என் மலர்tooltip icon

    வேலூர்

    வேலூரில் கொரோனா வைரஸ் பீதியால் முக கவசம் அணிபவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

    வேலூர்:

    வேலூர் மாவட்டத்தில் கொரோனா தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. பஸ் நிலையங்களில் தடுப்பு மருந்துகள் தெளிக்கப்பட்டு வருகிறது. மேலும் குழந்தைகள், முதியவர்கள், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. வெளியே செல்லும் பொதுமக்கள் அடிக்கடி கைகளை கழுவ வேண்டும். இதன் மூலம் நோய் பரவுவதை தடுக்கலாம் என கூறியுள்ளனர்.

    வேலூர் ஆற்காடு சாலையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஏராளமானோர் வந்துள்ளனர். இவர்கள் காந்தி ரோட்டில் உள்ள லாட்ஜ்களில் தங்கி உள்ளனர்.

    நேற்று வேலூரில் முதியவர் ஒருவருக்கு கொரோனா அறிகுறி இருப்பதாக வதந்தி பரவியது. இது வேலூரில் பெரும் பீதியை ஏற்படுத்தியது. இதனால் வேலூரில் முக கவசம் அணிந்து செல்கின்றனர். குறிப்பாக வேலூர்- ஆற்காடு சாலை, பழைய பஸ் நிலையம், காந்தி ரோடுகளில் செல்லும் பொதுமக்கள் பெரும்பாலானோர் முக கவசம் அணிந்து செல்கின்றனர். தனியார் ஆஸ்பத்திரி வளாகத்தில் அனைவரும் முக கவசம் அணிந்து செல்கின்றனர்.

    அதேபோல் கலெக்டர் அலுவலகம் உள்பட அரசு அலுவலகம், தனியார் அலுவலகம், நிறுவனங்களில் வேலை செய்பவர்களும் முக கவசம் அணிந்து வருகின்றனர். வேலூர் சாலைகளில் குழந்தைகள் பெண்கள் என அனைவரும் முக கவசம் அணிந்து செல்கின்றனர்.

    இதனால் முக கவசம் விற்பனை அதிகரித்துள்ளது. சில மெடிக்கல்களில் முக கவசத்திற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

    குடியாத்தத்தில் கள்ளக்காதல் தகராறில் வாலிபரை அவரது நண்பரே கொலை செய்தது போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.
    குடியாத்தம்:

    குடியாத்தம் திருநகரை சேர்ந்த அப்சர் மகன் சுல்தான் பாஷா (வயது 25). பெங்களூரில் உள்ள கோழி கறி விற்பனை கடையில் வேலை பார்த்து வந்தார். இவர் நேற்று முன்தினம் ஊருக்கு வந்துள்ளார்.

    நேற்று காலை சுண்ணாம்பு பேட்டை கவுண்டன்யாஆற்றங்கரை ஓரத்தில் உள்ள சுடுகாட்டில் தலை நசுங்கிய படி ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார்.

    இதுபற்றி தகவல் அறிந்த குடியாத்தம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர். சுல்தான் இறந்து கிடந்த இடத்தின் அருகே ரத்தக்கறை படிந்த பெரிய கல் ஒன்று கிடந்தது. அதனால் அவரை மர்ம நபர்கள் கல்லால் தலையில் அடித்து கொலை செய்தது தெரிய வந்துள்ளது.

    போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு குடியாத்தம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுதொடர்பாக எஸ்.பி. பிரவேஷ்குமார் உத்தரவின்பரில் குடியாத்தம் டி.எஸ்.பி. சரவணன் மேற்பார்வையில் குடியாத்தம் இன்ஸ்பெக்டர் சீனிவாசன், பேரணாம்பட்டு இன்ஸ்பெக்டர் குமார் ஆகியோர் தலைமையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. அவர்கள் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வந்தனர்.

