என் மலர்tooltip icon

    திருவள்ளூர்

    • பழுதடைந்த உயர் கோபுர மின் விளக்கு கம்பம் குறித்து பலமுறை புகார் தெரிவித்தும் பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றச்சாட்டு.
    • பொன்னேரி தாசில்தார் செல்வக்குமார், மீஞ்சூர் பேரூராட்சி செயல் அலுவலர் வெற்றியரசு மற்றும் போலீசார் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

    பொன்னேரி:

    மீஞ்சூர், பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் தேவி. இவரது கணவர் ஏற்கனவே இறந்து விட்டார். இவரது மகன்கள் முகேஷ், ரூபேஷ் (வயது15). இவர்களில் ரூபேஷ் அதே பகுதியில் உள்ள ஆதிதிராவிடர் மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.

    நேற்று மாலை ரூபேஷ், வீட்டின் அருகே உள்ள உயர் கோபுர மின்விளக்கு கம்பம் அருகே விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அந்த மின்கம்பத்தில் மின்கசிவு ஏற்பட்டு மின்சாரம் பாய்ந்து இருந்தது.

    இதனை அறியாமல் ரூபேஷ் மின்கம்பத்தை தொட்டார். இதில் மின்சாரம் பாய்ந்ததில் அவர் தூக்கி வீசப்பட்டார். சம்பவ இடத்திலேயே ரூபேஷ் இறந்து போனார்.

    தகவல் அறிந்ததும் மீஞ்சூர் போலீசார் விரைந்து வந்து பலியான ரூபேசின் உடலை மீட்டு பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மின்சாரம் தாக்கி மாணவன் பலியானது பற்றி அறிந்ததும் அப்பகுதி மக்கள் ஏராளமானோர் அங்கு திரண்டனர்.

    பழுதடைந்த உயர் கோபுர மின் விளக்கு கம்பம் குறித்து பலமுறை புகார் தெரிவித்தும் பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றம்சாட்டி மீஞ்சூர் -திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் அமர்ந்து சுமார் 300-க்கும் மேற்பட்டோர் திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    பொன்னேரி தாசில்தார் செல்வக்குமார், மீஞ்சூர் பேரூராட்சி செயல் அலுவலர் வெற்றியரசு மற்றும் போலீசார் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். மின்கம்பம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதைத்தொடர்ந்து மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் அப்பகுதியில் சுமார் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து மீஞ்சூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரித்து வருகின்றனர்.

    • கடந்த சில நாட்களாக செயின் பறிப்பு மற்றும் செல்போன் பறிப்பு சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.
    • வழிப்பறியில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

    பொன்னேரி மற்றும் கும்மிடிப்பூண்டி பகுதிகளில் கடந்த சில நாட்களாக செயின் பறிப்பு மற்றும் செல்போன் பறிப்பு சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் தடப்பெரும்பாக்கம் பகுதியில் ஒரு வீட்டில் பதுங்கி இருந்த 2 வாலிபர்களிடம் விசாரணை நடத்தினர்.

    அவர்கள், சென்னை அண்ணா நகரை சேர்ந்த புருஷோத்தமன், மீஞ்சூர் சூர்யா நகர் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த கணேசன் என்பதும் அவர்கள் தொடர்ந்து வழிப்பறியில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    • அடையாள அட்டை இருப்பவர்கள் மட்டுமே வேப்பஞ்சேலை கட்ட வேண்டும், மொட்டை அடிக்க வேண்டும்,
    • ஆடி மாதம் முதல் சனிக்கிழமை துவங்கி 14 வாரங்கள் தொடர்ந்து திருவிழா நடைபெறும்.

    பெரியபாளையம்:

    திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், பெரியபாளையத்தில் ஆரணி ஆற்றங்கரையில் புகழ்பெற்ற அருள்மிகு பவானி அம்மன் திருக்கோவில் உள்ளது. இக்கோவிலில் பக்தர்கள் தங்களது குடும்பத்துடன் சனிக்கிழமை இரவு வந்து தங்கி இருந்து ஞாயிற்றுக்கிழமை நேர்த்திக் கடனை செலுத்தி விட்டு செல்வர்.

