என் மலர்tooltip icon

    வேலூர்

    கேரள மாநிலம் வெள்ளத்தில் தத்தளிக்கும் சூழ்நிலை உருவாகும். 2 நாட்கள் மின்சார வசதி இல்லாமல் தவிக்க நேரும் என்று ஆற்காடு பஞ்சாங்கத்தில் முன்கூட்டியே கணிக்கப்பட்டுள்ளது.
    வேலூர்:

    ஆற்காடு பஞ்சாங்கத்தை கணிதர் சுந்தரராஜன் அய்யர் கணித்து எழுதியுள்ளார்.

    அதில் அவர் கூறியுள்ளபடி பல்வேறு நிகழ்வுகள் நடந்து வருகிறது. கேரள மாநிலம் வெள்ளத்தில் தத்தளிக்கும் சூழ்நிலை உருவாகும். 2 நாட்கள் மின்சார வசதி இல்லாமல் தவிக்க நேரும் என்று பஞ்சாங்கத்தில் கூறியுள்ளார்.

    அதன்படி கேரளாவில் வெள்ளம், நிலச்சரிவு ஏற்பட்டு பலத்த சேதம் அடைந்துள்ளது.

    ஆற்காடு பஞ்சாங்கத்தில் கணித்துள்ளபடி பல நிகழ்வுகள் நடந்துள்ளது. விமான போக்குவரத்து கடுமையாக பாதிக்கும். தங்கம் விலை ஏற்றம் இறக்கத்துடன் நிலையான நிலையில் இருக்காது.

    அனைத்து ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தண்ணீர் பிரச்சனை தீரும். கடல் உள்வாங்கும் என்றும் கூறியுள்ளார். அதன்படி அனைத்தும் நடந்துள்ளது.

    வேலூர் அடுக்கம்பாறை ஆஸ்பத்திரியில் உள்ள புறநோயாளிகள் பிரிவில் பேரறிவாளனுக்கு ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு பரிசோதிக்கப்பட்டது.
    வேலூர்:

    முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன் (வயது 49). சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

    இவரது தாயார் அற்புதம்மாள் சிறையில் உள்ள பேரறிவாளனுக்கு தொடர் சிகிச்சை மேற்கொள்ள பரோல் வழங்க வேண்டுமென முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் மனு அளித்திருந்தார்.

    அதன்பேரில், கடந்த மே மாதம் 28-ந்தேதி ஒரு மாதம் பரோல் வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டது.

    இந்நிலையில் அவரது உடல் நிலையை கருத்தில் கொண்டு, பரோலை நீட்டிக்கக்கோரி அற்புதம்மாள் மனு அளித்திருந்தார். அதன்பேரில், தொடர்ந்து 5-வது முறையாக பேரறிவாளன் பரோல் நீட்டிக்கப்பட்டது. அவர் ஜோலார்பேட்டையில் உள்ள அவரது வீட்டில் இருந்து வருகிறார்.

    இதைத் தொடர்ந்து, பேரறிவாளன் தினமும் ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்தில் கையெழுத்திட்டு வருகிறார்.

    பேரறிவாளன் மூட்டு வலி மற்றும் சிறுநீரக தொற்றால் அவதிப்பட்டு வருகிறார். விழுப்புரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிறுநீரகத் தொற்று உள்ளிட்ட உடல் பிரச்னைகளுக்கு மருத்துவரின் ஆலோசனைப்படி, தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் இன்று காலை வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் பேரறிவாளனுக்கு சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தனர். இதற்காக இன்று காலை ஜோலார்பேட்டையில் இருந்து பலத்த பாதுகாப்புடன் பேரறிவாளனை போலீசார் வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து வந்தனர்.

    ஆஸ்பத்திரியில் உள்ள புறநோயாளிகள் பிரிவில் அவருக்கு ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு பரிசோதிக்கப்பட்டது. தொடர்ந்து மூட்டுவலி மற்றும் சிறுநீரக பிரச்சினை தொடர்பான சிகிச்சை அளிக்கப்பட்டது.

    பேரறிவாளனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதால் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


    மனைவி இறந்த துக்கத்தில் கணவரும் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    வேலூர்:

    வேலூர் அடுத்த விருபாட்சிபுரம் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜா (வயது42). கூலித்தொழிலாளி. இவரது முதல் மனைவி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார்.

