என் மலர்
வேலூர்
காவேரிப்பாக்கம் ஒன்றியம் பாணாவரம் கிராமத்தில் உள்ள திடீர் நகர் பகுதியில் கடந்த சில நாட்களாக குடிநீர் வினியோகம் செய்யவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டு வந்தனர். இதனால் தினமும் குடிநீருக்காக காலை நேரத்தில் நீண்ட தூரம் நடந்து சென்று அருகே உள்ள விவசாய கிணற்றில் இருந்து தண்ணீர் எடுத்து வருகின்றனர்.
இதுகுறித்து திடீர் நகரை சேர்ந்த பொதுமக்கள் பாணாவரம் ஊராட்சி நிர்வாகத்திடமும், காவேரிப்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலரிடமும் பலமுறை கோரிக்கை மனு அளித்துள்ளனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரம் அடைந்த 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் நேற்று காலை 8 மணிக்கு பாணாவரத்தில் இருந்து நெமிலி செல்லும் சாலையில் முத்துமாரியம்மன் கோவில் அருகே காலி குடங்களுடன் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த பாணாவரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குமார் மற்றும் போலீசார் விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது பொதுமக்கள் போலீசாரை முற்றுகையிட்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘திடீர் நகர் பகுதியில் 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகிறோம். இப்பகுதியில் அடிக்கடி குடிநீர் பிரச்சினை ஏற்படுகிறது. கடந்த ஏப்ரல் மாதம் 16-ந் தேதி காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டோம். பின்னர் அதிகாரிகள் நேரில் வந்து குடிநீர் குழாயை (பைப் லைன்) சரி செய்து கொடுத்தனர். கடந்த 2 மாதங்களாக சீரான குடிநீர் வந்தது. தற்போது ஒரு மாதமாக சீரான குடிநீர் வருவதில்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் வந்து எங்கள் குடிநீர் பிரச்சினையை தீர்த்து வைக்க வேண்டும்’ என்றனர்.
இதையடுத்து சம்பவ இடத்துக்கு வருவாய்த்துறை அதிகாரிகள் விரைந்து வந்து உங்கள் கோரிக்கையை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிவித்து சீரான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். அதைத்தொடர்ந்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
இதனால் அந்த பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
காட்பாடி வழியாக கர்நாடகா, கேரளா, ஆந்திரா போன்ற மாநிலங்களுக்கும், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் ரெயில்கள் இயக்கப்படுகிறது. காட்பாடியில் இருந்து அரக்கோணம் மார்க்கமாக சென்னை செல்லும் ரெயில்கள் சில நேரங்களில் அரக்கோணம் உள்பட சில இடங்களில் தடம் புரண்டு விடுகிறது. இதனால் ரெயில்கள் தாமதமாக செல்லும் நிலை ஏற்பட்டு பயணிகள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் தண்டவாளங்களின் உறுதித்தன்மை குறித்து ஆய்வு செய்ய சென்னை கோட்ட ரெயில்வே கூடுதல் மேலாளர் சோர்ட் நேற்று காலை காட்பாடி ரெயில் நிலையத்திற்கு வந்தார்.
அவர் காட்பாடி ரெயில் நிலையத்தில் உள்ள அனைத்து பிளாட்பாரத்திற்கும் சென்று பார்வையிட்டு தண்டவாளங்களை ஆய்வு செய்தார். தண்டவாளங்கள் உறுதியாக இருக்கிறதா?, துருப்பிடித்திருக்கிறதா? என்பதை ஆய்வு செய்தார்.
சில இடங்களில் தண்டவாளங்கள் துருப்பிடித்து காணப்பட்டது. அதை பார்த்த அவர் துருப்பிடித்த பகுதிகளை அகற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும் காட்பாடி ரெயில் நிலையத்தில் பயணிகளுக்கு செய்யப்பட்டுள்ள அடிப்படை வசதிகள் குறித்தும் அவர் பார்வையிட்டார்.
அப்போது காட்பாடி ரெயில் நிலைய மேலாளர் ரவீந்திரநாத், டிவிஷனல் என்ஜினீயர் அருண் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர். தொடர்ந்து அவர் சேவூர் உள்பட பல்வேறு பகுதிகளில் தண்டவாளங்களின் உறுதித்தன்மை குறித்து ஆய்வு மேற்கொண்டார். #KatpadiJunction
வேலூர்:
வேலூர் மாவட்டத்தில் சமீப காலமாக ரவுடிகளின் அட்டகாசம் மீண்டும் தலைத் தூக்கியுள்ளது.
