என் மலர்tooltip icon

    வேலூர்

    முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதி நளினி, பல் வலிக்கு வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.
    வேலூர்:

    முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதியான நளினி, வேலூர் பெண்கள் ஜெயிலில் கடந்த 27 ஆண்டுகளாக தண்டனை அனுபவித்து வருகிறார். நளினியின் கணவர் முருகன் வேலூர் ஆண்கள் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார்.

    15 நாட்களுக்கு ஒருமுறை முருகன், மனைவி நளினியை சந்திக்கிறார். இந்த நிலையில், நளினி கடந்த சில நாட்களாக பல் வலியால் அவதிப்பட்டு வந்தார். ஓரிரு நாட்களாக பல்வலி அதிகமானது.

    இதையடுத்து, வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக இன்று காலை 9.20 மணிக்கு நளினி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்டார். 1 மணி நேர சிகிச்சைக்கு பிறகு 10.30 மணி அளவில் மீண்டும் வேலூர் பெண்கள் ஜெயிலுக்கு நளினி அழைத்து செல்லப்பட்டு அடைக்கப்பட்டார்.
    வீட்டின் முன் பைக்கை நிறுத்திய தகராறில் வாலிபரை கத்தியால் வெட்டியவர் கைது செய்யப்பட்டார்.

    வேலூர்:

    பாகாயம் பகுதியை சேர்ந்தவர் நவாஸ் (வயது38). சின்ன அல்லாபுரம் சோலையம்மன் கோவில் தெருவை சேர்ந்த அருள் (29). இவர்கள் இருவருக்கும் இடையே முன் விரோதம் இந்துள்ளது.

    இந்த நிலையில் வெள்ளிக்கிழமை இரவு அருள் பைக்கில் சென்று நவாஸ் வீட்டின் எதிரே பைக்கை நிறுத்தியுள்ளார். அப்போது அங்கு வந்த நவாஸ் என் வீட்டின் எதிரே ஏன் பைக்கை நிறுத்தினாய் என கேட்டு தகராறு செய்துள்ளார்.

    இதனால் ஆத்திரம் அடைந்த அருள்தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து நவாசின் காது, முதுகு பகுதியில் வெட்டியுள்ளார். இதில் காயம் அடைந்த நவாசை மீட்டு அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இது குறித்து நவாஸ் பாகாயம் போலீசில் நேற்று புகார் அளித்தார்.

    போலீசார் வழக்குபதிவு செய்து அருளை கைது செய்து வேலூர் ஆண்கள் சிறையில் அடைத்தனர்.

    ராணிப்பேட்டையில் மாயமான கிராம நிர்வாக அலுவலர் மகள் சென்னை ரெயில் நிலையத்தில் மீட்கப்பட்டார்.

    ஆற்காடு:

    ராணிப்பேட்டை சிப்காட் ராஜாஜி தெரு ஐ.ஓ.பி. நகரை சேர்ந்தவர் துளசிராமன். ராணுவ வீரராக பணியாற்றி வந்த இவர், இறந்துவிட்டார். துளசி ராமனின் மனைவி ராஜேஸ்வரி (வயது 32). கலவை அடுத்த முள்ளுவாடி கிராம நிர்வாக அலுவலராக உள்ளார்.

    இவர்களது மகள் சுபிக்ஷா (10) ராணிப்பேட்டை மணியம்பட்டு கிராமத்தில் உள்ள தனியார் பள்ளியில் 5-ம் வகுப்பு படிக்கிறார். நேற்று முன்தினம் காலை சிறுமி சுபிக்ஷா பள்ளிக்கு சென்றுவிட்டு மாலையில் வீடு திரும்பினார்.

    பின்னர் வீட்டின் அருகே விளையாட சென்ற சிறுமி திடீரென மாயமாகி விட்டார். இதுகுறித்து சிப்காட் போலீசில் ராஜேஸ்வரி புகார் அளித்தார். சிறுமியை மர்ம நபர்கள் கடத்தி சென்றிருக்கலாம் என தகவல் பரவியது. போலீசார் சிறுமியை தீவிரமாக தேடி வந்தனர்.

