என் மலர்
வேலூர்
வேலூர் தொகுதி அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் குடியாத்தம் பிச்சனூர் பகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்டு கொண்டிருந்தார்.
அப்போது, அவரது வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்தது. இதனையடுத்து ஏ.சி.சண்முகம் பிரசாரத்தை உடனடியாக நிறுத்திவிட்டு கட்சியினருடன் ஆலோசனை நடத்தினார். அதை தொடர்ந்து சிறிது நேரத்தில் அவரது மனு ஏற்கப்பட்டதாக கூறப்பட்டது. இதைதொடர்ந்து அவர் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
நான் புதிய நீதிக்கட்சி தலைவராக இருந்தாலும் அ.தி.மு.க. உறுப்பினர் என்பதற்கான அடையாள அட்டை வேட்புமனுவில் கொடுத்துள்ளேன். துரைமுருகன் கூட்டத்தினர் சலசலப்பை உண்டாக்க முயற்சி செய்கிறார்கள். எப்படியாவது தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தில் மேடை, மேடையாக அழுகிறார், அதற்காக நாடகம் ஆடுகிறார்.
தேர்தலையொட்டி அவரது மகனை லாரி ஏற்றி கொல்ல சதி செய்யப்பட்டதாக கற்பனையாக பொய் சொல்கிறார்.
இதன் மூலம் மக்கள் மத்தியில் அனுதாபம் ஏற்பட வேண்டும் என நினைக்கிறார். நாங்கள் ஜனநாயக ரீதியாக மக்களை சந்தித்து வெற்றி பெறுவோம். தோல்லி பயத்தால் துரைமுருகன் நாடகம் ஆடி பொய் பிரசாரம் செய்து வருகிறார் என்றார்.
வேலூர் பாராளுமன்ற தொகுதிக்கு 5-ந் தேதி தேர்தல் நடக்கிறது. அ.தி.மு.க. சார்பில் ஏ.சி.சண்முகம், தி.மு.க. சார்பில் கதிர் ஆனந்த் போட்டியிடுகின்றனர்.

ஏ.சி.சண்முகம் பெயரில் மொத்தம் ரூ. 28 கோடியே 49 லட்சத்து ஒரு ஆயிரத்து 470.63 மதிப்பிலும், அவரது மனைவி பெயரில் ரூ. 22 கோடியே 81 லட்சத்து 61 ஆயிரத்து 501.22 மதிப்பிலும் அசையும் சொத்துகள் உள்ளன.
இதில், ஏ.சி.சண்முகம் பெயரில் கையிருப்பு ரொக்கம் ரூ. 8,92,470, வங்கியிருப்பு ரூ. 79,19,627.63, பங்கு பத்திரங்களில் முதலீடு ரூ.24 கோடியே 89 லட்சத்து 6 ஆயிரத்து 680, இதர முதலீட்டின் மீதான வருவாய் ரூ. 1 கோடியே 93 லட்சத்து 16 ஆயிரத்து 193, நகைகள் ரூ. 78 லட்சத்து 66 ஆயிரத்து 500, அவரது மனைவி பெயரில் கையிருப்பு ரொக்கம் ரூ. 9,21,230, வங்கியிருப்பு ரூ. 1 கோடியே 11 லட்சத்து 29 ஆயிரத்து 543.22, பங்கு பத்திரங்களில் முதலீடு ரூ.16 கோடியே 96 லட்சத்து 3 ஆயிரத்து 614, காப்பீட்டு முதலீடு ரூ.10 லட்சத்து 45 ஆயிரம், இதர முதலீட்டின் மீதான வருவாய் ரூ. 3 கோடியே 23 லட்சத்து 40 ஆயிரத்து 014, நகைகள் ரூ. 1 கோடியே 31 லட்சத்து 22 ஆயிரத்து 100 அடங்கும்.
விவசாய நிலங்கள் இனங்களில் ஏ.சி.சண்முகம் பெயரில் சென்னை, திருவண்ணாமலை, வேலூர், திருப்பூர், திருச்சி, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களிலும், பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளில் மொத்தம் ரூ. 39 கோடியே 80 லட்சத்து 79 ஆயிரத்து 600 மதிப்பிலும், அவரது மனைவி பெயரில் ரூ. 26 கோடியே 56 லட்சத்து 30 ஆயிரத்து 138 மதிப்பிலும் அசையா சொத்துகள் உள்ளன.