    இதனால் மேகலா (35) என்பவரை ராஜா 2-வதாக திருமணம் செய்து கொண்டார். ராஜாவின் முதல் மனைவியின் மகன் மகேசுக்கும் மேகலாவுக்கும் அடிக்கடி தகராறு நடந்து வந்தது.

    இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த மேகலா கடந்த 15-ந்தேதி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். முதல் மனைவி இறந்துவிட்ட நிலையில் 2-வது மனைவியும் தூக்கிட்டு தற்கொலை செய்ததால் ராஜா மனவேதனை அடைந்தார். யாரிடமும் பேசாமல் தனிமையில் இருந்துள்ளார்.

    இந்த நிலையில் நேற்று ராஜா வீட்டில் இருந்த பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து விட்டு வாயில் நுரை தள்ளியபடி மயங்கி கிடந்தார்.

    ராஜா மயங்கி கிடப்பதைக் கண்ட அவரது உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ராஜா நேற்றிரவு பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து பாகாயம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மனைவி இறந்த துக்கத்தில் கணவரும் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    வேலூர் மாவட்டத்தில் தொடர்ந்து கொரோனா பரவி வருவதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அதிகாரிகள் வலியுறுத்தி உள்ளனர்.
    வேலூர்:

    வேலூர் மாவட்டத்தில் இதுவரை 49,635 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 48,297 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது 212 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 1,126 பேர் பலியாகியுள்ளனர்.

    இன்று வேலூர் மாவட்டத்தில் 9 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நேற்று 18 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.

    வேலூர் மாவட்டத்தில் தொடர்ந்து கொரோனா பரவி வருவதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். ஊரடங்கு தளர்வு நேரத்தில் தேவையில்லாமல் வெளியே சுற்றித் திரிய வேண்டாம். கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என அதிகாரிகள் வலியுறுத்தி உள்ளனர்.
    வேலூர் பழைய பஸ் நிலையத்தில் ஆட்டோவில் வந்த மாநகராட்சி ஊழியரிடம் ரூ.3 ஆயிரம் திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வேலூர்:

    வேலூர் சலவன்பேட்டை திரு.வி.க. சாலை பகுதியை சேர்ந்தவர் முருகேசன். இவரது மனைவி குயிலா (வயது31).

    வேலூர் மாநகராட்சி அலுவலகத்தில் ஒப்பந்த பணியாளராக வேலை பார்த்து வருகிறார். நேற்று மாலை பழைய பஸ் நிலையம் செல்வதற்காக அண்ணா சாலையில் உள்ள ராஜா தியேட்டர் பஸ் நிறுத்தத்தில் இருந்து ஒரு ஷேர் ஆட்டோவில் ஏறினார்.

    அண்ணா கலையரங்கம் அருகே ஆட்டோ வந்தபோது அதில் 4 பெண்கள் ஏறினர். ஆட்டோ பழைய பஸ் நிலையத்தில் வருவதற்குள் 4 பெண்களும் குயிலாவுடன் நைசாக பேச்சுக் கொடுத்தபடியே அவரது பையிலிருந்த ரூ.3 ஆயிரத்தை திருடினர்.

    பழைய பஸ் நிலையத்திற்கு வந்ததும் ஆட்டோ டிரைவருக்கு பணம் கொடுப்பதற்காக குயிலா பையை திறந்தார். அதில் இருந்த பணத்தை காணவில்லை.

    இதனால் திடுக்கிட்ட அவர் தன்னுடன் வந்த பெண்கள் தான் திருடிவிட்டார்கள் என கத்தி கூச்சலிட்டார்.

    சுதாரித்துக் கொண்ட ஆட்டோ டிரைவர் மற்றும் பொதுமக்கள் ஆட்டோவில் வந்த பெண்கள் 4 பேரையும் பிடித்து வேலூர் வடக்கு குற்றப்பிரிவு போலீசில் ஒப்படைத்தனர். போலீஸ் விசாரணையில் அவர்கள் சேலம் ஹோலி கிராஸ் தெருவைச் சேர்ந்த காயத்ரி (39), கீதா (28), லதா (29), சந்தியா (30), என்பதும் அவர்கள் பணத்தை திருடியதும் தெரியவந்தது.

