என் மலர்tooltip icon

    திருப்பூர்

    • தீபாவளி, சாத் பண்டிகை, சட்டமன்ற தேர்தல் ஒன்றுசேர வருகிறது.
    • ஒருமாதம் விடுமுறையில் சொந்த மாநில செல்ல தயாராகி வருகிறார்கள்.

    பனியன் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி தொழில் நிறைந்த திருப்பூரில் பனியன் மற்றும் அதனை சார்ந்த உப நிறுவனங்களில் பீகார், உத்தர பிரதேசம், மேற்கு வங்கம், ஒடிசா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த சுமார் 6 லட்சம் தொழிலாளர்கள் திருப்பூரில் தங்கி பணிபுரிகின்றனர். ஆண்டு முழுவதும் திருப்பூரில் பணியாற்றும் இவர்கள் தீபாவளி, தசரா, சாத் பண்டிகை, ஹோலி உள்ளிட்ட பண்டிகைகளின் போது சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம்.

    அவ்வாறு செல்லும் வட மாநில தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களில் 10 நாட்கள் முதல் 2 வாரம் வரை தங்கி இருந்து மீண்டும் திருப்பூர் திரும்புவது வழக்கம். அந்த வகையில் வருகிற 20-ந்தேதி தீபாவளி பண்டிகையையொட்டி திருப்பூரில் பணிபுரியும் வட மாநில தொழிலாளர்கள் பெரும்பாலானோர் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல ஆயத்தமாகி வருகின்றனர்.

    அவ்வாறு செல்லும் தொழிலாளர்கள் ஒரு மாதத்திற்குள் திருப்பூர் திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பீகார் மாநிலத்தில் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால் அந்த மாநில தொழிலாளர்கள் திருப்பூர் திரும்புவது இன்னும் தாமதமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    தீபாவளி பண்டிகை வருகிற 20-ந்தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில் பீகார் மாநிலத்தில் 2 கட்டமாக நவம்பர் 6 மற்றும் 11-ந்தேதிகளில் சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. திருப்பூரில் பல்வேறு மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் தங்கி பணிபுரிந்து வந்தாலும் பீகார் தொழிலாளர்கள் ஒரு லட்சத்து 30 ஆயிரம் பேர் வரை பணிபுரியலாம் என கூறப்படுகிறது.

    தீபாவளி பண்டிகைக்கு செல்லும் அவர்கள் தீபாவளி பண்டிகையை தொடர்ந்து நவம்பர் மாதம் நடைபெறும் தேர்தலில் வாக்குப்பதிவினை செலுத்தி திருப்பூர் திரும்ப வாய்ப்புள்ளது. மேலும் சிலர் பீகார் தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு திருப்பூர் வர வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

    • ஜனநாயகத்தை காக்க சர்வாதிகாரத்தை ஒழிக்க எல்லோரும் ஒன்று சேர வேண்டும்.
    • அ.தி.மு.க. மாபெரும் கூட்டணியை அமைக்கும்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், முன்னாள் துணை சபாநாயகருமான பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ., நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழ்நாட்டின் பிரதான எதிர்க்கட்சி அ.தி.மு.க., தமிழகத்தின் மக்கள் உரிமையை பெற்றுத்தரக்கூடிய கட்சி. கரூர் சம்பவத்துக்கு சி.பி.ஐ. விசாரணை வேண்டும் என்று கேட்டால் மு.க.ஸ்டாலினுக்கு என்ன தயக்கம். த.வெ.க., தொண்டர்களை பொய் வழக்குகளை போட்டு மிரட்டுகிற செயல்களில் மு.க.ஸ்டாலின், காவல்துறை ஈடுபட்டு வருகிறது. இந்த வண்டி வெகுகாலம் ஓடாது.

    த.வெ.க., தொண்டர்களை கொடுமைப்படுத்தும் செயலில் ஈடுபட்டால் அதற்கு அ.தி.மு.க., குரல் கொடுக்கும். கோவையில் ரூ.1635 கோடியில் பெரிய பாலத்தை தொடங்கி வைத்துள்ளனர். 4 ஆண்டு காலத்துக்கு முன்னரே வேலை எல்லாம் முடிந்து விட்டது.