விவசாய நிலங்கள் அல்லாத இனங்களில் ஏ.சி.சண்முகம் பெயரில் மொத்தம் ரூ. 41 கோடியே 60 லட்சத்து 32 ஆயிரம் மதிப்பிலும், அவரது மனைவி பெயரில் ரூ. 34 கோடியே 67 லட்சத்து 66 ஆயிரத்து 638 மதிப்பிலும் அசையா சொத்துகள் உள்ளன.
ஏ.சி.சண்முகம் பெயரில் ரூ. 12 கோடியே 76 லட்சத்து 61ஆயிரத்து 948 மதிப்பிலும், அவரது மனைவி பெயரில் ரூ.11 கோடியே 91 லட்சம் கடன் இருப்பதாகவும் அவரது வேட்புமனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வேலூர் பாராளுமன்ற தொகுதிக்கு கடந்த ஏப்ரல் 18ஆம் தேதி நடக்க இருந்த தேர்தலையொட்டி ஏ.சி.சண்முகம் மார்ச் 22ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். அப்போது அவரது வேட்புமனுவில் தனது குடும்ப சொத்து மதிப்பாக மொத்தம் ரூ. 191 கோடியே 21 லட்சத்து 69 ஆயிரத்து 579.27 மதிப்பில் அசையும், அசையா சொத்துகள் இருப்பதாக குறிப்பிட்டிருந்தார்.
பின்னர், ரத்து செய்யப்பட்ட வேலூர் மக்களவைத் தேர்தல் 3 மாதங்களுக்கு பிறகு மீண்டும் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், வேட்புமனுவை தாக்கல் செய்துள்ள ஏ.சி.சண்முகம் தனது குடும்பச் சொத்து மதிப்பாக ரூ. 193 கோடியே 95 லட்சத்து 71 ஆயிரத்து 347.85 என குறிப்பிட்டிருந்தார். இதன்மூலம், அவரது குடும்ப சொத்து 3 மாதங்களில் ரூ. 2.74 கோடி உயர்ந்திருப்பது தெரியவந்துள்ளது.
வேலூர்:
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 7 பேர் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளனர். இதில் முருகன் வேலூர் ஆண்கள் சிறையிலும், அவரது மனைவி நளினி வேலூர் பெண்கள் தனிச்சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர்.
மகளின் திருமண ஏற்பாடுகள் செய்வதற்காக நளினி 6 மாதம் பரோல் கேட்டு சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
வழக்கில் அவரே ஆஜராகி வாதாடினார். அதை தொடர்ந்து நளினிக்கு ஒருமாதம் பரோல் வழங்கி உத்தரவிடப்பட்டது.
நளினிக்கு அவரது தாயார் பத்மா மற்றும் காட்பாடியை சேர்ந்த பெண் ஒருவரும் ஜாமீன் வழங்கியுள்ளனர். நளினி வேலூர் ரங்காபுரம் புலவர் நகரில் உள்ள திராவிட இயக்க தமிழர் பேரவை மாநில துணை பொது செயலாளர் சிங்காராயர் வீட்டில் தங்குகிறார்.
2 பேர் ஜாமீன் மற்றும் வேலூரில் தங்கும் இடம் குறித்த ஆவணங்களை நளினி சமர்ப்பித்துள்ளார்.
நாளை மாலை 4 மணிக்கு நளினி ஜெயிலில் இருந்து பரோலில் வெளியே வருகிறார். அங்கிருந்து பாதுகாப்பாக ரங்காபுரத்தில் அவர் தங்கியிருக்கும், வீட்டுக்கு செல்கிறார். நளினியின் தாயார் மற்றும் குடும்பத்தினர் வேலூர் வருகின்றனர். நளினி அரசியல் பிரமுகர்களை சந்திக்க கூடாது. பேட்டியளிக்க கூடாது என்பது உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கபட்டுள்ளன.
இந்தநிலையில் வேலூர் ஜெயிலில் நளினி, முருகன் சந்திப்பு இன்று நடந்தது. இதில் மகள் திருமண ஏற்பாடுகள் குறித்து இருவரும் உருக்கமாக பேசிக்கொண்டனர்.
இங்கிலாந்தில் உள்ள அவரது மகள் ஹரித்திரா இன்னும் 2 வாரத்தில் வேலூர் வர உள்ளார்.

நளினி வேலூர் சத்துவாச்சாரியில் தங்குவதால் அவரது மகளின் திருமணம் வேலூரில் தான் நடைபெறும் என கூறப்படுகிறது.
மகள் திருமணம் சம்பந்தமாக முருகன் இதுவரை பரோல் கேட்டு விண்ணப்பிக்கவில்லை. திருமண தேதி குறித்த பின்னர் பரோலில் வருவது பற்றி முருகன் முடிவெடுக்கலாம் என்று கூறப்படுகிறது.
