என் மலர்
செய்திகள்

வேலூரில் கொரோனா பீதி- முக கவசம் அணிந்து செல்லும் பொதுமக்கள்
வேலூர்:
வேலூர் மாவட்டத்தில் கொரோனா தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. பஸ் நிலையங்களில் தடுப்பு மருந்துகள் தெளிக்கப்பட்டு வருகிறது. மேலும் குழந்தைகள், முதியவர்கள், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. வெளியே செல்லும் பொதுமக்கள் அடிக்கடி கைகளை கழுவ வேண்டும். இதன் மூலம் நோய் பரவுவதை தடுக்கலாம் என கூறியுள்ளனர்.
வேலூர் ஆற்காடு சாலையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஏராளமானோர் வந்துள்ளனர். இவர்கள் காந்தி ரோட்டில் உள்ள லாட்ஜ்களில் தங்கி உள்ளனர்.
நேற்று வேலூரில் முதியவர் ஒருவருக்கு கொரோனா அறிகுறி இருப்பதாக வதந்தி பரவியது. இது வேலூரில் பெரும் பீதியை ஏற்படுத்தியது. இதனால் வேலூரில் முக கவசம் அணிந்து செல்கின்றனர். குறிப்பாக வேலூர்- ஆற்காடு சாலை, பழைய பஸ் நிலையம், காந்தி ரோடுகளில் செல்லும் பொதுமக்கள் பெரும்பாலானோர் முக கவசம் அணிந்து செல்கின்றனர். தனியார் ஆஸ்பத்திரி வளாகத்தில் அனைவரும் முக கவசம் அணிந்து செல்கின்றனர்.
அதேபோல் கலெக்டர் அலுவலகம் உள்பட அரசு அலுவலகம், தனியார் அலுவலகம், நிறுவனங்களில் வேலை செய்பவர்களும் முக கவசம் அணிந்து வருகின்றனர். வேலூர் சாலைகளில் குழந்தைகள் பெண்கள் என அனைவரும் முக கவசம் அணிந்து செல்கின்றனர்.
இதனால் முக கவசம் விற்பனை அதிகரித்துள்ளது. சில மெடிக்கல்களில் முக கவசத்திற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.






