என் மலர்tooltip icon

    திருவள்ளூர்

    • எதிர்தரப்பினர் லட்சுமணன் கார்த்திக்கை சரமாரியாக தாக்கினர்.
    • மண்ணூர்பேட்டையை சேர்ந்த சூரியன், அருண், சுதாகர் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

    அம்பத்தூர்:

    சிந்தாதிரிப்பேட்டையை சேர்ந்தவர் லட்சுமணன்கார்த்திக்(21). ஏ.சி மெக்கானிக்கான இவர் அம்பத்தூர் அருகே உள்ள மண்ணூர்பேட்டையை சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து வந்ததாக தெரிகிறது. இதற்கு அதே பகுதிைய சேர்ந்த சிலர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

    இந்தநிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு விபத்தில் சிக்கி காயம் அடைந்த லட்சுமணன்கார்த்திக் மீண்டும் அந்த பெண்ணை பார்க்க வந்ததாகதெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த எதிர்தரப்பினர் லட்சுமணன் கார்த்திக்கை சரமாரியாக தாக்கினர். இதில் பலத்த காயம் அடைந்த அவர் தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

    இது தொடர்பாக மண்ணூர்பேட்டையை சேர்ந்த சூரியன், அருண், சுதாகர் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

    • கடந்த 2021-ம் ஆண்டு அக்டோபர் மாதம் பணிகள் தொடங்கப்பட்டு கடந்த ஏப்ரல் மாதம் முடிந்தது.
    • புதிய கட்டிடம் எப்போது பயன்பாட்டுக்கு வரும் என்று பொதுமக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

    பொன்னேரி:

    பொன்னேரி வட்டாட்சியர் அலுவலகம் தாலுகா சாலையில் சுமார் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது. இங்கு தேர்தல் பிரிவு, சர்வேயர் பிரிவு, பதிவேடுகள் பாதுகாப்பு பிரிவு, இ-சேவை மையம், தனி வட்டாட்சியர் பிரிவு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன.

    இந்த பழமை கட்டிடத்தின் மேற்பகுதி சேதம், இட நெருக்கடி, மற்றும் பொது மக்களுக்கு போதுமான இருக்கை வசதி இல்லாதது உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டனர் இதைத்தொடர்ந்து வட்டாட்சியர் அலுவலகத்துக்கு புதிய கட்டிடம் கட்டுவதற்கு திட்டமிடப்பட்டது. இதை த்தொடர்ந்து பொன்னேரி- திருவொற்றியூர் சாலை வேன்பாக்கத்தில் புதிய வட்டாட்சியர் அலுவலக கட்டிடம் கட்டுவதற்கு ரூ.3.06 கோடி ஒதுக்கப்பட்டது. கடந்த 2021-ம் ஆண்டு அக்டோபர் மாதம் பணிகள் தொடங்கப்பட்டு கடந்த ஏப்ரல் மாதம் முடிந்தது. தற்போது இந்த புதிய வட்டாட்சியர் அலுவலக கட்டிடம் திறக்க தயார் நிலையில் உள்ளது. ஆனால் இன்னும் திறக்கப்படாமல் பயன்பாட்டிற்கு வராமல் காணப்படுகிறது.

    இதனால் புதிய கட்டிட அலுவலகம் முன்பு புதர் மண்டியும், தனி நபர்கள் வாகனங்களை நிறுத்தும் இடமாகவும் பயன்படுத்து கிறார்கள். எனவே பொன்னேரி வட்டாட்சியர் அலுவலக புதிய கட்டிடம் எப்போது பயன்பாட்டுக்கு வரும் என்று பொதுமக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

    • வீட்டில் தனியாக இருந்த சஞ்சய் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    கும்மிடிப்பூண்டி:

    சென்னை வியாசர்பாடி கக்கன்ஜி காலனியை சேர்ந்தவர் சஞ்சய் (வயது 19). இவர் மீது சென்னை செம்பியம் போலீஸ் நிலையத்தில் கொலை வழக்கு உள்ள நிலையில் அண்மையில் இவர் ஜாமினில் வெளியே வந்தார். கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு சஞ்சய் கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூர் பகுதியில் தனது பெற்றோர்களுடன் வசித்து வந்தார். அங்கிருந்தவாறு அவர் அந்த பகுதியில் வேலை தேடி வந்ததாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் நேற்று முன்தினம் பெற்றோர்கள் வெளியே சென்ற நிலையில் வீட்டில் தனியாக இருந்த சஞ்சய் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். நீண்ட நேரமாகியும் கதவு திறக்கப்படாததால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் வீட்டின் ஜன்னல் வழியாக பார்த்தனர். அப்போது சஞ்சய் தூக்கில் தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த ஆரம்பாக்கம் போலீசார், கதவை உடைத்து உள்ளே சென்று சஞ்சையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    பின்னர் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில் அதில் கொலை வழக்கில் ஜாமினில் வெளியே வந்த நிலையில் சஞ்சய் மன உளைச்சலில் இருந்து வந்ததாகவும், அதன் காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என தெரிய வந்தது.

    • கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
    • சென்னையில் இருந்து அரக்கோணம் நோக்கி சென்ற மின்சார ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

    ஆவடி:

    ஆவடியை அடுத்த அண்ணனூர் பொன்னியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ஜோதிபாஸ். மருத்துவ பிரதிநிதியான இவரது மனைவி ரம்யா (37). இவர்களுக்கு திருமணம் ஆகி 14 வருடம் ஆகிறது. 13 வயதில் ஒரு மகனும், 10 வயதில் ஒரு மகளும் உள்ளனர்.

    கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், ரம்யா, நேற்று இரவு, மகளின் பிறந்தநாளை கொண்டாடி விட்டு, தோழி வீட்டுக்கு செல்வதாக கூறி அண்ணனூர் ரெயில் நிலையத்திற்கு சென்றார்.

    அப்போது, சென்னையில் இருந்து அரக்கோணம் நோக்கி சென்ற மின்சார ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி தகவல் கிடைத்ததும் ஆவடி ரெயில்வே போலீசார், அவரது உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மகளின் பிறந்தநாள் அன்று தாய் ரெயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • கடந்த 2019-ம் ஆண்டு கட்டப்பட்ட இந்த குடியிருப்பு 3 பிளாக்குகளை கொண்டதாகும்.
    • கடந்த 2021-ம் ஆண்டு இந்த குடியிருப்பில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

    அம்பத்தூர்:

    கொரட்டூர் போலீஸ் நிலையம் அருகில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய அடுக்கு மாடி குடியிருப்புகள் உள்ளன.

    கடந்த 2019-ம் ஆண்டு கட்டப்பட்ட இந்த குடியிருப்பு 3 பிளாக்குகளை கொண்டதாகும். இங்கு 1000-க்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகிறார்கள். குடியிருப்பு மொத்தம் 9 தளங்களை கொண்டதாகும்.

    இந்த நிலையில் நேற்று நள்ளிரவு 1.30 மணி அளவில் 2 பிளாக்குகளில் 8-வது தளத்தில் திடீரென நில அதிர்வு ஏற்பட்டது. இதனால் அங்கு வீடுகளில் வசித்தவர்கள் தூக்கத்தில் இருந்து அலறியடித்துக் கொண்டு எழும்பினார்கள். தங்களது குழந்தைகள் வீட்டில் இருந்த பெரியவர்களை அழைத்துக் கொண்டு அவசரம் அவசரமாக கீழே இறங்கினர்.

    பின்னர் ஒலி பெருக்கி மூலமாக அறிவித்து 8 மாடியில் வசித்த மற்றவர்களையும் கீழே இறங்கி வருமாறு தெரிவித்தனர்.

    இதனால் சுமார் 500-க் கும் மேற்பட்ட குடியிருப்பு வாசிகள் நள்ளிரவில் தங்களது வீடுகளை விட்டு கீழே இறங்கி சாலையில் திரண்டனர்.

    இதுபற்றி தகவல் கிடைத்ததும் போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் விரைந்து சென்று அதிர்வு ஏற்பட்டதாக கூறப்பட்ட கட்டிடத்தில் ஆய்வு செய்தனர். இது தொடர்பாக வானிலை மற்றும் அது தொடர்பான அதிகாரிகளின் கவனத்துக்கும் கொண்டு செல்லப்பட்டது.

