என் மலர்
வேலூர்
வேலூர்:
கண்டக்டர் இல்லாமல் பஸ்சை இயக்குவதை கண்டித்தும். போக்குவரத்து தொழிலாளர்களை பழிவாங்கும் நடவடிக்கையை கைவிட கோரியும். போக்குவரத்து தொழிலாளர்களின் பணப்பலன்களை உடனடியாக வழங்க கோரியும். கண்டக்டர் இட ஒதுக்கீட்டை தட்டி பறிக்க கூடாது என்பன போன்ற கோரிக்கைகளை வலியறுத்தி வேலூர் ரங்காபுரத்தில் உள்ள போக்குவரத்து அலுவலகம் முன்பு போக்குவரத்து அனைத்து தொழிற் சங்க கூட்டமைப்பினர் இன்று ஆர்ப்பாட்டம் செய்தனர்.
ஆர்ப்பாட்டத்திற்கு அனைத்து தொழிற்சங்க பொதுச்செயலாளர் ரமேஷ் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் பாலகிருஷ்ணன், பரசுராமன், ராமதாஸ், மோகன்ராஜ் உள்பட 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
வேலூர்:
வேலூர் சத்துவாச்சாரி பேஸ்-5, 6-வது தெருவை சேர்ந்தவர் பாபு (வயது 31). சென்னை ஆவடியில் தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார்.
இவரது மனைவி ரேகா ஒரு பெண் குழந்தை உள்ளது. தம்பதி நேற்று இரவு 10 மணி காட்சி சினிமா பார்க்க சென்றனர். இதனை நோட்ட மிட்ட வாலிபர் ஒருவர் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்றுள்ளார். அங்கு 2 பீரோக்களில் இருந்த 25 பவுன் தங்க நகைகள், 1 கிலோ வெள்ளி பொருட்களை மூட்டை கட்டிக் கொண்டு வெளியேறினான். அந்த நேரத்தில் சினிமாவுக்கு சென்றிருந்த பாபு. அவரது மனைவி குழந்தையுடன் வீட்டுக்கு வந்தனர்.
அவர்களை கண்டதும் வாலிபர் வேகமாக ஓடினான். இதனை கண்டு திடுக்கிட்ட பாபு கூச்சலிட்டார். அக்கம் பக்கத்தினர் விரட்டி சென்றனர். ஆனால் கொள்ளையன் நகையுடன் தப்பி ஓடிவிட்டான்.
இதுகுறித்து சத்துவாச்சாரி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் புகழேந்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.
வீட்டில் இருந்து ஓடிய கொள்ளையன் அரைக்கால் டவுசர் மற்றும் முகமூடி அணிந்து வந்ததாக கூறினர். கொள்ளை நடந்த வீட்டில் கைரேகைகள் சேகரிக்கப்பட்டன. மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டது.
போலீசார் தனிப்படை அமைத்து கொள்ளையனை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் சத்துவாச்சாரியில் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
ஜோலார்பேட்டை அடுத்த பாய்ச்சல் ஜெய்பீம் நகரை சேர்ந்தவர் தம்புராஜ் மகன் முனிராஜ் (வயது34).
கடந்த ஆண்டு இவரது நண்பர் ஒருவர் அதே கிராமத்தை சேர்ந்த இளம் பெண்ணை கடத்தி சென்று விட்டார். அதற்கு முனிராஜ் உடந்தையாக இருந்துள்ளார். இதனால் இளம்பெண்ணின் உறவினர்களுக்கும் முனிராஜூக்கும் முன் விரோதம் ஏற்பட்டது.
இதையடுத்து கடந்த ஆண்டு முனிராஜை ஊரின் எல்லையில் வழி மறித்து அதே கிராமத்தை சேர்ந்த முருகன் மகன் சுதீஷ் (24) உள்பட 6 பேர் கத்தியால் வெட்டி கொலை செய்தனர்.
இது தொடர்பாக சுதீஷ் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர். சுதீஷ் கடத்தப்பட்ட இளம்பெண்ணின் உறவினராவார்.
