என் மலர்
வேலூர்
ஜோலார்பேட்டை:
நாட்டறம்பள்ளி அருகே கொண்டகிந்தனப்பள்ளி குண்டு கொல்லை பகுதியை சேர்ந்தவர் ராமசாமி (வயது93). இவர் கடந்த 6-ந்தேதி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் வாக்குப்பதிவு செய்ய வாக்குச்சாவடி மையத்திற்கு சென்றார்.
அப்போது அங்கு பணியில் ஈடுபட்டிருந்த பெண் துப்புரவு பணியாளர் முதியவரின் வாக்குச்சீட்டை பிடிங்கி அவர் விருப்பத்திற்கு மாற்றாக வாக்கினை பதிவு செய்து வாக்குப் பெட்டியல் போட்டார்.
அதிர்ச்சி அடைந்த முதியவர் இதுகுறித்து எதிர்ப்பு தெரிவித்தார். வாக்குச்சாவடி மையத்தில் உள்ள தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் போலீசாரிடம் புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த நிலையில் மறு ஓட்டு கேட்டு அனுமதி கேட்டேன் ஆனால் அனுமதி மறுக்கப்பட்டது.
இதனால் ராமசாமி வாக்குச்சாவடி மையத்தில் உள்ள தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள துப்புரவு பெண் பணியாளர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் அந்த வாக்குச் சீட்டு ரத்து செய்துவிட்டு என் விருப்பத்திற்கு ஏற்ப குறிப்பிட்ட வேட்பாளரின் சின்னத்தில் எனது வாக்கை சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாட்டறம்பள்ளி ஊராட்சி ஒன்றியம் தேர்தல் நடத்தும் அலுவலர் தினகரன் என்பவரிடம் புகார் மனு அளித்தார்.
மேலும் இந்த புகார் மனுவை சென்னை தேர்தல் ஆணையாளர் மற்றும் திருப்பத்தூர் கலெக்டர் ஆகிய இருவருக்கும் புகார் மனு அனுப்பி உள்ளார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
வேலூர், அணைக்கட்டு, கணியம்பாடி ஒன்றியங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் இன்று நடைபெற்றது. இதையொட்டி 469 வாக்குச்சாவடிகளில் காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மிகவும் அமைதியாகவும் விறுவிறுப்பாகவும் நடைபெற்றது. மக்கள் வாக்குப்பதிவு தொடங்கிய 7 மணி முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து ஆர்வமுடன் வாக்களித்தனர்.
நேரம் செல்ல செல்ல கூட்டம் குறையும் என எண்ணியிருந்த நிலையில் அதிகப்படியான மக்கள் வாக்களிக்க வந்துகொண்டே இருந்தனர். அவர்களை வாக்குச்சாவடிக்கு வெளியில் அரசியல் கட்சியினரும் வேட்பாளர்களின் ஆதரவாளர்களும் ஜூஸ் கொடுத்து வரவேற்ற காட்சிகளும் பல இடங்களில் காண முடிந்தது. தவிர பெரும்பாலான வாக்குச்சாவடிகளுக்கு வெளியே பிரியாணி, பஜ்ஜி, போண்டா சமையலும் தடபுடலாக நடைபெற்றுக் கொண்டிருந்தது.
சைவ பிரியர்களுக்கு சாப்பிடுவதற்காக தனியாக தக்காளி சாதம், பிரிஞ்சி போன்ற சாதங்களும் தயாராகிக்கொண்டிருந்தன.
இதுகுறித்து அங்கிருந்த வேட்பாளரின் ஆதரவாளர்கள் கூறும்போது;-
வாக்களிக்க வரும் மக்களுக்கு விருந்து உபசரிக்க சமைக்கப்படுவதாகவும் இதனால் மக்கள் ஆர்வமுடன் வாக்களிக்க வருவதாகவும் தெரிவித்தனர். அந்த வகையில் வாக்காளர்களுக்கு அளிப்பதற்காக சிக்கன் பிரியாணி, மட்டன் பிரியாணி மேலும் குளிர்பானங்கள், ஜூஸ் வகைகளும் ஆங்காங்கே மோரும் தயார் நிலையில் செய்யப்பட்டிருந்தது.
இது தவிர இளைஞர்கள் பலரும் உற்சாகமுடன் காணப்பட்டனர். இன்னும் மலைக்கிராமங்களில் மிகவும் உற்சாகமாக இருந்தனர்.
அந்தவகையில் வேலூர், கணியம்பாடி, அணைக்கட்டு ஒன்றியங்களில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல் ஒரு திருவிழா போல காட்சியளித்தது.