    சந்தேகத்தின்பேரில் குடியாத்தம் மொய்தீன் பேட்டை பீரான் நகரை சேர்ந்த ஹயாத் பாஷா (31) இவர் கோழி ஏற்றி செல்லும் லாரியில் லோடு மேனாக வேலை செய்துவந்தார். போலீசார் இவரிடம் விசாரணை நடத்தினர். இதில் ஹயாத்பாஷா, சுல்தானை கொலை செய்தது தெரியவந்தது.

    சுல்தான் பாஷா, ஹயாத் பாஷா இருவரும் நண்பர்கள். ஹயாத் பாஷா வீட்டுக்கு சுல்தான் பாஷா அடிக்கடி சென்று வந்தார்.

    அப்போது ஹயாத் பாஷாவின் மனைவிக்கும் சுல்தானுக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது.

    இது குறித்து அறிந்த ஹயாத் பாஷா சுல்தான் மற்றும் அவரது மனைவியை பலமுறை எச்சரித்துள்ளார். மேலும் உறவினர்களிடம் புகார் தெரிவித்துள்ளார்.

    ஆனால் ஹயாத் பாஷாவின் மனைவியுடன் உள்ள கள்ளத்தொடர்பை சுல்தான் விடவில்லை என கூறப்படுகிறது.

    இதையடுத்து நேற்று முன்தினம் இரவு சுல்தானை மது அருந்துவதற்காக ஹயாத்  பாஷா அழைத்துச் சென்றுள்ளார். அப்போது சுல்தானுக்கு அதிக அளவு மது ஊற்றி கொடுத்தார்.

    இதையடுத்து நள்ளிரவு 1 மணி அளவில் சுல்தானை கவுண்டன்ய ஆற்றுகரையோரம் உள்ள சுடுகாட்டுக்கு அழைத்துச் சென்று அவரது தலையில் கட்டையால் தாக்கினார்.

    மேலும் அருகில் இருந்த பெரிய கல்லை எடுத்து சுல்தான் தலைமீது போட்டு கொலை செய்து விட்டு யாருக்கும் தெரியாமல் வீட்டுக்கு வந்ததாக போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார்.

    இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
    குடியாத்தத்தில் வாலிபரை கல்லால் அடித்து கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    குடியாத்தம்:

    குடியாத்தம் திருநகரை சேர்ந்த அப்சர் மகன் சுல்தான் பாஷா (வயது 25) பெங்களூரில் உள்ள கோழி கறி விற்பனை கடையில் வேலை பார்த்து வந்தார்.இவர் நேற்று ஊருக்கு வந்துள்ளார்.

    இன்று காலை சுண்ணாம்பு பேட்டை கவுண்டன்யாஆற்றங்கரை ஓரத்தில் உள்ள சுடுகாட்டில் அருகே தலை நசுங்கிய படி ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். இதுபற்றி தகவல் அறிந்த குடியாத்தம் டி.எஸ்.பி சரவணன் சப்-இன்ஸ்பெக்டர் யுவராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர்.

    சுல்தான் இறந்து கிடந்த இடத்தின் அருகே ரத்தக்கறை படிந்த பெரிய கல் ஒன்று கிடந்தது. அதனால் அவரை மர்ம நபர்கள் கல்லால் தலையில் அடித்து கொலை செய்தது தெரிய வந்துள்ளது.

    போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு குடியாத்தம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அவரை கொலை செய்த மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சம்பவம் நடந்த இடத்திற்கு அருகே டாஸ்மாக் கடை உள்ளது. இதில் நேற்று இரவு தகராறு எதுவும் ஏற்பட்டதா என்பது குறித்தும் சுல்தான் பாஷா கொலைக்கான காரணம் குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் குடியாத்தத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் வழக்கத்தை விட கூட்டம் குறைந்துள்ளது. குறிப்பாக வெளியூர் பக்தர்கள் வருகை குறைந்துள்ளதாக கோவில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் வழக்கத்தை விட கூட்டம் குறைந்துள்ளது. குறிப்பாக வெளியூர் பக்தர்கள் வருகை குறைந்துள்ளதாக கோவில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் வழக்கம் போல் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

    வேலூர் தங்க கோவிலுக்கு தினமும் சராசரியாக 20 ஆயிரம் பக்தர்கள் வந்து செல்கின்றனர்.தற்போது தங்க கோவிலிலும் பக்தர்கள் வருகை கணிசமாக குறைந்துள்ளது.