இந்நிலையில் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு சுதீஷ் உள்பட 6 பேரும் ஜாமீனில் விடுதலையாகியுள்ளனர். விடுதலையான சுதீஷ் திருப்பூரில் தங்கி அங்குள்ள ஏற்றுமதி நிறுவனம் ஒன்றில் டெய்லராக பணிபுரிந்து வந்தார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை சொந்த ஊரான பாய்ச்சலுக்கு வந்தார். இதையறிந்த முனிராஜின் தம்பி கார்த்தி (24) கடந்த 10-ந்தேதி நடந்த முனிராஜின் திதி வழிபாட்டில் அண்ணனை கொன்றவர்களை பழி வாங்குவதாக சபதம் செய்துள்ளார்.
இந்த நிலையில் சுதீஷ் நேற்று மாலை திருப்பத்தூரில் இருந்து பைக்கில் ஜோலார்பேட்டை ராஜீவ்காந்தி மைதானம் வழியாக வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது முனிராஜின் தம்பி கார்த்திக் உள்பட 5 பேர் கும்பல் அவரை வழி மறித்து சரமாரியாக கத்தியால் வெட்டினர். இதில் தலை, கழுத்து, கை என பல இடங்களில் பலத்த வெட்டுக்காயமடைந்த சுதீஷ் ரத்த வெள்ளத்தில் அங்கேயே சரிந்து விழுந்தார்.
இதையடுத்து கார்த்தி உள்பட 5 பேரும் அங்கிருந்து தப்பி சென்றனர். இதை பார்த்த அங்குள்ளவர்கள் ரத்த வெள்ளத்தில் கிடந்த சுதீசை மீட்டு திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நள்ளிரவில் சுதீஷ் பரிதாபமாக இறந்தார்.
இந்த சம்பவம் குறித்து ஜோலார்பேட்டை இன்ஸ்பெக்டர் வெங்கடாசலம் வழக்குப்பதிவு செய்து கார்த்தி, சிவா ஆகியோரை கைது செய்தார். மேலும் 2 பேரை தேடி வருகின்றனர்.
இச்சம்பவம் ஜோலார்பேட்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #Tamilnews
வேலூர் கொணவட்டம் பகுதியில் இருந்த ஒரு பட்டாசு உற்பத்தி குடோனில் கடந்த ஏப்ரல் 7-ந் தேதி பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இச்சம்பவத்தில், பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் கவியரசன், தீபா, ஷீலா, சிவக்குமார் மற்றும் அவருடைய மனைவி புஷ்ப லதா ஆகிய 5 பேர் பரிதாபமாக இறந்தனர்.
சிவக்குமார்-புஷ்பலதா தம்பதியினருக்கு நிவேதா, நிரோஷா என்ற 2 மகள்கள் மற்றும் சீனிவாசன் என்ற ஒரு மகன் உள்ளனர். சிறு, சிறு பிள்ளைகளான இவர்கள் பெற்றோரை இழந்ததால் அரவணைக்க ஆதரவின்றி தவிக்கும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
உயிரிழந்த தம்பதியினரின் 2 மகள்கள் மற்றும் ஒரு மகன் ஆகியோருடன் பட்டாசு குடோன் வெடி விபத்தில் பலியான மற்றவர்களுடைய குடும்பத்தினரும் கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடந்த குறைதீர்வு கூட்டத்திற்கு வந்தனர்.
கலெக்டர் இல்லாததால், மாவட்ட வருவாய் அலுவலர் செங்கோட்டையனை சந்தித்து ஒரு கோரிக்கை மனுவை அளித்தனர். அந்த மனுவில், பெற்றோரை இழந்து தவிக்கிறோம். எங்களை கவனிக்க ஆளில்லை என்று கூறியிருந்த 3 குழந்தைகளும், பட்டாசு குடோன் வெடிவிபத்தில் பலியான அனைத்து குடும்பத்தினரும் அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தனர்.
ஆம்பூர் ஆலாங்குப்பம் தோப்பூர் பகுதியை சேர்ந்தவர் ஞானசேகரன். இவரது மகன் கிஷான்குமார் (வயது 20). பெயிண்டர். இவர், நேற்றிரவு 10 மணியளவில் ஆம்பூரில் இருந்து வீட்டிற்கு பைக்கில் வந்து கொண்டிருந்தார்.
சான்றோர்குப்பம் தேசிய நெடுஞ்சாலையில் வந்த போது தடுமாறி தடுப்புச்சுவர் மீது பைக் மோதியது.
இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட கிஷான்குமாருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக, 108 ஆம்புலன்ஸ் மூலம் அவர் மீட்கப்பட்டு ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி கிஷான்குமார் பரிதாபமாக இறந்துவிட்டார். தகவலறிந்து ஆஸ்பத்திரிக்கு வந்த கிஷான்குமாரின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கதறி அழுதனர்.
