search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பேரணாம்பட்டு அருகே 2 குட்டிகளுடன் சிறுத்தை நடமாட்டம் - கிராம மக்கள் பீதி
    X

    பேரணாம்பட்டு அருகே 2 குட்டிகளுடன் சிறுத்தை நடமாட்டம் - கிராம மக்கள் பீதி

    பேரணாம்பட்டில் 2 குட்டிகளுடன் சிறுத்தை நடமாடுவதால் கிராம மக்கள் பீதியில் உள்ளனர்.
    பேரணாம்பட்டு:

    பேரணாம்பட்டு வனச்சரத்திற்குட்பட்ட உள்ளி வனப்பகுதியையொட்டி உள்ளி, பரவக்கல், பொகளூர், செம்பேட்டு, வளத்தூர், பட்டு வாம்பட்டி, சிங்கல்பாடி, அலங்காநல்லூர் என பல்வேறு கிராமங்கள் உள்ளன. பல்லலக்குப்பம் காப்புக்காடு அருகிலேயே இருப்பதால், சிறுத்தை உள்பட பல்வேறு வனவிலங்குகள், உள்ளி வனப்பகுதிக்குள் புகுந்து சுற்றி திரிகின்றன.

    இப்படி சுற்றித்திரியும் சிறுத்தை உள்ளிட்ட வன விலங்குகள், வனப்பகுதியை சார்ந்துள்ள உள்ளி மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்களுக்குள் புகுந்து கோழி, ஆடு, மாடு உள்ளிட்ட கால் நடைகளை கொடூரமாக கடித்து வேட்டையாடி கொல்கின்றன. இதனால் கிராம மக்கள் எப்போதும் அச்சமுடன் இருக்கின்றனர்.

    வனப்பகுதியையொட்டி ஆடு, மாடுகளை மேய்ச்சலுக்கும், விறகு சேகரிக்கவும் செல்ல தயங்குகின்றனர். வனப்பகுதியையொட்டி விவசாய நிலங்கள் இருப்பதால் விவசாயம் செய்ய முடியாமல் தவிக்கின்றனர். இதனால், உள்ளி உள்ளிட்ட 8-க்கும் மேற்பட்ட கிராம மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், உள்ளி கிராமத்தை சேர்ந்த 2 பேர் இன்று காலை வனப்பகுதியை ஒட்டி சென்றனர். அப்போது சிறுத்தை உறுமும் சத்தம் கேட்டது. பீதியடைந்த அவர்கள், ஒரு பாறை அருகில் இருந்த புதரை எட்டி பார்த்தனர். 2 குட்டிகளுடன் ஒரு பெரிய தாய் சிறுத்தை படுத்திருந்தது.

    இதையடுத்து, உடனடியாக அவர்கள் கிராமத்திற்குள் ஓடி சென்று தகவல் கொடுத்தனர். சிறுத்தை ஊருக்குள் புகுந்துவிடுமோ என்ற அச்சத்தில் கிராம மக்கள், வீதியில் விளையாடிய குழந்தைகளை உடனடியாக வீட்டிற்குள் அழைத்து சென்று கதவை உள் பக்கமாக பூட்டி தஞ்சமடைந்தனர். கோழி, ஆடு, மாடுகளை பாதுகாப்பாக பட்டியில் அடைத்தனர்.

    இதுப்பற்றி பேரணாம்பட்டு வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். வனவர் முருகன் தலைமையிலான வனத்துறையினர் விரைந்து வந்தனர். சிறுத்தை நடமாடிய பகுதியை பார்வையிட்டனர். அதில், உள்ளி கிராமத்தில் இருக்கும் ரெயில்வே பாலம் அருகே உள்ள புதரில் குட்டிகளுடன் சிறுத்தை பதுங்கி இருந்தது தெரியவந்தது.

    அந்த பாலம் அருகில் ஒரு தனியார் பள்ளி உள்ளது. பள்ளிக்கு இன்று மாணவ, மாணவிகள் வந்திருந்தனர். எனவே, சுற்றித்திரியும் சிறுத்தையின் நடமாட்டத்தை வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

    Next Story
    ×