    இத்திருவிழா ஆடி மாதம் முதல் சனிக்கிழமை துவங்கி 14 வாரங்கள் தொடர்ந்து நடைபெறும். 3-வது வாரம் உள்ளூர் ஆடித்திருவிழாவாக கொண்டாடி வருகின்றனர். அப்பொழுது அம்பேத்கார் நகர், தண்டுமா நகர், ராள்ளபாடி, அரியப்பாக்கம் என வரிசைப்படி நான்கு கிராம மக்கள் தாய் வீட்டு சீதனமான மஞ்சள், குங்குமம், வெற்றிலை, பாக்கு, பூ, வளையல் உள்ளிட்டவைகளுடன் பொங்கல் பானை அலங்கரிக்கப்பட்டு மேள-தாளம் முழங்க, தாரை தம்பட்டையுடன், வாணவேடிக்கையுடன் கோவிலுக்கு வந்து பொங்கல் வைப்பார்கள். மேலும், ஆடித்திருவிழாவின்போது ஏராளமான வாகனங்கள் வருவதால் சென்னை-ஊத்துக்கோட்டை நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும்.

    இந்நிலையில், இம்மாதம் 17-ம் தேதி ஆடி மாதம் பிறக்கின்றது. இதையொட்டி மேற்கொள்ளப்படும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாகவும், போக்குவரத்து நெரிசல் மற்றும் குற்ற நடவடிக்கைகளை தடுப்பது குறித்தும் ஊத்துக்கோட்டை டிஎஸ்பி கணேஷ்குமார் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார்.

    எல்லாபுரம் வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு, எல்லாபுரம் ஒன்றிய குழு பெருந்தலைவர் வடமதுரை கே.ரமேஷ் தலைமை தாங்கினார். துணை பெருந்தலைவர் வக்கீல் கே.சுரேஷ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நடராஜன், சத்தியமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    வியாபாரிகள் பாதிக்காத வண்ணமும், பக்தர்கள் பாதுகாப்பாகவும், விரைவாகவும் தரிசனம் செய்யவும் பல்வேறு வழிமுறைகளை டிஎஸ்பி கணேஷ்குமார் எடுத்துக் கூறி சிறப்புரை ஆற்றினார். இக்கூட்டத்தில்,குற்ற நடவடிக்கையை தடுக்க கோவில் சார்பாக வழங்கப்படும் அடையாள அட்டை இருப்பவர்கள் மட்டுமே வேப்பஞ்சேலை கட்ட வேண்டும், மொட்டை அடிக்க வேண்டும், 3-வது வார ஆடி திருவிழாவில் குறிப்பிட்ட நேரத்தில் நான்கு ஊர் கிராம மக்களும் கோவிலுக்கு வர உரிய ஒத்துழைப்பு வழங்க அக்கிராம பெரியோர்களிடம் வலியுறுத்துவது என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    இக்கூட்டத்தில், பெரிய பாளையம் ஒன்றிய குழு உறுப்பினர் கோகிலா, வடமதுரை ஒன்றிய குழு உறுப்பினர் ஜமுனாஅப்புன், திருக்கோவிலின் பரம்பரை அறங்காவலர் அஞ்சன் லோகமித்ரா, கோவிலின் செயல் அலுவலர் பிரகாஷ், மேலாளர் வெங்கட் மற்றும் நெடுஞ்சாலைத்துறை, மின்வாரியத்துறை, தீயணைப்பு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.முடிவில், பெரியபாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் நன்றி கூறினார்.

    • மாணவர்களிடையே விளையாட்டுப் போட்டிகள், பேச்சுப்போட்டி கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.
    • முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் நினைவுச் சின்னம் மற்றும் இணைய பக்கம் வெளியிடப்பட்டது.

    பொன்னேரி:

    பொன்னேரி அடுத்த பஞ்செட்டி வேலம்மாள் தொழில்நுட்பக் கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட பழைய மாணவர்கள் தங்களது கல்லூரி காலங்களில் நடைபெற்ற சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்துகொண்டனர். மேலும், மாணவர்களிடையே விளையாட்டுப் போட்டிகள், பேச்சுப்போட்டி கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

    இதில் சிறப்பு அழைப்பாளராக கல்வி குழும தலைவர் எம்வி முத்துராமலிங்கம், இயக்குனர் எம்விஎம் சசிகுமார் மற்றும் பொன்னேரி மேலாளர் நாகமுத்து கலந்துகொண்டு மாணவர்களிடையே கலந்துரையாடினர். கல்லூரி முதல்வர் பாலாஜி, துணை முதல்வர் சௌந்தர்ராஜன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில் முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் நினைவுச் சின்னம் மற்றும் இணைய பக்கம் வெளியிடப்பட்டது.

    • பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
    • நிகழ்ச்சி நகராட்சி அலுவலக வளாகத்தில் நகர் மன்ற தலைவர் என்.இ.கே.மூர்த்தி தலைமையில் நடைபெற்றது.

    பூந்தமல்லி:

    நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செங்கல்பட்டு மண்டலம் சார்பில் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    அதன்படி திருவேற்காடு நகராட்சியில் மக்களின் பங்களிப்போடு நகரை தூய்மையாக வைத்துக் கொள்வது, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, திடக்கழிவு மேலாண்மை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் மூலம் நகர்ப்புறங்களை தூய்மையாக வைத்து கொள்வதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

    இது குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

    என் குப்பை எனது பொறுப்பு (கழிவுகளை பிரித்தல்), நகரங்களின் தூய்மைக்கு மக்களின் பங்களிப்பு, திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் மக்களின் பங்கு, மரம் வளர்ப்பதின் அவசியம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, நெகிழியினை தவிர்ப்பதன் அவசியம், நீர்நிலைகளை பாதுகாப்பது ஆகியவை குறித்து தொடர்ந்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் இத்திட்டத்தின் படி சிறப்பாக பணியாற்றிய தூய்மை பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்களை பாராட்டி பரிசு வழங்கி கவுரவிக்கும் நிகழ்ச்சி நகராட்சி அலுவலக வளாகத்தில் நகர் மன்ற தலைவர் என்.இ.கே.மூர்த்தி தலைமையில் நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் சிறப்பாக பணியாற்றிய தூய்மை பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்களை பாராட்டி பொன்னாடை போர்த்தி பரிசு பொருட்களை நகர் மன்ற தலைவர் என்.இ.கே. மூர்த்தி வழங்கி வாழ்த்தி பேசினார். நிகழ்ச்சியில் நகர்மன்ற துணை தலைவர் ஆனந்தி ரமேஷ், ஆணையர் ஜஹாங்கீர் பாஷா, சுகாதார அலுவலர் ஆல்பர்ட் அருள்ராஜ், நகர் மன்ற உறுப்பினர் இளங்கோவன், மேற்பார்வையாளர்கள், பரப்பு ரையாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பொன்னேரி பகுதியில் கத்தியுடன் ரவுடி கும்பல் பொதுமக்கள், வியாபாரிகளை மிரட்டி தாக்குவது அதிகரித்து உள்ளது.
    • ரவுடிகள் மீது புகார் கொடுக்க பொதுமக்கள் அச்சம் அடைந்து உள்ளனர்.

    பொன்னேரி:

    பொன்னேரி அடுத்த வேண்பாக்கம் மாதா சிலை அருகில் வாலிபர்கள் சிலர் மோட்டார் சைக்கிளில் வந்தனர். அவர்கள் திருவேங்கடபுரம் பள்ளி அருகே ஆட்டோவில் வந்த டிரைவரை கத்தியை காட்டி மிரட்டி திடீரென தாக்கினர்.

    இதனை அவ்வழியே வந்த கல்லூரி மாணவர் ஒருவர் தட்டிக்கேட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த கும்பல் மாணவரை ஓட, ஓட விரட்டி தாக்கினர். மேலும் கத்தியாலும் திருப்பி பிடித்து சரமாரியாக அடித்தனர். இதில் பலத்த காயம் அடைந்த மாணவர் அங்கேயே மயங்கி விழுந்தார். இதனை பார்த்த சாலையில் சென்றவர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். பின்னர் ரவுடி கும்பல் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. காயம் அடைந்த மாணவருக்கு பொன்னேரி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வருகிறார்கள். இந்த தாக்குதல் தொடர்பாக இன்று காலை 2 பேரை போலீசார் பிடித்தனர். அவர்களிடம் இருந்து கத்தி பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கடந்த சில வாரங்களாக பொன்னேரி பகுதியில் கத்தியுடன் ரவுடி கும்பல் பொதுமக்கள், வியாபாரிகளை மிரட்டி தாக்குவது அதிகரித்து உள்ளது. அவர்கள் மீது புகார் கொடுத்தாலும் போலீசார் உரிய நடவடிக்கை எடுப்பதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்து உள்ளது. இதனால் ரவுடிகள் மீது புகார் கொடுக்க பொதுமக்கள் அச்சம் அடைந்து உள்ளனர். ரவுடிகளின் அட்டகாசத்தை அடக்க சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • சுமார் 100-க்கும் மேற்பட்டோர் மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர்.

