெற்றோருடன் தங்கியிருப்பது என்றும் முடிவு செய்துள்ளனர்.

    அதன்படி இருவரும் அலைபாயுதே சினிமா பாணியில் தங்களது பெற்றோருடன் தங்கினர். அவ்வப்போது நண்பர்கள் உதவியுடன் சந்தித்து பேசி வந்தனர். ஸ்வேதாவின் நடவடிக்கையில் மாற்றம் ஏற்படுவதை அறிந்த பெற்றோர் அவரை கண்காணிக்க தொடங்கினர். அதில் ஸ்வேதா மீண்டும் ராயடுவுடன் பேசி வருவதை அறிந்தனர்.

    இதனிடையே ஸ்வேதாவின் உறவினர் பெண் ஒருவருக்கு வேலூரில் உள்ள கல்லூரியில் படிக்க இடம் கிடைத்தது. அவரை கல்லூரியில் சேர்க்க லட்சுமி அவரது கணவர் ஆகியோர் வேலூர் வர முடிவு செய்தனர். உடன் ஸ்வேதாவையும் அழைத்து வந்தனர்.

    ராஜமுந்திரியில் இருந்து கேரள மாநிலம் ஆலப்புழா செல்லும் ரெயில் காட்பாடி நோக்கி வந்தனர். முன்னதாக ராயடுவை செல்போனில் ரகசியமாக தொடர்பு கொண்டு பேசிய ஸ்வேதா தன்னை காட்பாடி ரெயில் நிலையத்திற்கு வந்து அழைத்து செல்லுமாறு கூறியுள்ளார். அதன்படி ராயடு தனது நண்பர்கள் 10 பேருடன் அதே ரெயிலில் வேறு பெட்டியில் பயணம் செய்தார்.

    காட்பாடி ரெயில் நிலையத்தில் ஸ்வேதா தனது பெற்றோருடன் நின்றிருந்தார். அப்போது அங்கு வந்த ராயடு, சினிமா பாணியில் ஸ்வேதாவின் கையை பிடித்து இழுத்துக் கொண்டு ஓடியது தெரியவந்தது. ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ் இருவரிடமும் விசாரணை நடத்தினார். அப்போது இருவரும் சட்ட விதிகளின்படி கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு பதிவுத் திருமணம் செய்து கொண்டதற்கான ஆதாரங்களை காண்பித்தனர்.

    அதைத் தொடர்ந்து போலீசார் ஸ்வேதாவின் பெற்றோரிடம் சமாதானம் பேசினார். பின்னர், காதல் தம்பதியை பாதுகாப்பாக ராஜமுந்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
    கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்ட ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் 170 பேர் கைது செய்யப்பட்டனர்.
    வேலூர்:

    ஊரக வளர்ச்சித்துறையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும், வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு வழங்கப்படும் ஊதிய முரண்பாடுகளை களைந்திட வேண்டும், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், இரவு நேரங்களில் ஆய்வுக்கூட்டம் நடத்துவது மற்றும் விடுமுறை நாளில் களப்பணி ஆய்வு செய்வதை நிரந்தரமாக நிறுத்த உத்தரவு வெளியிட வேண்டும் என்பது உள்பட 26 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் கடந்த 3-ந் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    இதனால் வேலூர் மாவட்டத்தில் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள், கலெக்டர் அலுவலகத்தில் ஊரக வளர்ச்சித்துறை பிரிவு அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்படுகிறது.

    இந்த நிலையில் நேற்று காலை வேலூர் கலெக்டர் அலுவலகம் எதிரே ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் ஒன்று திரண்டு கோரிக்கைகளை விளக்கி ஆர்ப்பாட்டம் நடத்தினர். தமிழக ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க மாவட்ட தலைவர் ஜோசப்கென்னடி தலைமை தாங்கினார். மாநில துணைத்தலைவர் பாரி, வேலூர் மாவட்ட அரசு ஊழியர் சங்க தலைவர் சரவணராஜ் மற்றும் பலர் கோரிக்கைகள் குறித்து விளக்கி பேசினர்.

