என் மலர்
வேலூர்
ஆம்பூர் அருகே உள்ள பெரியாங்குப்பத்தில் தனியார் மெட்ரிக் பள்ளி உள்ளது. இந்த பள்ளி பஸ் டிரைவராக மின்னூரை சேர்ந்த அன்பு (வயது 55) பணியாற்றி வருகிறார்.
இன்று காலை டிரைவர் அன்பு குடிபோதையில் பணிக்கு வந்ததாக கூறப்படுகிறது. மேல்சானாங்குப்பம் கிராமத்தில் பள்ளி குழந்தைகளை ஏற்றி கொண்டு பஸ்சை ஓட்டி வந்தார். அப்போது பஸ் தாறுமாறாக ஓடியது.

இதனைக் கண்ட பொதுமக்கள் பஸ் டிரைவரை அடித்து உதைத்தனர்.
அவர்களுடன் சேர்ந்து பள்ளி மாணவிகளும் டிரைவரை தாக்கினர். இதுபற்றி தகவலறிந்த ஆம்பூர் தாலுகா போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று டிரைவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
தமிழகத்தில் 2019 ஜனவரி 1-ந் தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தவும், தயாரிக்கவும் தமிழக அரசு தடை விதித்துள்ளது. இதுதொடர்பாக, வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் இன்று ஆலோசனை கூட்டம் நடந்தது.
கலெக்டர் ராமன் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் செங்கோட்டையன், உதவி கலெக்டர் மேகராஜ், மாசு கட்டுப்பாடு வாரிய அலுவலர் பாரதிதாசன் உள்பட துறை சார்ந்த அதிகாரிகள் பலர் கலந்துக் கொண்டனர்.
கூட்டத்தில் கலெக்டர் பேசியதவாது:-
பிளாஸ்டிக் பொருட்களுக்கான தடை குறித்து பொதுமக்களிடம் உள்ளாட்சி அமைப்புகள் விழிப்புணர்வு பிரசாரம் செய்ய வேண்டும். பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டால் ஏற்படும் தீமைகள் குறித்து விளக்க வேண்டும்.
துணி பைகள், காகித உறை போன்ற மக்கும் பிளாஸ்டிக் பொருட்களையே பொதுமக்கள் பயன்படுத்த வேண்டும். அடுத்த ஆண்டு ஜனவரி 1-ந் தேதிக்கு பிறகு யாரும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக் கூடாது.
பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு, விற்பனை குறித்து தெரியவந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் ராமன் எச்சரித்தார். #Plasticban
வேலூர் மாவட்டம் ஆற்காடு கலவை அடுத்த மேல்புதுப்பாக்கம் புளியந்தோப்பு தெருவை சேர்ந்தவர் ஏழுமலை (வயது 55). இவர், போளூரை சேர்ந்த சுப்பிரமணி மகன் சங்கர் (35) என்பவருக்கு தனது மகள் மலரை திருமணம் செய்து கொடுத்தார்.
திருமணத்திற்கு பிறகு, சங்கர் மாமனார் வீட்டிலேயே தங்கிவிட்டார். இவர்களுக்கு 2 பிள்ளைகள் உள்ளனர். இந்தநிலையில், சங்கர் சில நாட்களாக சென்னையில் தங்கி கூலி வேலை செய்து வருகிறார். வாரம் ஒருமுறை வீட்டிற்கு வந்து சென்றார்.
இதற்கிடையே மாமனார், மருமகனிடையே சொத்து தகராறு ஏற்பட்டது. கடந்த 4 நாட்களுக்கு முன்பு மருமகன் மீதான ஆத்திரத்தில் மனைவி மற்றும் மகளை ஏழுமலை வீதியில் விரட்டி விரட்டி தாக்கினார்.
ஊருக்கு வந்த சங்கர், நேற்று இரவு மாமனாரிடம் மோதலில் ஈடுபட்டார். உருட்டுக்கட்டையால் மாமனார் என்றும் பார்க்காமல் கொடூரமாக தாக்கினார். தலையில் பலத்த காயம் ஏற்பட்டத்தில் ஏழுமலை சுருண்டு விழுந்தார்.