    இங்கு வெளியூரில் இருந்து வரக்கூடிய புத்தர்களின் வருகை அதிகரிக்கவில்லை.எப்போதும் போல் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

    மேலும் ஆண்டுதோறும் மார்ச் ஏப்ரல் மாதங்களில் பள்ளி தேர்வுகள் நடப்பதால் பக்தர்கள் வருகை குறைவாகவே இருக்கும் அதே நிலைதான் தான் இந்த ஆண்டும் உள்ளது.

    ஏப்ரல் மாதத்திற்கு பிறகு பக்தர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் என தங்க கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
    வேலூர் அருகே கணவன் மனைவி தகராறை சமாதானம் செய்த என்ஜீனியர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
    வேலூர்:

    வேலூர் சத்துவாச்சாரி அடுத்த ரங்காபுரம் பூங்காவனத்தம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் செல்வகணேஷ் (வயது 48).

    இவர் ஆம்பூரில் உள்ள தோல் தொழிற்சாலையில் விற்பனை பிரதிநிதியாக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி நிர்மலா (45). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

    குடும்ப பிரச்சினை காரணமாக கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. அப்போது பெங்களூருவில் என்ஜினீயராக பணிபுரிந்த நிர்மலாவின் அண்ணன் நந்தகோபாலன் (52) சமாதானம் செய்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் செல்வகணே‌ஷ, நிர்மலா ஆகியோர் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் மனமுடைந்த நிர்மலா இதுகுறித்து செல்போனில் நந்தகோபாலனுக்கு தகவல் தெரிவித்தார். உடனே நந்தகோபாலன் பணி முடிந்ததும் மாலையில் வேலூர் வந்து செல்வகணேசிடம் நியாயம் கேட்கிறேன் என்றார்.

    அதன்படி இரவு 11 மணி அளவில் வேலூர் வந்த அவர் சமாதானம் செய்வதற்காக செல்வகணேஷ் வீட்டுக்கு சென்றார். அங்கு அவர் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினார்.

    அப்போது செல்வகணேஷ் மற்றும் அவரது உறவினர்களுக்கும், நந்தகோபாலனுக்கும் இடையே திடீரென தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த செல்வகணேஷ் மற்றும் அவரது உறவினர்கள் நந்தகோபாலனை சரமாரிய தாக்கினர். இதில் அவர் நிலைக்குலைந்து அங்கேயே மயங்கி விழுந்தார்.

    பின்னர் அவரை அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக வேலூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து சத்துவாச்சாரி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் அழகுராணி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த கொலை வழக்கில் தொடர்புடைய சத்துவாச்சாரி வள்ளலார் வசந்தம் நகரை சேர்ந்த விக்னேஷ் (35), காகிதப்பட்டறையை சேர்ந்த மணிகண்டன் (29), சேண்பாக்கத்தை சேர்ந்த கோட்டீஸ்வரன் (20) ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் செல்வகணேஷ், அவரது அக்காள் அரசு பள்ளி ஆசிரியையான சாந்தி, அவரது கணவர் ரவி ஆகியோர் தலைமறைவாக உள்ளனர். அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    இறந்த நந்தகோபாலனுக்கு சுதர்ஷினி என்ற மனைவியும், 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். குடும்பத்தகராறில் என்ஜினீயர் கொலை செய்யப்பட்ட சம்பவம் வேலூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    வேலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு யாருக்கும் இல்லை. 12 பேர் தீவிர கண்காணிப்பில் உள்ளனர் என்று மாவட்ட கலெக்டர் சண்முகசுந்தரம் கூறினார்.
    வேலூர்:

    சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. இந்த வைரஸ் இந்தியாவில் பரவாமல் தடுக்க மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. வேலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு முன்எச்சரிக்கை நடவடிக்கையாக பஸ்களில் கிருமி நாசினி மருந்து தெளிக்கும் நிகழ்ச்சி வேலூர் பஸ்நிலையத்தில் நேற்று நடந்தது. பயிற்சி கலெக்டர் பூர்ணிமா, சுகாதாரத்துறை துணை இயக்குனர் சுரேஷ் (பொறுப்பு), மாநகராட்சி நகர்நல அலுவலர் மணிவண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நிகழ்ச்சிக்கு வேலூர் மாவட்ட கலெக்டர் சண்முகசுந்தரம் தலைமை தாங்கி பஸ்களில் கிருமி நாசினி மருந்து தெளிக்கும் பணியை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பஸ்சில் பயணம் செய்த பயணிகளிடம் கொரோனா வைரஸ் தடுப்பு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கினார். பஸ்களில் பொதுமக்கள் கைவைக்கும் இடங்கள் மற்றும் டயர்களில் சுகாதாரப்பணியாளர்கள் கிருமி நாசினி மருந்து தெளித்தனர். இதனை கலெக்டர் பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    அனைத்து பஸ்களிலும் பயணிகள் கைவைக்கும் இடங்களில் கொரோனா வைரஸ் தடுப்பு கிருமி நாசினி மருந்து தெளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் அனைத்து பள்ளி, கல்லூரிகள், அங்கன்வாடி மையங்கள், நியாயவிலை கடைகள், மக்கள் கூடும் இடங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் பஸ் நிலையங்களில் கொேரானா வைரஸ் தொடர்பாக 2 நாட்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    வேலூர் மாவட்டத்தில் உள்ள தனியார் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் வெளிநாடுகள், வெளிமாநிலங்களில் இருந்து வருகை தந்து படிக்கும் மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் தற்போது சொந்த இடங்களுக்கு செல்ல வேண்டாம் எனவும், அவர்களை பார்க்க பெற்றோர், உறவினர்கள் வரவேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    வேலூரில் உள்ள சி.எம்.சி. மருத்துவமனைக்கு நோயாளிகளும், ஸ்ரீபுரம் தங்க கோவிலுக்கு ஆன்மிக சுற்றுலா பயணிகளும் தினமும் வருகை தருகின்றனர். மாவட்ட எல்லையை ஒட்டியுள்ள திருப்பதிக்கு செல்வதற்காக வெளிநாடு மற்றும் வெளிமாநில பக்தர்கள் அதிகளவில் வருவதால் வேலூர் அடுக்கம்பாறையில் கொேரானா வைரஸ் ஆய்வகம் அமைக்க அரசிற்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

    மேலும் மாவட்ட எல்லைப்பகுதியில் உள்ள 13 சோதனை சாவடிகளில் வெளி மாநிலங்களில் இருந்து வருகை தரும் வாகனங்களில் கிருமி நாசினி மருந்து தெளிக்க 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. மேலும் வாகன ஓட்டிகள், பயணிகளுக்கு விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்க அறிவுறுத்தி உள்ளோம். வேலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு யாருக்கும் இல்லை. சீனா, இத்தாலி உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து வேலூர் மாவட்டத்துக்கு வந்த 12 பேர் தீவிர கண்காணிப்பில் உள்ளனர். கொேரானா வைரஸ் தொடர்பாக பொதுமக்கள் யாரும் அச்சம் கொள்ள தேவையில்லை.

    இவ்வாறு கலெக்டர் சண்முகசுந்தரம் கூறினார்.

    இதில், 4-வது மண்டல சுகாதார அலுவலர் முருகன், மற்றும் மாநகராட்சி பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
    வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாகவும் சொத்தை அபகரித்ததாகவும் திமுக முன்னாள் நகர செயலாளர் மீது அவரது மனைவி புகார் அளித்துள்ளார்.
    வாணியம்பாடி:

    வாணியம்பாடி நகர தி.மு.க. முன்னாள் செயலாளர் சாரதிகுமார். காஞ்சிபுரத்தை சேர்ந்த இவரது மனைவி ரம்யா (வயது28).வாணியம்பாடி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் சாரதிகுமார் மீது ரம்யா புகார் அளித்தார்.

