என் மலர்
வேலூர்
காட்பாடி ரெயில் நிலையம் அருகே உள்ள கிளித்தான் பட்டறை ரெயில்வே தண்டவாளத்தையொட்டி ஆட்கள் ஒதுங்கி நிற்கும் அளவிற்கு சிறிய தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது.
இந்த தடுப்பு கம்பியில் இன்று காலை வாலிபர் ஒருவர் சிறிய கயிற்றால் போடப்பட்டுள்ள தூக்கில் பிணமாக தொங்கினார். இதனைக் கண்டு திடுக்கிட்ட பொதுமக்கள் காட்பாடி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர். வாலிபர் அருகே மதுபாட்டில் சிகரெட் பாக்கெட்டுகள் கிடந்தன. அவர் யார் எந்த ஊரை சேர்ந்தவர் என்பது தெரியவில்லை. உடலில் காயங்கள் எதுவும் இல்லை.
உயரம் குறைந்த கம்பியில் வாலிபர் தற்கொலை செய்ய முடியுமா? என்பது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. வாலிபரை கொலை செய்து தொங்க விட்டுள்ளனர்.
போலீசார் உடலை கைப்பற்றி அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் வாலிபர் யார்? அவரை கொலை செய்து தொங்கவிட்ட கும்பல் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இந்த சம்பவத்தால் கிளித்தான் பட்டறை பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
வாணியம்பாடி அருகே உள்ள சொரக்காயல்நத்தம் பகுதியை சேர்ந்தவர் ஜெயக்குமார் (வயது 45) விவசாயி. இவரது தம்பி ராமச்சந்திரன் இவர்களுக்கு சொந்தமாக 4 ஏக்கர் நிலம் உள்ளது.
நிலம் பாகம் பிரிப்பதில் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இது குறித்து ஜெயக்குமார் திம்மம்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில் ராமச்சந்திரன் தனது நண்பர்களுடன் சேர்ந்து நேற்று ஜெயக்குமாரிடம் தகராறு செய்து, அவரை சரமாரியாக தாக்கியுள்ளார்.
இதில் படுகாயமடைந்த ஜெயக்குமார் வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில் இன்று காலை ஜெயக்குமாரின் மனைவி அமிர்தசெல்வி (37). தனது 3 மகள்களுடன் திம்மம்பேட்டை போலீஸ் நிலையம் முன்பு சென்று ராமச்சந்திரன் மீது நடவடிக்கை எடுக்ககோரி 3 மகள்கள் மீதும் தன் மீதும் மண்ணெண்னை ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.
இதனை கண்ட போலீசார் அமிர்தசெல்வியிடம் இருந்து மண்ணெண்னை கேனை பறித்து தீக்குளிப்பை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. #tamilnews
அணைக்கட்டு:
ஒடுகத்தூரை அடுத்த ஆசனம்பட்டு காமராஜர் நகர் பகுதியில் உள்ள தென்புதூரை சேர்ந்த பொன்னுசாமி மகன் ஸ்ரீதர் (வயது 38). கட்டிட தொழிலாளி. இவருக்கும் அணைக்கட்டு அருகே உள்ள அப்புக்கல் கிராமத்தை சேர்ந்த புருஷோத்தமன் மகள் இளவரசிக்கும் (28) கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ராஜ்குமார் (9), நவீன்குமார் (3) என்ற 2 மகன்கள் உள்ளனர்.
ஸ்ரீதருக்கும் மனைவி இளவரசிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்த நிலையில் கடந்த 30-ந்தேதி இரவு அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து 2 மகன்களும் தூங்கிய பிறகு ஆத்திரத்துடன் இருந்த ஸ்ரீதர் மனைவி இளவரசியின் கழுத்தை கத்தியால் சரமாரியாக அறுத்தார். இதில் ரத்த வெள்ளத்தில் இளவரசி சாய்ந்தார். உடனே அவரை அருகில் உள்ள அறைக்குள் இழுத்துப்போட்டு கதவை மூடினார்.