    4 ஆண்டுகளாக இறங்குதளம் அமைக்கும் வேலையும், பெயிண்ட் அடிக்கும் வேலையும் தான் செய்திருக்கிறார்கள். இந்த பாலத்தை கொண்டு வந்தது அ.தி.மு.க., என்று மக்கள் அறிவார்கள். வழக்கம் போல மு.க.ஸ்டாலின் ஸ்டிக்கர் ஒட்டி, தான் செய்தது போல காட்டுவது வேடிக்கை, நகைச்சுவை.

    ஜனநாயகத்தை காக்க சர்வாதிகாரத்தை ஒழிக்க எல்லோரும் ஒன்று சேர வேண்டும். மு.க.ஸ்டாலினை வீட்டுக்கு அனுப்ப வேண்டும். அதற்கான பணிகளை எடப்பாடி பழனிசாமி செய்து வருகிறார்.

    அ.தி.மு.க. மாபெரும் கூட்டணியை அமைக்கும். அ.தி.மு.க. கூட்டத்தில் த.வெ.க.வினர் வந்தது கூட்டணிக்கு பிள்ளையார் சுழி என்று எடப்பாடி பழனிசாமி சொல்லி இருக்கிறார். அதில் இருந்து நீங்களே புரிந்து கொள்ள வேண்டும் என்றார். 

    • கடந்த 5 ஆண்டுகளில் ரூ.500 கோடியாக இருந்த வங்கதேச ஆடை இறக்குமதி ரூ.5,200 கோடியை தாண்டியது.
    • உள்நாட்டு சந்தைகளில் வங்கதேச ஆடைகள் கடும் போட்டியாக மாறின.

    ஆடை ஏற்றுமதி வர்த்தகத்தில் இந்தியாவுக்கு போட்டியாக மாறியிருந்த வங்கதேசம் கடந்த 2017ம் ஆண்டு முதல் உள்நாட்டு சந்தையிலும் போட்டியை உருவாக்கியது. ஜி.எஸ்.டி., அமலான பின், கட்டுப்பாடு தளர்ந்து படிப்படியாக வங்கதேச ஆடை இறக்குமதி அதிகரித்தது.

    முன்னணி பிராண்டடு நிறுவனங்கள், வங்க தேசத்தில் இருந்து ஆடைகளை உற்பத்தி செய்து நம் நாட்டில் விற்பனை செய்தன. கடந்த 5 ஆண்டுகளில் ரூ.500 கோடியாக இருந்த வங்கதேச ஆடை இறக்குமதி ரூ.5,200 கோடியை தாண்டியது. இதன் எதிரொலியாக உள்நாட்டு சந்தைகளில் வங்கதேச ஆடைகள் கடும் போட்டியாக மாறின.

    இதற்கிடையே வங்கதேசத்தில் உள்நாட்டு குழப்பம் ஏற்பட்டு நிலைமை தலைகீழாக மாறியது. இந்திய பொருட்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டதால், அந்நாட்டின் தரைவழி இறக்குமதிக்கு மத்திய அரசு தடை விதித்தது. இதன் எதிரொலியாக அந்நாட்டில் இருந்து ஆயத்த ஆடை இறக்குமதி குறைந்தது.முன்னணி பிராண்டடு நிறுவனங்களும், வங்க தேசத்துடன் வர்த்தகம் செய்ய முடியாது என உணர்ந்து உள்நாட்டு ஆடை உற்பத்தியாளர்களுடன் கரம் கோர்த்தன. அதன்படி திருப்பூரில் இயங்கும் முன்னணி நிறுவனங்களுக்கு ரிலையன்ஸ், ஜோடியாக், வி.மார்ட் உள்ளிட்ட பிராண்டடு நிறுவனங்களின் ஆர்டர்கள் வரத்தொடங்கி உள்ளன.

