search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எருது விடும் விழாவில் பங்கேற்ற ரமணா காளை
    X
    எருது விடும் விழாவில் பங்கேற்ற ரமணா காளை

    71 போட்டியில் முதல் பரிசை வென்ற ‘ரமணா காளை’ மயங்கி விழுந்து உயிரிழப்பு

    ஜோலார்பேட்டை பகுதியில் நடந்த மாடு விடும் விழாக்களில் 71 போட்டியில் முதல் பரிசை வென்ற ரமணா காளை மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை தி.மு.க. பிரமுகர் அன்பழகன் சொந்தமாக காளை ஒன்றை வளர்த்து வந்தார். கடந்த 21 ஆண்டுகளாக அந்த காளையை பராமரித்து எருது விடும் பயிற்சி கொடுத்து வளர்த்து வந்தார்.

    அந்த காளை ஜோலார்பேட்டை, வாணியம்பாடி, திருப்பத்தூர், ஆம்பூர், கந்திலி, கிருஷ்ணகிரி, பர்கூர் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட இடங்களில் நடந்த மாடு விடும் விழாவில் கலந்துகொண்டு இதுவரை 71 இடங்களிலும் முதல் பரிசை பெற்றுள்ளது.

    இதனால் அந்த பகுதி மக்கள் அந்த காளைக்கு ‘ரமணா’ என்று பெயரிட்டு அழைத்து வந்தனர்.

    இந்நிலையில் இன்று காலை ரமணா காளை ஜோலார்பேட்டை அருகே சக்கரகுப்பம் பகுதியில் உள்ள நிலத்தில் திடீரென மயங்கி கீழே விழந்தது. அதன் பிறகு சிறிது நேரத்தில் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தது.

    இதுகுறித்து தகவலறிந்த மாடு விடும் விழாவில் பங்கேற்கும் இளைஞர்கள் அங்கு திரண்டு வந்தனர். அவர்கள் காளையின் உடலை கண்டு கண்ணீர் விட்டு அழுதனர்.

    பின்னர் காளைக்கு இறுதி சடங்குகள் செய்தனர். காளையின் உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி மேள தாளத்துடன் ஊர்வலமாக எடுத்துச் சென்று அன்பழகனின் சொந்த நிலத்தில் அடக்கம் செய்தனர்.

    இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

    Next Story
    ×