என் மலர்
உள்ளூர் செய்திகள்

பெரியபாளையம் ஆடித்திருவிழாவில் குற்ற நடவடிக்கைகளை தடுக்க ஆலோசனை: ஊத்துக்கோட்டை டி.எஸ்.பி பங்கேற்பு
- அடையாள அட்டை இருப்பவர்கள் மட்டுமே வேப்பஞ்சேலை கட்ட வேண்டும், மொட்டை அடிக்க வேண்டும்,
- ஆடி மாதம் முதல் சனிக்கிழமை துவங்கி 14 வாரங்கள் தொடர்ந்து திருவிழா நடைபெறும்.
பெரியபாளையம்:
திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், பெரியபாளையத்தில் ஆரணி ஆற்றங்கரையில் புகழ்பெற்ற அருள்மிகு பவானி அம்மன் திருக்கோவில் உள்ளது. இக்கோவிலில் பக்தர்கள் தங்களது குடும்பத்துடன் சனிக்கிழமை இரவு வந்து தங்கி இருந்து ஞாயிற்றுக்கிழமை நேர்த்திக் கடனை செலுத்தி விட்டு செல்வர்.
இத்திருவிழா ஆடி மாதம் முதல் சனிக்கிழமை துவங்கி 14 வாரங்கள் தொடர்ந்து நடைபெறும். 3-வது வாரம் உள்ளூர் ஆடித்திருவிழாவாக கொண்டாடி வருகின்றனர். அப்பொழுது அம்பேத்கார் நகர், தண்டுமா நகர், ராள்ளபாடி, அரியப்பாக்கம் என வரிசைப்படி நான்கு கிராம மக்கள் தாய் வீட்டு சீதனமான மஞ்சள், குங்குமம், வெற்றிலை, பாக்கு, பூ, வளையல் உள்ளிட்டவைகளுடன் பொங்கல் பானை அலங்கரிக்கப்பட்டு மேள-தாளம் முழங்க, தாரை தம்பட்டையுடன், வாணவேடிக்கையுடன் கோவிலுக்கு வந்து பொங்கல் வைப்பார்கள். மேலும், ஆடித்திருவிழாவின்போது ஏராளமான வாகனங்கள் வருவதால் சென்னை-ஊத்துக்கோட்டை நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும்.
இந்நிலையில், இம்மாதம் 17-ம் தேதி ஆடி மாதம் பிறக்கின்றது. இதையொட்டி மேற்கொள்ளப்படும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாகவும், போக்குவரத்து நெரிசல் மற்றும் குற்ற நடவடிக்கைகளை தடுப்பது குறித்தும் ஊத்துக்கோட்டை டிஎஸ்பி கணேஷ்குமார் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார்.
எல்லாபுரம் வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு, எல்லாபுரம் ஒன்றிய குழு பெருந்தலைவர் வடமதுரை கே.ரமேஷ் தலைமை தாங்கினார். துணை பெருந்தலைவர் வக்கீல் கே.சுரேஷ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நடராஜன், சத்தியமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
வியாபாரிகள் பாதிக்காத வண்ணமும், பக்தர்கள் பாதுகாப்பாகவும், விரைவாகவும் தரிசனம் செய்யவும் பல்வேறு வழிமுறைகளை டிஎஸ்பி கணேஷ்குமார் எடுத்துக் கூறி சிறப்புரை ஆற்றினார். இக்கூட்டத்தில்,குற்ற நடவடிக்கையை தடுக்க கோவில் சார்பாக வழங்கப்படும் அடையாள அட்டை இருப்பவர்கள் மட்டுமே வேப்பஞ்சேலை கட்ட வேண்டும், மொட்டை அடிக்க வேண்டும், 3-வது வார ஆடி திருவிழாவில் குறிப்பிட்ட நேரத்தில் நான்கு ஊர் கிராம மக்களும் கோவிலுக்கு வர உரிய ஒத்துழைப்பு வழங்க அக்கிராம பெரியோர்களிடம் வலியுறுத்துவது என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இக்கூட்டத்தில், பெரிய பாளையம் ஒன்றிய குழு உறுப்பினர் கோகிலா, வடமதுரை ஒன்றிய குழு உறுப்பினர் ஜமுனாஅப்புன், திருக்கோவிலின் பரம்பரை அறங்காவலர் அஞ்சன் லோகமித்ரா, கோவிலின் செயல் அலுவலர் பிரகாஷ், மேலாளர் வெங்கட் மற்றும் நெடுஞ்சாலைத்துறை, மின்வாரியத்துறை, தீயணைப்பு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.முடிவில், பெரியபாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் நன்றி கூறினார்.






