என் மலர்tooltip icon

    வேலூர்

    ஆம்பூர் அருகே ஐம்பொன் சிலை கடத்திய வழக்கில் முக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்டார். அவரிடம் தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஆம்பூர்:

    ஆம்பூர் அடுத்த மாதனூர் பூமாலை மலை மீது உள்ள முருகர் கோவிலில் இருந்து சில மாதங்களுக்கு முன்பு ரூ.5 கோடி மதிப்பிலான முருகர், வள்ளி, தெய்வானை ஆகிய 3 ஐம்பொன் சிலைகள் கொள்ளையடிக்கப்பட்டது.

    இந்த 3 சிலைகளையும் கடந்த மாதம் 6-ந் தேதி பேரணாம்பட்டு அரவட்லா மலை பகுதியில் ஒரு கடத்தல் கும்பல் விற்பனை செய்ய முயன்றது.

    ரகசிய தகவலின் பேரில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் தலைமையிலான போலீசார், 3 ஐம்பொன் சிலைகளையும் மீட்டு சிலை கடத்தல் கும்பலை சேர்ந்த 3 பேரை கைது செய்தனர்.

    இந்த சிலை கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளியான பேரணாம்பட்டு சாத்கர் பகுதியை சேர்ந்த சிராஜ் (வயது 43) போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.

    இந்த நிலையில், ஆம்பூர் தாலுகா போலீசார் தலைமறைவாக இருந்த சிராஜை நேற்றிரவு கைது செய்தனர். வேறு ஏதாவது கோவில் சிலை கடத்தலிலும் தொடர்புள்ளதா? என்பது குறித்தும் சிராஜிடம் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சொத்துவரி உயர்வை கண்டித்து வேலூரில் தி.மு.க. சார்பில் புதிய மாநகராட்சி அலுவலகம் முன்பு இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது. #DMKprotest
    வேலூர்:

    சொத்துவரியை உயர்த்திய அ.தி.மு.க. அரசை கண்டித்து வேலூர் மத்திய மாவட்ட மற்றும் மாநகர தி.மு.க. சார்பில் புதிய மாநகராட்சி அலுவலகம் முன்பு இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

    மாவட்ட செயலாளர் நந்தகுமார் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். கார்த்திகேயன் எம்.எல்.ஏ., அவைத்தலைவர் முகமது சகி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    மாவட்ட பொருளாளர் நரசிம்மன், துணை தலைவர் ஆர்.பி.ஏழுமலை, முன்னாள் மண்டல குழு தலைவர்கள் சுனில்குமார், அய்யப்பன், மத்திய மாவட்ட மாணவரணி செயலாளர் சீனிவாசன், மாநகர செயலாளர் வி.எம்.பி.பாலாஜி, வக்கீல் பார்த்திபன், அ.மா.ராமலிங்கம், முன்னாள் துணைமேயர் சாதிக், முன்னாள் கவுன்சிலர் அன்பு, தயாநிதி உள்பட ஏராளமானோர் கலந்துக் கொண்டனர்.

    ஆர்ப்பாட்டத்தின் போது, சொத்துவரி உயர்த்தியதை ரத்து செய்யகோரி அ.தி.மு.க. அரசுக்கு எதிராக கோ‌ஷம் எழுப்பினர். முடிவில் பகுதி செயலாளர் முருகபெருமான் நன்றி கூறினார். #DMKprotest

    சொத்து வரி உயர்வை கண்டித்து வேலூர் புதிய மாநகராட்சி அலுவலகம் முன்பு இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் இன்று ஆர்ப்பாட்டம் செய்தனர்.
    வேலூர்:

    தமிழ்நாடு முழுவதும் உள்ள மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் இருக்கும் குடியிருப்பு பகுதிகளுக்கு தமிழக அரசு சொத்து வரியை உயர்த்தி உள்ளது. இதனை கண்டித்து வேலூர் புதிய மாநகராட்சி அலுவலகம் முன்பு இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் இன்று ஆர்ப்பாட்டம் செய்தனர்.

    ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநகர செயலாளர் சிம்புதேவன் தலைமை தாங்கினார். மாநகர துணை செயலாளர் லோகேஷ்குமார், வட்ட செயலாளர் மாணிக்கம் சரோஜா முன்னிலை வகித்தனர். கோவிந்தராஜ், ஜீவா, அசோகன், உள்பட 100க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

    தமிழக மக்கள் மீது 100 சதவீத சொத்து வரி உயர்வை சுமத்துவதை ஏற்க முடியாது அந்த உத்தரவை தமிழக அரசு திரும்ப பெற வேண்டும் என்று கோஷம் எழுப்பினர்.   
    ஆசிரியை கிருத்திகாவிற்கு சமூக வலைதளங்களை பார்த்து பிரசவம் பார்த்த கணவன் உள்ளிட்டோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதார செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.#homebirthattempt

    வேலூர்:

    வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில், மாநில சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் இன்று ஆய்வு செய்தார். குழந்தைகள் மற்றும் நோயாளிகள் பிரிவு, புதிதாக அமைக்கப்பட்டுள்ள இருதய அறுவை சிகிச்சை பிரிவு, மருந்து இருப்புகளை பார்வையிட்டார்.

    பின்னர் நிருபர்களிடம், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது:- தேசிய ஊரக சுகாதார இயக்கத்தின் மூலம் தமிழக மருத்துவத்துறைக்கு மத்திய அரசு ரூ.2 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கியுள்ளது.

    தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் மருந்து பற்றாக்குறையை போக்க ஆண்டுக்கு ரூ.500 கோடி அளவுக்கு மருந்து, மாத்திரைகள் கொள்முதல் செய்யப்படுகிறது. ரூ.100 கோடி மருந்துகள் தலைமை மருத்துவமனைகளில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் தொற்று நோய் தடுப்பு மையங்கள் சிறப்பான முறையில் செயல்பட்டு வருகிறது. அனைத்து மருத்துவமனைகளிலும் பாம்புகடி உள்ளிட்டவைக்கு வி‌ஷ முறிவு மருந்துகள் போதிய அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளது. பாம்பு கடிக்கு சிறப்பாக சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    தமிழகத்தில் டாக்டர்களின் பற்றாக்குறையை போக்க மாநிலம் முழுவதும் 23 ஆயிரம் டாக்டர்கள் மற்றும் 2 ஆயிரம் நர்சுகள் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதேபோன்று, தற்போது 1000 எம்.பி.பி.எஸ். இடங்கள் மற்றும் 562 பி.ஜி. இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் பிரசவத்தின் போது, தாய்-சேய் இறப்பு விகிதம் ஒரு லட்சம் பேருக்கு 68 பேர் என்ற விகிதத்தில் குறைக்கப்பட்டுள்ளது. நாட்டிலேயே, தாய்-சேய் இறப்பு விகிதம் குறைந்ததில், தமிழகம் முதல் மாநிலமாக திகழ்கிறது.

    திருப்பூரில் சமூக வலை தளங்களை பார்த்து பிரசவம் பார்த்த போது கிருத்திகா என்ற ஆசிரியை இறந்துள்ளார். இதுபோன்று யாரும் இணைய தலங்கள், சமூக வலைதளங்களை பார்த்து பிரசவம் அல்லது மருத்துவம் பார்க்க கூடாது.

    கிருத்திகாவிற்கு சமூக வலைதளங்களை பார்த்து பிரசவம் பார்த்த கணவன் உள்ளிட்டோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்தில் சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க விபத்து மற்றும் தீவிர சிகிச்சை மையங்கள் 72 இடங்களில் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது.

    டெங்கு காய்ச்சலும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்றார். பேட்டியின் போது கலெக்டர் ராமன் மற்றும் டாக்டர்கள் பலர் உடனிருந்தனர். #SocialNetwork  #homebirthattempt

    வேலூர் மாவட்டம் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் இருதய அறுவை சிகிச்சை வசதி, நவீன உபகரணங்கள் இல்லாததால் சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.
    வேலூர்:

    வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கடந்த 2004ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இங்கு வேலூர், திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுக்கள் தினமும் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். மேலும் 500க்கும் மேற்பட்ட நோயாளிகள் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    ஆஸ்பத்திரி தொடங்கப்பட்டு 14 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் இருதய சிகிச்சை பிரிவு நவீன மருத்துவ உபகரணங்கள் இல்லாததால் செயல்படாத நிலைக்கு தள்ளபட்டுள்ளது.

    திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு ஆஸ்பத்திரிக்கு வரும் நோயாளிகளை சென்னைக்கு செல்லுமாறு கூறி அனுப்பி விடுகின்றனர்.

    இன்று காலை ஆம்பூரை சேர்ந்த சரஸ்வதி என்பவருக்கு திடீர் நெஞ்சு வலி ஏற்பட்டது. அவரை உடனே அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து வந்தனர். ஆஸ்பத்திரியில் இருதய சிகிச்சைக்கான நவீன எந்திரங்கள் மற்றும் அறுவை சிகிச்சை செய்வதற்கான கேத் லேப் வசதி இல்லை எனக் கூறிய டாக்டர்கள் சரஸ்வதியை சென்னைக்க செல்லுமாறு அறிவுறத்தினர். அவரது குடும்பத்தினர் பயத்துடன் ஆம்புலன்சில் சென்னைக்கு அழைத்து சென்றனர்.

    இது போல பல சம்பவங்கள் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் அரங்கேறி வருகின்றன. அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் ரூ.3½ கோடி செலவில் இருதய அறுவை சிகிச்சைக்கான அரங்கு கட்டப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதனை விரைந்து முடிக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.

    மேலும் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அதற்கேற்ப நோயாளிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் தேவைகளையும் மருத்துவமனை நிர்வாகம் உடனுக்குடன் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மருத்துவமனையில் உள்ள அனைத்து பிரிவுகளுக்கும் அதிநவீன வசதி கொண்டு வர வேண்டும். மருத்துவக்கல்லூரியில் 4 துறைகளில் மட்டுமே பட்ட மேற்படிப்பு உள்ளது. அதேபோல் அனைத்து துறைகளிலும் பட்ட மேற்படிப்பு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும். என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
    வேலூர் மாவட்டத்தில் 10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுப்பவர்கள் பற்றி, ரிசர்வ் வங்கியின் வழங்கல் துறைக்கு புகார் தெரிவிக்கலாம் என வங்கி மேலாளர் கூறியுள்ளார்.
    வேலூர்:

    வேலூர் மாவட்டத்தில் 10 ரூபாய் நாணயம் செல்லாது என வதந்தி பரவி வருவதால் வியாபாரிகள் வாங்க மறுக்கின்றனர்.

    மத்திய அரசால் தயாரிக்கப்பட்ட நாணயங்களை ரிசர்வ் வங்கி புழக்கத்தில் விடுகிறது. ரூபாய் நோட்டுகளை விட நாணயங்கள் நீண்ட காலத்துக்கு புழக்கத்தில் இருக்கும்.

    ஒரே மதிப்பில் வெவ்வேறு வடிவங்கள் மற்றும் அளவுகளில் இந்த நாணயங்கள் புழக்கத்தில் இருந்து வருகின்றன. அந்த வகையில் புழக்கத்தில் உள்ள 10 ரூபாய் நாணயங்களிலும் அவ்வப்போது பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு தயாரிக்கப்படுகின்றன.

    ஏற்கெனவே புழக்கத்தில் உள்ள 10 ரூபாய் நாணயங்களில் இருந்து அவை சற்றே மாறுபட்டுத் தோன்றினாலும், அனைத்துமே சட்டப்படி செல்லுபடியாகும். இந்த நாணயங்கள் அனைத்து விதமான பரிவர்த்தனைகளுக்கும் ஏற்றவை.

    இருப்பினும் 10 ரூபாய் நாணயங்கள் குறித்து தேவையற்ற வதந்திகள் பரப்பப்படுவதால் சில இடங்களில் இந்த நாணயங்களைப் பெற்றுக் கொள்வதில் பொதுமக்கள் தயக்கம் காட்டுகின்றனர்.