டாக்டர்கள் காலம் தாழ்த்தி சிகிச்சை அளித்ததால் தான் கிஷான்குமார் இறந்ததாக நண்பர்கள் சிலர் நினைத்து ஆஸ்பத்திரி கண்ணாடியை அடித்து நொறுக்கி ரகளை செய்தனர்.
இதுப்பற்றி ஆம்பூர் டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்தனர். அதற்குள் ரகளையில் ஈடுபட்ட கும்பல் தப்பி ஓடி விட்டது.
ஆஸ்பத்திரியில் கண்ணாடி உடைத்தவர்கள் யார்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் விபத்து குறித்தும் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இச்சம்பவத்தால் நள்ளிரவில் பரபரப்பு ஏற்பட்டது.
ஆம்பூரில் வாலிபர்கள் ரேசில் கலந்து கொள்வது போல் பைக்கை அதிவேகமாக ஓட்டி செல்வதால் அடிக்கடி விபத்து நடப்பதாக பொதுமக்கள் கூறுகின்றனர். ‘இளங்கன்று பயமறியாது’ என்பதற்கேற்ப பைக்கை ஜிக் ஜாக் (பாம்பை போல நெளிவது) செய்தும், பைக் ஸ்டாண்டை சாலையில் உரசி தீப்பொறி பறக்கவிட்டும் செல்வதால் வாகன ஓட்டிகள் எரிச்சலடைகின்றனர்.
விபத்துகள் ஏற்பட்டு அதிக உயிரிழப்பும் நிகழ்கின்றன.எனவே, அதிவேகமாக பைக்குகளை ஓட்டி செல்லும் வாலிபர்கள் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே விபத்துகளை கட்டுப்படுத்த முடியும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். tamilnews
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் அடுத்த ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சி அருகே வெற்றிவேல் முருகர் கோவில் உள்ளது. இக்கோவிலில் புகுந்த மர்ம நபர்கள், 2 உண்டியல்களை உடைத்து அதில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய நகை, பணத்தை கொள்ளையடித்துக் கொண்டு தப்பி சென்றனர்.
இச்சம்பவம் குறித்து கோவில் அறங்காவலர் நாகராஜ், குரிசிலாப்பட்டு போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
ஆம்பூர்:
ஆம்பூர் அடுத்த வடகரை கிராமத்தை சேர்ந்தவர் பிரகாசம். முடி திருத்தும் தொழிலாளி. இவருடைய மனைவி கண்ணகி (வயது 40). இவர்களுக்கு 20 ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது. ஒரு மகள் உள்ளார்.
இந்த நிலையில், ஆண் வாரிசுக்காக 2-வது திருமணம் செய்ய பிரகாசம் முடிவு செய்தார். இதற்கு, மனைவி கண்ணகி எதிர்ப்பு தெரிவித்தார்.
இதுதொடர்பாக அடிக்கடி கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்று முன்தினம் நள்ளிரவு தூக்கில் தொங்கிய நிலையில் கண்ணகி மர்மமாக இறந்து கிடந்தார்.
பிரகாசம் நேற்று காலை அக்கம், பக்கத்தினர் மற்றும் உறவினர்களிடம் மனைவி கண்ணகி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறினார்.
இதையடுத்து, உறவினர்கள் கூடி உடலை எரிப்பதற்கான இறுதி சடங்கு ஏற்பாடுகளை செய்தனர். உடலை பாடை கட்டி தூக்கி சென்றனர்.
இதுப்பற்றி கண்ணகியின் அண்ணன், உமராபாத் போலீசில் புகார் அளித்தார். போலீசார் விரைந்து வந்து உடலை மீட்டு பிரேத பரி சோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும், இதுசம்பந்தமாக கிராம நிர்வாக அலுவலர் கொடுத்த புகாரின் பேரில் மனைவி உடலை ரகசியமாக எரிக்க முயன்றது உள்ளிட்ட 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.
