என் மலர்
வேலூர்
வேலூர்:
வேலூர் ஓட்டேரியில் முத்துரங்கம் அரசினர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது.
இதில் எம்.பி.சி (வி) என்ற 10.5 சதவிகித வன்னியர் இட ஒதுக்கீட்டில் சேர அடுக்கம்பாறை, பாகாயம், ஆற்காடு, கலவை, திமிரி, கணியம்பாடி உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமப்புற ஏழை மாணவர்கள் இன்று ஆர்வமுடன் வந்திருந்தனர்.
அவர்களுக்கான 10.5 சதவிகித இட ஒதுக்கீடு முடிந்துவிட்டதாக கூறி அவர்கள் கல்லூரியினுள் அனுமதிக்கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் தங்களின் பெற்றோர்களுடன் கல்லூரி நுழைவாயிலில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இட ஒதுக்கீட்டிற்கான கல்வி சேர்க்கை முடிந்தது குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடாத கல்லூரி நிர்வாகத்தை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். இதனால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியும் கலைந்து செல்லவில்லை. கல்லூரி கல்வி இணை இயக்குநர் காவேரி சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
முத்துரங்கம் அரசு கல்லூரியில் வன்னியர்களுக்கான இடஒதுக்கீடு முடிந்துவிட்டது.
மாதனூர் எம்.ஜி.,ஆர் அரசு கலைக்கல்லூரியில் அதிக இடங்கள் காலியாக உள்ளது. அங்கு மாணவர்களை சேர்க்கலாம் என உறுதியளித்தார். பின்னர் மாணவ,மாணவிகளும் பெற்றோர்களும் கலைந்து சென்றனர்
பின்னர் பெரிய அளவிலான பலகையில் எவ்வளவு இட ஒதுக்கீட்டில் எந்தெந்த பிரிவினருக்கு இடங்கள் வழங்கப்பட்டுள்ளன என அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது.
வேலூர் மாவட்டத்தில் இதுவரை 49,396 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 48,030 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது 245 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 1,121 பேர் பலியாகியுள்ளனர்.
இன்று வேலூர் மாவட்டத்தில் 21 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நேற்று 16 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.
வேலூர் மாவட்டத்தில் தொடர்ந்து கொரோனா பரவி வருவதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். ஊரடங்கு தளர்வு நேரத்தில் தேவையில்லாமல் வெளியே சுற்றித் திரிய வேண்டாம். கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்.
அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என சுகாதாரத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
வேலூர் மாவட்டம் காட்பாடி ஒன்றியத்துக்குட்பட்ட ஆரிமுத்துமோட்டூர் பகுதியில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து அமைச்சர் துரைமுருகன் பிரசாரம் செய்தார். அப்போது அவர் கூறியதாவது:-
நான் கேட்காமலேயே ஓட்டு போடுவிங்க. ஆனா, யாராவது ஒருத்தர் “துரைமுருகன் வந்து ஓட்டு கேட்டானானு சொல்லக்கூடாது என்பதற்காக ஓட்டு கேட்க வந்துள்ளேன்.
பஞ்சாயத்து தலைவர் நல்லவனா இருந்தா 30 லைட்டையும் ஊருக்கு போடுவார். கெட்ட தலைவனா இருந்தா 5 லைட்டு போட்டு மீதிய பொண்டாட்டிக்கு கம்மல்லா போட்டுருவார். அதனால நல்ல தலைவர்களை தேர்ந்தெடுக்க வேண்டும்.
புதியதாக கிணறு, ஆழ்துளை கிணறு அமைக்கும் விவசாயிகளுக்கு ஒரே மாதத்தில் மின்சாரம் எங்கள் ஆட்சியில் கொடுக்கப்படும்.
ஆட்சிக்கு வந்த இந்த 3 மாதத்தில் என்ன செய்தீர்கள் என கேட்கிறார்கள். பிள்ளை பிறக்கவே 10 மாதம் ஆகிறது. இந்த 3 மாதத்தில் என்ன செய்ய முடியும்.