தாதாக்கள் போல் செயல்படும் ரவுடிகளை தவிர அவர்களிடம் அடியாட்களாக இருந்த முதல் கட்ட ரவுடிகளும் ஏராளமானோர் உள்ளனர். வேலூரை போலவே காட்பாடியிலும் ரவுடிகள் பட்டியல் நீள்கிறது.
இந்நிலையில், சென்னையில் பிரபல ரவுடியான பினு என்பவன், கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனது கூட்டாளிகளுடன் பிறந்த நாளை கொண்டாட முயன்றான். இதையறிந்த போலீசார் அவர்களை சுற்றி வளைத்தனர். அன்று முதல், சென்னை மாநகரம் முழுவதும் ரவுடிகளை கைது செய்யும் படலம் தொடர்ந்தது.
அத்துடன், ரவுடிகளை என்கவுன்டரில் போட்டுத் தள்ளவும் போலீசார் திட்டமிட்டனர். இதனால் அதிர்ந்து போன ரவுடிகள் தாமாக முன்வந்து போலீஸ் நிலையங்களிலும், கோர்ட்டுகளிலும் சரணடைந்து வருகின்றனர்.
அதே நேரம் வேலூர் மாவட்டத்தில் உள்ள ரவுடிகள் பட்டியல் தயார் செய்து கைது செய்யும் படலம் தொடர்ந்தது.
இந்நிலையில், வேலூர் மாவட்டத்தில் ரவுடிகளின் பட்டியலை தயாரித்து அனுப்புமாறு சட்டம் ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி. விஜயகுமார் உத்தரவிட்டுள்ளார்.
இதனால் ரவுடிகள் பட்டியல்கள் தயாரிக்கும் பணியில் போலீசார் வேகம் காட்டி வருகின்றனர்.
வேலூர் புதிய பஸ் நிலையம் எப்போதும் பயணிகள் கூட்டத்தால் பரபரப்பாக காணப்படும். திருப்பதிக்கு செல்லும் பயணிகளும், தென் மாவட்டங்களுக்கு செல்லும் பயணிகளும் புதிய பஸ் நிலையத்தில் காத்திருந்து பஸ்களில் ஏறுகின்றனர். மேலும் இங்கிருந்து சென்னை, திருச்சி, சேலம், தர்மபுரி, ஓசூர், பெங்களூரு உள்பட பல்வேறு ஊர்களுக்கு 24 மணி நேரமும் பஸ்கள் செல்வதால் பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்படும்.
பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள் பலர் புற காவல் நிலையம் அருகே பஸ் நிறுத்துமிடத்தில் தூங்குவார்கள். திருட்டு போன்றவற்றை தடுக்க தினமும் வடக்கு போலீசார் இரவு நேரங்களில் ரோந்து பணியில் ஈடுபடுவார்கள். இந்த நிலையில் நேற்று இரவு சுமார் 12.30 மணி அளவில் ரோந்து பணியில் ஈடுபட்ட வேலூர் வடக்கு போலீஸ் ஏட்டு ஸ்ரீதர் என்பவர் அங்கு தூங்கிக் கொண்டிருந்த பயணிகளை பிளாஸ்டிக் பைப்பால் அடித்து எழுப்பியதாக கூறப்படுகிறது.
எல்லை பாதுகாப்பு படை வீரர் ஒருவரை, ஏட்டு ஸ்ரீதர் அடித்து எழுப்பியதாக கூறப்படுகிறது. இதனால் அவர், நான் எல்லை பாதுகாப்பு படை வீரர் எதற்கு அடித்து எழுப்புகிறீர்கள்? என்று கேட்டுள்ளார். இதனையடுத்து இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
பின்னர் ஏட்டு ஸ்ரீதர், மூதாட்டி ஒருவரை தனது காலால் உதைத்து எழுப்பியதாக தெரிகிறது. இதைப்பார்த்த பயணிகள் ஆத்திரமடைந்து ஸ்ரீதரை அடித்து, உதைத்தனர். அப்போது அங்கு வந்த ஊர்க்காவல் படை வீரர், பயணிகளை தடுத்து நிறுத்த முயன்றார். எனினும் ஆத்திரத்தில் இருந்த பயணிகள் அவரை அடிப்பதை நிறுத்தவில்லை.
