என் மலர்
செய்திகள்

வேலூரில் 20 ஆயிரம் லாரிகள் ஓடவில்லை
வேலூர்:
18 சதவீத வரிவிதிப்புடன் பெட்ரோல், டீசல் விலையை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டுவர வேண்டும். நாடு முழுவதும் பெட்ரோல், டீசலுக்கு ஒரே சீரான விலையை நிர்ணயிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் இன்று முதல் லாரிகள் கால வரையற்ற வேலை நிறுத்தம் செய்கின்றன.
இந்த வேலை நிறுத்த போராட்டத்திற்கு வேலூர் லாரி உரிமையாளர்கள் சங்கம் ஆதரவளித்துள்ளது. சங்க தலைவர் செல்வக்குமார் தலைமையில் வேலை நிறுத்தம் குறித்து நேற்று லாரிகளில் ஸ்டிக்கர் ஒட்டினர்.
இன்று காலை 6 மணி முதல் லாரிகள் வேலை நிறுத்தம் தொடங்கியது. தேசிய நெடுஞ்சாலையில் வெளிமாநில லாரிகள் சில ஓடின.
வேலூர் மாவட்டத்தில் சுமார் 20ஆயிரம் லாரிகள் வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்றுள்ளன. இந்த லாரிகள் அனைத்தும் ஓடவில்லை.
தமிழக- ஆந்திர எல்லையில் உள்ள கிறிஸ்டியான் பேட்டை, சேர்க்காடு பகுதிகளில் லாரிகள் வரிசையாக நிறுத்தப்பட்டுள்ளன.
கால வரையற்ற வேலை நிறுத்த போராட்டத்திற்கு ஆதரவாக வரும் 22-ந் தேதி பொதுமக்களும் தங்களின் வாகனத்தை இயக்காமல் அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும். என லாரி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
வேலூர் மாவட்டத்தில் சுமார் 20 ஆயிரம் லாரிகள் ஓடாததால் பல கோடி வர்த்தகம் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. வேலூர் மாவட்டத்தில் இருந்து வெளி மாநிலங்களுக்கான சரக்கு ‘புக்கிங்’கும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
லாரிகள் ஸ்டிரைக்கால் காய்கறி, பால் உள்பட அத்தியா வசிய பொருட்கள் விலை உயர்வதோடு, தட்டுப்பாடு அதிகரிக்கும். இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்.
நேதாஜி மார்க்கெட்டுக்கு நேற்று இரவு லாரிகளில் சரக்குகள் வந்தன இதனால் இன்று காலை முதலே பொதுமக்கள் ஏராளமானோர் வேலூர் மார்க்கெட்டுகளில் முண்டியத்து தேவையான அத்தியாவசிய பொருட்களை வீடுகளுக்கு வாங்கி கொண்டு செல்கின்றனர்.
இதனால் லாங்கு பஜார், மண்டி வீதிகளில் கூட்டம் அலை மோதியது.