வேலூர்:
வேலூர் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் இன்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது;
வேலூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக எடுக்கப்பட்டு வருகிறது. இதுவரை 4 சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடந்துள்ளன. இதில் பொதுமக்கள் ஆர்வமுடன் வந்து தடுப்பூசி செலுத்தியுள்ளனர்.மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் 12 லட்சத்து 50 ஆயிரம் பேர் உள்ளனர்.
இதுவரை வேலூர் மாவட்டத்தில் 6 லட்சத்து 80 ஆயிரம் பேர் முதல் டோஸ் செலுத்தியுள்ளனர். 2 லட்சத்து 60ஆயிரம் பேர் 2-வது டோஸ் செலுத்தியுள்ளனர்.
வருகிற ஞாயிற்றுக்கிழமை மாவட்டம் முழுவதும் 1000 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடக்கிறது. வேலூர் மாநகராட்சி பகுதியில் 300 இடங்களில் நடக்கிறது. இதில் 60 ஆயிரம் முதல் 70 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் அனைவரும் கட்டாயம் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். தடுப்பூசி செலுத்துவதால் பாதிப்பு எதுவும் இல்லை. தடுப்பூசி செலுத்தாதவர்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் வீடு வீடாகச் சென்று அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு தடுப்பூசி செலுத்தப்படும்.
தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டாலும் அதிகளவில் உடல்நிலை பாதிப்பு ஏற்படுவதில்லை. தடுப்பூசி போடாதவர்களுக்கு கொரோனோ பாதிப்பு ஏற்பட்டால் அதிக பாதிப்பு ஏற்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
குடியாத்தம் அடுத்த கள்ளூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கார்த்திக் (வயது 35). கட்டிட தொழிலாளி. நேற்று இரவு பைக்கில் கள்ளூர் ஜெமினி நகர் அருகே வந்தபோது அங்கே ஒரு வீட்டின் அருகே பைக்கை நிறுத்தி அங்கிருந்த இரும்பு ஷெட்டின் கம்பியின் மீது சாய்ந்துள்ளார்.
அந்த ஷெட்டில் உள்ள இரும்பு கம்பியில் மின்சாரம் பாய்ந்து கொண்டிருந்தது. எதிர்பாராத விதமாக இந்த ஷெட்டின் கம்பியை பிடித்த கார்த்திக் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். கார்த்தியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து கார்த்தியை மீட்க முயன்ற போது கார்த்தியின் உடம்பில் மின்சாரம் பாய்ந்தது தெரியவந்தது.
இதனால் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். குடியாத்தம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் உள்ளிட்ட போலீசார் விரைந்து வந்து கார்த்தியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக குடியாத்தம் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூர் மாவட்டத்தில் உள்ள 7 ஒன்றியங்களில், காட்பாடி, குடியாத்தம், பேரணாம்பட்டு, கே.வி.குப்பம் ஆகிய ஒன்றியங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் கடந்த 6-ந்தேதி நடந்து முடிந்துள்ளது.
இதைத்தொடர்ந்து, வேலூர், கணியம்பாடி, அணைக்கட்டு ஒன்றியங்களுக்கான ஊரக உள்ளாட் சித் தேர்தல், நாளை நடக்கவுள்ளது. இதை முன்னிட்டு, நேற்று மாலை 5 மணியுடன் பிரசாரம் முடிவடைந்தது. ஓட்டுப் பதிவுக்கான ஆயத்த பணிகளில் ஊரக உள்ளாட்சித் துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். 2 வது கட்ட தேர்தலுக்கு மொத்தம் 469 ஓட்டுச்சாவடிகள் பயன்படுத்தப்பட உள்ளன.
இதில் 5 மாவட்ட கவுன்சிலர் பதவிகளுக்கு 23 பேர், 50 ஒன்றிய கவுன்சிலர் பதவிகளுக்கு 152 பேர், 87 பஞ்சாயத்து தலைவர் பதவிகளுக்கு 273 பேர், 697 பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு ஆயிரத்து 812 பேர் போட்டியிடுகின்றனர்.
இதுதவிர, பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு 6 பேர், வார்டு உறுப்பினர் பதவிக்கு 80 பேர் ஏற்கனவே போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் மாதனூர், ஆலங்காயம் ஆகிய ஒன்றியங்களில் நாளை இரண்டாம் கட்ட தேர்தல் நடக்கிறது. 4 மாவட்ட கவுன்சிலர், 70 ஒன்றிய கவுன்சிலர், 70 பஞ்சாயத்து தலைவர், 514 பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் பதவிக்கு தேர்தல் நடக்கிறது.
