என் மலர்
திருப்பூர்
- குமார்நகர் இன்பன்ட் ஜீசஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 2 நாட்கள் நடைபெற்றது.
- சுதா மோகன் மற்றும் ஆசிரியர்கள், சக மாணவர்கள் பாராட்டி, வாழ்த்து தெரிவித்தனர்.
திருப்பூர்:
திருப்பூர் வடக்கு குறுமைய அளவிலான பீச் வாலிபால் போட்டி குமார்நகர் இன்பன்ட் ஜீசஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 2 நாட்கள் நடைபெற்றது. இதில் திருப்பூர் நெருப்பெரிச்சல் திருமுருகன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ-மாணவிகள் அனைத்து பிரிவுகளிலும் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளனர்.
இதன்படி மாணவர்களுக்கான சூப்பர் சீனியர் பிரிவு போட்டியில் பிளஸ்-2 மாணவர்கள் கிப்ஸன் சாமுவேல், விஜேஷ் ஆகியோர் வெற்றி பெற்று முதலிடமும், ஜூனியர் பிரிவு போட்டியில் 9-ம் வகுப்பு மாணவர்கள் சனோஜ், நிரஞ்சன் ஆகியோர் முதலிடமும், மாணவிகளுக்கான ஜூனியர் பிரிவு போட்டியில் செல்வதர்ஷினி, சாருநேத்ரா ஆகியோர் முதலிடமும் பிடித்தனர்.
போட்டியின் அனைத்து பிரிவுகளிலும் வெற்றி பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்த மாணவ-மாணவிகளையும், பயிற்சி வழங்கிய ஆசிரியர்கள் அருள், செபாஸ்டின் ஆகியோரையும் திருமுருகன் குழும தலைவர் டாக்டர் ஜி.மோகன், பள்ளி தாளாளரும், முதல்வருமான சுதா மோகன் மற்றும் ஆசிரியர்கள், சக மாணவர்கள் பாராட்டி, வாழ்த்து தெரிவித்தனர்.
- சந்தைப்பேட்டை துணைமின்நிலையத்தில் நாளை (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
- டி.ஏ.பி.நகர், என்.பி.நகர், காளிநாதம்பாளையம் ஆகிய இடங்களில் மின்வினியோகம் தடை செய்யப்படும்.
திருப்பூர்:
திருப்பூர் மின்சார வாரிய செயற்பொறியாளர் ராமச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
சந்தைப்பேட்டை துணைமின்நிலையத்தில் நாளை (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.எனவே நாளை காலை 9 மணிமுதல் மாலை 4 மணிவரை அரண்மனைப்புதூர், தட்டான்தோட்டம், எம்.ஜி. புதூர், கரட்டாங்காடு, அரசு மருத்துவமனை, ஷெரீப் காலனி, தாராபுரம் ரோடு, பல்லடம் ரோடு, தென்னம்பாளையம், கல்லாங்காடு, வெள்ளியங்காடு, கே.எம்.நகர், கே.எம்.ஜி.நகர், பட்டுக்கோட்டையார் நகர், திரு.வி.க.நகர், கவுண்டம்பாளையம், கோபால்நகர், பெரிச்சிபாளையம், கருவம்பாளையம், ஏ.பி.டி.நகர், கே.வி.ஆர்.நகர், பூச்சக்காடு, மங்கலம் ரோடு, பெரியார் காலனி, சபாபதிபுரம், வாலிபாளையம், ஊத்துக்குளி ரோடு, யுனியன்மில் ரோடு, மிஷன் வீதி, காமராஜ் ரோடு, புதுசந்திராபுரம், புதுமார்க்கெட் வீதி, ராயபுரம், ஸ்டேட் பாங்க் காலனி, காதர்பேட்டை, செட்டிபாளையம், பலவஞ்சிபாளையம், சந்திராபுரம், புதூர் மெயின்ரோடு, சந்திராபுரம்,செரங்காடு, டி.ஏ.பி.நகர், என்.பி.நகர், காளிநாதம்பாளையம் ஆகிய இடங்களில் மின்வினியோகம் தடை செய்யப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் பகுதியில் தற்போது நல்ல மழை பெய்து வருகிறது.