    இதில் நிலநடுக்கம் போன்று எதுவும் ஏற்படவில்லை என்பது உறுதியானது. இதன் பிறகே சாலையில் திரண்டு நின்ற குடியிருப்பு வாசிகள் அதிகாலை 5 மணிக்கு பிறகே தங்களது வீடுகளுக்கு சென்றனர்.

    இது தொடர்பாக குடியிருப்போர் நல சங்க நிர்வாகியான லட்சுமி நாராயணன் கூறும்போது, நில அதிர்வு காரணமாக வீடுகள் குலுங்கவில்லை என்று அதிகாரிகள் கூறி இருக்கிறார்கள். அப்படியென்றால் கட்டிடத்தில் அதிர்வு ஏற்பட்டது ஏன்? அதற்கான காரணம் என்ன? என்பதை கண்டுபிடித்து விளக்க வேண்டும் என்றார்.

    குடியிருப்பு வாசியான ஜெயபிரகாஷ் கூறும்போது, கட்டிடத்தில் அதிர்வு ஏற்பட்டதை உணர்ந்ததும் மாடியில் இருந்து இறங்கி கீழே ஓடி வந்தோம். இங்கு 1000-க்கும் மேற்பட்டோர் வசித்து வருவதால் அவர்களின் அச்சத்தை போக்கும் வகையில் நில அதிர்வுக்கான காரணத்தை கண்டறிந்து தெளிவு படுத்த வேண்டும் என்றார்.

    அடுக்குமாடி குடியிருப்பின் அருகில் உள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து வெளியேறும் வாயு காரணமாக வீட்டில் உள்ள பொருட்கள் துருப்பிடித்து போவதாக அங்கு வசிப்பவர்கள் தெரிவித்தனர். சுத்திகரிப்பு நிலையத்தின் செயல்பாடுகள் காரணமாக அதிர்வு ஏற்பட்டு உள்ளதா? என்று விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவர்கள் கூறி உள்ளனர்.

    கடந்த 2021-ம் ஆண்டு இந்த குடியிருப்பில் விரிசல் ஏற்பட்டுள்ளது. அப்போது கட்டிட வல்லுனர்கள் ஆய்வு செய்து அடுத்த 20 ஆண்டுகளுக்கு கட்டிடம் உறுதியாக இருக்கும் என்று தரச் சான்றிதழ் கொடுத்துள்ளனர்.

    இந்த நிலையில் கட்டிடத்தில் ஏற்பட்டுள்ள நில அதிர்வு குடியிருப்பு வாசிகளை பீதியில் ஆழ்த்தி உள்ளது.

    • இரும்பு தாதுக்களை உருக்குவதற்காக பயன்படும் ராட்சத கேஸ் சிலிண்டர் அருகில் தீ பற்றியதும் பரபரப்பு ஏற்பட்டது.
    • முதியவர்கள் கண் எரிச்சல் மற்றும் மூச்சுத் திணறலால் பாதிக்கப்பட்டனர்.

    அம்பத்தூர்:

    அம்பத்தூர் தொழிற்பேட்டை அருகே தனியார் தொழிற்சாலை குப்பை கிடங்கு திடீரென தீப்பற்றியது. தீ மள மளவென குப்பை கிடங்கு முழுவதும் பரவியது. மேலும் இரும்பு தாதுக்களை உருக்குவதற்காக பயன்படும் ராட்சத கேஸ் சிலிண்டர் அருகில் தீ பற்றியதும் பரபரப்பு ஏற்பட்டது.

    தீயினால் ஏற்பட்ட புகை மூட்டத்தால் தீயை அணைக்கும் பணி மிகவும் சிரமம் இருந்ததாக தீயணைப்பு துறையினர் தெரிவித்தனர். சுமார் 2 மணி நேரத்திற்கும் மேல் போராடி தீயணைப்புத்துறையினர் தீயை அணைத்தனர்.

    தீ விபத்தினால் அம்பத்தூர், கொரட்டூர், பாடி உள்ளிட்ட பகுதிகளில் பகுதிகள் முழுவதும் புகை மூட்டமாக காணப்பட்டது. இதனால் முதியவர்கள் கண் எரிச்சல் மற்றும் மூச்சுத் திணறலால் பாதிக்கப்பட்டனர்.

    • லாரி சாலையின் குறுக்கே திரும்பி திருவேற்காடு நோக்கி செல்ல முயன்றது.
    • பயணிகள் இறங்கிய சிறிது நேரத்தில் பஸ்சின் முன் பகுதி கொழுந்து விட்டு எரிய ஆரம்பித்தது.