    இதற்கிடையே சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் நேற்று மாலை சிறுமி சுபிக்ஷா தனியாக நின்றுகொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ரெயில்வே போலீசார் சிறுமியை மீட்டு சிப்காட் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

    சிப்காட் போலீசார் மற்றும் தாய் ராஜேஸ்வரி சென்னை சென்று சிறுமியை மீட்டனர். சிறுமி கடத்தப்பட்டாரா என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவில் சொத்து கோவிலுக்கே, இந்து அறநிலையத்துறையே வெளியேறு என வலியுறுத்தி வேலூர் பழைய பஸ் நிலையம் அருகே இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

    வேலூர்:

    கோவில் சொத்து கோவிலுக்கே, இந்து அறநிலையத்துறையே வெளியேறு என வலியுறுத்தி வேலூர் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள மண்டி வீதியில் இந்து முன்னணியினர் இன்று ஆர்ப்பாட்டம் செய்தனர்.

    மாநகர ஒருங்கிணைப் பாளர் ஆதிமோகன் தலைமை தாங்கினார். மாவட்ட துணை தலைவர்கள் சீனிவாசன், தனசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கோட்ட பொருளாளர் பாஸ்கர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். 

    இந்து முன்னணியினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    சோளிங்கர் அருகே பைக் மோதி 7-ம் வகுப்பு மாணவி பலியான அதிர்ச்சியில் பெரியப்பாவும் இறந்தார்.

    வேலூர்:

    சோளிங்கர் அடுத்த ஜிகுலூர் கிராமத்தை சேர்ந்தவர் ரவி (வயது 45). கட்டிட தொழிலாளி. இவரது மகள் ஸ்வேதா (12). சோளிங்கர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்றிரவு வீட்டின் அருகே நடந்து சென்று கொண்டிருந்த மாணவி ஸ்வேதா மீது அந்த வழியாக வேகமாக வந்த பைக் மோதியது.

    இந்த விபத்தில் மாணவி பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பலியானார். மாணவியின் பெற்றோர் மற்றும் பெரியப்பா வீரராகவன், உறவினர்கள் சம்பவ இடத்துக்கு ஓடிவந்தனர். மாணவியின் உடலை பார்த்து கதறி அழுதனர்.

    தம்பி மகள் இறந்த துக்கத்தை தாங்கி கொள்ள முடியாத பெரியப்பா வீரராகவன் அதிர்ச்சியில் உறைந்தார். திடீரென மாணவி உடல் அருகே மயங்கி சுருண்டு விழுந்தார். உடனடியாக அங்கிருந்தவர்கள் வீரராகவனை மீட்டு சோளிங்கர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் வீரராகவன் இறந்ததாக கூறினர்.

    ஆர்.கே.பேட்டை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தம்பி மகள் இறந்த அதிர்ச்சியில் பெரியப்பா உயிரிழந்த சம்பவம் ஜிகுலூர் கிராம மக்களிடையே துயரத்தை ஏற்படுத்தி உள்ளது.

    வேலூர் ஜெயிலில் கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட கைதி உடல்நலக்குறைவால் மருத்துமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
    வேலூர்:

    வேலூர் ஜெயிலில் தண்டனை மற்றும் விசாரணை கைதிகள் என சுமார் 800 பேர் அடைக்கப்பட்டுள்ளனர். சிறையில் உள்ள கைதிகள் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பது தொடர்கதையாக உள்ளது. கடந்த வாரங்களில் 2 கைதிகள் திடீரென இறந்தனர்.

    இந்த நிலையில், கடந்த மாதம் கொலை வழக்கு ஒன்றில் கைதாகி வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்ட திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பகுதியை சேர்ந்த சவுகத்அலி (வயது 51) சமீபத்தில் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். அவருக்கு சிறுநீரக கோளாறு இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இந்த நிலையில் கடந்த 25-ந் தேதி அவர் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். நேற்று அவர் திடீரென பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து ஜெயில் அதிகாரிகளும், பாகாயம் போலீசாரும் விசாரணை நடத்தி வருகின்றனர். 
    வேலூர் சி.எம்.சி. ஆஸ்பத்திரியில் பெண்ணிடம் நகை திருடிய 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
    வேலூர்:

    வேலூர் அடுத்த அரியூர் காந்திரோடு பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்பாபு தனியார் பள்ளி ஆசிரியர். இவரது மனைவி ஜனனி (வயது 34). ஊசூர் ஆரம்பசுகாதார நிலையத்தில் கணக்காளராக வேலை பார்த்து வருகிறார்.