- வெள்ளகோவில் பஸ் நிலையம், நகராட்சி பள்ளி, பொதுக்கழிப்பிடம், குடியிருப்பு பகுதி உள்பட பல இடங்களிலும் கொசு மருந்துகள் அடிக்கப்பட்டு வருகிறது.
வெள்ளகோவில்:
திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் பகுதியில் தற்போது நல்ல மழை பெய்து வருகிறது.இந்நிலையில் குடியிருப்பு பகுதிகளில் தாழ்வான பகுதிகளில் ஆங்காங்கே மழைநீர் தேங்கி நிற்கிறது. மேலும் சாலையோரம் உள்ள தாழ்வான பகுதிகளில் மழைநீர் வெள்ளம்போல் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் இந்த மழைநீரில் இருந்து கொசுக்கள் அதிக அளவில் உற்பத்தியாகிறது.
இந்த கொசுக்களின் உற்பத்தியை தடுத்து நிறுத்தும் வகையில் 21 வார்டுகளிலும் கொசு மருந்துகள் அடிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. மேலும் வெள்ளகோவில் பஸ் நிலையம், நகராட்சி பள்ளி, பொதுக்கழிப்பிடம், குடியிருப்பு பகுதி உள்பட பல இடங்களிலும் கொசு மருந்துகள் அடிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தற்போது டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைக்காகவும், கொசு ஒழிப்புக்காகவும் மருந்து அடிக்கும் எந்திரம் போதிய அளவிற்கு இல்லாததால், கூடுதலாக 2 எந்திரங்கள் வாங்கப்பட்டுள்ளன. இதற்கான தீவிர நடவடிக்கை எடுத்த வெள்ளகோவில் நகராட்சி தலைவர் மு.கனியரசி, நகராட்சி ஆணையாளர் எஸ்.வெங்கடேஷ்வரன் ஆகியோரின் முயற்சியை கண்டு நகராட்சி பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.
- திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் கடந்த 2 நாட்களுக்கு முன் காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.
- பல்லடம் தாலுகா அலுவலகத்தில் மழை அளவு 15 மில்லி மீட்டர் பதிவாகியுள்ளது.
பல்லடம்:
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் கடந்த 2 நாட்களுக்கு முன் காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இருந்தபோதிலும் மாலை வரை மழை பெய்யவில்லை.
இந்த நிலையில் இரவு 10 மணி அளவில் லேசாக பெய்ய துவங்கிய மழை, பின்னர் தொடர்ந்து விட்டு விட்டு பெய்தது. நேரம் செல்ல செல்ல பலத்த மழை கொட்டியது. தொடர்ந்து பயங்கர இடி மின்னலுடன் மழை கொட்டியது.
இதனால் பல்லடத்தில் உள்ள தாழ்வான பகுதிகளை நோக்கி மழைநீர் கரைபுரண்டு ஓடியது. மேலும் தாழ்வான பகுதிகளில் மழை வெள்ளநீர் சூழ்ந்தது. மழைநீருடன் கழிவு நீரும் கலந்ததால் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டனர். பச்சாபாளையம் காலனி, அண்ணா நகர், மகாலட்சுமிபுரம், பனப்பாளையம் காலனி உள்ளிட்ட பகுதிகளில் மழை நீர் தேங்கி நின்றதால் பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டனர்.
மேலும் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்ததால் பச்சாபாளையம், பனப்பாளையம், காலனி பகுதி மக்கள் கடும் துயரத்திற்கு ஆளானார்கள். பல்லடம் தாலுகா அலுவலகத்தில் மழை அளவு 15 மில்லி மீட்டர் பதிவாகியுள்ளது.