இதுகுறித்து வேலூர் வடக்கு போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு வந்த போலீசார் பயணிகளை சமாதானப்படுத்தினார்கள். மேலும், ஸ்ரீதரை அங்கிருந்து போலீசார் அழைத்துச் சென்றுவிட்டனர்.
இந்த சம்பவம் பஸ் நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
அரக்கோணம் அருகே கீழாந்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட பள்ளியாங்குப்பம், மதுரா பகுதியில் உள்ள மின்னலம்மன் கோவில் அருகே குளத்தில் மண் அள்ளப்படுவதாக கிராம நிர்வாக அலுவலர் அருண்குமார், சிப்பந்தி ஜெயபால் ஆகியோருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் இருவரும் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது, 5 டிராக்டரில், 2 பொக்லைன் எந்திரம் மூலமாக கிராவல் மண் எடுத்து கொண்டு இருந்தனர்.
கிராம நிர்வாக அலுவலர் அருண்குமார், மண் அள்ளி கொண்டிருந்தவர்களிடம் மண் எடுப்பதற்கு அனுமதி வாங்கி உள்ளீர்களா? என்று கேட்டு உள்ளார். அப்போது மண் எடுத்து கொண்டு இருந்தவர்கள் அனுமதி எதுவும் வாங்கவில்லை என்று கூறி உள்ளனர்.
அப்படியென்றால் மண் எடுப்பது குற்றமாகும். எனவே டிராக்டர், பொக்லைன் எந்திரங்களை போலீஸ் நிலையத்திற்கு எடுத்து வாருங்கள் என்று கூறி உள்ளார். அப்போது கிராம நிர்வாக அலுவலருக்கும், மண் எடுத்து கொண்டிருந்தவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது.
பின்னர் கிராம நிர்வாக அலுவலர் அருண்குமார் டிராக்டரில் இருந்த சாவியை எடுத்து கொண்டு போலீஸ் நிலையம் வாருங்கள் என்று கூறியபோது மண் எடுத்த நபர்கள் அருண்குமாரின் கையில் இருந்த சாவியை பிடுங்கிக்கொண்டு, அவரை தாக்கி கீழே தள்ளியுள்ளனர். உடனே அவர்கள், டிராக்டரை எடுத்து செல்ல முயன்றபோது சிப்பந்தி ஜெயபால் தடுத்து உள்ளார்.
இதனையடுத்து சிப்பந்தியை, மண் கடத்தல்காரர்கள் மார்பில் குத்தி அவரின் சட்டையை கிழித்து உள்ளனர். மேலும் அவர்கள், அவரது கையை சாவியால் கிழித்து உள்ளனர். பின்னர் அருண்குமார், ஜெயபால் இருவரையும் தாக்கி விட்டு மண் கடத்தல்காரர்கள் அங்கிருந்து டிராக்டர், பொக்லைன் எந்திரங்களை எடுத்து கொண்டு தப்பி சென்றனர். இதுகுறித்து அருண்குமார் அரக்கோணம் தாசில்தார் பாபு மற்றும் வருவாய் ஆய்வாளர் ரஜினிகாந்த் ஆகியோருக்கு தகவல் தெரிவித்து உள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த அவர்கள், இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் அருண்குமார் அரக்கோணம் தாலுகா போலீசில் புகார் செய்தார். போலீசார் மணல் கடத்தல் கும்பலை சேர்ந்த 3 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். #Tamilnews
எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சிறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை அனுபவித்து வரும் நன்னடத்தை கைதிகளை மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும் என்று பல்வேறு கட்சிகளிடம் இருந்து அரசுக்கு கோரிக்கை வந்தது.
சட்டசபையிலும் இது பற்றி எம்.எல்.ஏ.க்கள் வலியுறுத்தி பேசி இருந்தனர். இதைத் தொடர்ந்து ஒவ்வொரு சிறையிலும் 10 ஆண்டுகளுக்கு மேல் உள்ள கைதிகளின் விவரங்களை அரசு பட்டியல் எடுத்து வைத்துள்ளது. 60 வயதுக்கு மேல் 5 ஆண்டு சிறை தண்டனை அனுபவித்த கைதிகள், ஆயுள் தண்டனை கைதிகள் ஆகியோரது நன்னடத்தை விவரங்களும் இதில் இடம் பெற்றுள்ளன.