ரத்தம் வழிந்த இடத்தை சுத்தம் செய்த ஸ்ரீதர் இரவு முழுவதும் பயத்தில் அங்கேயே இருந்தார். மருத்துவமனைக்கு கொண்டு சென்றால் நாம் சிக்கிக்கொள்வோம் என்ற பயத்தில் சிகிச்சைக்கும் கொண்டு செல்லாமல் பதற்றமாக காணப்பட்டார்.
காலையில் அவரது மகன்கள் எழுந்து அம்மா எங்கே? என்று கேட்டுள்ளனர். அதற்கு அவர் வெளியே சென்றுள்ளார் என்று மட்டும் பதில் அளித்து விட்டு அவர்களை குளிக்க வைத்து பள்ளிக்கு அனுப்பினார்.
ஸ்ரீதரின் மனைவி இளவரசி அதிகாலையிலேயே எழுந்து வீட்டு வாசலை சுத்தம் செய்து தண்ணீர் தெளித்து கோலம்போடுவார். வெகுநேரமாகியும் அவர் வெளியே வராததால் அருகில் இருந்தவர்கள் ஸ்ரீதரிடம் கேட்டுள்ளனர். சந்தேகம் அடைந்த அவர்கள் வீட்டுக்குள் பூட்டிய அறையை திறந்தபோது இளவரசி பிணமாக கிடந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த ஸ்ரீதர், போலீசார் நம்மை கைது செய்து விடுவார்களே என நினைத்து மற்றொரு அறைக்குள் ஓடிச்சென்று கழுத்தை அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றார். பொதுமக்கள் அவரை மீட்டு வேப்பங்குப்பம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
சப்-இன்ஸ்பெக்டர் மஞ்சுநாத் மற்றும் போலீசார் விரைந்து வந்து ஸ்ரீதரை வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த ஸ்ரீதர் இன்று அதிகாலை இறந்தார். இந்த சம்பவம் ஒடுகத்தூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
வாணியம்பாடி:
வாணியம்பாடி அருகே தமிழக ஆந்திர எல்லையான புல்லூரில் கனகநாச்சியம்மன் கோவில் உள்ளது. இங்கு ஆந்திர அரசால் 12 அடி உயரத்தில் தடுப்பணை கட்டப்பட்டுள்ளது. தற்போது தடுப்பணை முழு கொள்ளளவை எட்டியுள்ளது. மேலும் இந்த அணையில் குளிக்க ஆந்திர அரசு தடை விதித்து போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று மாலை தடுப்பணையில் 4 வாலிபர்கள் குளித்துக் கொண்டிருந்தனர். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்து ஆந்திர மாநில குப்பம் போலீசார் முருகேஷ், வெங்கடேஷ் ஆகிய 2 பேரும் அந்த வாலிபர்களிடம் தடுப்பணையில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இங்கிருந்து செல்லுங்கள் என கூறினர். ஆனால் அதனை ஏற்காத வாலிபர்கள் தொடர்ந்து குளித்துக் கொண்டிருந்தனர். இதனால் போலீசாருக்கும், வாலிபர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதில் ஆத்திரமடைந்த 4 வாலிபர்களும் ஆந்திர போலீசாரை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் ஓடிச்சென்று ரகளையில் ஈடுபட்ட 4 வாலிபர்களை பிடித்து அங்கிருந்து கோவிலுக்கு சொந்தமான அறையில் வைத்து பூட்டினர்.
பின்னர் குப்பம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்த குப்பம் இன்ஸ்பெக்டர் சம்பவ இடத்திற்கு வந்து படுகாயமடைந்த 2 போலீசாரை மீட்டு குப்பம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
விசாரணையில் போலீசாரை தாக்கியது வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டை கோடியூர் கிராமத்தை சேர்ந்த சி.ஆர்.பி.எப். வீரர் அருண் (28) மற்றும் அவரது நண்பர்கள் புவனேஸ்வர் (27), ஜீவா (28), பாரி (28) என்பதும் தெரியவந்தது. விடுமுறையில் ஊருக்கு வந்த அருண் நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்திவிட்டு அணையில் குளித்துக் கொண்டிருந்த போது தகராறு ஏற்பட்டதும் தெரியவந்தது.