    சேலத்தை சேர்ந்த இவர்கள் 4 பேரும் அடிக்கடி வேலூருக்கு வந்து சென்றுள்ளனர்.

    ஆட்டோ மற்றும் பஸ்சில் வரும் பெண் பயணிகளிடம் திருடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.

    சாலைகளை கடக்கும் வயதானவர்களுக்கு உதவுவதுபோல் நடித்து பணம் திருடியதும் தெரியவந்தது. சப்- இன்ஸ்பெக்டர் பால வெங்கடராமன் காயத்திரி உள்ளிட்ட 4 பெண்களையும் கைது செய்து வேலூர் பெண்கள் ஜெயிலில் அடைத்தார்.

    ஆட்டோ, பஸ்சில் செல்லும் போது சாலைகளில் கடந்து செல்லும் பெண்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    வேலூர் மாவட்டத்தின் பெரிய ஏரியான நெல்லூர்பேட்டை ஏரி நிரம்பி வழிவதால் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    குடியாத்தம்:

    குடியாத்தம் அடுத்த மோர்தானா அணை நிரம்பி வழிவதால் அந்த அணையின் தண்ணீர் கவுண்டன்ய மகாநதி ஆற்றிலும், வலது மற்றும் இடது புற கால்வாய்களிலும் திறந்து விடப்பட்டதால் குடியாத்தம் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள ஏரிகள் விரைவாக நிரம்பி வருகிறது. வேலூர் மாவட்டத்தின் மிகப்பெரிய ஏரியான குடியாத்தம் நெல்லூர்பேட்டை பெரிய ஏரி சுமார் 400 ஏக்கர் பரப்பளவில் 101 மில்லியன் கன அடி தண்ணீர் கொள்ளளவு கொண்டது.

    கடந்த ஆண்டு பெய்த பெரு மழையால் டிசம்பர் மாதம் நெல்லூர்பேட்டை பெரிய ஏரி நிரம்பியது. தற்போது மோர்தானா அணை நிரம்பி வழியும் தண்ணீரால் கடந்த சில தினங்களாக நெல்லூர்பேட்டை ஏரிக்கு தண்ணீர் வரத்து இருந்தது. நேற்று காலையில் நெல்லூர்பேட்டை பெரிய ஏரி நிரம்பி போனது.

    ஏரி நிரம்பிய தகவல் அறிந்ததும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்தவர்களும், குடியாத்தம் நகர் பகுதியைச் சேர்ந்தவர்களும் ஏராளமானோர் ஏரி நிரம்பி வழிவதை சென்று பார்த்து வந்தனர். பொதுமக்கள் சிலர் பூஜை செய்து ஏரிநீர் வழிந்ததை வரவேற்றனர்.

    குடியாத்தம் உதவி கலெக்டர் தனஞ்செயன், தாசில்தார் லலிதா, நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) சிசில் தாமஸ், நீர்வள ஆதார துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் நெல்லூர்பேட்டை பெரிய ஏரிக்கு தண்ணீர் வருவதை கண்காணித்து வருகின்றனர். ஏரி நிரம்பி வழிவதால் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    பள்ளிகொண்டா ஏரி கால்வாயில் உடைப்பு ஏற்பட்டு, குடியிருப்பு பகுதியில் வெள்ளம் சூழ்ந்ததால் பொதுமக்கள் அவதிப்பட்டனர். இந்த பகுதியை கலெக்டர் பார்வையிட்டார்.
    அணைக்கட்டு:

    வேலூர் மாவட்டத்தில் கடந்த 20 நாட்களாக பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகின்றது. நேற்று முன்தினம் சுமார் 6 மணி நேரம் கனமழை பெய்ததால் பாலாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. மேலும் மோர்தானா அணை நிரம்பி வழிவதால் அதன் இணைப்பு கால்வாய்களில் அதிகளவில் தண்ணீர் வருவதால் கரைகள் உடையும் அபாயம் உள்ளது.