நாங்கள் ஆட்சிக்கு வந்த 3 மாதத்தில் கொரோனா தடுப்பூசி போட்டு மக்களின் உயிரை காப்பாற்றியுள்ளோம். எல்லாரும் 2 தவணை தடுப்பூசி ஊசி போட வேண்டும்.
காட்பாடியை அடுத்த தொண்டான் துளசி கிராமத்தை சேர்ந்தவர் பெருமாள் (வயது 31). இவருக்கு, லத்தேரி பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமியை கடந்த ஆகஸ்டு மாதம் கட்டாய திருமணம் செய்து வைத்துள்ளனர்.
இதுகுறித்து அந்த சிறுமி ஹெல்ப் லைன் மூலம் சமூக நலத்துறை அதிகாரிகளுக்கு நேற்று முன்தினம் தகவல் தெரிவித்துள்ளாள்.
அதன்பேரில் சமூகநலத்துறை அதிகாரிகள் நேரில் சென்று விசாரணை நடத்தினர். மேலும் இதுகுறித்து லத்தேரி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். லத்தேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமியை திருமணம் செய்த பெருமாள், திருமணத்திற்கு உடந்தையாக இருந்த சிறுமியின் பாட்டி குமாரி (வயது 60) ஆகியோரை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
வேலூர் மக்கான் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் கபூர். இவருடைய மகள் சந்தியா (வயது 24). வேலூரில் தனியார் மருத்துவமனையில் உள்ள கேன்டீனில் தற்காலிக ஊழியராக பணியாற்றி வந்தார். சம்பளம் குறைவாக தருவதால் வேலைக்கு செல்ல வேண்டாம் என்று குடும்பத்தினர் வற்புறுத்தி உள்ளனர். ஆனாலும் அவர் தொடர்ந்து வேலைக்கு சென்று வந்துள்ளார். அதனால் சந்தியாவுக்கும், அவருடைய தாயாருக்கும் அடிக்கடி வாக்குவாதம், தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் நேற்று காலை சந்தியா வேலைக்கு செல்ல புறப்பட்டுள்ளார். அப்போது வேலைக்கு செல்வது தொடர்பாக மீண்டும் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அதனால் முனமுடைந்த அவர் வீட்டை விட்டு வெளியேறி காலை 9 மணியளவில் கோட்டை நுழைவுவாயில் அருகே அகழி தண்ணீரில் குதித்தார்.
இதைக்கண்ட பொதுமக்கள் வேலூர் வடக்கு போலீஸ் நிலையம் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சந்தியா தண்ணீரில் மூழ்கி உயிருக்கு போராடினார்.
அதைக்கண்ட சிலர் அகழியில் இறங்கி அவரை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டனர். அதற்குள் தண்ணீரில் மூழ்கிய சந்தியா பரிதாபமாக உயிரிழந்தார். தீயணைப்பு வீரர்கள் அங்கு வருவதற்குள் பொதுமக்கள் சந்தியா உடலை மீட்டு மேலே கொண்டு வந்தனர்.
வேலூர் வடக்கு போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கோட்டை நுழைவுவாயில் மதில்சுவர் அருகே சந்தியா அணிந்திருந்த கண் கண்ணாடி, சுடிதார் சால்வை, கடிதம் ஒன்று இருந்தது.
அந்த கடிதத்தில், என் சாவுக்கு யாரும் காரணம் இல்லை. இது நானாக சுயமாக எடுத்த முடிவு என்று எழுதப்பட்டிருப்பதாக போலீசார் கூறினர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கோட்டை அகழியில் குதித்து இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை அறிமுகம் செய்து ஆதரித்தும் அந்த கட்சியின் தலைவர் சீமான் பிரசாரம் செய்கிறார்.
இன்று காலை ராணிப்பேட்டை முத்துக்கடை மாந்தாங்கல் ரோட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் நடந்தது. இதில் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் கலந்து கொண்டு பேசினார்.
தொடர்ந்து மாலை 4 மணிக்கு வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அருகே உள்ள ஊசூர் மற்றும் தார்வழி கூட்ரோடு ஆகிய இடங்களில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து சீமான் பிரசாரம் செய்கிறார்.