    இவரது உறவினர் உடல் நலம் பாதிக்கப்பட்டு வேலூர் சி.எம்.சி. ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவருகிறார். அவரை பார்க்க ஜனனி நேற்று இரவு சி.எம்.சி. ஆஸ்பத்திரிக்கு வந்தார்.

    5 சவரன் தங்க நகையை பையில் வைத்து எடுத்து வந்தார். சி.எம்.சி. வந்த ஜனனி அவசர சிகிச்சை பிரிவு அருகே உள்ள கவுண்டரில் பணம் செலுத்த ஜனனி வரிசையில் நின்றிருந்தார்.

    அவருக்கு பின்னால் 2 வாலிபர்கள் வரிசையில் நின்றனர். அதில் ஒருவர் ஜனனி பையில் இருந்த 5 பவுன் தங்க நகையை வெளியே எடுத்தார்.

    அப்போது பை அசைந்தது ஜனனி திரும்பி பார்த்தார். வாலிபர் நகை எடுத்ததை கண்டு திடுக்கிட்டார். சுதாரித்து கொண்ட வாலிபர்கள் ஓட்டம் பிடித்தனர். ஜனனி கூச்சலிட்டார்.

    அங்கிருந்த பொதுமக்கள் வாலிபர்களை விரட்டி சென்றனர். ஆஸ்பத்திரி காவலாளிகள் 2 பேரையும் மடக்கி பிடித்தனர். இது குறித்து வடக்கு குற்றப்பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சப்-இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் மற்றும் போலீசார் விரைந்து சென்றனர். வாலிபர்களை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர்.

    அவர்கள் காட்பாடி அடுத்த பனமடங்கியை சேர்ந்த சதீஷ் (25), லத்தேரியை சேர்ந்த கோபி (25) என்பது தெரிந்தது. இவர்கள் சி.எம்.சி. ஆஸ்பத்திரியில் பணம் செலுத்தும் கவுண்ட்டர் அருகே திட்டமிட்டு திருட வந்துள்ளனர்.

    ஜனனியிடம் நகை திருடியது சம்மந்தமாக போலீசார் வழக்கு பதிவு செய்து சதீஷ், கோபி இருவரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் சிறையில் அடைக்கப்பட்டனர்.
    ராணிப்பேட்டையில் கிராம நிர்வாக அலுவலர் மகள் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமி சுபிக்ஷாவை தீவிரமாக தேடி வருகின்றனர்.
    வாலாஜா:

    ராணிப்பேட்டை சிப்காட் ராஜாஜி தெரு ஐ.ஓ.பி. நகரை சேர்ந்தவர் துளசிராமன். ராணுவ வீரராக பணியாற்றி வந்த இவர், இறந்துவிட்டார். துளசி ராமனின் மனைவி ராஜேஸ்வரி (வயது 32). கலவை அடுத்த முள்ளுவாடி கிராம நிர்வாக அலுவலராக உள்ளார்.

    இவர்களது 10 வயது மகள் சுபிக்ஷா, ராணிப்பேட்டை மணியம்பட்டு கிராமத்தில் உள்ள தனியார் பள்ளியில் 5-ம் வகுப்பு படிக்கிறார். நேற்று காலை வழக்கம்போல் சிறுமி சுபிக்ஷா பள்ளிக்கு சென்றார்.

    ராஜேஸ்வரியும் பணிக்கு சென்றுவிட்டார். மாலையில் பள்ளியில் இருந்து திரும்பி வீட்டில் இருந்த சுபிக்ஷா, திடீரென மாயமாகிவிட்டார். பணி முடிந்து வீட்டிற்கு வந்த தாய் ராஜேஸ்வரி, மகள் இல்லாததையறிந்து அதிர்ச்சி அடைந்தார்.

    பல இடங்களில் சென்று மகளை தேடினார். எனினும், சுபிக்ஷா கிடைக்கவில்லை. இந்த நிலையில், சிறுமி கடத்தப்பட்டதாக தகவல் பரவியது.