    எனக்கும், வாணியம்பாடியை சேர்ந்த சாரதிகுமாருக்கும், கடந்த 2016-ம் ஆண்டு திருமணம் நடந்தது. திருமணத்தின் போது 140 பவுன் தங்க நகைகள், திருமண சீர்வரிசை பொருட்களாக ரூ.5 லட்சம் ரூபாய்க்கும், திருமண செலவுக்காக ரூ.15 லட்சம் ரொக்கமாக கொடுத்தனர்.

    எங்களுக்கு 2 வயதில் பெண் குழந்தை உள்ளது. திருமணம் முடித்து நானும், கணவரும் வாணியம்பாடியில் உள்ள மாமியார் வீட்டில் வாழ்ந்து வந்தோம். எனது கணவர் சேலத்தில் தனியார் கல்லூரியில் படித்த போது சத்யாபிரியா என்பவரிடம் பழகியுள்ளார். அவரது வீட்டிற்கு என்னையும் அழைத்து சென்றுள்ளார். அவரை (சத்யாபிரியாவை) என்னிடம் அக்கா என்று முதலில் கூறினார்.

    நான் கர்ப்பமாக இருந்த போது என் கணவர் என்னிடம் சரியாக பேசாமல் சத்யபிரியாவிடம் நெருங்கி பேசி வந்தது தெரிந்தது. நான் கேட்ட போது என்னை அசிங்கமாக திட்டி அடித்தார். இந்த நிலையில் எனது கர்ப்பம் கலைந்து விட்டது.

    அந்த பெண்ணிடம் பழகி வருவது எனக்கு தெரிந்து விட்டதால் தினமும் குடித்து விட்டு வீட்டிற்கு வந்து சண்டை போடுவார். சத்யாபிரியாவுடன் சேர்ந்து ஒன்றாக வாழலாம் என கட்டாயப்படுத்துவார்.

    அதற்கு பிறகு 2-வது முறையாக கர்ப்பமாகி பெண் குழந்தை 2017-ம் ஆண்டு பிறந்தது. பிரசவத்திற்காக நான் காஞ்சிபுரத்தில் உள்ள தாய் வீட்டிற்கு சென்றிருந்தேன். அங்கு வந்து என்னையும் எனது குழந்தையும் பார்க்காமல் சேலம் சென்று அந்த பெண்ணிடமே இருந்து வந்தார்.

    இதனால் எனக்கும் அவருக்கும் கருத்து வேறுபாடு அதிகமாக ஏற்பட்டது. காஞ்சிபுரத்தில் இருந்து வாணியம்பாடிக்கு வந்தேன். வந்த பிறகும் என்னையும், குழந்தையும் கவனிக்காமல் இருந்து வந்தார். மாறாக சத்யா பிரியாவை வாணியம்பாடி வீட்டிற்கு அழைத்து வந்து வைத்திருந்தார்.

    இதனை நான் மாமியாரிடம் கேட்ட போது என் மாமியாரும், நீ உன் கணவருடன் விருப்பம் இருந்தால் வாழு, இல்லையென்றால் தற்கொலை செய்துக்கொள் என்று மிரட்டினார்.

    அப்படி செய்து கொள்ளவில்லை என்றால் குழந்தையை கொன்று விடுவேன் என்று மிரட்டினார்கள். நான் குழந்தைக்கு ஆபத்து வந்துவிடுமோ என பயந்து வீட்டிலிருந்த பழைய மாத்திரைகளை சாப்பிட்டு விட்டேன்.

    பின்னர் என்னை மருத்துவமனையில் சேர்த்திருந்தார்கள். சிகிச்சை முடிந்து நான் எனது பெற்றோர் வீட்டிற்கு சென்றிருந்தேன்.

    சில நாட்கள் கழித்து மீண்டும் குழந்தையுடன் வாணியம்பாடிக்கு வந்த போது என் கணவரும் மாமியாரும் சரிவர பேசாமல், அசிங்கமாக திட்டினார்கள். இதனால் வேதனை தாங்காமல் மீண்டும் தாய்வீட்டிற்கு வந்துவிட்டேன்.