இதில் 2 ஆயிரத்து 167 பேர் போட்டியிடுகின்றனர். 385 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அனைத்து பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளது. 1250 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் அரக்கோணம், நெமிலி, காவேரிப்பாக்கம், சோளிங்கர் ஆகிய ஒன்றியங்களுக்கு இரண்டாம் கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் நாளை நடைபெற உள்ளது.
மொத்தம் 757 வாக்கு சாவடி மையங்களில் 6 ஆயிரத்து 203 வாக்குசாவடி அலுவலர்கள் பணிபுரிய உள்ளனர். 172 பதற்றமான வாக்குசாவடி ஆகும்.1,940 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
7 மாவட்ட கவுன்சிலர் பதவிகளுக்கு 40பேரும், 71 ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு 310 பேரும்.143 ஊராட்சிமன்ற தலைவர் பதவிகளுக்கு 504பேரும், 939 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு 2,523 பேரும் என மொத்தம்1,160 பதவிக்கு 3,377 பேர் போட்டியிடுகின்றனர். மொத்தம் 3லட்சத்து 68 ஆயிரத்து 378 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.
ஜோலார்பேட்டை:
ஜோலார்பேட்டை தி.மு.க. பிரமுகர் அன்பழகன் சொந்தமாக காளை ஒன்றை வளர்த்து வந்தார். கடந்த 21 ஆண்டுகளாக அந்த காளையை பராமரித்து எருது விடும் பயிற்சி கொடுத்து வளர்த்து வந்தார்.
அந்த காளை ஜோலார்பேட்டை, வாணியம்பாடி, திருப்பத்தூர், ஆம்பூர், கந்திலி, கிருஷ்ணகிரி, பர்கூர் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட இடங்களில் நடந்த மாடு விடும் விழாவில் கலந்துகொண்டு இதுவரை 71 இடங்களிலும் முதல் பரிசை பெற்றுள்ளது.
இதனால் அந்த பகுதி மக்கள் அந்த காளைக்கு ‘ரமணா’ என்று பெயரிட்டு அழைத்து வந்தனர்.
இந்நிலையில் இன்று காலை ரமணா காளை ஜோலார்பேட்டை அருகே சக்கரகுப்பம் பகுதியில் உள்ள நிலத்தில் திடீரென மயங்கி கீழே விழந்தது. அதன் பிறகு சிறிது நேரத்தில் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தது.
இதுகுறித்து தகவலறிந்த மாடு விடும் விழாவில் பங்கேற்கும் இளைஞர்கள் அங்கு திரண்டு வந்தனர். அவர்கள் காளையின் உடலை கண்டு கண்ணீர் விட்டு அழுதனர்.
பின்னர் காளைக்கு இறுதி சடங்குகள் செய்தனர். காளையின் உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி மேள தாளத்துடன் ஊர்வலமாக எடுத்துச் சென்று அன்பழகனின் சொந்த நிலத்தில் அடக்கம் செய்தனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
வேலூர் மாவட்டம், அடுக்கம்பாறையை அடுத்த மூஞ்சூர்பட்டு வடக்கு கொல்லைமேடு பகுதியை சேர்ந்தவர் சாமிநாதன். இவருடைய மகன் சதீஷ்குமார். இளைஞரான இவர் சைக்கிளிலேயே லடாக்கிற்கு செல்லதிட்டமிட்டார். அதன்படி சைக்கிளிலேயே பயணம் செய்துள்ளார்.
அதன்படி கடந்த ஆகஸ்டு மாதம் 28-ந் தேதி சைக்கிளில் தனது வீட்டில் இருந்து பயணத்தை தொடங்கினார். 34 நாட்கள் சைக்கிளில் பயணம் செய்து கடந்த 2-ந் தேதி மாலை 5 மணி அளவில் லடாக்கிற்கு சென்று சேர்ந்துள்ளார். பயணம் செய்த நாட்களில் தினசரி சுமார் 150 கிலோமீட்டருக்கு மேல் சைக்கிள் ஓட்டி உள்ளார். அப்போது ஆங்காங்கே தங்கி லடாக்கிற்கு சென்று சேர்ந்துள்ளார்.
வேலூரில் இருந்து லடாக் வரை 17 மாநிலங்களை கடந்து, சுமார் 12 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் சைக்கிள் பயணம் மேற்கொண்டுள்ளார். இந்தப் பயணங்களின் புகைப்படம் மற்றும் வீடியோவை தனது பேஸ்புக், வாட்ஸ் அப்பில் பதிவிட்டுள்ளார்.
இணையத்தில் இவர் லடாக் சென்ற வீடியோ மற்றும் போட்டோக்கள் வைரலாக பரவுகிறது. சதீஷ்குமாருக்கு ஏராளமானோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். சாதனை படைத்த அவருக்கு இணையத்தில் பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது.