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் நகராட்சியில் சார்பில் திருப்பத்தூரில் உள்ள 36 வார்டுகளில் மேட்டூர் கூட்டு குடிநீர் திட்டம் மூலம் பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.
தர்மராஜா கோவில் தெருவில் புதிய குடிநீர்இணைப்பு வழங்கும் இடங்களை திருப்பத்தூர் நகராட்சி கமிஷனர் சந்திரா, பணி மேற்பார்வையாளர் சீனிவாசன் பீட்டர் செல்வம் ஆகியோர் நேரில் பார்வையிட்டனர். அப்போது அந்த பகுதியில் மின் மோட்டார் வைத்து குடிநீரை உறிஞ்சிக்கொண்டிருந்த 6 மின் மோட்டார்களை பறிமுதல் செய்து குடிநீர் இணைப்பை துண்டித்தனர் .
அதன் உரிமையாளர்கள் நகராட்சி அலுவலகத்தில் வந்து இனி இது போல செய்ய மாட்டோம் என எழுதிக் கொடுத்த பிறகு தலா ரூபாய் 10 ஆயிரம் அபராதம் விதித்து மீண்டும் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டது.
இதுகுறித்து நகராட்சி கமிஷனர் சந்திரா நிருபர்களிடம் கூறியதாவது:-
வறட்சி காரணமாககுடிநீர் வருவது குறைந்து திருப்பத்தூர் பொதுமக்களுக்கு நகராட்சி மூலம் குடிநீர் சீராக வழங்கப்பட்டு வருகிறது.
பொதுமக்கள் சிக்கனமாக குடிநீரை பயன்படுத்த வேண்டும் நாளை முதல் அனைத்து பகுதிகளிலும் மோட்டார் வைத்து குடிநீரை உறிஞ்சுகிறார்களா என கண்காணிக்க குழு வார்டு வார்டாக செல்ல உள்ளார்கள் குடிநீர் உறிஞ்சினால் அவர்கள் இணைப்பு துண்டிக்கப்பட்டு அபராதம் விதிக்கப்படும் மீண்டும் அதேமாதிரி செய்தால் குடிநீர் இணைப்பு முற்றிலுமாக துண்டிக்கப்படும்.
மேலும் ஒரு வருடம் 100 கிலோவுக்கு மேல் கழிவுகளை உற்பத்தி செய்தால் அதை நகராட்சி எடுத்துச் செல்லாது அந்த கழிவுகளை அந்த நிறுவனத்தின் நிதி மேலாண்மை செய்து கொள்ள வேண்டும் என்று சட்டம் வரையறுக்கப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில் 100 கிலோவுக்கு மேல் கழிவுகளை உற்பத்தி செய்யும் ஹோட்டல்கள் வணிக நிறுவனங்கள் திருமண மண்டபங்கள் உரிமையாளர்களுக்கு அந்த கழிவுகளை எவ்வாறு வேளாண்மை செய்வது என்பது குறித்து விழிப்புணர்வு கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்
வேலூர் பாராளுமன்ற தொகுதி தேர்தல் வருகிற 5-ந் தேதி நடக்கிறது. 11-ந் தேதி வேட்புமனுதாக்கல் தொடங்கி நேற்றுடன் முடிவடைந்தது. மொத்தம் 50 பேர் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.
மனுக்கள் பரிசீலனை வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டரும் தேர்தல் அலுவலவருமான சண்முகசுந்தரம் தலைமையில் இன்று நடந்தது.
அ.தி.மு.க. சார்பில் மாவட்ட பொருளாளர் மூர்த்தி, வக்கீல்கள், தி.மு.க. வேட்பாளர் கதிர்ஆனந்த், முன்னாள் அமைச்சர் துரைமுருகன், மாவட்ட செயலாளர் நந்தகுமார் மற்றும் வக்கீல்கள் கலந்து கொண்டனர்.
மற்றும் சுயேட்சை வேட்பாளர்களும் அவரது ஆதரவாளர்களும் பங்கேற்றனர்.
அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர் ஏ.சி. சண்முகம் வேட்புமனு பரிசீலனை செய்யப்பட்டது.
அப்போது சுயேட்சை வேட்பாளர் ரவி என்பவர் அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் புதிய நீதிக்கட்சியின் தலைவராக உள்ளார். அ.தி.மு.க. அடிப்படை உறுப்பினராக இல்லாத அவர் எப்படி இரட்டைஇலை சின்னத்தில் போட்டியிட முடியும். எனவே அவர் மனுவை நிராகரிக்க வேண்டும் என்றார்.