    வேலூர் மாவட்டத்தில் 10 ரூபாய் நாணங்கள் செல்லாது என வதந்தி பரவி வருவதால் வியாபாரிகள், ஆட்டோ டிரைவர்கள் வாங்க மறுக்கின்றனர். இதனால் 10 ரூபாய் நாணயம் வைத்திருக்கும் பொதுமக்கள் படாத பாடுபடுகின்றனர்.

    வேலூரில் உள்ள கடைகள், வணிக நிறுவனங்கள், ஆட்டோக்களில் 10 ரூபாய் நாணயம் வாங்குவதை முற்றிலும் தவிர்த்து வருகின்றனர். டாஸ்மாக் மதுக்கடைகளில் கூட வாங்க மறுப்பதாக குடிமகன்கள் கூறுகின்றனர்.

    இது குறித்து முன்னோடி வங்கி மேலாளர் முருகேசன் கூறுகையில்:-

    10 ரூபாய் நாணயம் செல்லும், பொதுமக்கள் வியாபாரிகள் எந்தவித பயமின்றி 10 ரூபாய் நாணயங்களை பயன்படுத்தலாம்.

    இது குறித்து வேலூர் மாவட்டத்தில் பலமுறை விழிப்புணர்வு ஏற்படுத்தபட்டுள்ளது. வியாபாரிகள், ஆட்டோ டிரைவர்கள் என யாரும் 10 ரூபாய் நாணயங்கள் வாங்க மறுக்க வேண்டாம்.

    10 ரூபாய் நாணயங்கள் செல்லாது என்ற வதந்திகளை புறக்கணித்து 10 ரூபாய் நாணயங்களை தொடர்ந்து பயன்படுத்தலாம். புதிய மற்றும் பழைய 10 ரூபாய் நாணயங்கள் அனைத்தும் புழக்கத்தில் நீடிக்கும். இதனை தடையோ, ரத்தோ செய்யவில்லை.

    பொதுமக்களும், வணிகர்களும் 10 ரூபாய் நாணயங்களைப் பயன்படுத்துவதற்கு தடையேதும் கிடையாது. இவ்வாறு 10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுப்பவர்கள் பற்றி, ரிசர்வ் வங்கியின் வழங்கல் துறைக்கு புகார் தெரிவிக்கலாம் என்றார்.
    குடியாத்தம் அருகே மலை அடிவாரத்தில் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் பிணமாக கிடந்தார். அவர் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    குடியாத்தம்:

    குடியாத்தம் அருகே உள்ள ராமாலை காந்தி கனவாய் மலை அடிவாரத்தில் நேற்று மாலை அதிகளவு துர்நாற்றம் வீசியது. ஆடு, மாடுகளை மேய்த்து கொண்டிருந்த சிலர், துர்நாற்றம் வீசிய பகுதிக்கு சென்று பார்த்தனர்.

    30 வயதுடைய ஒரு வாலிபரின் உடல் அழுகிய நிலையில் கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இதுப்பற்றி, அவர்கள் உடனடியாக கிராம நிர்வாக அலுவலர் சரஸ்வதியிடம் தெரிவித்தனர்.

    கிராம நிர்வாக அலுவலர் பரதராமி போலீசாருக்கு தகவல் கொடுத்தார். இன்ஸ் பெக்டர் கவிதா தலைமையில் சப்- இன்ஸ்பெக்டர் ஏழுமலை மற்றும் போலீசார் சம்பவ பகுதிக்கு விரைந்து வந்தனர்.

    வாலிபரின் உடல் அழுகி இருந்ததால், அவர் யார்? என அடையாளம் காணுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அவர் இறந்து 3 நாளாகியிருக்கலாம் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    மர்ம நபர்கள் யாரேனும், வாலிபரை கொலை செய்து உடலை மலை அடிவாரத்தில் வீசிச் சென்று இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அரக்கோணம் அருகே பொதுமக்கள் குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் மறியலில் ஈடுபட்டனர்.

    அரக்கோணம்:

    அரக்கோணம் அருகே உள்ள தணிகை போளூர் இச்சிப்புத்தூர் கிராமத்தில் கடந்த 10 நாட்களாக குடிநீர் விநியோகிக்கப்படவில்லை. இதனால் ஒரு குடம் நீருக்காக அப்பகுதி மக்கள் தவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.