வேலூர் ஜெயிலில் 187 ஆண் கைதிகளும், 15 பெண் கைதிகளும் நன்னடத்தை அடிப்படையில் விடுதலையாகும் தகுதியில் உள்ளனர். இவர்கள் குறித்த பட்டியல் அரசுக்கு சிறைத்துறை நிர்வாகம் சார்பில் அனுப்பி வைக்கப்பட்டது.
அதில் முதற்கட்டமாக 7 பேரை விடுதலை செய்வதற்கான ஆணை நேற்று இரவு வேலூர் ஜெயிலுக்கு வந்தது. இதையடுத்து இன்று காலை ஜெயிலில் இருந்து 7 கைதிகள் விடுவிக்கப்பட்டனர்.
ஜெயில் சூப்பிரண்டு (பொறுப்பு) முருகேசன், 7 பேருக்கும் அவர்களது உடமைகள், ஜெயிலில் கைதிகள் வேலை பார்த்ததற்கான கூலி பணம் ஆகியவற்றை வழங்கி அனுப்பி வைத்தார்.
ஜெயிலுக்கு வெளியே காத்திருந்த கைதிகளின் மனைவி, குழந்தைள் மற்றும் உறவினர்கள் அவர்களை கட்டியணைத்து கண்ணீர் மல்க வரவேற்று அழைத்து சென்றனர்.
வாணியம்பாடி தாலுகா மதனஞ்சேரி பகுதியை சேர்ந்தவர் சின்னபையன். இவருக்கு அதேபகுதியில் விவசாய நிலம் இருந்தது. அந்த நிலத்திற்கு மின் இணைப்பு பெற முடிவு செய்தார். இதற்காக அவருக்கு வாரிசு சான்றிதழ் தேவைப்பட்டது. அதைத்தொடர்ந்து அவர் வாணியம்பாடி தாலுகா அலுவலகத்தில் வாரிசு சான்றிதழ் கேட்டு மனு அளித்தார். வருவாய் ஆய்வாளராக பணியாற்றிய ரமேஷ்பாபு என்பவர் அவரது மனுவை விசாரித்து வாரிசு சான்றிதழ் வழங்க லஞ்சம் கேட்டுள்ளார். பணம் தந்தால் சான்றிதழ் தருவதாக கூறி உள்ளார்.
லஞ்சம் கொடுக்க விரும்பாத சின்னபையன் வேலூர் லஞ்ச ஒழிப்பு துறை போலீசில் புகார் செய்தார். இதையடுத்து கடந்த 2003-ம் ஆண்டு நவம்பர் மாதம் 26-ந் தேதி வாணியம்பாடி தாலுகா அலுவலகத்தில் சின்னபையனிடம் வருவாய் ஆய்வாளர் ரமேஷ்பாபு, அலுவலக உதவியாளர் சேகர் என்பவர் மூலம் ரூ.400-ஐ லஞ்சமாக வாங்கினார். அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் ரமேஷ்பாபு, சேகர் ஆகியோரை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.
இது குறித்த வழக்கு வேலூர் மாவட்ட முதன்மை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் பல ஆண்டுகளாக நடந்து வந்தது.
நேற்று முன்தினம் வழக்கில் நீதிபதி பாரி தீர்ப்பு கூறினார். அதில், லஞ்சம் வாங்கிய ரமேஷ்பாபு மற்றும் சேகர் ஆகியோருக்கு 2 ஆண்டுகள் ஜெயில் தண்டனை மற்றும் ரூ.5 ஆயிரம் அபராதம் விதிப்பதாக கூறியிருந்தார். #tamilnews
ராணிப்பேட்டையில் பெல் நிறுவனம் தொடங்க நிலம் கொடுத்த பலருக்கு அந்த நிறுவனம் வேலை வழங்கியது. சிலருக்கு அந்த நிறுவனம் வேலை வழங்காததால் பாதிக்கப்பட்டவர்கள் ஒரு அமைப்பை ஏற்படுத்தி வேலை வழங்கக்கோரி பல்வேறு போராட்டங்களை நடத்தினர். இது தொடர்பாக கோர்ட்டிலும் வழக்கு தொடரப்பட்டது.