    இது குறித்து தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் சண்முக சுந்தரம் கூறுகையில், "உள்நாட்டு பின்னலாடை உற்பத்தி சீராக இயங்கி வருகிறது. பெரிய சவாலாக இருந்த வங்கதேச ஆடை இறக்குமதி கட்டுக்குள் வந்துவிட்டது. கடந்த 4 மாதங்களாக ஆடை இறக்குமதி குறைந்ததால், உள்நாட்டு சந்தைகளில் திருப்பூர் ஆடைகளின் தேவை அதிகரித்துள்ளது. வங்கதேசத்துக்கு ஆர்டர் கொடுத்து வந்த முன்னணி பிராண்டடு நிறுவனங்கள் நேரடியாக மீண்டும் திருப்பூருக்கே ஆர்டர் கொடுக்க துவங்கியுள்ளன என்றார்.

    • தேசிய ஜனநாயக கூட்டணி 2026ல் ஆட்சியை தமிழகத்தில் அமைக்கும்.
    • ஒரு தொகுதியில் கூட தி.மு.க., ஜெயிக்க கூடாது. குப்பை முதல் அனைத்திலும் ஊழல்.

    ஜி.எஸ்.டி., வரி நீக்கம் மற்றும் குறைப்பு செய்த பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் திருப்பூர் வடக்கு மாவட்ட பாஜக., சார்பில் அரிசி கடை வீதி பகுதியில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

    இதில் பாஜக., தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ., கலந்து கொண்டு பேசியதாவது:-

    தமிழகத்தையும், தமிழையும் மோடி என்றும் விட்டுக் கொடுத்ததில்லை. தமிழுக்கும் தமிழகத்திற்கும் பெருமை சேர்த்து வருகிறார். ஜி.எஸ்.டி., வரி குறைப்பால் பெருமளவு விலை குறைந்துள்ளது. மத்திய அரசு நிதி வழங்காமல் வஞ்சனை செய்கிறது என தி.மு.க. அரசு குற்றச்சாட்டு தெரிவிக்கிறது. ஆனால் வரி பகிர்வு 50 சதவிகிதம் வழங்கப்பட்ட பின்னரும் மத்திய அரசின் பகிர்வில் இருந்து மேலும் 41 சதவீதத்தை வழங்குகிறது. இந்தியாவில் அதிக கடன் பெற்ற மாநிலம் தமிழ்நாடு.

    டாஸ்மாக் நடத்தி குடும்பங்களை சீரழித்து வருகின்றனர். மேலும் 10 ரூபாய் பாலாஜி வாங்கும் 10 ரூபாயையும் சேர்த்துக் கொள்கின்றனர். வரி வசூலிக்கும் முறையை சீரமைத்ததால் 13 சதவீதம் தமிழக வரி வருவாய் உயர்ந்துள்ளது. எத்தனை வரி வருவாய் கொடுத்தாலும் நாம் வாழ்வது குப்பைக்கு மத்தியில் தான். கவுன்சிலர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் வேலை செய்வதே கிடையாது. தேசிய ஜனநாயக கூட்டணி 2026ல் ஆட்சியை தமிழகத்தில் அமைக்கும்.

    மு.க.ஸ்டாலின் கனவு காண்கிறார். 200 தொகுதி அல்ல 2 தொகுதி கூட ஜெயிக்க முடியாது. தமிழக மக்கள் உங்கள் வேஷத்தை பார்த்து வருகின்றனர். கரூரில் மக்கள் துயரத்தை பார்க்கும்போது வேதனையாக உள்ளது. தமிழக மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. திட்டமிடப்பட்டு கலவரம் செய்ய ஏதோ நடைபெற்று உள்ளது என்ற சந்தேகம் எழுந்துள்ளது. தி.மு.க., அரசு தோல்வி அடைந்துள்ளது. தோட்டத்து விவசாயிகள் அச்சத்தில் வாழ வேண்டிய நிலை உள்ளது.

    பெண்கள், முதியவர்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து உள்ளதால் ஒரு தொகுதியில் கூட தி.மு.க., ஜெயிக்க கூடாது. குப்பை முதல் அனைத்திலும் ஊழல். மின் கட்டணம் கட்ட முடியாமல் சிறு நிறுவனங்கள் தவித்து வருகின்றனர்.