    பொன்னேரி:

    சோழவரம் அடுத்த பால முருகன் நகர், சோழி பாளையம் பகுதியில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். கடந்த சில மாதங்களாக இப்பகுதிக்கு மின்சப்ளை சீராக இல்லை. குறைந்த அழுத்த மின்சப்ளையால் பொதுமக்கள் தங்களது வீட்டில் உள்ள மின்மோட்டார் உள்ளிட்ட மின்சாதனை பொருட்களை பயன்படுத்த முடியாத நிலை நீடித்து வருகிறது.

    மேலும் வீட்டில் உள்ள மின்விசிறி, மிக்சி, கிரைண்டர், வாஷிங் மெஷின், டி.வி. கம்ப்யூட்டர் உள்ள மின்சாதன பொருட்கள் தொடர்ந்து பழுதாகி வருகின்றன. இதுகுறித்து அப்பகுதி மக்கள் சோழவரம் அடுத்த சோத்துபெரும்பேடு பகுதியில் உள்ள மின்சார வாரிய உதவி பொறியாளர் அலுவலகத்தில் பலமுறை மனு அளித்தனர். எனினும் மின்சப்ளை சீராக வினியோகிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்று தெரிகிறது. தொடர்ந்து மின்அழுத்தம் குறைவாக வந்ததால் பொதுமக்கள் கடும் சிரமம் அடைந்தனர்.

    இதனை கண்டித்து அப்பகுதி பெண்கள் உட்பட சுமார் 100-க்கும் மேற்பட்டோர் சோத்துபெரும்பேடு பகுதியில் உள்ள மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மின்சப்ளையை சீராக வினியோகிக்கவும் மற்றும் வீடுகளில் மின்சார பயன்பாட்டை அளவீடு செய்ய ஊழியர்கள் வருவதில்லை என்றும் குற்றம் சாட்டினர்.

    தகவல் அறிந்ததும் சோழவரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் மற்றும் போலீசார் விரைந்து வந்து பேச்சு வார்த்தை நடத்தினர். இதுபற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    • தக்காளி வரத்து குறைந்து உள்ளதால் அதன் விலை மேலும் அதிகரிக்கும் என்றே தெரிகிறது.
    • தோட்டக்கலை இணை இயக்குனர் ரூ.110-க்கு விற்கப்பட்ட தக்காளியை ரூ.90-க்கு விற்க நடவடிக்கை மேற் கொண்டார்.

    திருவள்ளூர்:

    தமிழகத்தில் தக்காளி விலை தொடர்ந்து உச்சத்தில் இருந்து வருகிறது. கிலோ ரூ.100 முதல் ரூ.130 வரை விற்பனை ஆகிறது. இதே போல் மற்ற மாநிலங்களிலும் தக்காளி விலை எகிறி உள்ளது. ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் மழை காரணமாக தக்காளி விளைச்சல் பாதிக்கப்பட்டதால் இந்த விலை உயர்வு என்று கூறப்படுகிறது.

    தக்காளி வரத்து குறைந்து உள்ளதால் அதன் விலை மேலும் அதிகரிக்கும் என்றே தெரிகிறது. இதையடுத்து தக்காளி விலை உயர்வை கட்டுப்படுத்த ரேசன் கடைகளில் தக்காளியை விற்க அரசு நடவடிக்கை எடுத்து உள்ளது. அங்கு ஒரு கிலோ தக்காளி ரூ.60-க்கு விற்கப்பட்டு வருகிறது.

    இதேபோல் திருவள்ளூர் மாவட்ட பகுதியிலும் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் நடமாடும் கடைகள் மூலம் தக்காளி விற்பனை நடந்து வருகிறது. திருவள்ளூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் ரூ.110-க்கு தக்காளி விற்கப்பட்டது. ஆனால் திருவள்ளூர் காய்கறி மார்க்கெட் மற்றும் சுற்றுப்புற பகுதியிலுள்ள கடைகளில் ரூ.100-க்கு தக்காளி விற்பனை செய்யப்படுகிறது.

    மார்க்கெட்டை விட தோட்டக்கலைத்துறை சார்பில் தக்காளி விலை ரூ.10 அதிகமாக விற்கப்பட்டதால் பொதுமக்கள் அங்கிருந்த ஊழியர்களிடம் கடும் வாக்குவாதம் செய்தனர். அவர்களது கேள்விக்கு பதில் அளிக்க முடியாமல் ஊழியர்கள் திணறினர். அவர்கள் கூறும்போது கோயம்பேட்டில் இருந்து தக்காளி வாங்கி விற்பனை செய்வதாக தெரிவித்தனர். இதுபற்றி அறிந்த திருவள்ளூர் தோட்டக்கலை இணை இயக்குனர் ரூ.110-க்கு விற்கப்பட்ட தக்காளியை ரூ.90-க்கு விற்க நடவடிக்கை மேற் கொண்டார்.