மேலும், 2-வது திருமண ஆசையில் கண்ணகி கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்தும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
அம்பத்தூரை சேர்ந்த இந்து முன்னணி மாவட்ட தலைவர் சுரேஷ்குமார், 2014-ம் ஆண்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில், ஜாபர் சாதிக் (வயது 31), நசீர் ஜலாஉதின் (33), அசானுல்லா (45) உள்பட சிலர் கைது செய்யப்பட்டு பூந்தமல்லி ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில் சிறைத்துறை நிர்வாக வசதிக்காக, ஜாபர் சாதிக், நசீர் ஜலாஉதின் மற்றும் அசானுல்லா ஆகிய 3 பேரும் வேலூர் ஜெயிலுக்கு மாற்றப்பட்டனர். பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டு வேலூர் மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.
அரக்கோணம் ஜி.கே.என். நகரை சேர்ந்தவர் சேகர் (வயது 49). தொழிலதிபரான இவர், அதே பகுதியில் அரிசி ஆலை வைத்துள்ளார். நேற்று இரவு அரிசி ஆலையில் இருந்து அரக்கோணம்-திருத்தணி ரோட்டில் வீட்டிற்கு நடந்து வந்து கொண்டிருந்தார்.
பங்காரம்மா கண்டிகையில் வந்த அவரை 4 பேர் கும்பல் திடீரென வழி மறித்து அரிவாளால் சரமாரியாக வெட்டினர். தலையில் பலத்த வெட்டு விழுந்து ரத்தம் கொட்டியது.
உயிரை காப்பாற்றி கொள்வதற்காக சேகர் தப்பி ஓடினார். 4 பேர் கும்பலும் விடாமல் கொலை வெறியுடன் விரட்டினர். பொதுமக்கள் நடமாட்டம் இருந்ததால், மர்ம கும்பல் சேகரை விட்டுவிட்டு தப்பி ஓடி விட்டது.
பொதுமக்கள் சேகரை மீட்டு அரக்கோணம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அவரது நிலைமை கவலைக்கிடமாக இருந்ததால் மேல்சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இச்சம்பவம் தொடர்பாக அரக்கோணம் டவுன் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார், கொலை முயற்சி வழக்குப்பதிந்து சந்தேகத்தின் பேரில் 2 பேரை பிடித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆம்பூர்:
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகா ராடசமுத்திரம் பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 40). சொந்தமாக வேன் வாங்கி டிரைவராக டிராவல்ஸ் நடத்தி வருகிறார்.
இவர் மனைவி மற்றும் உறவினர்களோடு சேர்த்து 25 பேர் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு நேற்றிரவு வேனில் புறப்பட்டனர்.
சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் இன்று காலை வேன் வந்து கொண்டிருந்தது. ஆம்பூர் அடுத்த பச்சக்குப்பம் என்ற இடத்தில் வேன் சென்ற போது கட்டுப்பாட்டை இழந்து தடுப்புச் சுவர் மீது மோதி சாலை அருகே இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது.
இதில் சிவக்குமார் (வயது 29), பிரவீன்(20), ராமகிருஷ்ணன் (40), பழனியம்மாள் (32), இந்திராணி (50), பிரகாஷ் (19), விஜயராஜ் (26), ராஜசேகர் (26), அம்மையப்பன் (44), தனம் (43), ராஜேஸ்வரி (47), மலர்விழி (21), அழகர்சாமி (60), கோமதி (40) ஆகியோர் படுகாயமடைந்தனர்.
இது குறித்து தகவலறிந்த ஆம்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இடுபாடுகளில் சிக்கி படுகாயமடைந்தவர்களை மீட்டு ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தால் நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
‘திருமலை- திருப்பதி தேவஸ்தானத்தில் எந்தவித முறைகேடும் நடக்கவில்லை’ என்று அறங்காவலர் குழு தலைவர் புட்டாசுதாகர்யாதவ் தெரிவித்தார்.
வேலூர் வெங்கடேஸ்வரா மேல்நிலைப்பள்ளியில் முன்னாள் மாணவர்கள் தின விழா நேற்று நடந்தது. விழாவிற்கு முன்னாள் மாணவர்கள் சங்க தலைவரும், வி.ஐ.டி.யின் (சென்னை) துணைத் தலைவருமான சங்கர் விசுவநாதன் தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியர் ராமமூர்த்தி வரவேற்றார். சிறப்பு விருந்தினராக திருமலை - திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் புட்டாசுதாகர்யாதவ் கலந்து கொண்டு குத்து விளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்து பேசினார்.