- நேற்று (வியாழக்கிழமை) 7 விவசாயிகள் கலந்து கொண்டு 4 ஆயிரத்து 435 கிலோ சூரியகாந்தி விதைகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.
- மொத்தம் ரூ.2 லட்சத்து 17ஆயிரத்து 911-க்கு வணிகம் நடைபெற்றது.
வெள்ளகோவில்:
திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வாரம்தோறும் செவ்வாய்க்கிழமை அன்று தேங்காய் பருப்பும் வியாழக்கிழமை அன்று சூரியகாந்தி விதைகளும் ஏலம் நடைபெற்று வருவது வழக்கம்.
இந்த ஒழுங்கு முறை விற்பனை கூடத்திற்கு கரூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை. திருப்பூர், ஈரோடு மாவட்ட விவசாயிகள் கலந்து கொண்டு தேங்காய் பருப்பு மற்றும் சூரியகாந்தி விதைகளை விற்பனைக்கு கொண்டு வருவார்கள். இந்நிலையில் நேற்று (வியாழக்கிழமை) 7 விவசாயிகள் கலந்து கொண்டு 4 ஆயிரத்து 435 கிலோ சூரியகாந்தி விதைகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.
இதில் முத்தூர், வெள்ளகோவில், காங்கயம், ஈரோடு பகுதிகளை சேர்ந்த 3 வியாபாரிகள் கலந்து கொண்டு ஒரு கிலோ சூரியகாந்தி விதையை அதிகபட்சமாக ரூ.50.39-க்கும், குறைந்தபட்சமாக ரூ.40.70-க்கும் கொள்முதல் செய்தனர். மொத்தம் ரூ.2 லட்சத்து 17ஆயிரத்து 911-க்கு வணிகம் நடைபெற்றது. இந்த தகவலை வெள்ளகோவில் ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் சி. மகுடேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
- நொய்யல் ஆற்றில் நுரை சூழ்ந்து வெண்மையாக பனிமலை போல காணப்படுகிறது.
- சிறு பாலம் துண்டிக்கப்பட்டு கோவிலுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.
திருப்பூர்:
நொய்யல் ஆறு கோவை மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உற்பத்தியாகி கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர் மாவட்டங்களில் 165 கி.மீ., தூரம் பயணித்து காவிரியில் கலக்கக் கூடிய ஆறு ஆகும். இந்த ஆறு கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக பெரும் சாக்கடை நீர் கழிவுகளாலும், திருப்பூரின் சாய க்கழிவு நீராலும் மாசடைந்து வந்தது. நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு பிறகு ஆற்றில் சாயக்கழிவுநீர் கலப்பது தடுக்கப்பட்டது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. புது வெள்ளம் பெருகி நொய்யல் ஆற்றில் வழிந்தோடுகிறது. திருப்பூர் நல்லம்மன் தடுப்பணை பகுதியில் இந்த மழை வெள்ளமானது ஆர்ப்பரித்து பொங்குகிறது. இதனால் நல்லம்மன் கோவில் தண்ணீரில் மூழ்கி வருகிறது. கோவிலுக்கு செல்லக் கூடிய சிறு பாலம் துண்டிக்கப்பட்டு கோவிலுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.