    • மோட்டார் சைக்கிளுடன் மது பாட்டில்களை போலீசார் கைப்பற்றி போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்தனர்.
    • விசாரணையில் அவர் ஆரணி சுப்பிரமணிய நகரை சேர்ந்த முத்து என்பது தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.

    ஆரணி:

    திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம் ஆரணி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கர் தலைமையில் போலீசார் நேற்று மதியம் ரோந்து பணி மேற்கொண்டனர். ஜி.என்.செட்டி தெருவில் மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு வாலிபரை வழிமறித்து சோதனை செய்தனர்.

    அப்போது அவர் மது பாட்டில்கள் கடத்தி வந்ததை கண்டு பிடித்தனர். இதையடுத்து மோட்டார் சைக்கிளுடன் மது பாட்டில்களை போலீசார் கைப்பற்றி போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்தனர். விசாரணையில் அவர் ஆரணி சுப்பிரமணிய நகரை சேர்ந்த முத்து (வயது 34) என்பது தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.

    • சப்-கலெக்டர் ஐஸ்வர்யா ராமநாதன் உத்தரவின் பேரில் ஆக்கிரமிப்பு நிலம் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
    • பொக்லைன் எந்திரம் உதவியுடன் ஆக்கிரமிக்கப்பட்டு இருந்த ரூ. 2 கோடி மதிப்புள்ள அரசு நிலத்தை மீட்டனர்.

    பொன்னேரியை அடுத்த தடபெரும்பாக்கம் கிராமத்தில் தாங்கல் நீர்நிலை புறம்போக்கு நிலம் உள்ளது. இந்த நிலத்தை தனியார் சிலர் ஆக்கிரமிப்பு செய்து இருந்தனர். இது குறித்து வருவாய் துறைக்கு புகார்கள் வந்தன. இதைத்தொடர்ந்து பொன்னேரி சப்-கலெக்டர் ஐஸ்வர்யா ராமநாதன் உத்தரவின் பேரில் ஆக்கிரமிப்பு நிலம் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

    பொன்னேரி தாசில்தார் செல்வகுமார் முன்னிலையில் பொக்லைன் எந்திரம் உதவியுடன் ஆக்கிரமிக்கப்பட்டு இருந்த ரூ. 2 கோடி மதிப்புள்ள அரசு நிலத்தை மீட்டனர். அப்போது மண்டல துணை வட்டாட்சியர் தேன்மொழி, வருவாய் ஆய்வாளர் ஜெயபிரபா, நில அளவையர் சுமன், ஊராட்சித் தலைவர் பாபு, கிராம நிர்வாக அலுவலர் உதயகுமார் உடன் இருந்தனர்.

    • பிளஸ்-2 மாணவரை உடற்பயிற்சி ஆசிரியர் தாக்கியதாக தெரிகிறது.
    • பொன்னேரி போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போகச்செய்தனர்.

    பொன்னேரியை அடுத்த திரு ஆயர்பாடியில் உள்ள தனியார் பள்ளியில் படிக்கும் பிளஸ்-2 மாணவரை உடற்பயிற்சி ஆசிரியர் தாக்கியதாக தெரிகிறது. இதில் மாணவனுக்கு காயம் ஏற்பட்டது. இதுகுறித்து பொன்னேரி போலீசில் புகார் செய்யப்பட்டது. இந்த நிலையில் உடற்கல்வி ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க கோரி இன்று காலை மாணவனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் 50-க்கும் மேற்பட்டோர் தனியார் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் பொன்னேரி போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போகச்செய்தனர்.

    • பீரோவில் இருந்த நகை-பணம் கொள்ளை போய் இருப்பது தெரிந்தது.
    • நகை-பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டு சீனிவாசா நகரை சேர்ந்தவர் நகுனி.இவர் வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் சென்னையில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்துக்கு சென்றார்.

    பின்னர் திரும்பி வந்தபோது வீட்டின் கதவு பூட்டு உடைந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பீரோவில் இருந்த நகை-பணம் கொள்ளை போய் இருப்பது தெரிந்தது. இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    ×