இதன் பின்னர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பெல் நிறுவனம் நிலம் கொடுத்தவர்களில் 109 பேருக்கு வேலை கொடுத்தது. மற்ற 15 பேர் குறைந்தபட்ச கல்வித்தகுதியான 8-ம் வகுப்பு படிக்கவில்லை என கூறி அவர்களுக்கு பெல் நிறுவனம் வேலை தரவில்லை என கூறப்படுகிறது.
இதனால் மன உளைச்சலுக்கு ஆளான சிப்காட் பகுதியை சேர்ந்த பாலு (வயது 40), லாலாப்பேட்டையை சேர்ந்த பாஸ்கர் (48), சம்பத் (40), புளியந்தாங்கலை சேர்ந்த முனிசாமி (44) ஆகிய 4 பேரும் நேற்று காலை சுமார் 8 மணிஅளவில் ராணிப்பேட்டை பெல் நிறுவனம் அருகே உள்ள செல்போன் டவரின் மீது ஏறி, மண்எண்ணெய் மற்றும் விஷ பாட்டிலுடன், கழுத்தில் பச்சை துண்டு அணிந்து கொண்டு தற்கொலை செய்யப்போவதாக கூச்சலிட்டவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுடன் வந்த மற்றவர்கள் கீழே நின்று கொண்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
தகவலறிந்த ராணிப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் சிப்காட் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து செல்போன் டவரின் மீது ஏறியவர்களை கீழே இறங்கி வருமாறு ஒலிபெருக்கியில் பேசி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால் அதற்கு போராட்டக்காரர்கள் உடன்படவில்லை.
இதையடுத்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். மேலும் சிப்காட் தீயணைப்பு நிலைய அலுவலர் சிதம்பரம் தலைமையில் தீயணைப்பு வீரர்களும், தீயணைப்பு வாகனத்துடன் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டனர். தகவல் அறிந்த ராணிப்பேட்டை உதவி கலெக்டர் வேணுசேகரன், வாலாஜா தாசில்தார் விஜயகுமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் அவர்கள் வைத்திருந்த செல்போன் மூலம் பேசி பேச்சுவார்த்தைக்கு அழைத்தனர்.
பி.ஏ.பி. இ.ஜி.டி.யூ. ஐ.என். டி.யூ.சி.சங்க பொதுச்செயலாளர் கணேஷ், துணைத்தலைவர் தண்டபாணி, பி.ஏ.பி.எம்ப்ளாயிஸ் யூனியன் பொதுச் செயலாளர் சிவகுமார் உள்பட தொழிற்சங்க நிர்வாகிகளும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேசி கீழே இறங்கி வர வேண்டு கோள் விடுத்தனர்.
இதற்கு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தங்களை கீழே இறங்கி வரக் கூறி தொடர்ந்து வற்புறுத்தினால் தாங்கள் எடுத்து வந்துள்ள மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்டோ, விஷம் குடித்தோ தற்கொலை செய்து கொள்வோம் என தெரிவித்தனர்.
பின்னர் செல்போன் டவர் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் குடும்பத்தினர், நிலம் கொடுத்து வேலை கிடைக்காதோர் அமைப்பை சேர்ந்த முரளி உள்பட மற்றவர்களும் சேர்ந்து கண்ணீர் மல்க கீழே வருமாறு வேண்டுகோள் விடுத்தனர்.
அப்போது உதவி கலெக்டர், தாசில்தார், போலீசார், தொழிற்சங்க தலைவர்கள், ஊழியர்கள் ஆகிய அனைவரும் விடுத்த வேண்டுகோளை ஏற்று சுமார் 4 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் சுமார் 12 மணி அளவில் செல்போன் டவரில் இருந்து போராட்டத்தில் ஈடுபட்ட 4 பேரும் கீழே இறங்கி வந்தனர்.
அவர்களில் முனிசாமி கூறுகையில், “நாங்கள் நிலம் கொடுத்து விட்டு வேலை வழங்கக்கோரி பல வருடங்களாக போராடி வருகிறோம். கல்வித்தகுதியை காரணம் காட்டி எங்களுக்கு வேலை கொடுக்க நிர்வாகம் மறுக்கிறது. நாங்கள் குறைந்த பட்ச கல்வித்தகுதியை பாஸ் செய்து விட்டோம். எங்களுக்கு வேலை வேண்டும் அல்லது எங்களது நிலத்தை திருப்பி தர வேண்டும். வேலை தராவிட்டால் நாங்கள் உயிரை விடுவதை தவிர வேறு வழியில்லை” என்றார்.