இதையடுத்து ஆந்திர போலீசார் சி.ஆர்.பி.எப். வீரர் அருண் உள்பட 4 பேர் மீது வழக்கு பதிந்து அவர்களை கைது செய்தனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #arrestcase
அணைக்கட்டு காந்திரோட்டில் தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு 1300 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.
சின்ன அணைக்கட்டு பகுதியை சேர்ந்த பெருமாள் (வயது 45) என்பவர் பள்ளியில் இரவு நேர காவலாளியாக வேலைபார்த்து வருகிறார். நேற்று இரவு பெருமாள் பணியில் இருந்தார்.
நள்ளிரவு 4 பேர் கும்பல் பள்ளி மெயின் கதவு பூட்டை உடைத்து உள்ளே சென்றனர். காவலாளி பெருமாளை தாக்கி நாற்காலியில் அவரை கட்டிப்போட்டனர்.
அவர் வைத்திருந்த ரூ.8 ஆயிரம் பணத்தை பறித்தனர். பின்னர் பள்ளி அலுவலக கதவு பூட்டை உடைத்து உள்ளே சென்றனர்.
அங்கு பீரோவில் இருந்த ரூ.90 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்தனர். மேலும் சி.சி.டி.வி. கேமிரா காட்சிகள் பதிவு செய்யும் எந்திரம் ஆகியவற்றை எடுத்து சென்று விட்டனர்.
இன்று காலையில் பள்ளிக்கு நடைபயிற்சிக்கு சென்றவர்கள் காவலாளி பெருமாளை கட்டிபோட்டிருந்ததை கண்டனர்.
அவர்கள் கட்டவிழ்த்து விட்ட பின்னர் கொள்ளை சம்பவம் பற்றி பள்ளி நிர்வாகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பள்ளி தாளாளர் அரி அணைக்கட்டு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரித்தனர். கைரேகைகள் சேகரிக்கபட்டன.
இந்த சம்பவம் அணைக்கட்டில் பரபரப்பை ஏற்படுத்தியது. கொள்ளை கும்பலை பிடிக்க போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூர் கொணவட்டம் மதினா நகரை சேர்ந்தவர் ரஷீத் மகன் யூசப் (வயது 25). திருமணமான இவர், கொணவட்டத்தில் உள்ள ஒரு பாட்டில் கம்பெனியில் வேலை செய்து வந்தார். இந்த கம்பெனியில், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு 17 வயது சிறுமியும் வேலை பார்த்தார்.
அப்போது யூசப் தனக்கு திருமணமானதை மறைத்து சிறுமிக்கு காதல் தொல்லை கொடுத்தார். ஆசை வார்த்தை கூறி சிறுமியை கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்திற்கு அழைத்துச் சென்றார். அங்கு சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்தார்.
சிறுமியின் பெற்றோர், வேலூர் தாலுகா போலீசில் புகார் அளித்தனர். போலீ சார் ‘போக்சோ’ சட்டத்தில் வழக்குப்பதிந்து, யூசப்பை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை வேலூர் மகளிர் கோர்ட்டில் நடந்தது. அரசு தரப்பு வக்கீல் லட்சுமி பிரியா வாதாடினார்.
வழக்கு விசாரணை முடிந்த நிலையில், இன்று தீர்ப்பு அறிவிக்கப்படும் என நீதிபதி செல்வம் அறிவித்திருந்தார்.
அதன்படி, நீதிபதி செல்வம் முன்பு யூசப் இன்று ஆஜர்படுத்தப்பட்டார். குற்றம் நிரூபிக்கப்பட்டதால் கற்பழிப்பு மற்றும் போக்சோ சட்டப்பிரிவுகளில் யூசப்பிற்கு 10 ஆண்டுகள் ஜெயில் தண்டனை, ரூ.3 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
இதையடுத்து, வேலூர் ஜெயிலில் யூசப் அடைக்கப்பட்டார்.