    பூந்தமல்லி:

    கர்நாடக மாநிலத்தில் இருந்து ஆம்னி பஸ் ஒன்று 22 பயணிகளுடன் நேற்று இரவு கோயம்பேடு நோக்கி வந்து கொண்டிருந்தது.

    இன்று (சனிக்கிழமை) காலை பூந்தமல்லி நெடுஞ்சாலை, திருவேற்காடு அடுத்த வேலப்பன்சாவடி சிக்னல் அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது மதுரவாயலில் இருந்து திருவேற்காடு நோக்கி கற்களை ஏற்றிக்கொண்டு ஒரு லாரி சென்றது.

    அந்த லாரி சாலையின் குறுக்கே திரும்பி திருவேற்காடு நோக்கி செல்ல முயன்றது. அப்போது வேகமாக வந்த கர்நாடகா மாநில ஆம்னி பஸ் எதிர்பாராத விதமாக லாரியின் பின் பகுதியில் மோதியது.இதில் பஸ்சின் முன் பகுதி கண்ணாடிகள் உடைந்து நொறுங்கி விழுந்தது.

    லாரியின் பின்பகுதியும் உடைந்து சேதம் அடைந்தது. இதையடுத்து பஸ் டிரைவர் இறங்கி பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது ஆம்னி பஸ்சின் முன் பகுதியில் இருந்து திடீரென புகை வந்தது. பிறகு பஸ் முன்பகுதியில் தீப்பிடித்தது.

    இதனை கண்டதும் ஆம்னி பஸ் டிரைவர் அதிர்ச்சி அடைந்தார். பஸ்சுக்குள் பயணிகள் இருந்ததால் உதவி கோரி சத்தம் போட்டார். சத்தம் கேட்டு ஆம்னி பஸ்சில் உறங்கி கொண்டிருந்த பயணிகள் அலறி அடித்தபடி வெளியே ஓட்டம் பிடித்தனர்.

    பயணிகள் இறங்கிய சிறிது நேரத்தில் பஸ்சின் முன் பகுதி கொழுந்து விட்டு எரிய ஆரம்பித்தது. இந்த தீயானது அருகில் இருந்த லாரிக்கும் பரவியது. இந்த நிலையில் பஸ்சும், லாரியும் ஒன்று சேர்ந்து கொழுந்து விட்டு எரிய ஆரம்பித்தது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் மதுரவாயல், கோயம்பேடு, பூந்தமல்லி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர். அவர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் அரை மணி நேரத்திற்கு மேல் தீயை போராடி அணைத்தனர்.

    இதில் ஆம்னி பஸ் முழுவதும் தீயில் எரிந்து நாசமானது. லாரியின் பின்பகுதியில் இருந்த டயர்கள் அனைத்தும் தீயில் எரிந்து நாசமானது. இதையடுத்து போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சாலையின் நடுவே தீ விபத்தில் சிக்கி எரிந்து கிடந்த இரண்டு வாகனங்களையும் கிரேன் கொண்டு அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

    இந்த விபத்து காரணமாக இன்று காலை நேரத்தில் பல்வேறு மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் இருந்து கோயம்பேடு நோக்கி வந்த பஸ்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. வேலைக்கு செல்பவர்களும் உரிய நேரத்தில் செல்ல முடியாமல் கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்தனர்.

    வாகனங்கள் தீப்பிடித்து எரிந்ததாலும் அப்புறப்படுத்துவதற்கு காலதாமதம் ஏற்பட்டதாலும் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    இந்த சம்பவம் குறித்து திருவேற்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். விசாரணையில் மதுரவாயலில் இருந்து திருவேற்காடு செல்வதற்காக சாலையின் குறுக்கே திரும்பிய லாரியை கவனிக்காமலும் சிக்னலை மதிக்காமலும் கர்நாடகா மாநில சொகுசு ஆம்னி பஸ் வேகமாக வந்து லாரியின் மீது மோதி தீப்பிடித்து எரிந்தது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவித்தனர்.