பின்னர் செல்போன் டவரின் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடமும், வேலை கிடைக்காத மற்றவர்களிடமும் உதவி கலெக்டர் வேணுசேகரன் பேச்சுவார்த்தை நடத்தினார். பிற்பகலில் உதவி கலெக்டர் அலுவலகத்தில் தொழிற்சங்க பிரதிநிதிகள், நிர்வாகம், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஆகிய அனைவரையும் வைத்து பேச்சுவார்த்தை நடத்தப்படும் என உதவி கலெக்டர் கூறியதையடுத்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். 4 மணி நேரமாக நீடித்த இந்த தற்கொலை மிரட்டல் சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது. போராட்டக்காரர்கள் ஏறிய செல்போன் டவர் தற்போது உபயோகத்தில் இல்லை என கூறப்படுகிறது.
காவேரிப்பாக்கத்தை அடுத்த மாகாணிப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் வேலு (வயது 65), கூலித்தொழிலாளி. இவர் கடந்த 21-ந் தேதி பாணாவரத்தை அடுத்த பன்னியூர் அருகே வாரச்சந்தையில் காய்கறிகளை வாங்கிக்கொண்டு சைக்கிளில் வீட்டுக்கு சென்றுகொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக வந்த மோட்டார்சைக்கிள் வேலு ஓட்டிச்சென்ற சைக்கிள்மீது மோதியது. இதில் வேலு படுகாயமடைந்து வாலாஜா அரசு மருத்துவமனையிலும் பின்னர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
வேலூர்:
பெட்ரோல், டீசல் விலையை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டு வர வேண்டும். சுங்கச்சாவடிகளை அகற்றுவது, வாட் வரியை குறைப்பது உள்பட பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி நாடு தழுவிய லாரிகள் வேலை நிறுத்தம் கடந்த 20-ந் தேதி தொடங்கியது. இதற்கு வேலூர் மாவட்ட லாரி உரிமையாளர்கள் சங்கமும் ஆதரவு தெரிவித்து வேலை நிறுத்தத்தில் பங்கேற்றன.
வேலூர் மாவட்டத்தில் சுமார் 20 ஆயிரம் லாரிகள் நிறுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக வேலூர் மாநகரில் தினசரி ரூ.10 கோடி சரக்கு போக்குவரத்தும், மாவட்டத்தில் ரூ.10 கோடி சரக்கு போக்குவரத்தும் என மொத்தம் ஒரு நாளைக்கு ரூ.20 கோடிக்கு மேல் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.
5-வது நாளாக லாரிகள் இன்றும் ஓடவில்லை. வேலை நிறுத்தம் நீடிப்பதால், வேலூர் மாவட்டத்தில் 5 நாட்களில் மட்டும் ரூ.100 கோடிக்கு மேல் வர்த்தகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள தொழிற்சாலைகளுக்கு தேவையான மூலப்பொருள் வெளிமாநிலங்களில் இருந்து அதிகம் வருகின்றன. லாரிகள் வேலை நிறுத்ததால் லாரி டிரைவர்கள், சுமை தூக்கும் தொழிலாளர்கள் என சுமார் 50 ஆயிரம் பேர் நேரடியாக வேலை இழந்துள்ளனர்.
‘குட்டி சிவகாசி’ எனப்படும் குடியாத்தத்தில் தீப்பெட்டி தொழில் கடும் பாதிப்பை சந்தித்துள்ளது. குடியாத்தம் பகுதியில் 15 பகுதி நேர எந்திர தீப்பெட்டி தொழிற்சாலைகளும், 100-க்கும் குடிசை தீப்பெட்டி தொழிற்சாலைகளும் செயல்பட்டு வருகின்றன. லாரிகள் வேலை நிறுத்தத்தால் பல கோடி மதிப்பு தீப்பெட்டிகள் தேக்கமடைந்துள்ளன.
தொடர்ந்து உற்பத்தி செய்யும் பண்டல்களை வைக்கவும் தொழிற்சாலைகளில் இடமில்லை. மூலப்பொருள் வராததால் உற்பத்தி முடங்கி போகும் அபாய கட்டத்தை எட்டியுள்ளது. பல ஆயிரம் தொழிலாளர்கள் வேலை இழக்க நேரிடும். இதேபோல் கைத்தறி லுங்கி உற்பத்தி, பீடித்தொழில், தேங்காய் உரிக்கும் தொழிலாளர்கள் என பலதரப்பட்ட தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
மேலும் காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலையும் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. தொடர்ந்து, லாரிகள் வேலை நிறுத்தம் நீடித்தால் விவசாயிகள் உள்பட அனைத்து தரப்பு மக்களும் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்.