    குடிநீர் பிரச்சினையை போக்கக்கோரி அப்பகுதி மக்கள், அதிகாரிகளிடம் தொடர்ந்து வலியுறுத்தினர். ஆனால், அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை.

    இதனால் ஆத்திரமடைந்த பெண்கள் உள்பட 50-க்கும் மேற்பட்டோர் இன்று காலை காலி குடங்களுடன் தணிகை போளூர் பஸ் நிறுத்தத்தில் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டம் செய்தனர்.

    தகவலறிந்து வந்த, அரக்கோணம் தாலுகா போலீசார் குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக கூறி சமரசப்படுத்தினர். இதையடுத்து, பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன், சிறிது நேரம் பரபரப்பான சூழல் காணப்பட்டது.

    லாரிகள் வேலை நிறுத்தம் காரணமாக, வேலூர் மாவட்டத்தில் இதுவரை ரூ.140 கோடிக்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. #LorryStrike
    வேலூர்:

    லாரிகள் வேலை நிறுத்தம் தொடர்ந்து இன்று 7-வது நாளாக நீடிக்கிறது. வேலூர் மாவட்டத்தில் சுமார் 20 ஆயிரம் லாரிகள் ஓடவில்லை.

    இதனால் சரக்கு போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டத்தில் ஒரு நாளைக்கு ரூ.20 கோடிக்கு மேல் வர்த்தகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

    7-வது நாளாக லாரிகள் இன்றும் ஓடவில்லை. வேலை நிறுத்தம் நீடிப்பதால், வேலூர் மாவட்டத்தில் 7 நாட்களில் மட்டும் ரூ.140 கோடிக்கு மேல் வர்த்தகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

    லாரி டிரைவர்கள், சுமை தூக்கும் தொழிலாளர்கள் என சுமார் 50 ஆயிரம் தொழிலாளர்கள் நேரடியாக பாதிக்கப்பட்டுள்ளனர். #LorryStrike

    லாரிகள் வேலை நிறுத்தம் நடைபெற்று வரும் நிலையில் காட்பாடி அருகே லாரி மீது கல்வீசி தாக்கியதாக 8 பேரை போலீசார் கைது செய்தனர்.
    வேலூர்:

    சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும், டீசல் மீதான ‘வாட்’ வரியை குறைக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் லாரி உரிமையாளர்கள் கடந்த 20-ந் தேதி முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    லாரிகள் வேலை நிறுத்தம் நடைபெற்று வரும் நிலையில் சேலம் மாவட்டம் ஆத்தூரை சேர்ந்த மணிகண்டன் (வயது 40) என்பவர் சித்தூரில் இருந்து காட்பாடி வழியாக கள்ளக்குறிச்சிக்கு சிமெண்டு பாரம் ஏற்றிய லாரியை ஓட்டிச்சென்றார்.

    காட்பாடியில் வந்தபோது 8 பேர் மோட்டார்சைக்கிளில் வந்தனர். அவர்கள் லாரி வேலைநிறுத்தத்தின்போது ஏன் லாரி ஓட்டுகிறாய் என்று கூறி லாரி மீது கற்களை வீசி தாக்கி உள்ளனர்.

    இதுகுறித்து காட்பாடி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரிமீது கல்வீசி தாக்கியதாக செங்குட்டையை சேர்ந்த மணிகண்டன் (24), மற்றொரு மணிகண்டன் (31), காட்பாடி ராஜி, தொரப்பாடி மணிகண்டன், கழிஞ்சூர் பெருமாள், கொசப்பேட்டை ஞானபிரகாஷ், காட்பாடியை சேர்ந்த கார்த்தி, தோட்டப்பாளையத்தை சேர்ந்த கார்த்திகேயன் ஆகிய 8 பேரை கைது செய்தனர்.

    ராணிப்பேட்டையை அடுத்த சேர்க்காடு அருகே சென்னை - சித்தூர் சாலையில் சில லாரிகள் சென்று கொண்டிருந்தன.