    • 5 கிலோமீட்டர் தாண்டி இருசக்கர வாகனத்தில் தண்ணீர் பிடித்து வருகின்றனர்.
    • தரைமட்ட நீர் தேக்க தொட்டி கட்டப்பட்டு ஆறு மாதம் ஆகியும் பயன்பாட்டிற்கு வரவில்லை எனவும் வேதனையுடன் தெரிவித்தனர்.

    பொன்னேரி:

    பொன்னேரி அடுத்த பழவேற்காடு கோட்டைக்குப்பம் ஊராட்சியில் தோனிரவு, ஜமீலாபாத், செஞ்சியம்மன் நகர், உட்பட்ட கிராமத்தில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வரும் நிலையில் அப்பகுதியில் தண்ணீர் உப்பாக காணப்படுவதால் வீடுகளுக்கு கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம் பொன்னேரி அடுத்த அரசூர் ஏரியில் இருந்து 15 கிலோமீட்டர் குழாய் மூலம் பழவேற்காடு கீழ்நிலைத் தொட்டியில் சேமிக்கப்பட்டு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு அனுப்பப்பட்டு அங்கிருந்து தெரு குழாய் வழியாக வீடுகளுக்கு குடிநீர் அனுப்பப்படுகின்றன.

    அவ்வாறு செல்லும் குடிநீர் சரியாக வராததால் குடிநீரின்றி மக்கள், அதிக விலை கொடுத்து கேன் தண்ணீர் வாங்கியும் மற்றும் 15 கிலோமீட்டர் தாண்டி இருசக்கர வாகனத்தில் தண்ணீர் பிடித்து வருகின்றனர்.

    அப்பகுதி மக்கள் குடி தண்ணிக்காக பெரிதும் அவதிப்பட்டு வருவதாகவும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் வேதனையுடன் தெரிவித்தனர். மேலும் தரைமட்ட நீர் தேக்க தொட்டி கட்டப்பட்டு ஆறு மாதம் ஆகியும் பயன்பாட்டிற்கு வரவில்லை எனவும் வேதனையுடன் தெரிவித்தனர்.

    • ஆற்றின் மையப் பகுதியில் மின் கோபுரம் அமைப்பதால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும்.
    • 39 ஏக்கர் அலையாற்றி காடுகளும் அழிக்கப்படும் என்று எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்.

    பொன்னேரி:

    வடசென்னை அனல்மின் நிலையம் அத்திப்பட்டு புதுநகரில் செயல்படுகிறது. இங்கு 800 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் வகையில் 3-வது அலகு அமைக்கப்பட்டுள்ளது.

    இங்கு உற்பத்தியாகும் மின்சாரத்தை சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கு கொண்டு செல்ல இடையஞ் சாவடி மின் சேமிப்பு நிலையம் வரை 20 உயர்மின் அழுத்த கோபுரங்கள் நிறுவ வேண்டும்.

    இதில் 2 கோபுரங்கள் கொசஸ்தலை ஆற்றின் நடுப்பகுதியில் அமைகிறது. ஆனால் ஆற்றின் மையப் பகுதியில் மின் கோபுரம் அமைப்பதால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும், 39 ஏக்கர் அலையாற்றி காடுகளும் அழிக்கப்படும் என்று எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்.

    ஏற்கனவே மீனவர்களின் போராட்டங்களை சமாளித்து ஒரு கோபுரம் அமைக்கப்பட்டுவிட்டது. இப்போது அத்திப்பட்டுக்கும் காட்டுக்குப்பத்துக்கும் இடையே ஒரு கோபுரம் மட்டும் அமைக்க வேண்டும். இந்த கோபுரத்தை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து சின்னக்குப்பம், தாழங்குப்பம் உள்பட 8 மீனவர் குப்பங்களை சேர்ந்த மீனவர்கள் போராடி வருகிறார்கள்.

    அவர்கள் கூறும்போது, ஆற்றின் நடுவே கோபுரம் அமைக்க மண், ஜல்லிகளை கொட்டி சாலையும் அமைக்கப்படுகிறது. பணிகள் முடிந்து சாலையை அகற்றி விடுவதாக அதிகாரிகள் கூறினாலும் 20 அடி ஆழமுள்ள ஆற்றில் மண் கொட்டி போடப்படும் சாலை முற்றிலுமாக அகற்றப்படாது. இதனால் மீன் பிடிக்க படகுகளில் செல்வது சிரமமாகும். மீன்களின் இனப்பெருக்கமும் குறையும். இதனால் எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கும் என்கிறார்கள்.