    இதுபற்றி கிராம நிர்வாக அலுவலர் ராஜேஸ்வரி, சிப்காட் போலீசில் புகார் அளித்தார்.

    போலீசார், வழக்குப்பதிவு செய்து சிறுமி சுபிக்ஷாவை தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும், அந்த பகுதியில் சந்தேகப்படும்படி நபர்கள் யாரேனும் சுற்றித் திரிந்தார்களா? என்பது குறித்து அக்கம், பக்கத்தில் வசிப்பவர்களிடம் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.



    தொடர்ந்து இரவு பணி வழங்கியதால் மனஉளைச்சலில் நர்சு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனால் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
    வேலூர்:

    காட்பாடியை அடுத்த கரசமங்கலம் பகுதியை சேர்ந்தவர் ஜெயந்தி. இவருடைய மகள் ஜெனிபர் (வயது 23). இவர் வேலூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் நர்சாக வேலை செய்தார். இந்த நிலையில் நேற்று வேலை முடிந்து வீட்டிற்கு வந்த ஜெனிபர் வீட்டில் திடீரென தூக்குப்போட்டு கொண்டார்.

    இதைப் பார்த்த குடும்பத்தினர் அவரை மீட்டு ஜெனிபர் பணிபுரியும் மருத்துவமனைக்கே சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து ஜெனிபரின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் மருத்துவமனை அருகே உள்ள வேலூர்-காட்பாடி சாலையில் திடீரென மறியலில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த வேலூர் வடக்கு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதையடுத்து அவர்கள் மறியலை கைவிட்டு மருத்துவமனைக்குள் சென்றனர். மறியலால் அப்பகுதியில் சுமார் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இதுகுறித்து ஜெனிபரின் குடும்பத்தினர் கூறுகையில், ‘ஜெனிபர் 2 ஆண்டுகளாக நர்சாக பணியாற்றினார். இவருக்கு கடந்த 1 மாதமாக தொடர்ந்து இரவு பணி வழங்கப்பட்டது. இதனால் அவர் மன உளைச்சலில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்’ என்றனர். தொடர்ந்து லத்தேரி போலீசார் மருத்துவமனைக்கு வந்து குடும்பத்தினரிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை அங்கிருந்து கலைத்தனர். 
    விருதம்பட்டில் தி.மு.க. பிரமுகரின் கார் தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    வேலூர்:

    காட்பாடி விருதம்பட்டு சிவராஜ் தெருவை சேர்ந்தவர் சீனிவாசன் (46). மாநகர தி.மு.க. இளைஞரணி துணை அமைப்பாளர். கடந்த 4-ந் தேதி மாலை முன்விரோத மோதலில் வஞ்சூரை சேர்ந்த கும்பல் சீனிவாசனை ஓட ஓட விரட்டி அரிவாளால் சரமாரியாக வெட்டினர்.

    இதில், படுகாயங்களுடன் சீனிவாசன் உயிர் தப்பினார். இந்த நிலையில், காட்பாடி ஒன்றிய தி.மு.க. செயலாளர் சரவணனின் காரை, சீனிவாசன் பயன்படுத்தி வந்தார். தனது வீட்டு முன்பு நேற்றிரவு காரை நிறுத்தி வைத்திருந்தார்.

    நள்ளிரவு 1 மணியளவில் சீனிவாசனின் தாய் புவனேஸ்வரி திருவண்ணாமலைக்கு சென்று வீடு திரும்பினார். அவர் வீட்டிற்குள் சென்ற சில நிமிடங்களில் காரை மர்ம நபர்கள் பெட்ரோல் ஊற்றி தீவைத்து எரித்துவிட்டு தப்பி ஓடி விட்டனர்.

    கார் தீப்பற்றி எரிந்ததை பார்த்த சீனிவாசன் மற்றும் அவரது குடும்பத்தினர், உடனடியாக காட்பாடி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தீயணைப்புத்துறை வீரர்கள் சுமார் 1 மணி நேரம் தாமதமாக 2 மணியளவில் சம்பவ இடத்திற்கு வந்தனர்.