அப்போது அவர், திருமலை-திருப்பதி தேவஸ்தான கட்டுப்பாட்டில் வேலூர், டெல்லி ஆகிய 2 இடங்களில் தான் பள்ளிகள் உள்ளது. இந்த பள்ளியின் வளர்ச்சிக்காக முன்னாள் மாணவர்கள் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள். இப்பள்ளியில் படித்தவர்கள் பலர் உயர்ந்த பதவிகளில் உள்ளனர். பள்ளிக்கு தேவையான வகுப்பறை, விளையாட்டு மைதானம் போன்ற வசதிகள் ஏற்படுத்தி தருவதற்கான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது என்றார்.
பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் அளித்த காணிக்கை திருட்டு போகவில்லை. திருட்டு போனதாக அர்ச்சகர் கூறுவது பொய். அவர் பணியில் இருக்கும்போது கூறவில்லை. ஓய்வுபெற்ற பின் ஏன் புகார் கூறுகிறார்?. மேலும் அவர் சென்னை, டெல்லி போன்ற பல கிலோ மீட்டர் தூரத்தில் இருந்து பேட்டி அளிக்கிறார். அருகில் இருக்கும் எங்களிடம் ஏன் அவர் புகார் கூறவில்லை? என்று தெரியவில்லை. தேவஸ்தானத்தில் எந்தவித முறைகேடும் நடக்கவில்லை. 1952-ம் ஆண்டு முதல் ஆவணங்கள் சரியான முறையில் உள்ளது. புகார் கூறினால் ஏழுமலையான் தண்டிப்பார்.
தற்போது ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக ரூ.79 கோடி செலவில் தங்குமிடம் அமைக்கப்பட உள்ளது. 2 மணி நேரத்தில் பக்தர்கள் தரிசனம் செய்ய சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
முதியோர் செல்ல, பேட்டரி கார்கள் அதிகப்படுத்தப்படும். வேலூரில் தேவஸ்தானம் சார்பில் கல்லூரி தொடங்க பரிசீலனை செய்யப்படும். பக்தர்களுக்கு வழங்கும் லட்டு எண்ணிக்கையை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
வேலூர் மாவட்டம் பனப்பாக்கம் அருகே உள்ள காட்டுப்பாக்கம் மேலூர் கிராமத்தை சேர்ந்தவர் மாசிலாமணி (வயது 69). ஓய்வுபெற்ற வனக்காவலர். இவருடைய மகன் சாந்தசீலன் (40). இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர்.
சாந்தசீலன் மனைவி மற்றும் குழந்தைகளுடன் அதே பகுதியில் உள்ள மாமியார் வீட்டில் தங்கியிருந்தார். இதனால், ஓய்வுபெற்ற வனக்காவலர் மாசிலாமணி மட்டும் தனியாக தன்னுடைய வீட்டில் வசித்து வந்தார்.
இந்த நிலையில், தந்தை மாசிலாமணியிடம் ரூ.2 லட்சம் பணம் கேட்டு சாந்த சீலன் தொந்தரவு செய்து வந்தார். மாசிலாமணி பணம் தர முடியாது என்றதால் சாந்தசீலன் தினமும் இரவில் குடித்துவிட்டு வந்து தகராறு செய்து வந்தார்.
நேற்றிரவும் குடித்துவிட்டு போதையில் வந்த சாந்தசீலன் ரூ.2 லட்சம் கொடுக்க மறுத்த தந்தை மாசிலாமணியை அடித்து, உதைத்தார். மேலும் ஆத்திரம் அடங்காமல் அரிவாளால் சரமாரியாக வெட்டினார்.
இதில் தலை மற்றும் கழுத்தில் வெட்டு விழுந்ததில் மாசிலாமணி ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்து சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார்.
இதையடுத்து, அங்கிருந்து சாந்தசீலன் தப்பி ஓடி விட்டார். இன்று காலையில், நண்பர்களுக்கு போன் செய்து தந்தையை வெட்டிவிட்டேன். அவர் என்ன நிலையில் இருக்கிறார்? என்று பார்க்க சொன்னார்.
நண்பர்கள் சென்று பார்த்த போது, மாசிலாமணி கொல்லப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இத்தகவல் பரவியதையடுத்து அப்பகுதி மக்கள் திரண்டனர். தகவலறிந்த பாணாவரம் போலீசாரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
மாசிலாமணியின் உடலை பார்வையிட்டு, பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து தந்தையை கொன்ற சாந்தசீலனை வலை வீசி தேடி வருகின்றனர். #tamilnews