    தொடர்ந்து அவர்கள் ரோட்டில் அமர்ந்து திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த சத்துவாச்சாரி போலீஸ் இன்ஸ்பெக்டர் புகழேந்தி தலைமையிலான போலீசார், மறியலில் ஈடுபட்டவர்களை கைது செய்தனர். மொத்தம் 170 பேர் கைது செய்யப்பட்டனர். 
    வேலூர் மாவட்டத்தில் நேற்று பலத்த காற்றுடன் மழையின் போது மின்சார கம்பிகள் மீது மரக்கிளைகள் முறிந்து விழுந்ததில் மின்கம்பியை மிதித்து சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்.
    வேலூர்:

    வேலூர் மாவட்டத்தில் நேற்று மாலை பலத்த காற்றுடன் மழை பெய்தது. கணியம்பாடி பகுயில் பலத்த காற்றில் மரக்கிளைகள் முறிந்து விழுந்தன.

    அமிர்தி அருகே உள்ள நஞ்சு கொண்டாபுரம் கிராமத்தில் தென்னை மட்டைகள் விழுந்ததில் விவசாய நிலத்தில் சென்ற மின் வயர்கள் அறுந்து விழுந்தன. அந்த கிராமத்தை சேர்ந்த ராஜவேலு மகன் இளவரசன் (16), மழை நின்றதும் அவரது விவசாய நிலத்துக்கு சென்றார்.

    அப்போது அறுந்து கிடந்த மின்வயரில் மித்ததால் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்தில் இறந்தார். அவரது உடல் செடிகளுக்கு மத்தியில் கிடந்ததால் யாரும் பார்க்கவில்லை.

    இளவரசன் வீடு திரும்பாததால் அவரது பெற்றோர் இரவு பல இடங்களில் தேடினர். நண்பர்களிடம் விசாரித்தனர். இன்று காலை கணியம்பாடி மின் ஊழியர்கள் நஞ்சுகொண்டாபுரம் கிராமத்துக்கு சென்று சீரமைப்பு பணியில் ஈடுபட்டனர்.

    செடிகளுக்கு இடையே அறுந்து கிடந்த மின் கம்பியை தூக்கினர். அதனை தூக்க முடியவில்லை. அப்போது தான் இளவரசன் இறந்து கிடந்ததை கண்டனர். இந்த தகவல் அறிந்து வந்த இளவரசனின் பெற்றோர் உறவினர்கள் கதறி அழுதனர்.

    வேலூர் தாலுகா போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ராணிப்பேட்டையில் பீர் பாட்டிலை உடைத்து 3 பேரை குத்திய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

    வாலாஜா:

    ராணிப்பேட்டை ஆர்.எப். ரோடு பகுதியை சேர்ந்தவர் பாண்டியன் மகன் சுரேஷ் (வயது 28). இவர், நேற்று மாலை பைக்கில் சென்ற போது ஒரு டீக்கடை முன்பு உட்கார்ந்து இருந்த அதே பகுதியை சேர்ந்த கண்ணன் (32) என்பவர் மீது மோதி விட்டார்.

    இதனால் இருத்தரப்பினர் பயங்கரமாக மோதி கொண்டனர். கண்ணன் தரப்பினர் பீர் பாட்டிலை உடைத்து பைக்கை மோதிய சுரேஷ் மற்றும் அவரது உறவினர்கள் பிரதாப், கலைவாணனை சரமாரியாக குத்தினர். இதில் 3 பேருக்கும் மார்பு, முதுகில் குத்துப்பட்டு ரத்தம் பீறிட்டு கொட்டியது.