    திராவிட மாடல் என்பது மக்கள் நல அரசு அல்ல, மோடியை எதிர்த்து பேச வேண்டும் என்பதே., பா.ஜ.க., அ.தி.மு.க., கூட்டணியை யாராலும் உடைக்க முடியாது. உங்களை வீட்டுக்கு அனுப்ப ஏற்படுத்தப்பட்ட கூட்டணி இது. ஒரு குடும்பத்திற்கு சொந்தமான கட்சி கிடையாது. அடிமட்ட தொண்டர் கூட மேடைக்கு வர முடியும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • ரூ.12 ஆயிரம் கோடி வரையிலான வர்த்தகம் தீபாவளி பண்டிகை கால ஆர்டர்களாக இருக்கிறது.
    • திருப்பூரில் உற்பத்தியாகும் உள்ளாடைகளுக்கு வடமாநிலங்களில் வரவேற்பு அதிகம்.

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வடமாநில வர்த்தகர்களின் ஆர்டரின் பேரில் திருப்பூரில் ஆயத்த ஆடை மற்றும் உள்ளாடை உற்பத்தி வேகமெடுத்துள்ளது. கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, கேரளா, மும்பை என டெல்லி வரையில் இயங்கும் முன்னணி உள்நாட்டு ஜவுளி சந்தைகளில் திருப்பூரில் உற்பத்தியாகும் பின்னலாடைகளும் இடம்பெறுகின்றன. ஆண்டு முழுவதும் வெளிமாநில வர்த்தகர்கள் தொடர்ச்சியாக ஆர்டர் கொடுத்து பின்னலாடைகள் மற்றும் உள்ளாடைகளை கொள்முதல் செய்து விற்கின்றனர்.

    பின்னல் துணியில் ஆண்கள், பெண்கள், சிறுவர் - சிறுமிகள், குழந்தைகளுக்கான ஆடைகள், உள்ளாடைகள், புதிய டிசைன்களில் ஆண்டுதோறும் அறிமுகம் செய்யப்படுகின்றன. இருப்பினும் திருப்பூரை பொறுத்தவரை தீபாவளி ஆர்டர் என்பது மிக முக்கியம். ஆண்டு முழுவதும் நடக்கும் ரூ.30 ஆயிரம் கோடி வர்த்தகத்தில் ரூ.12 ஆயிரம் கோடி வரையிலான வர்த்தகம் தீபாவளி பண்டிகை கால ஆர்டர்களாக இருக்கிறது.

    வருகிற 20-ந்தேதி தீபாவளி கொண்டாடப்படுகிறது. அதற்கு முன்னதாக இன்று நவராத்திரி விழாவும் தொடங்கி உள்ளது. சில மாநிலங்களில் நவராத்திரி விழாவுக்கு புத்தாடை அணியும் பாரம்பரியமும் இருக்கிறது. இதற்காக ஆடைகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆடை கொள்முதல் ஆண்டு முழுவதும் நடந்தாலும், உள்ளாடை கொள்முதல் தீபாவளி பண்டிகையை சார்ந்தே மொத்தமாக நடக்கிறது.

    திருப்பூரில் உற்பத்தியாகும் பருத்தி நூலிழை பின்னல் பனியன், ஜட்டிகள், பாக்கெட் டிராயருக்கு வடமாநிலங்களில் வரவேற்பு அதிகம். அதேபோல், குளிர்காலங்களில் பயன்படுத்த செயற்கை நூலிழையில் உற்பத்தியாகும் உள்ளாடைகளுக்கான வரவேற்பும் அதிகரித்துள்ளது.