இது குறித்து சதீஷ்குமார் கூறுகையில் இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் உள்ள இந்த இடத்திற்கு சென்று வந்த அனுபவம் வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாது என்றார்.
வாலாஜா டோல்கேட் அருகே டீ கடை நடத்தி வருபவர் எல்லப்பன். இவர் தனது பைக்கை டீ கடை அருகே நிறுத்தி இருந்தார்.
சிறிது நேரம் கழித்து வந்து பார்த்த போது பைக் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அக்கம் பக்கம் தேடியும் கிடைக்கவில்லை.
இது குறித்து எல்லப்பன் வாலாஜா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் அங்கு உள்ள சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.
அதில் ஒரு வாலிபர் பைக்கை திருடி செல்வது பதிவாகி இருந்தது. விசாரணையில் அரக்கோணம் அடுத்த சேந்தமங்கலம் கிராமத்தை சேர்ந்த மோனீஷ் குமார் (19) என்பது தெரிய வந்தது. இதையடுத்து அவரது வீட்டில் பதுக்கிவைத்திருந்த பைக் பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர். மேலும் இது குறித்து போலீசார் மோனீஷ் குமாரிடம் விசாரித்து வருகின்றனர்.
வேலூர் கஸ்பா செல்வபுரத்தை சேர்ந்தவர் வேல்முருகன். எலக்ட்ரீசியன். இவருடைய மனைவி திவ்யா (வயது 32). இந்த தம்பதிக்கு திருமணமாகி 12 ஆண்டுகள் ஆகிறது. 3 பெண் குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில் கணவன் மனைவிக்கிடையே நேற்று முன்தினம் தகராறு ஏற்பட்டது. இதனால் திவ்யா மனமுடைந்து காணப்பட்டார். நேற்று காலை வேல்முருகன் வேலைக்கு சென்றுவிட்டார். அந்த நேரத்தில் வீட்டில் தனியாக இருந்த திவ்யா வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
வேலூர் தெற்கு போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். 3 குழந்தைகளை தவிக்க விட்டு தாய் தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே உள்ள உள்ளி புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயபிரகாஷ் (வயது 30) தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவருடைய மனைவி லெட்சுமி (26) இவர்களுக்கு திருமணமாகி ஒரு வருடமாகிறது.
நேற்று இரவு ஜெயப்பிரகாஷ், லெட்சுமி இருவரும் அவர்களுக்கு சொந்தமான பசு மாட்டை ஓட்டி வருவதற்காக விவசாய நிலத்திற்கு சென்றனர். அங்கிருந்து மாட்டை வீட்டிற்கு ஓட்டி வந்தனர். வழியில் உள்ள விவசாய நிலத்தில் காட்டுப்பன்றிக்காக யாரோ மின்வேலி அமைத்துள்ளனர். அந்த மின்வேலியில் பசுமாடு மற்றும் ஜெயப்பிரகாஷ், லட்சுமி ஆகியோர் சிக்கினர்.
இதில் மின்சாரம் தாக்கியதில் கணவன், மனைவி இருவரும் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தனர். அவர்கள் ஓட்டிச்சென்ற பசு மாடு இறந்தது.
விவசாய நிலத்துக்கு சென்ற தம்பதி வீடு திரும்பாததால் இன்று காலையில் அவரது குடும்பத்தினர் விவசாய நிலத்திற்கு சென்று பார்த்தனர். அங்கு அவர்கள் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அவர்களின் உடலை பார்த்து கண்ணீர் விட்டு கதறி அழுதனர்.
இதுகுறித்து தகவலறிந்த திருவலம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பலியான தம்பதியின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விவசாய நிலத்தில் மின்வேலி வைத்தது யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
வேலூர் மாவட்டம், திருவலம் அருகே உள்ள செம்பராயநல்லூர் பகுதியை சேர்ந்தவர் மதி என்கிற மதியழகன். அவரது மனைவி உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுகிறார்.
இந்த நிலையில் மதியழகனின் நண்பர் பாஸ்கரன் இவருக்கு தேர்தல் வேலை செய்யாமல் வேறு நபருக்கு ஆதரவாக வேலை செய்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து மதியழகன், பாஸ்கரை கேட்டுள்ளார். அப்போது இருதரப்பினரும் தங்கள் ஆதரவாளர்களுடன் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர்.
இது தொடர்பாக இருதரப்பினரும் தனித்தனியாக திருவலம் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் இருதரப்பையும் சேர்ந்த பாஸ்கரன், மதியழகன், சரத்குமார் ஆகிய 3 பேரை கைது செய்தனர். மேலும் 2 பேரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.