உயிருக்கு ஆபத்தான நிலையில் 108 ஆம்புலன்ஸ் மூலம் ஏழுமலை மீட்கப்பட்டு ஆரணி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு நள்ளிரவு சிகிச்சை பலனின்றி ஏழுமலை பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுதொடர்பாக வாழபந்தல் போலீசார், கொலை வழக்குப்பதிந்தனர். மாமனார் இறந்ததையறிந்த சங்கர் தலைமறைவானார். போலீசார் அவரை பிடிக்க தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தினர்.
இன்று காலை திமிரியில் இருந்து வெளியூருக்கு தப்பி செல்வதற்காக கலவை செல்லும் சாலையில் உள்ள கனியனூர் பஸ் நிறுத்தம் அருகே பதுங்கியிருந்த சங்கரை போலீசார் சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தனர்.
முதற்கட்ட விசாரணையில், கள்ளத்தொடர்பு விவகாரத்தில் ஏற்கனவே, மாமனார், மருமகனிடையே முன்விரோதம் இருந்ததும் தெரியவந்துள்ளது. இன்ஸ்பெக்டர் கோவிந்தசாமி மற்றும் போலீசார், சங்கரிடம் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
ராணிப்பேட்டை சிப்காட் தொழிற்பேட்டை அருகே மத்திய பொதுத்துறை மின்மிகு உற்பத்தி நிறுவனமான பெல் இயங்கி வருகிறது. இந்த நிறுவனம் தொடங்குவதற்கு, சுமார் 124 விவசாயிகளிடம் இருந்து பல ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது.
நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு பெல் நிறுவனத்தில் வேலை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. அதன்படி, 109 பேருக்கு வேலை வழங்கப்பட்டது. கல்வி உள்ளிட்ட தகுதி அடிப்படையில் 15 பேருக்கு வேலை வழங்கப்படவில்லை.
அந்த 15 பேரும் தங்களுக்கு வேலை வழங்க வேண்டும் என கடந்த 30 ஆண்டுகளாக குடும்பத்துடன் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். ஆனால், பெல் நிறுவனம் வேலை வழங்க முன்வரவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த 15 பேரில் 4 பேர் இன்று காலை பெல் நிறுவனத்தின் முன்பு உள்ள செல்போன் டவரில் மண்எண்ணை கேனுடன் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தனர்.
தகவலறிந்ததும், ராணிப்பேட்டை உதவி கலெக்டர் வேணுசேகரன், வாலாஜா தாசில்தார் விஜயகுமார், ராணிப்பேட்டை இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையிலான சிப்காட் போலீசார், தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்தனர்.
செல்போன் டவர் மேல் இருந்த 4 பேரையும் சமரசம் செய்து கீழே வரவழைத்தனர். விசாரணையில், சிப்காட் புளியந்தாங்கல் ஏரிக்கோடி பகுதியை சேர்ந்த முனுசாமி (வயது 44), பாலு (38) மற்றும் லாலாபேட்டையை சேர்ந்த சம்பத் (40), பாஸ்கர் (45) ஆகியோர் என்பது தெரிய வந்தது.
தற்கொலை மிரட்டல் விடுத்த 4 பேரிடமும் உதவி கலெக்டர், தாசில்தார் மற்றும் போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும், பெல் நிறுவனத்திடம் அவர்களுக்கு வேலை வழங்குவது பற்றியும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
இச்சம்பவத்தால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு காணப்பட்டது. #tamilnews
வேலூர்:
லாரிகள் வேலை நிறுத்தப் போராட்டம் காரணமாக, வேலூர் நேதாஜி மார்க்கெட்டுக்கு காய்கறிகளின் வரத்து குறைய ஆரம்பித்துள்ளது. வேலை நிறுத்த போராட்டம் தொடர்ந்தால் விரைவில் காய்கறி விலை உயரும் என்று வியாபாரிகள் கூறுகின்றனர்.
நாடு முழுவதும் டீசல் விலையை ஜி.எஸ்.டிக்குள் கொண்டு வரவேண்டும். நாடு முழுவதும் சுங்க சாவடி கட்டண உயர்வை கண்டிப்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி லாரி உரிமையாளர்கள் தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.