    இது குறித்து ஆடை உற்பத்தியாளர்கள் சிலர் கூறியதாவது:-

    தீபாவளி பண்டிகை கால ஆர்டர் விசாரணை செப்டம்பர் மாத தொடக்கத்தில் அதிகரித்தது. கடந்த ஆண்டு போலவே அதிக ஆர்டர் கிடைத்து வருகிறது. குறைந்த ஆர்டராக இருந்தாலும் வேகமாக உற்பத்தி செய்து அனுப்பி வருகிறோம். உள்ளாடைகளை பொறுத்தவரை முன்கூட்டியே தயாரித்து இருப்பு வைத்திருக்கிறோம். பின்னலாடை தயாரானதும் அவற்றுடன் சேர்த்து கன்டெய்னர் லாரி மற்றும் ரெயிலில் அனுப்பி வைக்கப்படும்.

    பெரியவர்களுக்கு டி-சர்ட், டிரக் பேன்ட்' பெண்களுக்கான இரவு நேர ஆடை ரகங்கள், குழந்தைகளுக்கான அனைத்து வகை ஆடைகளும் ஆர்டரின் பேரில் உற்பத்தி செய்து வருகிறோம். டி-சர்ட் ஆர்டர் மீது விசாரணை அதிகம் உள்ளது. செயற்கை நூலிழையில் தயாரிக்கப்பட்ட விளையாட்டு டி-சர்ட் மற்றும் பேன்ட், ஷார்ட்ஸ் போன்ற ஆர்டரும் கிடைத்துள்ளது. உற்பத்தியை முன்கூட்டியே வேகப்படுத்தி உள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • விஞ்ஞானத்தை பயன்படுத்தினால் தான் நன்றாக வாழ முடியும்.
    • வேற்றுமையில் ஒற்றுமை தற்போது மிக அவசிய மாகிறது.

    திருப்பூர்:

    திருப்பூரில் மதத்தால் பிரிந்தாலும் மனதால் இணைவோம் என்ற பெயரில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் நடிகர் சத்யராஜ் பங்கேற்று பேசியதாவது:-

    விஞ்ஞானத்தை பயன்படுத்தினால் தான் நன்றாக வாழ முடியும். மதத்தால் சண்டையிட்டால் வாழ முடியாது. என்றும் மத நல்லிணக்கம் என்பது தான் முக்கியம். குரங்கை விட மோசமானவனாக மனிதன் உள்ளான். பள்ளியில் படிக்கும் போது இது போன்ற பிரச்சினைகள் கிடையாது. நான் பெரியார் புத்தகங்களை படித்த பிறகு தான் கடவுள் என்பது கற்பனை என உணர்ந்தேன்.

    திருப்பூர் எவ்வளவு வளர்ந்து உள்ளது. ஆனால் அமெரிக்காகாரன் திடீரென ஆப்பு வைத்து விட்டான்வடமாநில இளைஞர்களிடம் உங்கள் ஊருக்கு செல்கிறீர்களா? என கேட்டால் அவர்களுக்கு கோபம் வந்து விடும். அந்த அளவுக்கு அவர்கள் இங்கு சிறப்பாக உள்ளனர்.

    மும்பையில் பீப் ஸ்டால் இல்லை. அங்கு அவ்வளவு கொடுமை உள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் மராட்டி தான் பேசி வருகிறார்கள். இந்தி எதிர்ப்பு மகாராஷ்டிராவிலும் வளர்ந்துள்ளது. இந்தியாவிற்கு தமிழ்நாடு தான் முன்மாதிரியாக உள்ளது. 2026ல் தி.மு.க. ஆட்சிக்கு வர வேண்டும். வேற்றுமையில் ஒற்றுமை தற்போது மிக அவசிய மாகிறது.

    தமிழகத்தில் நீதிக்கட்சி முதல் தி.மு.க., ஆட்சி வரை சமூக நீதி ஆட்சி நடை பெறுகிறது. வடமாநிலங்களில் இன்னும் பெண்ணடிமை, சாதிய மோதல் நிறைந்துள்ளன. தமிழ்நாட்டு சிந்தனைகள்தான் இன்று நாடு முழுவதும் சென்று கொண்டிருக்கிறது. எனக்கு சினிமா மார்க்கெட் உள்ளது. பணம் உள்ளது. யார் ஆட்சி வந்தாலும் எனக்கு பிரச்சினை இல்லை. 2026ம் ஆண்டு தி.மு.க., ஆட்சி அமைந்தால் தான் தமிழகத்திற்கு பாதுகாப்பு.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் நிறுத்தப்பட உள்ளது.
    • கொள்ளுப்பாளையம், லிங்கம நாயக்கன்புதூர், ஆமந்தகடவு, சுங்காரமடக்கு, வலசுபாளையம்,

    உடுமலை:

    உடுமலை மின் பகிர்மான வட்டம் பூளவாடி துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் நாளை (திங்கட்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணி நடக்கிறது.