    இந்த நிலையில் பள்ளிகொண்டா ரங்கநாதர் கோவில் பின்புறம் உள்ள ரங்கநாதர் நகரில் உள்ள குடியிருப்பு பகுதியில் மழை நீர் புகுந்தது. மேலும் மோர்தானா கால்வாய் அருகே செல்லும் கால்வாயில் உடைப்பு ஏற்பட்டு அந்த நீரும் குடியிருப்பு பகுதியில் சூழ்ந்துள்ளது. இதனால் பொதுமக்கள் வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர்.

    தகவலறிந்ததும் பள்ளிகொண்டா பேரூராட்சி செயல் அலுவலர் உமாராணி தண்ணீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டார். மாவட்ட கலெக்டர் குமராவேல் பாண்டியன், சப்-கலெக்டர், அணைக்கட்டு தாசில்தார், பொதுப்பணித்துறை பொறியாளர்கள் உள்ளிட்டோர் மோர்தானா கால்வாயை ஆய்வு செய்தனர். அப்போது கால்வாய்களின் கரைகளை சீரமைக்க பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். மேலும் ரங்கநாதர் நகரில் தேங்கியுள்ள மழை நீரை வெளியேற்றும் படி உத்தரவிட்டார்.
    வேலூர் மாவட்டத்தில் உள்ள அதிக இடங்களில் வெற்றி பெற்று 7 ஒன்றிய பெருந்தலைவர் மற்றும் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பதவிகளை தி.மு.க. கைப்பற்றியுள்ளது.
    வேலூர்:

    வேலூர் மாவட்டத்தில் அணைக்கட்டு, கணியம்பாடி, கே.வி. குப்பம், காட்பாடி, பேர்ணாம்பட்டு வேலூர் ஆகிய 7 ஒன்றியங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் முதல் கட்டமாக 6-ம் தேதியும், இரண்டாம் கட்டமாக 9-ம் தேதியும் நடந்தது.

    அதற்கான வாக்கு எண்ணிக்கைய நேற்று காலை முதல் இன்று அதிகாலை வரை நடந்தது.

    வேலூரில் மொத்தமாக 14 மாவட்ட கவுன்சிலர், 138 ஒன்றிய கவுன்சிலர், 247 ஊராட்சி மன்றத் தலைவர்கள், 2079 ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகள் என மொத்தமாக 2428 பதவிகளுக்கு தேர்தலானது நடைபெற்றது.

    இந்த நிலையில், வேலூரில் உள்ள 7 ஒன்றியங்களுக்கான வாக்கு எண்ணிக்கையானது அந்தந்த ஒன்றியங்களில் உள்ள அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் பள்ளிகளில் நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கையை பொருத்த வரையில், நேற்று காலை 8 மணிக்கு தொடங்கிய எண்ணிக்கையானது இன்று அதிகாலை வரை விடிய விடிய நடைபெற்றது.

    அணைக்கட்டு ஒன்றியத்திலும், கே.வி.குப்பம் ஒன்றியத்திலும் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டதால் அதிகாரிகளுக்கும் வேட்பாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதே போன்று சில இடங்களில் அதிமுகவினருக்கும் திமுகவினருக்கும் இடையே சிறு தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

    வேலூர் மாவட்டத்தில் 7 ஒன்றியங்களில் நடந்த வாக்கு எண்ணிக்கையில், 14 மாவட்ட கவுன்சிலர் பதவியை தி.மு.க. கூட்டணி மொத்தமாக கைப்பற்றியது. தி.மு.க. 13 இடங்களிலும், காங்கிரஸ் 1 இடத்திலும் கைப்பற்றியது.

    ஒன்றிய கவுன்சிலர் பொறுத்தவரையில் 138 ஒன்றிய கவுன்சிலர் இடங்களில் தி.மு.க. 103 இடங்களிலும், அ.தி.மு.க. 20 இடங்களிலும், பா.ம.க. 7 இடங்களிலும், சுயேட்சை 5 இடங்களிலும், காங்கிரஸ் 2 இடங்களிலும், இந்திய கம்யூனிஸ்டு 1 இடத்திலும் வெற்றி பெற்றது.