பேரணாம்பட்டு சின்னதாமல் செருவு கிராமத்தை சேர்ந்தவர் வி.ஏ.மார்கபந்து (வயது 80), ஓய்வுபெற்ற ஆசிரியர். இவர் கடந்த 2015-ம் ஆண்டு ஜூலை மாதம் 23-ந் தேதி தனது மனைவியுடன் வேலூர் கன்டோன்மென்ட் ரெயில் நிலையத்தில் இருந்து கடலூருக்கு ரெயிலில் செல்ல முன்பதிவு செய்திருந்தார். அதன்படி மார்கபந்து, மனைவியுடன் ரெயில் நிலையத்துக்கு 23-ந் தேதி வந்தார்.
ரெயில் வருவதற்கு சுமார் 1½ மணி நேரம் இருந்ததால், அங்குள்ள முன்பதிவு பயணிகள் அறையில் ஓய்வு எடுக்க மார்கபந்து, தனது மனைவியுடன் சென்றார். ஆனால் முன்பதிவு பயணிகள் அறை பூட்டப்பட்டிருந்தது.
இதையடுத்து அவர், ரெயில் நிலைய அதிகாரி சுந்தரராமனை சந்தித்து இதுகுறித்து தெரிவித்தார். அதற்கு அவர் ரெயில் வருவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்புதான் முன்பதிவு பயணிகள் அறை திறக்கப்படும் என்று கூறி, அறையை திறக்க மறுத்து விட்டார். இதனால் ஏமாற்றம் அடைந்த மார்கபந்து மற்றும் அவரது மனைவியும் ரெயில் நிலையத்தில் உள்ள இருக்கையில் அமர்ந்தனர்.
இந்த சம்பவத்தால் மனஉளைச்சல் அடைந்த மார்கபந்து வேலூர் நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அதில், முன்பதிவு பயணிகள் அறையை திறக்க மறுத்தது மற்றும் உரிய சேவை வழங்காததால் ரூ.5 லட்சம் நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று கூறியிருந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி கிள்ளிவளவன், ரெயில் பயணிகளுக்கு உரிய சேவை வழங்காததற்காக ரெயில் நிலைய அதிகாரி சுந்தரராஜனுக்கு ரூ.19 ஆயிரம் அபராதம் விதித்து, அதனை மார்கபந்துக்கு வழங்கும்படி தீர்ப்பு கூறினார்.
ரெயில் நிலைய அதிகாரி சுந்தரராஜன் தற்போது கணியம்பாடியில் பணிபுரிந்து வருகிறார்.
வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு கூட்டம் நேற்று நடந்தது. கலெக்டர் ராமன் தலைமை தாங்கினார். இதில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கைகள் மற்றும் குறைகளை மனுக்களாக அளித்தனர். அதனை பெற்றுக்கொண்ட கலெக்டர், மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
கூட்டத்தில், அணைக்கட்டு தாலுகா கருகாளி கிராமத்தை சேர்ந்த ராமமூர்த்தி (வயது 52) என்பவர் கலெக்டரிடம் கோரிக்கை மனு ஒன்று அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:-
நான் தனியார் நிறுவனத்தில் காவலாளியாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு வேலை செய்து வந்தேன். அந்த சமயம் ஒரு நாள் திடீரென பாத்ரூமில் வழுக்கி விழுந்தேன். இதில் எனது ஒருபக்க இடுப்பு எலும்பு முறிந்து விட்டது. அதற்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தேன். இடுப்பு எலும்பு முறிந்ததால் எந்த வேலையும் செய்ய முடியவில்லை. இந்த நிலையில் தொலைக்காட்சியில் விளம்பரம் ஒன்று பார்த்தேன். அதில், வாலாஜாவில் உள்ள நாட்டு வைத்திய சாலையில் மருந்து சாப்பிட்டால் எலும்பு முறிவு சரியாகி விடும் என தெரிவித்தனர்.