இந்தநிலையில் நொய்யல் ஆற்றில் நுரை சூழ்ந்து வெண்மையாக பனிமலை போல காணப்படுகிறது. அந்த பகுதி முழுக்க நுரையால் சூழ்ந்து உள்ள நிலையில், ஆற்றங்கரையில் உள்ள சாய, சலவை பட்டறைகள் சுத்திகரிக்காத சாய நீரை ஆற்று வெள்ளத்தில் கலப்பதால் தான் இது போல பெருமளவு நுரை உருவாவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக மங்கலம், வெள்ளஞ்செட்டி பாளையம், ஆண்டிபாளையம், பாரப்பாளையம் மற்றும் திருப்பூர் மாநகர பகுதிகளில் உள்ள சாய, சலவைப்பட்டறைகள் நேரடியாக குழாய்களை அமைத்து ஆற்றில் கழிவு நீரை கலப்பதாகவும், மழை வெள்ளம் ஏற்படும் காலங்களில் துளிகூட சுத்தி கரிக்காத சாயக்கழிவு நீரை அப்படியே திறந்து விடுவதால் தான் ஆள் உயரத்துக்கு நுரை ஏற்படுவதாகவும், மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சாய, சலவைப்பட்டறைகள் நேரடியாக ஆற்றுக்கு தண்ணீர் செல்வதற்கு அமைத்துள்ள குழாய்களை அகற்ற வேண்டும் எனவும், தொடர்ச்சியாக சாயக்கழிவு நீர் கலப்பதை கண்காணித்து தடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- கடந்த 128 நாட்களாக அவர்களுடைய சொந்த நிலத்தில் அமைதியாக தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகிறார்கள்
- டெல்டா மாவட்ட பகுதிகளில் ஏற்பட்ட பாதிப்புகளை உடனடியாக கணக்கெடுத்து விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள இழப்புகளுக்கு நிவாரணத்தை உடனே வழங்க வேண்டும்.
பல்லடம்:
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் உழவர் உழைப்பாளர் கட்சி தலைவர் செல்லமுத்து செய்தியாளர்களிடம் கூறியதாவது:- திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறில் தமிழ்நாடு அரசின் சிப்காட் நிறுவனம் சார்பில் முப்போகம் விளையக்கூடிய விவசாய நிலங்களை கையகப்படுத்தி, தொழிற்பேட்டை அமைப்பதற்கு முயற்சி எடுத்து வருகிறார்கள்.
இதனால் சிப்காட் திட்டத்தால் பாதிக்கப்பட உள்ள விவசாயிகள், பொதுமக்கள் இணைந்து திட்டத்தை ரத்து செய்யக்கோரி கடந்த 128 நாட்களாக அவர்களுடைய சொந்த நிலத்தில் அமைதியாக தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகிறார்கள். அமைதியாக அறவழியில் போராடிய விவசாயிகள் மீது தமிழக அரசு சார்பில் குண்டர் சட்டம் போடப்பட்டது.
இதற்கு விவசாய சங்கங்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின் கண்டனத்திற்கு பின்னர் அரசு குண்டர் சட்டத்தை திரும்ப பெற்றது. விவசாயிகள் கஞ்சா கடத்தவில்லை, சாராயம் விற்கவில்லை, அவர்களுடைய சொந்த நிலத்தை காப்பாற்ற தான் போராடுகிறார்கள். அவர்கள் மீது குண்டர் சட்டம் போடுவது எந்த விதத்தில் நியாயம் இல்லை. விவசாயிகளை நசுக்கும் எந்த அரசும் நன்றாக இருந்த தில்லை. இதனை தமிழக அரசு உணர்ந்துகொள்ள வேண்டும்.
மேலும் தமிழகத்தில் ஏராளமான பொட்டல் காடுகள் இருக்கையில் விவசாய நிலங்களில் சிப்காட் போன்ற திட்டங்களைக் கொண்டு வராமல், மாற்று வழிகளை தமிழக அரசு சிந்திக்க வேண்டும். இந்த பருவ மழை காரணமாக டெல்டா மாவட்ட பகுதிகளில் ஏற்பட்ட பாதிப்புகளை உடனடியாக கணக்கெடுத்து விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள இழப்புகளுக்கு நிவாரணத்தை உடனே வழங்க வேண்டும். குண்டர் சட்டம் போடும் வேகத்தை இழப்பீடு வழங்குவதிலும் தமிழக அரசு காட்டினால் மகிழ்ச்சியாக இருக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- திருப்பூர் பழைய பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்த போது வாலிபர் பள்ளி மாணவியிடம் தனது காதலை வெளிப்படுத்தி பேசிக்கொண்டிருந்தார்.