    இதையொட்டி பூளவாடி, பொம்மநாயக்கன்பட்டி, கள்ளிப்பாளையம், பெரியபட்டி, கள்ளப்பாளையம், குப்பம்பாளையம், ஆ.அம்மாபட்டி, தொட்டியன்துறை, மானூர்பாளையம், பெரியகுமாரபாளையம், முண்டு வேலம்பட்டி, வடுகபாளையம், பொட்டிக்காம்பாளையம், ஆத்து கிணத்துப்பட்டி, சிக்கனூத்து, முத்துசமுத்திரம், கொள்ளுப்பாளையம், லிங்கம நாயக்கன்புதூர், ஆமந்தகடவு, சுங்காரமடக்கு, வலசுபாளையம், குடிமங்கலம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் நிறுத்தப்பட உள்ளது.

    மேற்கண்ட தகவலை, மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • மாணவர்கள், பொதுமக்கள் வசதிக்காக இயக்கப்பட்டு வந்த அரசு பஸ் தற்போது இயக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
    • அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் காரத்தொழுவில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் நாட்டுக்கல்பாளையம் கிராமத்தை சேர்ந்த 40-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.

    இந்தநிலையில் இப்பகுதி மாணவர்கள், பொதுமக்கள் வசதிக்காக இயக்கப்பட்டு வந்த அரசு பஸ் தற்போது இயக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் பள்ளிக்கு செல்ல முடியாமல் மாணவர்கள் தவித்து வந்தனர். இது குறித்து அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    இதைத்தொடர்ந்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ-மாணவிகள் இன்று காலை காரத்தொழுவு மெயின் ரோட்டில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற கணியூர் போலீசார் பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்களிடையே சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது பஸ் வசதி செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் மற்றும் மாணவ-மாணவிகள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • திருப்பூரில் அடுத்த மாதம் 5-ந்தேதி விஜய் சுற்​றுப்​பயணம் மேற்​கொள்ள இருக்​கிறார்.
    • போலீசார் சார்பில் பாண்டியன் நகரில் பிரசாரம் செய்ய அனுமதி வழங்குவதாக தெரிவித்துள்ளனர்.

    திருப்பூர்:

    த.வெ.க. தலைவர் விஜய் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களை சந்தித்து வருகிறார். கடந்த 13-ந்தேதி திருச்சியில் தனது சுற்றுப்பயணத்தை தொடங்கிய விஜய், அன்றைய தினம் திருச்சி, அரியலூர், பெரம்பலூர் ஆகிய 3 மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்ய திட்டமிட்டிருந்தார். ஆனால், வழியெங்கும் அதிகளவில் தொண்டர்கள் திரண்டதால், குறிப்பிட்ட நேரத்துக்குள் அனுமதி வழங்கப்பட்ட இடங்களுக்கு விஜய்யால் செல்ல முடியவில்லை.

    இதனால், திருச்சி, அரியலூரில் மட்டும் மக்கள் சந்திப்பை நடத்திவிட்டு, பெரம்பலூர் செல்லாமல், விஜய் சென்னை திரும்பினார். இந்நிலையில் திருப்பூரில் அடுத்த மாதம்(அக்டோபர்) 5-ந்தேதி விஜய் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார்.

    இதற்காக, திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளர் பாலமுருகன் தலைமையில் தவெக., நிர்வாகிகள் போலீஸ் கமிஷனர் ராஜேந்திரனை சந்தித்து அனுமதி கோரி மனு அளித்தனர்.