    அதற்குள் கார் முற்றிலும் எரிந்து நாசமானது. காரின் மதிப்பு ரூ.8 லட்சம் என கூறப்படுகிறது. இதுகுறித்து, தி.மு.க. பிரமுகர் சீனிவாசன் விருதம்பட்டு போலீசில் புகார் அளித்தார். புகாரில், தன்னை வெட்டி கொல்ல முயன்ற அதே கும்பல், காரை தீ வைத்து எரித்திருக்கலாம் என்று கூறியுள்ளார்.

    போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் விருதம்பட்டு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    மருத்துவ சேவையில் தமிழகம் முன்னிலை உள்ளது என்று சுகாதார செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். #Medicalservice

    வேலூர்:

    வி.ஐ.டி.யில் நடைபெறும் பயோமெட் 2018 என்கிற உயிர் மூலப் பொருட்கள் உயிர் பொறியியல் மற்றும் நோய் கண்டறிந்து சிகிச்சையளித்தல் பற்றிய நாள் சர்வதேச மாநாட்டினை தமிழக அரசின் சுகாதாரத்துறை முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.

    இதில் உயிர் மூலப் பொருட்கள் மற்றும் செயற்கை உறுப்பு ஆராய்ச்சிக்கான சி.பி.சர்மா விருது அமெரிக்கா நாட்டின் டியூக் பல்கலைகழக பேராசிரியர் அசுதோஷ் சிலிகோட்டிக்கு வேந்தர் டாக்டர் ஜி.விசுவநாதன் வழங்கினார். கானா நாட்டின் துணை தூதுவர் மைக்கேல் ஆரூன் என்.என்.ஒக்வே பங்கேற்று பேசினார்.

    வி.ஐ.டி. பயோ மெடிக்கல் செலுலார் மற்றும் மாலிகுலர் தெரனாஸ்டிக்ஸ் சொசைட்டி ஏற்பாடு செய்திருந்த இந்த மாநாட்டில் சரவதேச அளவில் ஜப்பான் இத்தாலி அமெரிக்கா, கனடா, போலந்து, ஆஸ்திரேலியா, இந்தியா உள்ளிட்ட 15 நாடுகளைச் சேர்ந்த 400 க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள் பேராசிரியர்கள் மருத்துவர்கள் தொழில் நிறுவன வல்லுநர்கள் பங்கேற்றனர்.

    வி.ஐ.டி.யில் உள்ள அண்ணா அரங்கில் நடைபெற்ற மாநாடு தொடக்க விழாவிற்கு வருகை தந்தவர்களை மாநாடு அமைப்பு குழு தலைவர் முனைவர் கீதாமணிவாசகம் வரவேற்றார்.

    நிகழ்ச்சியில் தமிழக மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை முதன்மை செயலாளர் முனைவர் ஜெ.ராதாகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று மாநாட்டை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-

    சர்வதேச அளவில் இது போன்ற மாநாட்டுளை அரசு சார்ந்த அமைப்புகள் நடத்துவதில் பல்வேறு பிரச்சனைகள் உள்ளன. வி.ஐ.டி.யில் இது போன்ற மாநாடுகள் நடத்துவது வரவேற்கதக்கது.

    தேசிய அளவில் தரமான மருத்துவ சேவை அளிப்பதில் தமிழ்நாடு முன்னணியில் உள்ளது. மகப்பேறு மருத்துவம் குழந்தை நலம் தொற்று நோய் தடுப்பு ஆகியற்றில் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.

    மருத்துவ ஆராய்ச்சியில் ஈடுபடும் ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ச்சி பணிகளை முடிக்க அதிக காலம் எடுத்துக் கொள்கின்றனர். இதனால் மருத்துவ ஆராய்ச்சியின் பலன் மக்களை சென்றடைவதில் அதிக காலம் ஆகிறது. மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் மருத்துவர்களுடனும் மருந்து தொழில் நிறுவனஙகளுடன் இணைந்து ஆராய்ச்சி மேற்கொண்டால் ஆராய்ச்சிக்கு கால விரயம் ஏற்படுவதை தடுக்க முடியும்.