    இதைக்கண்ட அந்த பகுதியில் இருந்த சிலர் மோட்டார்சைக்கிள்களில் விரைந்து சென்று அந்த லாரிகளை முந்திச்சென்று வழிமறித்து நிறுத்தி சிறைபிடித்தனர். லாரிகளை ஓட்டி வந்தவர்களிடம் வேலை நிறுத்தத்தில் இருக்கும் போது லாரிகளை ஓட்டக்கூடாது எனக்கூறி அந்த லாரிகளை ஓரமாக நிறுத்தும்படி கூறியுள்ளனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    அப்போது அங்கு வந்த நெடுஞ்சாலை ரோந்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மகேந்திரவர்மன் மற்றும் போலீசார் லாரிகளை மடக்கியவர்களிடம் ஏன் லாரிகளை சிறை பிடிக்கிறீர்கள்? லாரிகளை நிறுத்துவது சட்டப்படி குற்றம் என எச்சரிக்கை விடுத்தனர். இதனையடுத்து லாரிகள் விடுவிக்கப்பட்டன. பின்னர் லாரிகள் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றன. #tamilnews
    ராசிமணல் என்ற இடத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே புதிய அணைக்கட்ட வேண்டும் என்று தமிழக அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பாண்டியன் வலியுறுத்தியுள்ளார்.
    வாணியம்பாடி:

    ஆம்பூர் அடுத்த மின்னூர் பாலாற்றில் உயர் மின் கோபுரம் அமைக்கும் பணியை மின்வாரியம் மேற்கொண்டது. இதற்கு, விவசாயிகள் சங்கமும், பாலாறு பாதுகாப்பு சங்கத்தினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இதையடுத்து, திருப்பத்தூர் சப்-கலெக்டர் பிரியங்கா மின்னூரில் ஆய்வு மேற்கொண்டு மின் கோபுரம் அமைக்கும் பணியை உடனடியாக நிறுத்த உத்தரவிட்டார். மறுஉத்தரவு வரும் வரை பாலாற்றில் எந்த கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளக்கூடாது என சப்-கலெக்டர் உத்தரவிட்டார். இதையடுத்து, பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.

    இந்நிலையில், தமிழக அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பாண்டியன் மின்னூரில் மேற்கொள்ளப்பட்டு வந்த மின் கோபுரப் பணிகளை நேற்று பார்வையிட்டார்.

    வேலூர் மாவட்டம் பாலாற்றை நம்பி இங்கு விவசாயப் பணிகள் செய்யப்பட்டு வந்தன. பாலாற்றின் கரையோரம் இருந்த விவசாயிகள் அதிக அளவில் விவசாயம் செய்து வந்தனர்.

    போதிய மழை இல்லாததாலும், பாலாறு இருக்கும் இடம் தெரியாமல் போனது. தற்போது, பாலாற்றில் தோல் கழிவுநீர் கலக்கப்படுவதால் நிலத்தடி நீர் மாசடைந்து பாலாறு படிப்படியாக அழிந்து வருகிறது. பாலாற்றை மீட்டெடுக்க வேண்டிய கட்டாயத்தில் தமிழக அரசு உள்ளது.

    தமிழகத்தில் ஆறு, குளம் போன்ற நீர்நிலைகளில் எந்தவித ஆக்கிரமிப்புகளும் இருக்கக் கூடாது. இருந்தால், உடனடியாக அகற்ற வேண்டும் என உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

    தமிழகத்தில் பெரும்பாலான நீர்நிலைகள் ஆக்கிமிப்பாளர்கள் பிடியில் சிக்கியுள்ளன. நீர் நிலைகளை தனிநபர்கள் ஆக்கிரமித்த காலங்கள் மாறி தற்போது அரசின் பல்வேறு துறைகளை சேர்ந்தவர்களே ஆக்கிரமித்துள்ளனர். தமிழக அரசின் அனுமதி பெறாமல் நீர்நிலைகளை ஆக்கிரமிப்பதை அரசு ஒரு போதும் அனுமதிக்கக் கூடாது.