அதன்படி, வேலூர் மாவட்ட லாரி உரிமையாளர்களும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். இதனால் வேலூர் மாவட்டத்தில் 20 ஆயிரம் லாரிகள் ஓடவில்லை. சரக்கு வாகன போக்குவரத்து சேவை முடங்கியுள்ளது.
வெளிமாநிலங்களில் இருந்து வேலூர் மாவட்டத்துக்கு வரும் காய்கறி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் வரத்தும் குறைய ஆரம்பித்துள்ளது.
வேலூர் மாவட்டத்தில் 98 சதவீதம் லாரிகள் ஓடவில்லை. காட்பாடி அருகேயுள்ள தமிழக ஆந்திர மாநில எல்லையில் உள்ள சோதனை சாவடியில் 2 சதவீத வாகனங்கள் மட்டும் கடந்து சென்றுள்ளது.
அத்தியாவசிய உணவுப் பொருட்களை ஏற்றிச் செல்லும் ஒரு சில வாகனங்கள் மட்டும் வந்து செல்கின்றன.
வேலூர் நேதாஜி மார்க்கெட்டில் இருந்து 5 மாட்டங்களுக்கு காய்கறி வியாபாரம் நடைபெறும். லாரிகள் வேலை நிறுத்தப் போராட்டம் காரணமாக நேதாஜி மார்க்கெட்டுக்கு காய்கறி லாரிகளின் வரத்து குறைய ஆரம்பித்துள்ளது.
இருப்பில் உள்ள வெங்காயம், பூண்டு, தக்காளி உள்ளிட்ட காய்கறிகள் மட்டுமே சந்தையில் விற்பனைக்கு வந்துள்ளது.
ஆந்திராவில் இருந்து தக்காளி, கர்நாடகாவில் இருந்து காய்கறிகள் மகாராஷ்டிராவில் இருந்து வெங்காயம், உத்தரபிரதேசம், மத்திய பிரதேசத்தில் இருந்து பூண்டு வரத்து வழக்கமாக இருக்கும். சீசன் காரணமாக தற்போது ஆக்ராவில் இருந்து உருளை கிழக்கு வந்து கொண்டிருக்கிறது.
லாரிகள் வேலை நிறுத்தத்தால் ஏற்கனவே கொண்டு வந்து கொண்டிருந்த லோடுகள் மட்டும் மார்க்கெட்டுக்கு வந்துள்ளது. புதிதாக சரக்குகள் ஏற்றிய லாரிகள் வரவில்லை. தற்போதைய நிலையில் காய்கறிகளின் விலையில் எந்த மாற்றமும் இல்லை.
நாளையில் இருந்து காய்கறிகளின் விலையில் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது.
லாரிகள் வேலை நிறுத்தம் தொடர்வதால் காய்கறிகளின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.
இதனால் பொது மக்கள் அசைவத்திற்கு மாறியுள்ளனர். வேலூர் புதிய மீன் மார்க்கெட்டில் மீன்களை வாங்க பொதுமக்கள் இன்று குவிந்தனர். #LorryStrike
வேலூர்:
காட்பாடி ரெயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் செல்வராஜ், குற்ற புலனாய்வு பிரிவு இன்ஸ்பெக்டர் (சென்னை) அழகர்சாமி, திருச்சி ரெயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் ஆகியோர் தலைமையிலான பாதுகாப்பு படையினர் காட்பாடி, வேலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இயங்கி வரும் தனியார் டிக்கெட் புக்கிங் ஏஜெண்டுகளை கடந்த சில நாட்களாக ரகசியமாக கண்காணித்து வந்தனர்.
அப்போது, வேலூர் சாய்நாதபுரத்தில் உள்ள ஒரு வீட்டில் போலியான ரெயில் முன்பதிவு டிக்கெட், ஏ.சி. படுக்கை வசதி கொண்ட டிக்கெட்டுகள் தயாரித்து விற்பனை செய்வதாக தகவல் கிடைத்தது. அதன்பேரில் ரெயில்வே பாதுகாப்பு படையினர் அந்த வீட்டிற்கு சென்று அதிரடி சோதனை செய்தனர். அங்கு ஐ.ஆர்.சி.டி.சி. சாப்ட்வேரை போலியாக உருவாக்கி, அதன் மூலம் போலி ரெயில் டிக்கெட் தயாரிப்பது தெரிய வந்தது.