    இந்நிலையில் சத்யா பிரியாவின் அக்கா மகள் ஒருவரையும் எனது கணவரிடம் தொடர்பு ஏற்படுத்தி கொடுத்துள்ளார்கள்.

    என்னை திருமணம் செய்து ஒரு குழந்தைக்கு தாய் ஆக்கிவிட்டு என்னை மன உளைச்சலுக்கு ஆளாக்கிய எனது கணவர் மீதும், அவரது தாயார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    திருமணத்தின் போது போடப்பட்ட நகை, சீர்வரிசை, வெள்ளி பொருட்கள், பணம் ஆகியவற்றை பெற்றுதர வேண்டும் என்று புகார் கூறியுள்ளார்.

    இந்த புகாரின் பேரில் வாணியம்பாடி அனைத்து மகளிர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாரதி பெண் கொடுமை சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    வாணியம்பாடி செட்டியப்பனூரை சேர்ந்த சவுந்தரராஜன் என்பவர் சாரதிகுமார் உள்பட 4 பேர் மீது மனநலம் பாதித்த யோகாம்பாள் (வயது42) என்ற பெண்ணின் சொத்துக்களை அபகரித்து விற்றதாக திருப்பத்தூர் எஸ்.பி. ஆபீசில் புகார் செய்தார்.

    இந்த புகாரின் மீது வாணியம்பாடி தாலுகா போலீசார் சாரதிகுமார் உள்பட 4 பேர் மீது 6 பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வாணியம்பாடி முன்னாள் தி.மு.க. நகர செயலாளர் மீது 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    நாட்டறம்பள்ளியில் பைக்கில் வந்த மர்ம நபர்கள் 2 பெண்களிடம் 10 பவுன் நகைகளை பறித்துச் சென்றனர்.

    வாணியம்பாடி:

    திருப்பத்தூர் மாவட்டம், நாட்டறம்பள்ளி பூபதி தெருவை சேர்ந்த ஜெயராமனின் மனைவி அம்சா (55). அவர் நேற்று பிற்பகல் 2 மணிக்கு பச்சூர் அருகே உள்ள விவசாய நிலத்துக்குக்கு சென்று கொண்டிருந்தார்.

    சொரக்காயல்நத்தம் சாலையில் நடந்து சென்றபோது பைக்கில் வந்த இரு நபர்களில் ஒருவர் பின் தொடர்ந்து வந்து அம்சாவிடம் வழி கேட்டார். திடீரென அம்சா கழுத்தில் அணிந்திருந்த தாலிச் செயின், கால் காசு உள்ளிட்ட 6 பவுன் தங்க நகைகளைப் பறித்துக் கொண்டு மற்றொரு நபருடன் பைக்கில் தப்பிச் சென்றார்.

    இது தொடர்பாக அம்சா, நாட்டறம்பள்ளி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    நாட்டறம்பள்ளியை அடுத்த மல்லப்பள்ளி ஊராட்சி சுண்ணாம்புக் குட்டை பகுதியை சேர்ந்த நாகராஜின் மனைவி ராஜேஸ்வரி (48). நாட்டறம் பள்ளிபுதுப்பேட்டை சாலையில் கொட்டாவூர் பஸ் நிறுத்தத்தில் நேற்று பிற்பகல் நின்று கொண்டிருந்தார். அப்போது பைக்கில் வந்த 2 மர்ம நபர்கள் ராஜேஸ்வரி கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன் தங்க நகையை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர்.

    இது தொடர்பாக ராஜேஸ்வரி, நாட்டறம்பள்ளி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த இரு புகார்கள் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், நகைப்பறிப்பில் ஈடுபட்ட மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.

    குடியாத்தம் அருகே பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்ட காதல் ஜோடி வேலூர் எஸ்.பி. ஆபிசில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர்.

    வேலூர்:

    குடியாத்தம் அருகே உள்ள ரங்கசமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்தவர் அரவிந்தன் (வயது 23). அதே பகுதியை சேர்ந்த மோனிகா (20) இவர்கள் இருவரும் காதலித்து வந்தனர்.