இதனை உண்மை என நம்பிய நான், கடந்த மாதம் அந்த நாட்டு வைத்திய சாலைக்கு சென்று வைத்தியரை நேரில் பார்த்தேன். அப்போது அவர், உடல் நலம் முழுவதும் குணமடைந்து, பழைய மாதிரி எழுந்து நடப்பதற்கு நாட்டு மருந்து தருவதாகவும், அதற்கு ரூ.60 ஆயிரம் செலவாகும் என்று கூறினார்.
இதையடுத்து எனது தங்கையின் நகைகளை அடகு வைத்து ரூ.60 ஆயிரம் வைத்தியரிடம் கொடுத்தேன். அதற்கு அவர் நாட்டு மருந்து மற்றும் எண்ணெய் வழங்கினார். அந்த மருந்தை தொடர்ந்து சாப்பிட்டதால் என் உடலின் தோற்றம் சீர்குலைந்து விட்டது, (உருவமே மாறிவிட்டது). உடல் நிலை பாதிப்பு மேலும் அதிகமானது. இதுகுறித்து வைத்தியரிடம் கேட்டதற்கு, என்னை அடிக்க வருகிறார்.
என்னிடம் ரூ.60 ஆயிரம் வாங்கிவிட்டு எனது உடல் தோற்றத்தை சீர்குலைத்த வைத்தியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் எனது பணத்தை திரும்ப பெற்று தர வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியிருந்தார்.
மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் ராமன், இதுதொடர்பாக விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
வேலூர்:
முன்னாள் பிரமதர் ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதியான நளினி, வேலூர் பெண்கள் ஜெயிலில் கடந்த 27 ஆண்டுகளாக தண்டனை அனுபவித்து வருகிறார். நளினியின் கணவர் முருகன் வேலூர் ஆண்கள் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார்.
15 நாட்களுக்கு ஒருமுறை முருகன், மனைவி நளினியை சந்திக்கிறார். இந்த நிலையில், நளினி கடந்த சில நாட்களாக பல் வலியால் அவதிப்பட்டு வந்தார். ஓரிரு நாட்களாக பல்வலி அதிகமானது.
இதையடுத்து, வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத் துவமனையில் சிகிச்சைக்காக இன்று காலை 9.20 மணிக்கு நளினி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்டார். கடவாய் சொத்தை பல் ஒன்று பிடுங்கப்பட்டது.
1 மணி நேர சிகிச்சைக்கு பிறகு 10.30 மணி அளவில் மீண்டும் வேலூர் பெண்கள் ஜெயிலுக்கு நளினி அழைத்து செல்லப்பட்டு அடைக்கப்பட்டார்.
ஆலங்காயம் அருகே உள்ள ராஜாபாளையம் கிராமம் மலையடிவாரத்தில் உள்ளது. இந்த கிராமத்தில் விவசாயிகள் ஆடு, மாடுகள் அதிகளவில் வளர்த்து வருகின்றனர்.
அந்த ஊரை சேர்ந்த தட்சிணாமூர்த்தி அவருக்கு சொந்தமான ஆடுகளை விவசாய நிலத்தின் அருகே அடைத்து வைத்திருந்தார். நள்ளிரவில் மர்ம விலங்கு புகுந்து ஆடுகளை கடித்து குதறியுள்ளது. இதில் 7 ஆடுகள் குடல் சரிந்து இறந்தன. இன்று காலை ஆடுகள் இறந்து கிடந்ததை கண்டு கிராம மக்கள் திடுக்கிட்டனர். ஆலங்காயம் போலீசார் மற்றும் வருவாய்த் துறையினர் இறந்த ஆடுகளை பார்வையிட்டனர்.
அந்த இடத்தில் செந்நாய்கள் கால் தடங்கள் இருந்ததாக கிராம மக்கள் தெரிவித்தனர். ஆலங்காயம் மலைபகுதியில் செந்நாய்கள் கூட்டம் கூட்டமாக சுற்றி திரிகின்றன.