இதையடுத்து அதேபகுதியை சேர்ந்த அரவிந்த் (வயது 26) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து ரூ.1 லட்சத்து 17 ஆயிரம் மதிப்புள்ள 25 போலியான ரெயில் முன்பதிவு டிக்கெட்டுகள் மற்றும் கணினி, பிரிண்டர்கள், பேப்பர் ரோல் ஆகியவற்றை பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #Faketrainticket
காட்பாடி பிரம்மபுரம் பகுதியை சேர்ந்தவர் சேகர் (வயது 62). உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த இவர், நாட்டு வைத்தியம் பார்ப்பதற்காக மனைவி மற்றும் உறவினர்களுடன் கர்நாடகா மாநிலத்திற்கு காரில் சென்றிருந்தார். இவரது மகன் சசிகுமார் காரை ஓட்டினார். வைத்தியம் பார்த்துவிட்டு நேற்று காலை காட்பாடிக்கு வந்து கொண்டிருந்தனர்.
காட்பாடி - திருவலம் சாலையில் அவருடைய வீட்டின் அருகே வந்தபோது திடீர் என்று கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவே உள்ள உயர்கோபுர மின்கம்பத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் சேகர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். அவருடைய மனைவி மோகனா, மகன் சசிகுமார் மற்றும் தமிழரசன் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து காட்பாடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மனோகரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
18 சதவீத வரிவிதிப்புடன் பெட்ரோல், டீசல் விலையை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டுவர வேண்டும். நாடு முழுவதும் பெட்ரோல், டீசலுக்கு ஒரே சீரான விலையை நிர்ணயிக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் 20-ந் தேதி முதல் லாரிகள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி. நேற்று வேலை நிறுத்த போராட்டம் தொடங்கியது.
இந்த வேலை நிறுத்த போராட்டத்திற்கு வேலூர் லாரி உரிமையாளர்கள் சங்கம் ஆதரவு அளித்துள்ளது. இதனால் வேலூர் மாவட்டத்தில் 20 ஆயிரம் லாரிகள் ஓடாது என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் பல்வேறு காரணங்களால் 20 சதவீதம் லாரிகள் ஓடியதாகவும், 80 சதவீத லாரிகள் ஓடவில்லை என்றும் லாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.
வேலூர் மார்க்கெட்டிற்கு ஒரு நாளைக்கு சுமார் 10 லாரிகளில் காய்கறிகள் கொண்டுவரப்படும். அதன்படி இன்று காலையில் சில லாரிகளில் காய்கறிகள் கொண்டுவரப்பட்டது. வெளிமாநிலங்களில் இருந்து பருப்பு, உணவு பொருட்கள், கட்டுமான பொருட்கள் போன்றவை வரவில்லை. அதே போன்று வேலூரில் இருந்து வெளிமாநிலங்களுக்கு பொருட்களை கொண்டு செல்ல பதிவு செய்யப்படவில்லை.
அனைத்து லாரிகளும் காட்பாடி ரோட்டில் உள்ள கிறிஸ்டியான்பேட்டை மற்றும் சேர்க்காடு பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த லாரி வேலை நிறுத்த போராட்டம் காரணமாக வேலூர் மாவட்டத்தில் ரூ.5 கோடி முதல் ரூ.10 கோடி வரையில் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மூட்டைத்தூக்கும் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் வணிகர்கள் தெரிவித்தனர்.
காய்கறி லாரிகள் வரத்து குறைவாக வந்துள்ளதால் இன்று கணிசமாக விலை உயர்ந்துள்ளது. #LorryStrike
வேலூர்:
அணைக்கட்டு பகுதியில் பஸ் நிலையம் அமைக்க வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வருகிறது. ஆனால் பஸ் நிலையம் அமைப்பதற்கான இடவசதி அங்கு இல்லை என்பதால் கோரிக்கை கிடப்பில் போடப்பட்டது. இதனால் அணைக்கட்டு பஸ் நிறுத்தத்தில் மழை, வெயிலுக்கு கூட ஒதுங்கவும் இடம் இல்லாமல் பயணிகள் தவித்தனர்.
