search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் இருதய அறுவை சிகிச்சை வசதி இல்லாததால் நோயாளிகள் அவதி
    X

    வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் இருதய அறுவை சிகிச்சை வசதி இல்லாததால் நோயாளிகள் அவதி

    வேலூர் மாவட்டம் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் இருதய அறுவை சிகிச்சை வசதி, நவீன உபகரணங்கள் இல்லாததால் சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.
    வேலூர்:

    வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கடந்த 2004ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இங்கு வேலூர், திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுக்கள் தினமும் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். மேலும் 500க்கும் மேற்பட்ட நோயாளிகள் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    ஆஸ்பத்திரி தொடங்கப்பட்டு 14 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் இருதய சிகிச்சை பிரிவு நவீன மருத்துவ உபகரணங்கள் இல்லாததால் செயல்படாத நிலைக்கு தள்ளபட்டுள்ளது.

    திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு ஆஸ்பத்திரிக்கு வரும் நோயாளிகளை சென்னைக்கு செல்லுமாறு கூறி அனுப்பி விடுகின்றனர்.

    இன்று காலை ஆம்பூரை சேர்ந்த சரஸ்வதி என்பவருக்கு திடீர் நெஞ்சு வலி ஏற்பட்டது. அவரை உடனே அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து வந்தனர். ஆஸ்பத்திரியில் இருதய சிகிச்சைக்கான நவீன எந்திரங்கள் மற்றும் அறுவை சிகிச்சை செய்வதற்கான கேத் லேப் வசதி இல்லை எனக் கூறிய டாக்டர்கள் சரஸ்வதியை சென்னைக்க செல்லுமாறு அறிவுறத்தினர். அவரது குடும்பத்தினர் பயத்துடன் ஆம்புலன்சில் சென்னைக்கு அழைத்து சென்றனர்.

    இது போல பல சம்பவங்கள் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் அரங்கேறி வருகின்றன. அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் ரூ.3½ கோடி செலவில் இருதய அறுவை சிகிச்சைக்கான அரங்கு கட்டப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதனை விரைந்து முடிக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.

    மேலும் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அதற்கேற்ப நோயாளிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் தேவைகளையும் மருத்துவமனை நிர்வாகம் உடனுக்குடன் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மருத்துவமனையில் உள்ள அனைத்து பிரிவுகளுக்கும் அதிநவீன வசதி கொண்டு வர வேண்டும். மருத்துவக்கல்லூரியில் 4 துறைகளில் மட்டுமே பட்ட மேற்படிப்பு உள்ளது. அதேபோல் அனைத்து துறைகளிலும் பட்ட மேற்படிப்பு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும். என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
    Next Story
    ×