    படுகாயமடைந்த அவர்களை, பொதுமக்கள் மீட்டு ராணிப்பேட்டை தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். இதுகுறித்து ராணிப்பேட்டை போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

    சப்-இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி வழக்குப்பதிவு செய்து பீர் பாட்டிலால் தாக்கிய கண்ணன் மற்றும் அவரது மைத்துனர் விஜய் (20), நண்பர் வீரமணி (26) ஆகிய 3 பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    தமிழக மாங்காய்களுக்கு திடீர் தடை தொடர்பாக சித்தூர் கலெக்டருடன் தமிழக மா விவசாயிகள் இன்று பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். #TamilNaduMangoban

    குடியாத்தம்:

    தமிழக மாம்பழங்களுக்கு ஆந்திராவில் மவுசு அதிகம். இங்குள்ள மாம்பழங்களில் அதிக சாறு கிடைப்பதால் சித்தூர் மாவட்டத்தில் உள்ள தனியார் ஜூஸ் தயாரிப்பு நிறுவனங்கள் தமிழக மாம்பழங்களை அதிக அளவில் கொள்முதல் செய்கின்றன.

    இதனால் ஆந்திர மாம்பழங்கள் விலை வீழ்ச்சியை சந்தித்தது. இப்பிரச்சினை தொடர்பாக, ஆந்திர மாநில விவசாயிகள் கோரிக்கையை ஏற்று தமிழக மாம்பழங்கள், மாங்காய்களுக்கு சித்தூர் மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது.

    தமிழகத்தில் இருந்து மாம்பழங்கள், மாங்காய்கள் ஏற்றிச்சென்ற 100-க்கும் மேற்பட்ட வாகனங்கள் வேலூர் காட்பாடியை அடுத்த சித்தூர் எல்லையான பரதராமி உள்ளிட்ட பகுதிகளிலேயே ஆந்திர போலீசாரால் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பப்பட்டன.

    தடையை மீறி கொண்டு செல்லப்பட்ட மாம்பழங்கள், மாங்காய்களை போலீசார் திருப்பி அனுப்புகின்றனர். இதனால் தமிழக மாம்பழ விவசாயிகள் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர். தடையை நீக்க வலியுறுத்தி பரதராமி சோதனை சாவடியில் தமிழக விவசாயிகள் மாங்காய்களை தரையில் கொட்டி போராட்டம் செய்தனர்.

    இப்பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு கிடைக்காவிட்டால், ஆந்திராவில் இருந்து தமிழகத்திற்கு வரும் தக்காளி உள்ளிட்ட காய்கறி வாகனங்கள், பால் கொண்டு வரும் லாரிகளையும் மறித்து தடை செய்யும் போராட்டம் செய்வோம் என்று தமிழக மாங்காய் விவசாயிகள் எச்சரித்தனர்.

    இதைத்தொடர்ந்து, தமிழக மாங்காய் விவசாயிகளுடன் இன்று பேச்சுவார்த்தை நடத்த சித்தூர் மாவட்ட கலெக்டர் பிரதியும்ணா அழைப்பு விடுத்துள்ளார். சித்தூர் கலெக்டர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடக்கிறது.

    இருமாநில அதிகாரிகள் மற்றும் இருமாநில மாங்காய் விவசாயிகள் கலந்து கொண்டு விவாதிக்கின்றனர். பேச்சுவார்த்தையின் போது, தமிழக மாங்காய்களுக்கு ஆந்திராவுக்குள் கொண்டுச் செல்ல ஒரு மாதம் அனுமதிக்க வேண்டும். இந்தாண்டு விளைச்சல் அதிகரித்துள்ளது. இதனால் விலை வீழ்ச்சி ஏற்பட்டு விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    இந்த நிலையில் மாங்காய்களுக்கு தடை விதித்துள்ளதால், தமிழக மா விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், பல கோடி மதிப்பிலான பலநூறு டன் மாங்காய்கள் தேங்கி கிடந்து அழுகி வருவதை எடுத்து கூற உள்ளதாகவும் வேலூர் மாவட்ட மா உற்பத்தியாளர் சங்க தலைவர் வெங்கடேஷ் கூறினார். #TamilNaduMangoban

    ×