இதற்கிடையில் பஸ்கள் வந்து நின்று செல்லும் அளவுக்கு பஸ் நிறுத்தம் கட்டப்பட்டு வருகிறது. அணைக்கட்டு சட்டபேரவை உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து இந்த பணி நடைபெறுகிறது.
அதன்படி ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் பயணிகள் காத்திருப்பு அறை மற்றும் பஸ்கள் நின்று செல்ல சிமெண்ட் தளம் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த பணிகளை நந்தகுமார் எம்.எல்.ஏ. நேற்று ஆய்வு செய்தார.
அப்போது 10 நாட்களுக்குள் கட்டுமானப் பணிகளை முழுமையாக முடிக்க வேண்டும் என்று ஒப்பந்ததாரருக்கு அவர் உத்தரவிட்டார்.
மேலும் பஸ் நிறுத்தத்தில் ரூ.5 லட்சம் செலவில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு எந்திரத்தை நிறுவவும் ஏற்பாடு செய்துள்ளார். அணைக்கட்டு கிழக்கு ஒன்றிய துணை செயலாளர் கிருஷ்ணமேனன்,மாவட்ட பிரதிநிதி அஸ்லாம்,மாவட்ட விவசாய தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் பழனி, அணைக்கட்டு ஊராட்சி செயலாளர் மணி, குடியாத்தம் நகர பொறுப்பாளர் சவுந்தரராஜன், கே.வி.குப்பம் கிழக்கு ஒன்றிய பொருளாளர் சிட்டிபாபு மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் உடன் இருந்தனர். #Busstop #MLA
வேலூர்:
18 சதவீத வரிவிதிப்புடன் பெட்ரோல், டீசல் விலையை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டுவர வேண்டும். நாடு முழுவதும் பெட்ரோல், டீசலுக்கு ஒரே சீரான விலையை நிர்ணயிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் இன்று முதல் லாரிகள் கால வரையற்ற வேலை நிறுத்தம் செய்கின்றன.
இந்த வேலை நிறுத்த போராட்டத்திற்கு வேலூர் லாரி உரிமையாளர்கள் சங்கம் ஆதரவளித்துள்ளது. சங்க தலைவர் செல்வக்குமார் தலைமையில் வேலை நிறுத்தம் குறித்து நேற்று லாரிகளில் ஸ்டிக்கர் ஒட்டினர்.
இன்று காலை 6 மணி முதல் லாரிகள் வேலை நிறுத்தம் தொடங்கியது. தேசிய நெடுஞ்சாலையில் வெளிமாநில லாரிகள் சில ஓடின.
வேலூர் மாவட்டத்தில் சுமார் 20ஆயிரம் லாரிகள் வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்றுள்ளன. இந்த லாரிகள் அனைத்தும் ஓடவில்லை.
தமிழக- ஆந்திர எல்லையில் உள்ள கிறிஸ்டியான் பேட்டை, சேர்க்காடு பகுதிகளில் லாரிகள் வரிசையாக நிறுத்தப்பட்டுள்ளன.
கால வரையற்ற வேலை நிறுத்த போராட்டத்திற்கு ஆதரவாக வரும் 22-ந் தேதி பொதுமக்களும் தங்களின் வாகனத்தை இயக்காமல் அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும். என லாரி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
வேலூர் மாவட்டத்தில் சுமார் 20 ஆயிரம் லாரிகள் ஓடாததால் பல கோடி வர்த்தகம் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. வேலூர் மாவட்டத்தில் இருந்து வெளி மாநிலங்களுக்கான சரக்கு ‘புக்கிங்’கும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
லாரிகள் ஸ்டிரைக்கால் காய்கறி, பால் உள்பட அத்தியா வசிய பொருட்கள் விலை உயர்வதோடு, தட்டுப்பாடு அதிகரிக்கும். இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்.
நேதாஜி மார்க்கெட்டுக்கு நேற்று இரவு லாரிகளில் சரக்குகள் வந்தன இதனால் இன்று காலை முதலே பொதுமக்கள் ஏராளமானோர் வேலூர் மார்க்கெட்டுகளில் முண்டியத்து தேவையான அத்தியாவசிய பொருட்களை வீடுகளுக்கு வாங்கி கொண்டு செல்கின்றனர்.