ஏ.சி.சண்முகம் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட முடிவு செய்தபோது அவர் அ.தி.மு.க.வில் அடிப்படை உறுப்பினராக சேர்க்கப்பட்டுள்ளார். அதற்கான உறுப்பினர் அட்டை அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. வேட்புமனுவில் அனைத்து விவரங்களும் சரியாக கொடுக்கப்பட்டுள்ளது.
ஏ.சி.சண்முகம் அ.தி.மு.க. அடிப்படை உறுப்பினர் இல்லாமல் இருந்தாலும் பரவாயில்லை அவர் கூடுதலாக ஒரு படிவம் பூர்த்தி செய்து கொடுத்தால் போதும் மனு ஏற்றுக்கொள்ளப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில் தி.மு.க. வேட்பாளர் கதிர்ஆனந்த் வேட்பு மனு மீதான பரிசீலனையும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
பணப்பட்டுவாடா புகார் இருப்பதால் கதிர் ஆனந்த் வேட்புமனுவை நிராகரிக்க வேண்டும் என சுயேட்சை வேட்பாளர் ஒருவர் எதிர்ப்பு தெரிவித்ததால் வேட்பு மனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
ஆம்பூரில் வேலூர் பாராளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் அறிமுக கூட்டம் நடந்தது. இதில் தி.மு.க. பொருளாளரும், முன்னாள் அமைச்சருமான துரைமுருகன் பேசியதாவது:-
வேலூர் மாவட்டத்தில் ஆண்டியப்பனூர் மற்றும் மோர்தானா அணைகளையும், நீதிமன்றங்களையும், சட்ட கல்லூரி, மருத்துவ கல்லூரி, திருவள்ளுவர் பல்கலைக்கழகம், மேம்பாலம் மற்றும் காவிரி தண்ணீரையும் கொண்டு வந்தவன் நான் தான். ஆனால் வேலூரிலேயே இல்லாத ஒருவர் நான் வேலூர் மாவட்டத்திற்கு என்ன செய்தேன்? என்று கேள்வி எழுப்பி உள்ளார்.
எங்கள் வீட்டில் பணத்தை கொண்டு வந்து வைத்து விட்டு வருமான வரித்துறையினரை அனுப்பியது யார்? எங்கள் வீட்டு வேலைக்காரருக்கு செல்போன் வாங்கி கொடுத்தது யார்? என்னுடைய மகனை லாரி ஏற்றி கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியது யார்? அந்த துரோகி யார்? என எனக்கு தெரியும். ஆனால் பெயரை கூறமாட்டேன்.

எங்கள் வீட்டில் சோதனை நடத்த உத்தரவு பிறப்பித்த வருமான வரித்துறை அதிகாரி ஓய்வுபெற்ற பிறகும், அவரை வேலூர் மக்களவை தேர்தலில் செலவு கணக்கை பார்க்க தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது. நான் சொன்னதை செய்பவன், வேலூருக்கு பல்வேறு நலத்திட்டங்களை கொண்டு வந்துள்ளேன். அதேபோல் என்னுடைய மகனும் வாக்குறுதியை நிறைவேற்றுவார்.
இவ்வாறு அவர் பேசினார்.
திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் அடுத்த கம்மாவான் பேட்டையில் இருந்து சென்னை நோக்கி செல்லும் கண்டெய்னர் லாரியில் செம்மர கடத்தப்படுவதாக வாலாஜா போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து ராணிப்பேட்டை டி.எஸ்.பி. கீதா, வாலாஜா போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலு மற்றும் வாலாஜா போலீசார் டோல்கேட் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சென்னை நோக்கி வந்த கண்டெய்னர் லாரியை டிரைவர் நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார்.
லாரியில் இருந்த 3 பேரை பிடித்து வந்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கண்டெய்னர் லாரியில் 5 அடி உயரமுள்ள 250 செம்மர கட்டைகள் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இவற்றின் மதிப்பு பல லட்சம் இருக்கும் என போலீசார் தெரிவித்தனர்.
இதுகுறித்து வழக்கு பதிவு செய்து செம்மரம் எங்கிருந்து கடத்தி வரப்பட்டது. எங்கு கொண்டு செல்லப்படுகிறது கடத்தல் கும்பலின் தலைவன் யார் என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாடு முழுவதும் பாராளுமன்ற பொதுத்தேர்தல் 7 கட்டங்களாக நடந்தது. இதில் தமிழகத்தில் 38 பாராளுமன்ற தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக கடந்த ஏப்ரல் 18-ந் தேதி ஓட்டுப்பதிவு நடந்து முடிந்தது. பணப்பட்டுவாடா புகாரால் வேலூர் தொகுதி பாராளுமன்ற தேர்தல் ரத்து செய்யப்பட்டது.
