என் மலர்
திருவண்ணாமலை
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகில் உள்ள நரசிங்கநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் பழனி (வயது 29), கூலித்தொழிலாளி. இவருக்கு பாஞ்சாலை (25) என்ற மனைவி, ஆஷானி (4) என்ற மகளும், ஹரி (3) என்ற மகனும் உண்டு.
பொங்கல் பண்டிகையையொட்டி பழனி தனது குழந்தைகளுக்கு கடைவீதியில் விற்ற இனிப்பு வகைகளை வாங்கி வந்து கொடுத்துள்ளார். அவர் வாங்கி வந்த இனிப்பு வகைகளை இரு குழந்தைகளும் சாப்பிட்டுள்ளனர். இதனால் வயிற்றுப்போக்கு ஏற்பட்டு குழந்தைகள் மயக்கம் அடைந்தனர்.
அதிர்ச்சி அடைந்த பெற்றோர் தங்களின் இரு குழந்தைகளையும் சிகிச்சைக்காக செங்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்க ஆம்புலன்சில் கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே ஆஷானி பரிதாபமாக உயிரிழந்தாள்.
கவலைக்கிடமாக இருந்த ஹரியை மேல்சிகிச்சைக்காக திருவண்ணாமலை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்று, தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி ஹரி பரிதாபமாக உயிரிழந்தான். இரு குழந்தைகளும் உயிரிழந்ததைப் பார்த்து பெற்றோரும், கிராம மக்களும் கதறி அழுதனர்.
இதுகுறித்து விசாரித்தபோது, தரமற்ற பழைய இனிப்பு வகைகளை குழந்தைகள் சாப்பிட்டதால் உயிரிழந்ததாக போலீஸ் தரப்பில் தெரிவித்தனர்.
இதனையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை சட்டமன்ற தொகுதி பாரதிய ஜனதா கட்சியின் ஆலோசனை கூட்டம் திருவண்ணாமலை வேங்கிக்காலில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு மாநில வர்த்தக அணி துணை தலைவர் தணிகைவேல் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் மாநில இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு அவர் பேசியதாவது:-
பிரதமர் நரேந்திர மோடியை பார்த்து உலக நாடுகள் நடுங்குகின்றன. பா.ஜ.க. நடத்திய வேல் யாத்திரைக்கு பின்பு தி.மு.க. மற்றும் அ.தி.மு.க.வினர் கலக்கமடைந்துள்ளனர்.
திருவண்ணாமலை சிவ தலத்தில் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற வேண்டும். அதற்கு நீங்கள் அயராது பாடுபட வேண்டும். தமிழக மக்கள் இன்றைக்கு பாரதிய ஜனதாவை ஆதரிக்க தொடங்கிவிட்டனர்.
இப்போது பாரதிய ஜனதா கட்சியின் அலை நாடு முழுதும் வீசிக்கொண்டிருக்கிறது. மத்திய அரசு திட்டங்களை நீங்கள் முனைப்போடு மக்களுக்கு கொண்டு செல்ல வேண்டும்.
அதிக கோவில்கள் நிறைந்த சிறப்புமிக்க மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. இங்கு நாயன்மார்கள், கட்டபொம்மன், கொடிகாத்தகுமரன் போன்ற நல்லோர்கள் பிறந்துள்ளனர்.
தமிழகத்தில் 6 ஆண்டுகளில் ரூ.5 லட்சம் கோடியை மத்திய அரசு வளர்ச்சிப் பணிகளுக்காக வழங்கி உள்ளது.
ஆனால் கடந்த காங்கிரஸ் ஆட்சி காலத்தில் ரூ.90 ஆயிரம் கோடி மட்டுமே வழங்கப்பட்டது. எனவே தமிழகத்தின் மீது அக்கறை உள்ள அரசாக பாரதிய ஜனதா கட்சி திகழ்ந்து கொண்டிருக்கிறது.
இதையெல்லாம் மக்களுக்கு எடுத்துச் சொல்லி வருகிற சட்டமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியின் மாபெரும் வெற்றியடைய நீங்கள் அயராது பாடுபட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் டாஸ்மாக் மூலம் 218 கடைகள் செயல்பட்டு வருகிறது. இக்கடைகள் மூலம் வழக்கமாக ஒரு நாளைக்கு சுமார் ரூ.3 கோடியே 30 லட்சம் மதிப்பில் மதுபானம் விற்பனை நடைபெறும்.
இந்த நிலையில் பொங்கலன்று ரூ.9 கோடியே 89 லட்சத்து 4 ஆயிரத்து 330 மதிப்பில் மதுபானம் விற்பனை நடைபெற்றுள்ளது.
அதாவது வழக்கத்தை விட நேற்றுமுன்தினம் ஒரு நாளில் 3 மடங்கு மதுபானம் விற்பனை ஆகியுள்ளது.
நேற்று திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு மதுக்கடைகள் மூடப்பட்டன. இதனால் மது பிரியர்கள் ஒரு நாளைக்கு முன்பே மதுபானங்களை வாங்கி இருக்கலாம். அதனால் மதுபான விற்பனை அதிகரித்துள்ளதாக டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதேபோல் பொங்கலுக்கு முந்தைய நாளான போகி பண்டிகை அன்று ரூ. 5 கோடியே 60 லட்சம் மதிப்பில் மதுபானங்கள் விற்பனையானதாக டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்தனர்.