    மின்னூர் பாலாற்றில் மின் கோபுரங்கள் அமைக்க மாவட்ட நிர்வாகத்திடமோ? எந்த அனுமதியும் மின்வாரியம் வாங்கவில்லை என்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

    எனவே, மின்னூர் பாலாற்றில் மேற்கொள்ளப்பட்டு வந்த பணிகளை மின்வாரியம் உடனடியாக திரும்பப் பெற வேண்டும். கட்டுமானப் பணிகளை அகற்ற வேண்டும். அதே நேரத்தில், தமிழகத்தில் உள்ள நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    தருமபுரி- கிருஷ்ணகிரி மாவட்ட எல்லையில் ஒகேனக்கல் அருகே உள்ள ராசிமணல் என்ற இடத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே புதிய அணை கட்டுவதற்காக கடந்த 1965ம் ஆண்டு காமராஜர் ஆட்சிக் காலத்தில் அடிக்கல் நாட்டப்பட்டது.

    இந்த இடத்தில் அணைக்கட்டினால் கடலுக்கு செல்லும் நீர் தடுத்து நிறுத்தி 50 டி.எம்.சி.க்கு மேல் தண்ணீர் சேமிக்க முடியும். இதன் மூலம் அந்தந்த மாவட்டங்கள் பாசன வசதி பெறும்.

    இது தொடர்டபாக முதல்-அமைச்சர் எடப்படி பழனிசாமியை நேரில் சந்தித்து விவசாய சங்கங்கள் சார்பில் வலியுறுத்தப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    வேலூர் அருகே கண்டெடுக்கப்பட்ட சிவலிங்கம், துர்க்கையம்மன் சிலை வேலூர் கோட்டை அருங்காட்சியகத்தில் ஒப்படைக்கப்பட்டது.

    வேலூர்:

    வேலூரை அடுத்த மூஞ்சூர்பட்டு கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் விநாயகர் சிலையை வைத்து வழிபட முடிவு செய்தனர். அதன்படி 22-ந்தேதி அங்கு ஒரு குறிப்பிட்ட இடத்தை சுத்தம் செய்து பள்ளம் தோண்டினர். அங்கு, 2½ அடி பள்ளம் தோண்டியபோது, கல்லால் ஆன 3 அடி உயரமுள்ள சிவலிங்கம், துர்க்கையம்மன் சிலை, உடைந்த நிலையில் பலிபீடம் ஆகியவை இருந்தன.

    இதுகுறித்து வருவாய்த்துறைக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து தாசில்தார் பாலாஜி மற்றும் அதிகாரிகள், வேலூர் அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் சரவணன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். சிவலிங்கம் கிடைத்திருப்பதால், அந்த இடத்தில் நந்தி சிலை இருப்பதற்கான வாய்ப்பு இருப்பதாக அதிகாரிகள் கருதினர்.

    இதையடுத்து அந்த இடத்தில் நேற்று பள்ளம் தோண்டும் பணிகள் நடைபெற்றது. பொக்லைன் எந்திரம் வரவழைக்கப்பட்டு 2 அடி ஆழம் வரை பள்ளம் தோண்டப்பட்டது. எனினும் சிலைகள் ஏதும் அங்குக் கிடைக்கவில்லை. ஆனால் பொதுமக்கள் 5 அடி ஆழம் வரை பள்ளம் தோண்டி தேட வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

    அதைத்தொடர்ந்து இன்று (புதன்கிழமை) மீண்டும் அந்த இடத்தில் 5 அடி ஆழம் வரை பள்ளம் தோண்டி சிலைகள் ஏதும் கிடைக்கிறதா? என்று தேட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதற்கிடையே, கண்டெடுக்கப்பட்ட சிவலிங்கம், துர்க்கையம்மன் சிலை, பலிபீடம் ஆகியவற்றை கிராம நிர்வாக அலுவலர் பிச்சை, வேலூர் கோட்டையில் உள்ள அருங்காட்சியகத்தில் நேற்று மாலை ஒப்படைத்தார். அங்கு, அந்த சிலைகள் தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்து பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டது.

    இதுகுறித்து அருங்காட்சியக காப்பாட்சியர் சரவணன் கூறுகையில், இந்தச் சிலைகள் விஜயநகர மன்னர்கள் காலத்தில் தயாரிக்கப்பட்டிருக்கலாம். 15 அல்லது 16-ம் நூற்றாண்டை சேர்ந்தவையாக இருக்கலாம், என்றார்.

    ×