வேலூரை தவிர மீதமுள்ள பாராளுமன்ற தொகுதியில் தேர்தல் முடிந்தாலும், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, முகவரி மாற்றம் செய்ய தொடர்ந்து மனுக்கள் அந்தந்த தாலுகா அலுவலகத்தில் பெறப்பட்டது. அது மட்டுமின்றி ஆன்லைனிலும் மனுக்களை வாக்காளர்கள் பதிவு செய்தனர்.
இந்த நடவடிக்கைகள் வேலூர் பாராளுமன்ற தொகுதியில் மட்டும் ஜூலை 10-ந் தேதியுடன் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. மேலும் பெறப்பட்ட மனுக்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விசாரித்து, தகுதியானவர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்கும் பணியில் ஈடுபட்டனர்.
பெயர் சேர்க்கப்பட்ட பட்டியல் வெளியிடுவது குறித்து அதிகாரிகள் கூறுகையில்:-
வேட்பு மனுத்தாக்கல் இன்று முடிவடைகிறது. அதன்பின்னர் மனுக்கள் மீதான பரிசீலனை 19-ந் தேதியும், மனுக்கள் திரும்ப பெற 22-ந் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினமே வேட்பாளர் இறுதிப் பட்டியல் வெளியிடப்படும். அதேநாளில் துணை வாக்காளர்கள்பட்டியல் வெளியிடப்படவுள்ளது.
அந்த பட்டியலில் இடம் பெற்றுள்ள வாக்காளர்கள் நடக்கவுள்ள வேலூர் பாராளுமன்ற தேர்தலில் ஓட்டுபோடலாம் என்றனர்.
பேரணாம்பட்டு பஜார் தெருவை சேர்ந்தவர் குமார். இவரது மகன் அஜித்குமார் (வயது 22). இவர் பெயிண்டராக வேலை செய்து வந்தார்.
கடந்த 2 நாட்களாக வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றி வந்துள்ளார். அவரது பெற்றோர் வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றி வருகிறாயே என கண்டித்துள்ளனர்.
இதனால் மனவேதனை அடைந்த அவர் பேரணாம்பட்டு ஏரிக்கரையோரம் உள்ள கிணற்றில் குதித்தார். இதனை கண்ட அருகில் இருந்தவர்கள் உடனடியாக பேரணாம்பட்டு தீயணைப்பு துறையினருக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் கிணற்றில் 40 அடி ஆழத்திற்கு தண்ணீர் இருந்ததால் மோட்டார் மூலம் தண்ணீரை வெளியேற்றி இரவு 11 மணிக்கு அஜித்குமாரின் பிணத்தை மீட்டனர். உடலை பிரேத பரிசோதனைக்காக பேரணாம்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூர் பாராளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது.
இதனால் வாக்களர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் கொண்டு செல்லப்படுவதை தடுக்க மாவட்டம் முழுவதும் பறக்கும்படை மற்றும் நிலை கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் வாணியம்பாடி பெருமாள் பேட்டை கூட்டு ரோட்டில் தேர்தல் பறக்கும்படை அலுவலர் ராஜ்குமார் தலைமையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக வந்த காரை மடக்கி சோதனை செய்தனர். காரில் வாணியம்பாடி வெள்ளக்குட்டையை சேர்ந்த தவமணி என்பவரிடம் இருந்து ரூ.2.40 லட்சம் பணத்தை பறிமுதல் செய்தனர்.
தவமணி தேங்காய் வாங்க பணம் கொண்டு செல்வதாக கூறினார். ஆனால் பணத்திற்கு உண்டான ஆவணம் இல்லாததால் பறிமுதல் செய்த பணத்தை வாணியம்பாடி தாசில்தார் முருகனிடம் ஒப்படைத்தனர்.
அரக்கோணம் அடுத்த செஞ்சி பனப்பாக்கம் ரெயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் 35 வயது மதிக்கதக்க ஆண் பிணம் இருப்பதாக அரக்கோணம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இன்ஸ்பெக்டர் பச்சையம்மாள், சப்-இன்ஸ்பெக்டர்கள் கணேஷ்பாபு, வெங்கடேசன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று இறந்து கிடந்தவரின் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இறந்து கிடந்தவர் தண்டவாளத்தை கடக்கும் போது ரெயிலில் அடிபட்டு இறந்தாரா? அல்லது ரெயிலில் இருந்து தவறி விழுந்தாரா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