செந்நாய்கள் ஊருக்குள் புகுந்து ஆடுகளை கடித்து கொன்றிருக்க அதிக வாய்ப்புள்ளது. வாணியம்பாடி அருகே உள்ள செட்டியப்பனூர் துரையேறி கிராமத்தில் செந்நாய்கள் ஆடுகளை கடித்து கொன்ற சம்பவங்கள் நடந்துள்ளது.
இதனால் கிராம மக்கள் பீதியில் உள்ளனர். ஆடுகளை கொன்றது செந்நாய்களா அல்லது வேறு ஏதாவது விலங்குகளா என்பது குறித்து வருவாய்த்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
வேலூர் ஜெயிலில் தண்டனை மற்றும் விசாரணை கைதிகள் என சுமார் 1000 பேர் அடைக்கப்பட்டுள்ளனர். சிறையில் உள்ள கைதிகள் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு மரணிப்பது தொடர்கதையாக உள்ளது.
கடந்த வாரங்களில் 2 கைதிகள் திடீரென இறந்தனர். இதையடுத்து, ஜெயிலில் மருத்துவ முகாம் நடத்த ஏற்பாடு செய்வதாக சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த நிலையில், கடந்த மாதம் கொலை வழக்கில் கைதான திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பகுதியை சேர்ந்த சவுகத் அலி 26-ந் தேதி திடீரென நோய் தொற்றால் பாதிக்கப்பட்டார்.
உடல்நலக்குறைவால் அவதியுற்ற அவரை, சிறை அதிகாரிகள் மீட்டு அடுக்கம் பாறை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். 27-ந் தேதி சிகிச்சை பலனின்றி கைதி சவுகத்அலி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதையடுத்து, 28-ந் தேதி வேலூர் ஆண்கள் ஜெயிலில் 5 பேர் கொண்டு மருத்துவக் குழுவினர், 250 கைதிகளுக்கு கண், காதுகளை பரிசோதித்து முழு உடல் பரிசோதனை செய்து மனநல ஆலோசனை வழங்கினர்.
இதைத்தொடர்ந்து, 2-வது கட்டமாக ஆண்கள் ஜெயிலில் 200 கைதிகளுக்கு மருத்துவ குழுவினர் இன்று முழு உடல் பரிசோதனை செய்து சிகிச்சை அளித்தனர். மதியத்திற்கு பிறகு வேலூர் பெண்கள் ஜெயிலில் பெண் கைதிகளுக்கு மருத்துவ பரிசோதனை நடந்தது.
தி.மு.க. தலைவர் கருணாநிதி உடல் நலக்குறைவால் சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
கருணாநிதி உடல்நிலை குறித்து பேஸ்புக் மற்றும் வாட்ஸ்-அப் சமூக வலைத்தளங்களில் வதந்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. இது, தி.மு.க.வினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
இந்நிலையில் குடியாத்தம் பிச்சனூர் தியாகி குமரன் தெருவை சேர்ந்த நாம் தமிழர் கட்சியின் இளைஞரணி அமைப்பாளர் தீனா என்கிற தீனதயாளன் (23) என்பவர் தனது பேஸ்புக் பக்கத்திலும், வாட்ஸ்-அப்பிலும் கருணாநிதி உடல்நிலை குறித்து வதந்தி பரப்பியுள்ளார்.
இதையறிந்த, குடியாத்தம் தொகுதி தி.மு.க. தகவல் தொழில்நுட்ப பிரிவு ஒருங்கிணைப்பாளர் ஞான பிரகாசம் (27), குடியாத்தம் டவுன் போலீசில் புகார் அளித்தார்.
இன்ஸ்பெக்டர் இருதய ராஜ் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து வதந்தி பரப்பிய நாம் தமிழர் கட்சி பிரமுகர் தீனதயாளனை கைது செய்தனர்.