    அதே நேரம் இந்த கோபுரம் வேறு பாதை வழியாக அமைக்கத்தான் முதலில் திட்டமிடப்பட்டது. அந்த வரைபடமே இருக்கிறது. ஆனால் ஆற்றின் குறுக்கே அமைக்கிறார்கள் என்றனர்.

    இதுபற்றி மின்வாரிய அதிகாரிகள் கூறும்போது, இந்த ஒரு மின் கோபுரம் அமைக்கப்பட்டால்தான் மின்சாரத்தை கொண்டு செல்ல முடியும்.

    ஆற்றில் அமைக்கப்படும் இந்த கோபுரத்தால் சுற்றுச் சூழலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. கோபுரம் அமைக் கப்பட்டதும் சாலை முற்றிலுமாக அகற்றப்படும் என்றனர்.

    இந்த விவாரம் தொடர்பாக மீனவர் சங்க பிரதிநிதிகளும், மின் வாரிய அதிகாரிகளும் இன்று பிற்பகலில் திருவள்ளூர் கலெக்டரை நேரில் சந்தித்து பேசுகிறார்கள்.

    • பிரகாஷ் சொந்தமாக கார் ஒன்றை வைத்து வாடகைக்கு ஓட்டி வந்தார்.
    • பிரகாஷ் தொழில் பாதிப்பு காரணமாக கடந்த 2017-ம் ஆண்டு ஆரம்பாக்கம் பகுதியை சேர்ந்த ராஜாவிடம் ரூ.1.10 லட்சம் கடனாக பெற்றுள்ளார்.

    கும்மிடிப்பூண்டி:

    திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே உள்ள ஆரம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ் (48). இவரது மனைவி சரிதா (42).

    அ.தி.மு.க.வில் அம்மா பேரவை ஒன்றிய இணை செயலாளராக பிரகாஷ் இருந்து வந்தார்.

    பிரகாஷ் சொந்தமாக கார் ஒன்றை வைத்து வாடகைக்கு ஓட்டி வந்தார். இந்த நிலையில் பிரகாஷ்-சரிதா தம்பதி, நேற்று முன்தினம் இரு கடிதம் மற்றும் வீடியோ பதிவை தங்களுக்கு நெருக்கமான சிலருக்கு மொபைல் மூலம் அனுப்பினர். பிறகு அவர்கள் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றனர்.

    இதையடுத்து அவர்கள் இருவரும் மீட்கப்பட்டு சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அங்கு இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று மாலை பிரகாஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    சரிதா தொடர்ந்து தீவிர சிகிச்சை பெற்று வந்தார். இன்று அதிகாலை அவரும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த ஆரம்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். அப்போது சில தகவல்கள் தெரிய வந்தன.

    பிரகாஷ் தொழில் பாதிப்பு காரணமாக கடந்த 2017-ம் ஆண்டு ஆரம்பாக்கம் பகுதியை சேர்ந்த ராஜாவிடம் ரூ.1.10 லட்சம் கடனாக பெற்றுள்ளார். அதற்கு ரூ.100-க்கு ரூ.10 என்கிற வீதம் மாதம் தோறும் ரூ.11 ஆயிரத்தை வட்டியாக பிரகாஷ் செலுத்தி வந்துள்ளார்.

    இச்சூழலில் கொரோனா காலத்தில் தொழில் முடங்கியதால் வட்டி செலுத்த முடியாமல் இருந்து வந்த பிரகாசுக்கு பல வகையில் நெருக்கடியை கொடுத்து வந்த ராஜா, ஒரு கட்டத்தில் ரவுடிகள் மூலம் மொபைல் போனில் மிரட்டி வந்ததாக தெரிகிறது.

    இதனால் பயந்து போன பிரகாஷ்-சரிதா தம்பதி நேற்று முன்தினம் பணத்துக்காக உறவினர்கள், நண்பர்களை நாடியுள்ளனர். ஆனால் பணம் கிடைக்கவில்லை. இதனால் ராஜாவின் மிரட்டலுக்கு பயந்து தம்பதியர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றது தெரிய வந்துள்ளது என முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்ததாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

    இதையடுத்து போலீசார் தலைமறைவான ராஜாவை தீவிரமாக தேடி வருகிறார்கள்.

