என் மலர்tooltip icon

    செய்திகள்

    சுகுணா
    X
    சுகுணா

    ராணிப்பேட்டை போலீஸ் நிலைய வாசலில் கள்ளக்காதலியை வெட்டி கொன்ற வாலிபர்

    ராணிப்பேட்டை போலீஸ் நிலைய வாசலில் பாதுகாப்பு கேட்டு வந்த கள்ளக்காதலியை வாலிபர் வெட்டிக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    வாலாஜா:

    வேலூர் மாவட்டம் வாலாஜா அடுத்த செங்காடு அருந்ததியர் பாளையத்தை சேர்ந்தவர் சுகுணா (வயது 45). கணவரை இழந்து தனியாக வசித்த இவருக்கும், செங்காடு அடுத்த வாங்கூரை சேர்ந்த விவசாயி சுரேந்திரனுக்கும் (35) கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. சுகுணாவை விட சுரேந்திரன் 10 வயது சிறியவர்.

    இருவரும் கணவன், மனைவியை போல் நெருங்கி பழகினர். கள்ளக்காதல் விவகாரம் சுரேந்திரனின் மனைவி மற்றும் குடும்பத்தினருக்கு தெரியவந்தது. கடந்த வாரம் சுகுணா வீட்டில் இருந்த சுரேந்திரனை மனைவி மற்றும் குடும்பத்தினர் மிரட்டி அழைத்துச் சென்றனர்.

    இனிமேல் சுரேந்திரனுடன் பேசக்கூடாது. கள்ளத்தொடர்பை துண்டித்துக் கொள் என சுகுணாவையும் அவரது குடும்பத்தினர் எச்சரித்து சென்றனர். இதையடுத்து, சுரேந்திரனுடன் பேசி பழகுவதையும், சந்திப்பதையும் சுகுணா தவிர்த்தார்.

    ஆனாலும், சுரேந்திரன் அடிக்கடி சுகுணா வீட்டிற்கு சென்று கள்ளத்தொடர்பை நீட்டிக்குமாறு கூறி தகராறு செய்தார். சுகுணா பிடிகொடுக்காததால் கொலை செய்து விடுவதாக மிரட்டி வீட்டில் இருந்த பொருட்களை அடித்து நொறுக்கினார்.

    இதையடுத்து, தனது உயிருக்கு ஆபத்து இருப்பதால் பாதுகாப்பு வழங்கக் கோரி சுகுணா, ராணிப்பேட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு நேற்று மாலை சென்று சுரேந்திரன் மீது புகார் அளித்தார். சுரேந்திரனிடம் போனில் பேசிய போலீசார் விசாரணைக்காக அழைத்தனர்.

    இதனால் ஆத்திரமடைந்த சுரேந்திரன், சுகுணாவை போலீஸ் நிலையத்தில் வைத்தே வெட்டி கொலை செய்ய அரிவாளை எடுத்துக் கொண்டு பைக்கில் வந்தார். அப்போது, போலீஸ் நிலைய வாசலில் சுகுணா நின்றுக் கொண்டிருந்தார்.

    சுகுணாவிடம் உன்னிடம் தனியாக பேச வேண்டும். வந்து பைக்கில் உட்காரு என்று அழைத்தார். சுகுணா பைக்கில் ஏற மறுத்தார். அப்போது ஆத்திரத்தில் இருந்த சுரேந்திரன், மறைத்து எடுத்துவந்த அரிவாளால் சுகுணாவை சரமாரியாக வெட்டினார். இதில் தலை, முகம், கழுத்தில் பலத்த வெட்டு விழுந்ததில் சுகுணா ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்து சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார்.

    இதையடுத்து, கொலைக்கு பயன்படுத்திய அரிவாளை அங்கேயே வீசி விட்டு சுரேந்திரன் பைக்கில் ஏறி தப்பிச் சென்றார். டி.எஸ்.பி. கலைசெல்வன் மற்றும் போலீசார், சுகுணாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய சுரேந்தினை பிடிக்க தீவிரம் காட்டி வருகின்றனர். பாதுகாப்பு கேட்டு வந்த பெண் போலீஸ் நிலைய வாசலில் வெட்டி கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை, பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.
    Next Story
    ×