search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    இட ஒதுக்கீடு கேட்டு வேலூர் முத்துரங்கம் கல்லூரி முன்பு மாணவர்கள் போராட்டம்

    வேலூர் அருகே இட ஒதுக்கீடு கேட்டு முத்துரங்கம் கல்லூரி முன்பு மாணவர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    வேலூர்:

    வேலூர் ஓட்டேரியில் முத்துரங்கம் அரசினர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது.

    இதில் எம்.பி.சி (வி) என்ற 10.5 சதவிகித வன்னியர் இட ஒதுக்கீட்டில் சேர அடுக்கம்பாறை, பாகாயம், ஆற்காடு, கலவை, திமிரி, கணியம்பாடி உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமப்புற ஏழை மாணவர்கள் இன்று ஆர்வமுடன் வந்திருந்தனர்.

    அவர்களுக்கான 10.5 சதவிகித இட ஒதுக்கீடு முடிந்துவிட்டதாக கூறி அவர்கள் கல்லூரியினுள் அனுமதிக்கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் தங்களின் பெற்றோர்களுடன் கல்லூரி நுழைவாயிலில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இட ஒதுக்கீட்டிற்கான கல்வி சேர்க்கை முடிந்தது குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடாத கல்லூரி நிர்வாகத்தை கண்டித்து கோ‌ஷங்களை எழுப்பினர். இதனால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

    அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியும் கலைந்து செல்லவில்லை. கல்லூரி கல்வி இணை இயக்குநர் காவேரி சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

    முத்துரங்கம் அரசு கல்லூரியில் வன்னியர்களுக்கான இடஒதுக்கீடு முடிந்துவிட்டது.

    மாதனூர் எம்.ஜி.,ஆர் அரசு கலைக்கல்லூரியில் அதிக இடங்கள் காலியாக உள்ளது. அங்கு மாணவர்களை சேர்க்கலாம் என உறுதியளித்தார். பின்னர் மாணவ,மாணவிகளும் பெற்றோர்களும் கலைந்து சென்றனர்

    பின்னர் பெரிய அளவிலான பலகையில் எவ்வளவு இட ஒதுக்கீட்டில் எந்தெந்த பிரிவினருக்கு இடங்கள் வழங்கப்பட்டுள்ளன என அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது.

    Next Story
    ×