search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "kept under control"

    கல்வி, சுகாதாரம் கிடைக்க மக்கள்தொகை பெருக்கத்தை கட்டுப்பாட்டுக்குள் வைக்கவேண்டும் என்று கலெக்டர் ராமன் பேசினார்.
    வேலூர்:

    உலக மக்கள்தொகை தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது. வேலூரில் குடும்பநலத்துறை சார்பில் விழிப்புணர்வு ஊர்வலம் மற்றும் கருத்தரங்கு நடந்தது. பழைய பஸ்நிலையம் அருகே நடந்த கருத்தரங்குக்கு கலெக்டர் ராமன் தலைமை தாங்கி, போட்டிகளில் வெற்றிபெற்ற கல்லூரி மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பேசினார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    1951-ல் நடத்தப்பட்ட கணக்கெடுப்பின்படி இந்தியாவின் மக்கள் தொகை 36 கோடி. இன்று 130 கோடியாக உள்ளது. இதனால் சராசரி வயது 28 ஆக உள்ளது. இதன்காரணமாக இளைஞர்கள் அதிக அளவில் இருக்கிறார்கள். மக்கள் தொகை பெருக்கத்தை தடுக்க முடியாது. ஆனால் கட்டுப்படுத்தலாம்.

    தமிழ்நாட்டில் 8 கோடி மக்கள் உள்ளனர். ஆண்டுக்கு 11 லட்சம் குழந்தைகள் பிறக்கின்றன. மக்கள்தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்துவதில் பெண்களின் பங்கு பிரதானமாக இருக்கிறது. ஆண்களின் பங்கு குறைவாகவே இருக்கிறது. ஒரு குடும்பத்தில் 2 குழந்தைகளுக்கு மேல் 3-வது, 4-வது குழந்தை பிறப்பதை குறைக்கவேண்டும். அதற்கு பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

    மக்கள்தொகை பெருகினால் தண்ணீர், காற்று குறைந்து சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும். 2022-ம் ஆண்டில் குடிக்கக்கூட தண்ணீர் இல்லாமல் போகும் நிலை ஏற்பட வாய்ப்பு உள்ளது. 2050-ம் ஆண்டுக்கு பிறகு உணவுகூட கிடைக்காத நிலை ஏற்படும். எனவே நமக்கு தேவையான கல்வி, சுகாதாரம் தேவையான அளவு கிடைக்க மக்கள்தொகை பெருக்கத்தை கட்டுப்பாட்டுக்குள் வைக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    முன்னதாக காந்திசிலையில் இருந்து புறப்பட்ட விழிப்புணர்வு ஊர்வலத்தையும் அவர் தொடங்கி வைத்தார்.

    கருத்தரங்கில் குடும்பநலத்துறை துணை இயக்குனர் சாந்தி வரவேற்றார். அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் சாந்திமலர், சுகாதார பணிகள் துணை இயக்குனர் சுரேஷ் ஆகியோர் பேசினர். முடிவில் மாவட்ட மக்கள் கல்வி தகவல் அலுவலர் லோகநாதன் நன்றி கூறினார். 
    ×