    அக்டோபர் 5-ந்தேதி திருப்பூர் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் விஜய் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளை ஒருங்கிணைத்து ஏதாவது ஒரு இடத்தில் பிரசாரம் செய்ய உள்ளார். பிரசாரம் செய்வதற்காக திருப்பூர் மாநகரில் சின்னக்கரை, பாண்டியன் நகர், அவினாசி, பல்லடம் ஆகிய 4 இடங்களை த.வெ.க. நிர்வாகிகள் தேர்ந்தெடுத்துள்ளனர்.

    இதில் ஏதாவது ஒரு இடத்தில் பிரசாரம் செய்வார் என தெரிகிறது. போலீசார் சார்பில் பாண்டியன் நகரில் பிரசாரம் செய்ய அனுமதி வழங்குவதாக தெரிவித்துள்ளனர். இருப்பினும் கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் நேரில் வந்து பார்வையிட்டு அவர் கூறும் இடத்தில் விஜய் பிரசாரம் செய்ய போலீசாரிடம் அனுமதி கேட்க உள்ளனர்.

    மனு கொடுக்கும் நிகழ்ச்சியில் திருப்பூர் மாநகர் மாவட்ட இணை செயலாளர் சுகுமார், துணை செயலாளர் குத்புதீன், பொருளாளர் வெள்ளைச்சாமி உள்பட பலர் உடனிருந்தனர்.

    • இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
    • போலீசார் சிவக்குமாரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருப்பூர்:

    ஈரோடு பகுதியை சேர்ந்தவர் செந்தில். இவரது மகள் கீர்த்தி மீனா (வயது 21). இவர் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருப்பூரை சேர்ந்த சிவக்குமார் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

    தொடர்ந்து சிவக்குமார்- கீர்த்தி மீனா தம்பதியினர் திருப்பூர், இடுவம்பாளையம், சிவசக்தி நகர் 2-வது வீதியில் வசித்து வந்தனர். இவர்களுக்கு 2 வயதில் பெண் குழந்தை உள்ளது.

    இந்நிலையில், சிவக்குமாருக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருந்துள்ளது. இது குறித்து கீர்த்தி மீனா சிவக்குமாரிடம் கேட்டுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், சிவக்குமார் கள்ளக்காதலியுடன் உல்லாசமாக இருக்கும் வீடியோவை கீர்த்தி மீனாவின் செல்போனுக்கு அனுப்பியுள்ளார்.

    வீடியோவை பார்த்து அதிர்ச்சி அடைந்த கீர்த்தி மீனா வீட்டில் குழந்தையை தூங்க வைத்துவிட்டு சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்து வீரபாண்டி போலீசார் சிவக்குமாரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். கீர்த்தி மீனாவிற்கு திருமணமாகி 7 ஆண்டுகள் நிறைவடையாததால் ஆர்.டி.ஓ., விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

    • திமுக ஆட்சியில் விலைவாசி விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துவிட்டது.
    • அதிக அளவில் வரிகளை விதித்து மக்கள் மீது திமுக சுமைகளை ஏற்றி வைத்துள்ளது.

    மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற தலைப்பில் தமிழகம் முழுவதும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பரப்புரை நடத்தி வருகிறார்.

    இந்நிலையில், இன்று திருப்பூர் வடக்கு தொகுதியில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ளார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    திருப்பூர் மண்ணிலே பிறந்து சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு நாட்டின் உயரிய பதவி கிடைத்திருப்பது தமிழக மக்களுக்கு பெருமை.

    திமுக ஆட்சி பொறுப்பேற்று 52 மாதத்தில் ஒரு புதிய திட்டம் கூட திருப்பூருக்கு கொண்டுவரப்படவில்லை.

    தொழிலாளர்கள், ஏழைகள் நிறைந்த பகுதியான திருப்பூரில் அரசு மருத்துவமனையை அதிமுக ஆட்சியில் கொண்டு வந்தோம்.

    அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட பல திட்டங்களை திமுக அரசு முடக்கிவிட்டது.