    இதற்கு அவர்கள் வீட்டில் எதிர்ப்பு தெரிவித்ததால் காதல் ஜோடியினர் வீட்டைவிட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டனர்.

    இன்று காலை வேலூர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர். போலீசாரிடம் பாதுகாப்பு கேட்டு மனு கொடுத்தனர்.

    குடியாத்தத்தில் வீட்டில் தனியாக இருந்த பிளஸ்-2 மாணவியை ஆந்திர வாலிபர் கற்பழித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    குடியாத்தம்:

    குடியாத்தம் சித்தூர் ரோடு பகுதியை சேர்ந்தவர் 17 வயது மாணவி. அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். நேற்று மாலை பள்ளி முடிந்து வீடு திரும்பிய மாணவி வீட்டில் தனியாக இருந்தார். அவரது பெற்றோர் வேலைக்கு சென்று விட்டனர்.

    ஆந்திர மாநிலம் சித்தூரை சேர்ந்த வாலிபர் அப்பகுதியில் தங்கி வேலை பார்த்து வருகிறார். திருமணமான இவர் மாணவி வீட்டில் தனியாக இருப்பதை நோட்டமிட்டார்.

    வீட்டிற்குள் திடீரென நுழைந்து கதவை தாழ்பாள் போட்டு மாணவியை கற்பழித்தார். மாணவி கூச்சலிட்டார். ஆனால் யாருக்கும் கேட்கவில்லை. பின்னர் அங்கிருந்த அவர் தலைமறைவாகி விட்டார்.

    பெற்றோர் வீட்டிற்கு வந்ததும் நடந்த சம்பவம் பற்றி மாணவி கூறினார். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் பரதராமி போலீசில் புகார் செய்தனர். போலீசார் அந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தி வருகிறனர்.

    வீடு புகுந்து பிளஸ்-2 மாணவி கற்பழிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    வேலூர் அருகே குடிபோதையில் தூங்கிய வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து விரிஞ்சிபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வேலூர்:

    வேலூர் அருகே உள்ள மேல் மொணவூர் இலங்கை தமிழர்கள் குடியிருப்பை சேர்ந்தவர் அஜித்குமார் (வயது 35).

    இவர் நேற்று இரவு மது குடித்துவிட்டு போதையில் அங்கேயே படுத்தார். இன்று காலை நீண்ட நேரமாகியும் அவர் எழுந்திருக்கவில்லை. இதையடுத்து அவரை வேலூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து விரிஞ்சிபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    விலங்குகள் ஊருக்குள் வராமல் இருக்க குடியாத்தம் வனச்சரகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் உள்ள தொட்டிகளில் ஊழியர்கள் தண்ணீர் நிரப்பி வருகின்றனர்.
    குடியாத்தம்:

    கோடைகாலம் என்பதால் குடியாத்தம் வனச்சரகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் வசிக்கும் வனவிலங்குகள் தண்ணீர் தேடி ஊருக்குள் புகும் அபாயம் உள்ளது.

    இதனை கருத்தில் கொண்டு வனப்பகுதியில் உள்ள மான் குட்டைகளில் தண்ணீர் நிரப்புமாறு வேலூர் மாவட்ட வன அலுவலர் பார்கவ்தேஜா ஆகியோர் குடியாத்தம் வனத்துறைக்கு உத்தரவிட்டனர்.

    இதனையடுத்து குடியாத்தம் வனப்பகுதியில் உள்ள மோர்தானா, மூங்கில் புதர், சைனகுண்டா, ஆம்பூரான்பட்டி, தன கொண்டபள்ளி, தீர்த்தமலை, சூராளூர், கொட்டாரமடுகு, கல்லேரி, ஈஸ்வரன்குட்டை, கே.புதூர், முதலியார் ஏரி உள்ளிட்ட வனப்பகுதியில் உள்ள 21 தண்ணீர் தொட்டிகளில் டிராக்டர்கள் மூலம் 15 நாட்களுக்கு ஒருமுறை தண்ணீர் நிரப்பப்பட்டு வருகிறது.

    இந்த பணி ஜீலை மாதம் வரை தொடரும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
    ×