    நிகழ்ச்சிக்கு வி.ஐ.டி. வேந்தர் டாக்டர் ஜி.விசுவநாதன் தலைமை வகித்து உயிர் மூலப் பொருட்கள் மற்றும் செய்கை உறுப்புகள் ஆராய்ச்சி பணியில் சாதனை படைத்தமைக்காக அமெரிக்கா நாட்டின் டியூக் பல்கலைக்கழக பேராசிரியர் விஞ்ஞானி அசுதோஷ் சில்கோட்டிக்கு சி.பி.சர்மா விருதினை வழங்கி கவுரவித்தார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-

    வளர்ந்து வரும் நாடுகளில் மருத்துவம் முக்கிய பாடமாக உள்ளது. மருத்துவ கண்டுபிடிப்புக்கள் மக்களுக்கு பல்வேறு வகைளில் பயனளிக்க கூடியவை. நாட்டில் சுகாதாரமும் கல்வியும் வழங்க அரசியலமைப்பு சட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. மக்களுக்கு சுகாதாரம் அளிக்க வேண்டியது மத்திய, மாநில அரசுகளின் கடமையாக உள்ளது.

    நிகழ்ச்சியில் பெங்களூர் நாராயணா நேத்ராலயா கண் மருத்துவமனை துணைத் தலைவர் டாக்டர் ரோஹித்ஷெட்டி கவுரவ விருந்தினராக பங்கேற்று பேசினார்.

    முன்னதாக நிகழ்ச்சியில் பங்கேற்ற விருந்தினர்களுக்கு வி.ஐ.டி. துணைத்தலைவர் ஜி.வி.செல்வம் பொன்னாடை அணிவித்து நினைவு பரிசு வழங்கி கவுரவித்தார். இதில் வி.ஐ.டி. இணைதுணை வேந்தர் முனைவர் நாராயணன் மாநாடு அமைப்பாளர்கள் மோகன்வர்மா, பேராசிரியை வீனாகவுல், அருனைநம்பிராஜ், அமித் ஜெயிஷ்வால் ஆகியோர் பங்கேற்றனர்.

    ஆம்பூர் அருகே இரவு நேரத்தில் சிறுத்தை உறுமல் சத்தம், கால்நடைகள் அலறல் சத்தம் கேட்டால் உடனடியாக வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கும்படி பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
    ஆம்பூர்:

    ஆம்பூர் வனச்சரக பகுதியில் கடந்த சில நாட்களாக சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக தகவல் பரவியது. மாச்சம்பட்டு, பெங்களமூலை ஆகிய இடங்களில் சிறுத்தை இருப்பதை அப்பகுதியினர் பார்த்துள்ளனர்.

    தற்போது ஆம்பூர் அருகே கதவாளம் கிராமத்தில் கருங்கல்குட்டை பகுதி பாட்டைசாரதி அம்மன் கோவிலில் இன்று 2-வது ஆடி வெள்ளிக்கிழமை யொட்டி பூஜை ஏற்பாடு செய்ய நேற்று அந்த கிராமத்தை சேர்ந்த சிலர் சென்றுள்ளனர். அப்போது ஒரே நேரத்தில் ஒன்றன் பின் ஒன்றாக 3 சிறுத்தைகள் செல்வதை பார்த்தகாக அவர்கள் ஊருக்குள் வந்து தெரிவித்தனர்.

    இதனால் அச்சம் அடைந்த அப்பகுதி மக்கள் இதுகுறித்து ஆம்பூர் வனச்சரக அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

    அதைத் தொடர்ந்து வனத்துறையினர் விரைந்து சென்று அப்பகுதி மக்களிடம் விசாரணை நடத்தினர். பின் வனப்பகுதியில் தேடுதல் வேட்டை நடத்தினர். சிறுத்தை நடமாட்டம் இருப்பது உறுதி செய்யப்படவில்லை.

    இதுகுறித்து ஆம்பூர் வனச்சரக அலுவலர் கவிதாவிடம் கேட்ட போது, சிறுத்தைகள் நடமாட்டம் இருப்பதாக பொதுமக்கள் தெரிவித்ததின் பேரில் வனத்துறையினர் அங்கு சென்றுள்ளனர்.

    மேலும் இரவு நேரத்தில் பொதுமக்கள் வெளியில் நடமாட வேண்டாம் எனவும், சிறுத்தை உறுமல் சத்தம், கால்நடைகள் அலறல் சத்தம் கேட்டால் உடனடியாக வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கும்படி பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கூறினார்.

    ×