4.30 மணிக்கு அணைக்கட்டு தனியார் திருமண மண்டபத்தில் நடைபெறும் வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார். இன்று இரவு வேலூரில் தங்குகிறார். நாளை திருப்பத்தூர் மாவட்டத்தில் சீமான் பிரசாரம் செய்கிறார்.
வேலூர்:
வேலூர் மக்கான் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் கபூர். இவருடைய மகள் சந்தியா (வயது 24). சி.எம்.சி ஆஸ்பத்திரியில் உள்ள கேண்டீனில் தற்காலிக ஊழியராக பணியாற்றி வந்தார்.
இன்று காலை வேலூர் கோட்டை நுழைவுவாயில் அருகே உள்ள மதில் சுவரில் சந்தியா ஏறினார். அங்கிருந்து அகழி தண்ணீரில் குதித்தார். இதைக் கண்ட பொதுமக்கள் அலறி கூச்சலிட்டனர்.
மேலும் இது குறித்து வேலூர் வடக்கு போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு வந்தனர். அதற்குள் தண்ணீரில் மூழ்கிய சந்தியா பரிதாபமாக இறந்தார். தீயணைப்பு படையினர் அவரது உடலை மீட்டனர்.
வேலூர் வடக்கு போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சந்தியா எழுதிய கடிதம் போலீசாரிடம் சிக்கி உள்ளது.
அதில் என் சாவுக்கு யாரும் காரணம் இல்லை என தெரிவித்துள்ளதாக போலீசார் கூறினர். இது தொடர்பாக மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோட்டையில் இன்று காலை இளம் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
வேலூர் மாவட்டத்தில் 2478 உள்ளாட்சி பதவிகள் உள்ளன. அதற்கு 8170 பேர் மனுதாக்கல் செய்திருந்தனர். 83 பேர் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. 1224 பேர் பேட்புமனுவை திரும்ப பெற்றனர்.
316 பேர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். 11 இடங்களில் யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. மொத்தம் இறுதியாக 6547 வேட்பாளர்கள் களத்தில் போட்டியிடுகின்றனர்.
14 மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு 93 பேர் மனுதாக்கல் செய்திருந்தனர். அதில் 6 பேர் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. 17 பேர் வேட்புமனுவை திரும்ப பெற்றனர். களத்தில் 70 பேர் உள்ளனர்.
138 ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு 741 பேர் மனுதாக்கல் செய்திருந்தனர். அதில் 12 பேரின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. 224 பேர் வேட்புமனுவை திரும்ப பெற்றனர். 2 பேர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். 503 பேர் தேர்தல் களத்தில் போட்டியிடுகின்றனர்.
247 பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு 1192 பேர் மனுதாக்கல் செய்திருந்தனர். 13 பேர் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. 343 பேர் வேட்புமனுவை திரும்ப பெற்றனர். 16 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். 820 பேர் இறுதியாக களத்தில் போட்டியிடுகின்றனர்.
ஊராட்சி வார்டு உறுப்பினர் 2079 பதவிக்கு 6144 பேர் மனுதாக்கல் செய்திருந்தனர். 52 பேர் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. 640 பேர் வேட்புமனுவை திரும்ப பெற்றனர். 298 பேர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். 5154 பேர் தேர்தல் களத்தில் போட்டியிடுகின்றனர்.
வேலூர்:
தமிழகத்தில் வரும் டிசம்பர் மாதத்துக்குள் மாநகராட்சி தேர்தல் நடைபெறும் என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.