வேலூர்:
வேலூர் சி.எஸ்.ஐ. மத்திய தேவாலயத்தில் உறுப்பினர் தேர்தல் நடத்துவது தொடர்பாக நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் நடந்த மோதலை தொடர்ந்து காரில் பதுக்கி வைத்திருந்த கைத்துப்பாக்கி மற்றும் 2 வீச்சரிவாள்களை போலீசார் பறிமுதல் செய்து 12 பேரை கைது செய்தனர்.
வேலூர் அண்ணா சாலை சி.எஸ்.ஐ. மத்திய தேவாலயத்தில் நேற்று காலை உறுப்பினர் தேர்தல் தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் நடந்தது. போலீஸ் பாதுகாப்புடன் நடந்த இந்த கூட்டத்தில் சி.எஸ்.ஐ. போதகர் சாது சத்யராஜ் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
அப்போது சர்ச்சில் திடீரென இரு தரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றியதில் இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கி கொண்டனர்.
இதனை கண்டு அதிர்ச்சியடைந்த பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் வேலூர் வடக்கு போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். டி.எஸ்.பி. ஸ்ரீதரன், வடக்கு இன்ஸ்பெக்டர் நாகராஜ், தெற்கு இன்ஸ்பெக்டர் லோகநாதன், மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மோதலில் ஈடுபட்டவர்களை தடுத்தனர்.
இதற்கிடையே போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் தேவாலயத்தில் நிறுத்தப்பட்டிருந்த விருதம்பட்டு இ.பி. காலனியை சேர்ந்த தேவா என்பவருக்கு சொந்தமாக காரில் போலீசார் திடீர் சோதனை நடத்தினர்.
அப்போது காரில் ஒரு கைத்துப்பாக்கி, 2 வீச்சரிவாள்கள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் கார் மற்றும் துப்பாக்கி, வீச்சரிவாள்களை பறிமுதல் செய்தனர்.
இது குறித்து வேலூர் வடக்கு இன்ஸ்பெக்டர் நாகராஜன் வழக்கு பதிவு செய்து தேவா (வயது30) யோவான் (30) வேதாந்தம் (44) அன்புகிராண்ட் (28) சந்தோஷ் (28) ஆகிய 5 பேரையும் மற்றொரு தரப்பை சேர்ந்த ஓல்டுடவுன் வடிவேலு (எ) இஸ்ரேல், சதீஷ்குமார், சந்தோஷ், ராமச்சந்திரன், பின்ட் மஞ்சுளா, திலீப் ஆகிய 12 பேரை கைது செய்தனர்.
பேரணாம்பட்டு:
பேரணாம்பட்டு அருகே உள்ள மோர்தானா விரிவு காப்புக்காடு எருக்கம்பட்டு வனப்பகுதியில் இன்று அதிகாலை துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டது. இதுப்பற்றி தகவலறிந்த பேரணாம்பட்டு வனச்சரகர் மூர்த்தி, வனவர் ரகுபதி, வனக்காப்பாளர் திருநாவுக்கரசு, ஞானவேல், செல்வம் ஆகியோர் அடங்கிய குழுவினர் எருக்கம்பட்டு வனப்பகுதிக்குள் ரோந்து சென்றனர்.
அப்போது, 3 பேர் கும்பல் காட்டுப்பன்றிகளை நாட்டுத் துப்பாக்கியால் சுட்டு கொன்று வேட்டையாடியதை பார்த்தனர். 3 பேரையும் வனத்துறையினர் கைது செய்தனர். விசாரணையில், எருக்கம்பட்டை சேர்ந்த பாபு (வயது 42), ராஜீவ்காந்தி (40), ராஜிகுட்டி (55) ஆகியோர் என்பது தெரியவந்தது.
இவர்களிடம் இருந்து, உரிமம் இல்லாத ஒரு நாட்டு துப்பாக்கி, கந்தக வெடி மருந்து, பேட்டரி, கத்தி மற்றும் வேட்டையாடப்பட்ட 50 கிலோ பன்றியை பறிமுதல் செய்தனர். #arrestcase