    திமுக ஆட்சியில் விலைவாசி விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துவிட்டது. அதிக அளவில் வரிகளை விதித்து மக்கள் மீது திமுக சுமைகளை ஏற்றி வைத்துள்ளது.

    கஞ்சா விற்பனைக்கு திமுக ஆட்சியாளர்கள் துணை போகிறார்கள். போதைப்பொருள் தங்குதடையின்றி கிடைக்கிறது.

    தமிழ்நாட்டில் போதைப் பொருளை கட்டுப்படுத்தாமல் ஓய்வு பெறும் வரை ஓ போட்டவர் முன்னாள் டிஜிபி.

    கொங்கு மண்டலத்தில் முதிய தம்பதிகளை குறிவைத்து கொலை சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • திருப்பூரில் தொழிலாளர்கள் தங்குவதற்கு தேவையான வசதிகள் ஏற்படுத்தி கொடுக்கப்படும்.
    • நிதிச்சுமையை தீர்த்து கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்போம்.

    திருப்பூர்:

    'மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்' சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திருப்பூரில் இன்று பனியன் உற்பத்தியாளர்கள், விசைத்தறியாளர்கள், விவசாயிகள் , பாத்திர உற்பத்தியாளர்கள் மற்றும் பல்வேறு தொழில்துறையினருடன் ஆலோசனை நடத்தினார். அப்போது பல்வேறு தொழில் அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் தங்களது கோரிக்கைகள் குறித்து எடப்பாடி பழனிசாமியிடம் மனுக்கள் அளித்தனர்.

    அதனைப்பெற்றுக்கொண்ட அவர் தொழில்துறையினர் மத்தியில் பேசியதாவது:-

    டாலர்சிட்டியான திருப்பூர் தற்போது பல்வேறு சிக்கல்களை சந்தித்து வருகிறது. தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களை சேர்ந்த லட்சக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் திருப்பூரின் நிலைமை எனக்கு கவலைஅளிக்கிறது. தமிழக அரசின் மின்கட்டணம், மாநகராட்சி வரி உயர்வால் சிறு, குறு தொழில் நிறுவனங்கள் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளன. அமெரிக்காவின் 50 சதவீத வரி விதிப்பால் பாதிக்கப்பட்டுள்ள திருப்பூர் ஏற்றுமதியாளர்களுக்கு சலுகைகள் வழங்க வேண்டுமென மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கிறேன்.

    யாருக்கும் இழப்பு இல்லாமல் ஆட்சி நடத்தினோம். 27 சங்கங்களை சேர்ந்த தொழில் அமைப்பினர் என்னிடம் கோரிக்கை மனுக்கள் வழங்கி உள்ளனர். அ.தி.மு.க. ஆட்சி அமைந்ததும் திருப்பூர் தொழில்துறையினரின் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

    திருப்பூரில் தொழிலாளர்கள் தங்குவதற்கு தேவையான வசதிகள் ஏற்படுத்தி கொடுக்கப்படும். எல்லாவற்றிற்கும் நிதி தேவை. இப்போதைய தி.மு.க. அரசு இதுவரை ரூ.4 லட்சம் கோடிக்கு மேல் கடன் வாங்கி உள்ளது. இன்னும் 1 லட்சம் கோடி வாங்குவார்கள். இதன் மூலம் ரூ.5 லட்சம் கோடியாக உயரும். அதற்கு வட்டி கட்ட வேண்டும். நிதிச்சுமையை தீர்த்து கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்போம். தொழிலும் வளர வேண்டும். விவசாயமும் செழிக்க வேண்டும். உள்கட்டமைப்பு வசதிகள் இருந்தால் தொழில் தானாக வந்து விடும். வெளிமாநில முதலமைச்சர்கள் திருப்பூர் வந்து சலுகைகள் வழங்குவதாக கூறி தொழில் துறையினரை அவர்களது மாநிலத்திற்கு அழைப்பு விடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அந்த நிலைமை ஏற்படாதவாறு பார்த்து கொள்வோம்.

    இவ்வாறு அவர் பேசினார். 

    ×