    • குடிபோதையில் பஸ் நிலையத்துக்குள் வந்த வாலிபர் ஒருவர் அங்கிருந்த பெண்ணிடம் தகராறில் ஈடுபட்டார்.
    • பெண் போதை வாலிபரை ஓட, ஓட விரட்டி சரமாரியாக தாக்கினார்.

    பூந்தமல்லி:

    பூந்தமல்லி பஸ் நிலைய வளாகம் எப்போது பயணிகள் வருகையால் பரபரப்பாக இருக்கும்.

    இந்த நிலையில் நேற்று இரவு குடிபோதையில் பஸ் நிலையத்துக்குள் வந்த வாலிபர் ஒருவர் அங்கிருந்த பெண்ணிடம் தகராறில் ஈடுபட்டார்.

    இதனால் அவர்களுக்கிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் ஆத்திரம் அடைந்த அந்த பெண் திடீரென தனது செருப்பை கழற்றி போதை வாலிபரை சரமாரியாக தாக்கினார்.

    அடிவாங்க முடியாமல் அந்த வாலிபர் போதை தள்ளாட்டத்துடன் பஸ் நிலைய பிளாட்பாரங்களில் தப்பி ஓடினார். ஆனாலும் அந்த பெண் போதை வாலிபரை ஓட, ஓட விரட்டி சரமாரியாக தாக்கினார்.

    அப்போது ஒரு கடை முன்பு இருந்த இரும்பு கம்பிகளை எடுத்து அந்த பெண் அடிக்க பாய்ந்தார். பதிலுக்கு போதை ஆசாமியும் அங்கிருந்த ஒருவாளியை எடுத்து தடுக்க தயாரானார்.

    இதனை கண்ட கடையில் இருந்த ஊழியர் ஒருவர் அவர்களை அங்கிருந்து செல்லுமாறு சமாதானப்படுத்தி அனுப்பினார். ஆனாலும் அவர்களது மோதல் தீரவில்லை. நீண்ட நேரத்திற்கு பின்னர் போக்கு வரத்து போலீஸ்காரர் ஒருவர் வந்து போதை வாலிபரை எச்சரித்து அனுப்பி வைத்தார்.இதன் பிறகுதான் அவர்களது மோதல் முடிவுக்கு வந்தது.

    போதை வாலிபரை பெண் விரட்டி,விரட்டி தாக்கும் காட்சியை பஸ் நிலையத்தில் இருந்து ஒருவர் தனது செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பரப்பினார்.

    இந்த வீடிேயா தற்போது வைரலாக பரவிவருகிறது. இச்சம்பவத்தால் பூந்தமல்லி பஸ் நிலையம் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

    • வரும் வழியில் உமாபதி என்பவர் மோட்டார் சைக்கிளில் லிப்ட் கேட்டு வந்தார்.
    • பலியான உமாபதியின் மற்ற விபரங்கள் உடனடியாக தெரியவில்லை.

    பூந்தமல்லி:

    திருவள்ளூர் அடுத்த வெள்ளாத்து கோட்டையை சேர்ந்தவர் ஜெயக்குமார். இவர் பூந்தமல்லி நோக்கி மோட்டார் சைக்கிளில் இன்று காலை வந்து கொண்டு இருந்தார்.

    அப்போது வரும் வழியில் உமாபதி(வயது22) என்பவர் மோட்டார் சைக்கிளில் லிப்ட் கேட்டு வந்தார்.

    நசரத்பேட்டை அருகே பூந்தமல்லி - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது பின்னால் வந்த லாரி திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இதில் லாரியின் சக்கரத்தில் சிக்கிய உமாபதி சம்பவ இடத்திலேயே பலியானார். ஜெயக்குமார் பலத்த காயத்துடன் உயிர் தப்பினார்.

    தகவல் அறிந்ததும் பூந்தமல்லி போக்குவரத்து போலீசார் விரைந்து வந்து படுகாயம் அடைந்த ஜெயக்குமாரை மீட்டு சிகிச்சைக்காக பூந்தமல்லி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பலியான உமாபதி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    பலியான உமாபதியின் மற்ற விபரங்கள் உடனடியாக தெரியவில்லை. இதுபற்றி போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×