    வேலூர் மாவட்டத்தில் உள்ள அதிக இடங்களில் வெற்றி பெற்று 7 ஒன்றிய பெருந்தலைவர் மற்றும் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பதவிகளை தி.மு.க. கைப்பற்றியுள்ளது.
    வேலூர் ஒன்றியத்தில் வாக்குகள் சரியாக எண்ணப்படவில்லை என்றும், அதனால் ஊராட்சி ஒன்றிய 7 - வது வார்டு கவுன்சிலர் வாக்குகளை மறுபடியும் எண்ண வேண்டும் என்று அ.தி.மு.க. வேட்பாளர் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் கோரிக்கை வைத்தார்.

    வேலூர்:

    வேலூர் ஊராட்சி ஒன்றிய 7 - வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு தி.மு.க. கூட்டணி கட்சி சார்பில் விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் கோட்டி என்கிற கோவேந்தன் உதய சூரியன் சின்னத்திலும், அ.தி.மு.க. சார்பில் அப்துல்லாபுரம் சிவம் மற்றும் பலர் போட்டியிட்டனர். 7-வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன.

    இதில், சிவத்தை விட கோவேந்தன் குறைந்தளவு வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெறும் நிலையில் இருந்தார். அவர் 42 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாகவும் செய்திகள் வெளியானது.

    இந்த நிலையில் வாக்குகள் சரியாக எண்ணப்படவில்லை என்றும், அதனால் ஊராட்சி ஒன்றிய 7 - வது வார்டு கவுன்சிலர் வாக்குகளை மறுபடியும் எண்ண வேண்டும் என்று அ.தி.மு.க. வேட்பாளர் சிவம் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் கோரிக்கை வைத்தார். அதனால் 7-வது வார்டு கவுன்சிலருக்கு பதிவான வாக்குகள் இன்று அதிகாலை மறுஎண்ணிக்கை நடைபெற்றது.

    இதில் 27 வாக்குகள் அதிகம் பெற்று அ.தி.மு.க. வேட்பாளர் சிவம் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் 127 ஒன்றிய கவுன்சிலர் பதவிகள் உள்ளது. இதில் 5 இடங்களில் தி.மு.க.வும், 2 இடங்களில் அ.தி.மு.க.வும் முன்னிலையில் உள்ளது.
    வேலூர்:

    வேலூர் ஒன்றியத்தில் 18 பஞ்சாயத்து தலைவர். ஒரு மாவட்ட கவுன்சிலர் 11 ஒன்றிய கவுன்சிலர் பதவிகளுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடந்தது.

    வேலூர் மாவட்டத்தில் 138 ஒன்றிய கவுன்சிலர் பதவிகள் உள்ளது. இதில் 8 இடங்களில் தி.மு.க. முன்னிலையில் உள்ளது.

    வேலூர் ஒன்றியத்தில் 3 இடத்தில் தி.மு.க. முன்னிலையில் உள்ளது. 4 மற்றும் 9-வது வார்டில் தி.மு.க வேட்பாளர்கள் முன்னிலையில் இருந்தனர்.

    கணியம்பாடி ஒன்றியத்தில் 2 இடத்திலும், குடியாத்தத்தில் 2 இடத்திலும், காட்பாடியில் 2 இடத்திலும் தி.மு.க. வேட்பாளர்கள் முன்னிலையில் உள்ளனர்.

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் 127 ஒன்றிய கவுன்சிலர் பதவிகள் உள்ளது. இதில் 5 இடங்களில் தி.மு.க.வும், 2 இடங்களில் அ.தி.மு.க.வும் முன்னிலையில் உள்ளது.

    அரக்கோணம் ஒன்றிய கவுன்சிலர்களுக்கான ஒரு இடத்தில் தி.மு.க. முன்னிலையில் உள்ளது.

    திருப்பத்தூர் மாவட்டத்தில் 125 ஒன்றிய கவுன்சிலர் பதவி உள்ளது. இதில் கந்திலி ஒன்றியத்தில் 2 இடங்களில் அ.தி.மு.க. முன்னிலையில் உள்ளது.

    வேலூர் மாவட்டத்தில் 14 மாவட்ட கவுன்சிலர்கள் பதவி உள்ளது. இதில் 3 இடங்களில் தி.மு.க. முன்னிலையில் உள்ளது.

    முதல் சுற்றில் மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்ட 13-வது வார்டு தி.மு.க வேட்பாளர் த.பாபு முன்னிலையில் இருந்தார்.

