என் மலர்
நீங்கள் தேடியது "நாட்டு மருந்து"
- கலையரசி மதுரையில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
- தந்தை வேல்முருகன் அளித்த புகாரின்பேரில், செல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
மதுரை செல்லூர் மீனாம்பாள்புரத்தை சேர்ந்தவர் வேல்முருகன். இவருடைய மகள் கலையரசி (வயது 19). இவர், மதுரையில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
இந்தநிலையில், உடல் எடையை குறைப்பது தொடர்பாக யூடியூப்பில் சில வீடியோக்கள் பார்த்து வந்துள்ளார். இதனை தொடர்ந்து, கீழமாசி வீதியில் உள்ள நாட்டு மருந்துகள் விற்கும் கடை ஒன்றுக்கு சென்று, யூடியூப்பில் பார்த்த குறிப்புகளை வைத்து சில மருந்து பொருட்களை வாங்கி உள்ளார். வீட்டுக்கு சென்று அந்த மருந்தை சாப்பிட்டு உள்ளார்.
சிறிது நேரத்தில் அவருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து பெற்றோர் உடனடியாக கலையரசியை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு முதல் உதவி அளிக்கப்பட்ட நிலையில், வீட்டுக்கு அழைத்து வரப்பட்டார். பின்னர் இரவில் மீண்டும் அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதை தொடர்ந்து, உயிருக்கு ஆபத்தான நிலையில் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர்.
அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே கலையரசி இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சோக சம்பவம் குறித்து அவருடைய தந்தை வேல்முருகன் அளித்த புகாரின்பேரில், செல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இதுகுறித்து போலீசார் கூறும்போது, "யூடியூப்பில் வீடியோக்களை பார்த்து இதுபோன்று மருந்துகளை எடுத்துக்கொள்ளும் பழக்கம் அதிகரித்து வருகிறது. டாக்டர் பரிந்துரை இல்லாமல் எந்த மருந்தை உட்கொண்டாலும் உயிருக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. மாணவி கலையரசி எந்த மாதிரியான நாட்டு மருந்தை உட்கொண்டார் என்பது பற்றிய தகவலை சேகரித்து வருகிறோம். சம்பந்தப்பட்ட நாட்டு மருந்து கடையிலும் விசாரணை நடத்த உள்ளோம். முறையான விசாரணை இன்றி, நாட்டு மருந்து பொருட்களை கொடுக்கக்கூடாது என கடைக்காரர்களிடம் அறிவுறுத்தப்பட்டு வருகிறது" என்றனர்.
வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு கூட்டம் நேற்று நடந்தது. கலெக்டர் ராமன் தலைமை தாங்கினார். இதில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கைகள் மற்றும் குறைகளை மனுக்களாக அளித்தனர். அதனை பெற்றுக்கொண்ட கலெக்டர், மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
கூட்டத்தில், அணைக்கட்டு தாலுகா கருகாளி கிராமத்தை சேர்ந்த ராமமூர்த்தி (வயது 52) என்பவர் கலெக்டரிடம் கோரிக்கை மனு ஒன்று அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:-
நான் தனியார் நிறுவனத்தில் காவலாளியாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு வேலை செய்து வந்தேன். அந்த சமயம் ஒரு நாள் திடீரென பாத்ரூமில் வழுக்கி விழுந்தேன். இதில் எனது ஒருபக்க இடுப்பு எலும்பு முறிந்து விட்டது. அதற்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தேன். இடுப்பு எலும்பு முறிந்ததால் எந்த வேலையும் செய்ய முடியவில்லை. இந்த நிலையில் தொலைக்காட்சியில் விளம்பரம் ஒன்று பார்த்தேன். அதில், வாலாஜாவில் உள்ள நாட்டு வைத்திய சாலையில் மருந்து சாப்பிட்டால் எலும்பு முறிவு சரியாகி விடும் என தெரிவித்தனர்.
இதனை உண்மை என நம்பிய நான், கடந்த மாதம் அந்த நாட்டு வைத்திய சாலைக்கு சென்று வைத்தியரை நேரில் பார்த்தேன். அப்போது அவர், உடல் நலம் முழுவதும் குணமடைந்து, பழைய மாதிரி எழுந்து நடப்பதற்கு நாட்டு மருந்து தருவதாகவும், அதற்கு ரூ.60 ஆயிரம் செலவாகும் என்று கூறினார்.
இதையடுத்து எனது தங்கையின் நகைகளை அடகு வைத்து ரூ.60 ஆயிரம் வைத்தியரிடம் கொடுத்தேன். அதற்கு அவர் நாட்டு மருந்து மற்றும் எண்ணெய் வழங்கினார். அந்த மருந்தை தொடர்ந்து சாப்பிட்டதால் என் உடலின் தோற்றம் சீர்குலைந்து விட்டது, (உருவமே மாறிவிட்டது). உடல் நிலை பாதிப்பு மேலும் அதிகமானது. இதுகுறித்து வைத்தியரிடம் கேட்டதற்கு, என்னை அடிக்க வருகிறார்.
என்னிடம் ரூ.60 ஆயிரம் வாங்கிவிட்டு எனது உடல் தோற்றத்தை சீர்குலைத்த வைத்தியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் எனது பணத்தை திரும்ப பெற்று தர வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியிருந்தார்.
மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் ராமன், இதுதொடர்பாக விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.