வேலூர் மாவட்டத்தில் நடைபெற உள்ள ஊரக உள்ளாட்சி தேர்தலில் காட்பாடி ஊராட்சி ஒன்றியத்துக்கு போட்டியிட உள்ள தி.மு.க. வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம் காட்பாடிசித்தூர் பஸ் நிலையத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் வேட்பாளர்களை அறிமுகம் செய்து அமைச்சர் துரைமுருகன் பேசியதாவது:-
‘‘சட்டப்பேரவைத் தேர்தல் முடிந்து தற்போது உள்ளாட்சி தேர்தல் வந்திருக்கிறது. நான் அமைச்சராக இருந்தாலும், எவ்வளவு பெரிய அதிகாரத்தில் இருந்தாலும் கிராமத்தில் ஆக வேண்டிய பணிகளை செய்யக் கூடியவர்கள் தான் பஞ்சாயத்து யூனியனில் உள்ளவர்களும், ஊராட்சி மன்ற தலைவர்களும்தான். எனவே, அவர்கள் சரியாக இருந்தால் தான் நாம் கொண்டு வருகிற திட்டம் மக்களை சென்றடையும்.
காட்பாடி தொகுதியில் இந்த ஆண்டு செய்ய வேண்டியிருப்பது எல்லா கிராமத்துக்கும் காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தை கொண்டு வர வேண்டும். இந்த தொகுதியில் இதுவரையில் ஒரு அரசு கல்லூரி கூட இல்லை. அதை இந்த ஆண்டு கொண்டு வந்திருக்கின்றேன்.
அதேபோன்று, ஒரு சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை கொண்டு வர வேண்டும். அதற்காக, முதற்கட்டமாக இந்த ஆண்டு 100 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையினை துவங்குவதற்கு சட்டப்பேரவையில் அனுமதி பெற்று இருக்கின்றேன்.
என்னை எப்படி ஆதரித்தீர்களோ, அப்படியே இவர்களையும் ஆதரியுங்கள். என் கைவாளாக,போர்வாளாக இருக்கக்கூடியவர்கள் தான் இங்கே பஞ்சாயத்து யூனியன் தேர்தலில் வேட்பாளர்களாக நிற்கிறார்கள்.
எவ்வளவு பெரிய வீரனாக இருந்தாலும் வாள் இல்லாவிட்டால் சண்டையிட முடியாது. ஈட்டி இல்லாவிட்டால் எதிரியை தாக்க முடியாது.
அந்த வகையில் அரசின் நலத்திட்டங்கள் நம் தொகுதி மக்களுக்கு உடனே கிடைப்பதற்காக நீங்கள் உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும்.
நகரத்தில் இருக்கின்ற கட்சியினர் எல்லா கிராமத்துக்கும் சென்று வாக்கு சேகரிக்க வேண்டும். காரணம், டிசம்பர் மாதத்துக்குள் மாநகராட்சித் தேர்தல் வருகிறது. எனவே, கிராமத்து மக்கள் உங்களுக்கு உழைக்க வேண்டும்’’ என தெரிவித்தார்.
கூட்டத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி, எம்.பி.க்கள் ஜெகத்ரட்சகன், கதிர்ஆனந்த், வேலூர் மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் நந்தகுமார் எம்.எல்.ஏ. உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதையும் படியுங்கள்... நகைக்கடன் முறைகேடு ஆய்வு செய்ய குழு அமைப்பு- தமிழக அரசு உத்தரவு
அரக்கோணம் கும்பினிபேட்டை பஸ் நிறுத்தம் அருகே அந்த வழியாக செல்பவர்களை மிரட்டி வழிப்பறி செய்து கொண்டிருந்த நபரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் அரக்கோணம் சுவால்பேட்டையை சேர்ந்த ஓம் பிரகாஷ் (வயது 25) என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர். இதே போன்று அரக்கோணம் புதிய பஸ் நிலையம் அருகே வழிப்பறியில் ஈடுபட்ட திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூரை சார்ந்த பாபு என்கிற முகேஷ் (24) மற்றும் அபிஷேக் என்கிற அபி (26) ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர்.
அதேபோன்று தக்கோலம் அடுத்த மாங்காட்டுசேரி பஸ் நிறுத்தம் அருகே அந்தவழியாக சென்றவர்களை மிரட்டியும், போக்குவரத்துக்கு இடையூறும் செய்து கொண்டிருந்த மாங்காட்டுசேரியை சார்ந்த கந்தவேல் (38) என்பவரை தக்கோலம் போலீசார் கைது செய்தனர்.