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் 13 மாவட்ட கவுன்சிலர் பதவி உள்ளது. இதில் 3 இடத்தில் தி.மு.க. முன்னிலையில் உள்ளது.

    திருப்பத்தூர் மாவட்டத்தில் 13 மாவட்ட கவுன்சிலர் பதவி உள்ளது. இதில் ஒரு இடத்தில் அ.தி.மு.க. முன்னிலையில் உள்ளது.

    குடியாத்தத்தில் தொழிலாளி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    குடியாத்தம்:

    குடியாத்தத்தை அடுத்த பிச்சனூர் காளியம்மன்பட்டி கிராமணி தோப்பு பகுதியில் வசித்து வந்தவர் அலிபாபா (வயது 51). இவர் கைத்தறி தொழிலுக்கு தேவையான அச்சு கட்டும் வேலை செய்து வந்தார். வாலிப வயதில் குங்பூ பயிற்சியாளராகவும் இருந்து வந்துள்ளார்.

    அலிபாபாவிற்கு மனைவி மற்றும் 2 பிள்ளைகள் உள்ளனர். கடந்த சில மாதங்களாக மனைவியும் பிள்ளைகளும் அலிபாபாவை பிரிந்து காஞ்சிபுரத்தில் வசித்து வருகின்றனர்.

    அலிபாபா மட்டும் தனியாக வசித்து வந்துள்ளார் இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அலிபாபாவை அக்கம்பக்கத்தினர் பார்த்துள்ளனர். ஆனால் நேற்று பகல் முழுவதும் அலிபாபாவை பார்க்கவில்லை. இதனால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் வீட்டில் பார்த்த போது சேலையால் தூக்கிட்ட நிலையில் இருந்துள்ளார்.

    தகவல் அறிந்த குடியாத்தம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் விரைந்து சென்று அலிபாபாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக குடியாத்தம் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து அலிபாபாவின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வேலூரில் குடிநீரில் கழிவுநீர் கலந்து வந்ததால் பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
    வேலூர்:

    வேலூர் சைதாப்பேட்டை முருகன் கோவில் அருகே மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி உள்ளது. இந்தத் தொட்டி மூலம் சைதாப்பேட்டை, காகிதப்பட்டறை பகுதிகளுக்கு குடிநீர் வினியோகிக்கப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களாக அப்பகுதிகளில் குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது.

    இந்தநிலையில் வேலூர் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள நீரேற்று நிலையத்தில் இருந்து மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு நீர் ஏற்றப்பட்டது. பின்னர் அங்கிருந்து காகிதப்பட்டறை, சைதாப்பேட்டை பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது.

    அந்த குடிநீர் சுகாதாரமற்ற முறையில் கருப்பு நிறத்தில் இருந்தது. மேலும் அதிலிருந்து துர்நாற்றமும் வீசியது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். அதைத்தொடர்ந்து அப்பகுதி இளைஞர்கள் மேல்நிலைநீர்த்தேக்க தொட்டியின் மேல் சென்று பார்த்தனர். அப்போது அதனுள் குப்பைகள் மிதந்து சாக்கடை போல் காட்சி அளித்தது. இதுகுறித்து இளைஞர்கள் அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்தனர்.

    ஆத்திரமடைந்த ராமர் பஜனை கோவில் தெரு, நைனியப்பன் தெரு உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் மாலை 4.30 மணி அளவில் வேலூர் ஆற்காடு சாலையில் திடீரென மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாகனங்கள் செல்ல முடியாமல் இருபுறமும் நீண்ட வரிசையில் நின்றன.

    தகவல் அறிந்ததும் வேலூர் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.

    2-ம் மண்டல உதவி கமிஷனர் மதிவாணன் அங்கு வந்து குடிநீர் தொட்டியை பார்வையிட்டு சுத்தமான குடிநீர் வழங்க நடவடிக்கை மேற்கொண்டார். முன்னதாக மறியல் போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த போது பெண்கள் சிலர் கழிவுநீர் கலந்து வந்த குடிநீரை குடத்தில் கொண்டு வந்து சாலையில் கொட்டி தங்கள் பிரச்சினையை நூதன முறையில் வெளிக்காட்டினர்.
    ×