இதனால் லாங்கு பஜார், மண்டி வீதிகளில் கூட்டம் அலை மோதியது.
ஜோலார்பேட்டை அடுத்த பாச்சல் கிராமம் வள்ளுவர் நகரை சேர்ந்தவர் முனிராஜ் (வயது 34). இவரை கடந்த ஆண்டு முன்விரோத தகராறில் 6 பேர் கொண்ட கும்பல் வெட்டி கொலை செய்தனர்.
இது தொடர்பாக கைது செய்யப்பட்ட சுதீஷ் உள்பட 6 பேரும் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு ஜாமீனில் வெளி வந்தனர். பின்பு சுதீஷ் திருப்பூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் டெய்லராக வேலை பார்த்து வந்தார்.
இதற்கிடையே முனிராஜின் தம்பி கார்த்தி (24) கடந்த 10ந் தேதி நடந்த முனிராஜின் திதி வழிபாட்டின் போது அண்ணனை கொன்றவர்களை பழி வாங்குவதாக சபதம் எடுத்தார்.
இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்த சுதீஷை கார்த்திக் உள்பட 5 பேர் கும்பல் வழி மறித்து கத்தியால் சரமாரியாக வெட்டினர். இதில் படுகாயமடைந்த சுதீஷை அங்கிருந்தவர்கள் மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே சுதீஷ் இறந்தார்.
இது குறித்து ஜோலார் பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து கார்த்தி அவரது நண்பர் சிவா(27) ஆகியோரை கடந்த 17ந் தேதி கைது செய்தனர்.
மேலும் தலைமறைவாக இருந்த நந்தகுமார் (23), சிலம்பரசன் (25), தங்கபாலு (24) ஆகிய 3 பேரை நேற்று மாலை போலீசார் கைது செய்து திருப்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
காட்டுயானைகளை விரட்ட முயன்ற வனத்துறையினரை ஒரு காட்டு யானை துரத்தியது. அவர்கள் தப்பி ஓடி உயிர்தப்பினர்.
ஜங்கமூரை சேர்ந்த பட்டாபி என்பவருக்கு சொந்தமான மாந்தோப்பில் புகுந்து அங்கு மாமரங்களை சேதப்படுத்தி மாமரக் கிளைகளை முறித்தது. பின்னர் அருகிலுள்ள குபேந்திரன் என்கிற விவசாயிக்கு சொந்தமான நிலத்தில் இருந்த 8 கல் கம்பங்களை பிடுங்கி சாய்த்தும், கார்த்திக் என்பவர் நிலத்தில் பயிரிடப்பட்டிருந்த கரும்பு பயிரை மிதித்து சேதப்படுத்தியது.
இப்பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்து வந்த மழையை நம்பி பயிரிட்டால் விவசாய பயிர்களை கடந்த சில நாட்களாக யானைக் கூட்டமானது தொடர்ந்து சேதப்படுத்தி கொண்டு வருவதை பார்த்த விவசாயிகள் கண்ணீர் விட்டு கதறினர்.
பேரணாம்பட்டு வனசரகர் மூர்த்தி தலைமையில் வனவர்கள் ரவீந்திரன், ரகுபதி ஆகியோர் வனகாப்பாளர்கள் திருநாவுக்கரசு ரவி, நவீன் ஆகியோர் ஜங்கமூர் கிராமத்திற்கு சென்று அட்டகாசம் செய்து கொண்டிருந்த காட்டு யானைகள் கூட்டத்தை அருகிலுள்ள குண்டல பல்லி வனப்பகுதிக்கு பட்டாசு வெடித்து விரட்டினர்.
அப்போது கூட்டத்திலிருந்து ஒரு யானை திடீரென பிளிறியவாறு வனத்துறையினரை நோக்கி திரும்பி துரத்தியது. இதனால் அதிர்ச்சியடைந்த வனத்துறையினர் வனப்பகுதிக்குள் சென்று உயிர்தப்பினர்.