- பஸ் பயணிகள் வாலிபரை பிடித்து போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
திருப்பூர்:
திருப்பூர் வெள்ளியங்காடு பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவர் அரசு பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த ஜெகதீஸ்வரன் (வயது 18) என்பவர் தினமும் மாணவி பள்ளிக்கு செல்லும் போதும், பள்ளி முடிந்து வீடு திரும்பும் போதும் பின் தொடர்ந்து சென்று காதலிக்க வற்புறுத்தி டார்ச்சர் செய்துள்ளார்.
நேற்று வழக்கம்போல் பள்ளி முடிந்து வீட்டிற்கு செல்வதற்காக திருப்பூர் பழைய பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்த போது அந்த வாலிபர் பள்ளி மாணவியிடம் தனது காதலை வெளிப்படுத்தி பேசிக்கொண்டிருந்தார். ஆனால் அந்த மாணவி காதலை ஏற்க மறுத்ததோடு வாலிபரை திட்டியதாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரம் அடைந்த அந்த வாலிபர் பள்ளி மாணவியை பொது இடத்தில் வைத்து தாக்கியுள்ளார். இதனைப் பார்த்த பஸ் பயணிகள் அந்த வாலிபரை பிடித்து போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். தெற்கு போலீசார் வழக்கு பதிவு செய்து ஜெகதீஸ்வரனை கைது செய்தனர்.
- சாமளாபுரம் பகுதியில் நொய்யல் ஆற்றின் நடுவே 4 வாலிபர்கள் சிக்கி கொண்டதாக சூலூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கிடைத்தது.
- நொய்யல் ஆற்றில் தண்ணீர் அதிகமாக செல்வதால் பொதுமக்கள் யாரும் அப்பகுதிக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தி உள்ளனர்.
திருப்பூர்:
கோவை மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் கனமழையால் நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் திருப்பூர் மாவட்டம் சாமளாபுரம் பகுதியில் நொய்யல் ஆற்றின் நடுவே 4 வாலிபர்கள் சிக்கி கொண்டதாக சூலூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து அங்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் சுமார் 5மணி நேரம் போராடி கயிறு மூலம் 4 வாலிபர்களையும் பத்திரமாக மீட்டனர். அவர்கள் எதற்காக நொய்யல் ஆற்றுக்கு சென்றனர் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மழையின் காரணமாக நொய்யல் ஆற்றில் தண்ணீர் அதிகமாக செல்வதால் பொதுமக்கள் யாரும் அப்பகுதிக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தி உள்ளனர்.
- ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் காங்கயம் வட்ட கிளை தலைவர் சந்திரசேகரன் தலைமை தாங்கினார்.
- சங்க நிர்வாகிகள், வருவாய் கிராம ஊழியர்கள் உள்பட பலர் திரளாக கலந்து கொண்டனர்.
முத்தூர்:
திருப்பூர் மாவட்டம் காங்கயம் தாசில்தார் அலுவலகம் முன்பு தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் காங்கயம் வட்ட கிளை தலைவர் சந்திரசேகரன் தலைமை தாங்கினார்.
இதில் தமிழ்நாடு வருவாய் ஊழியர்களுக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்கி அரசு ஊழியர் பட்டியல் டி-பிரிவில் இணைக்க வேண்டும். 23 ஆண்டுகளாக பெற்று வந்த கருணை அடிப்படையிலான வாரிசுக்கு வேலை திரும்ப வழங்கிட வேண்டும் உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் சங்க நிர்வாகிகள், வருவாய் கிராம ஊழியர்கள் உள்பட பலர் திரளாக கலந்து கொண்டனர்.
- விவசாய தோட்டத்தில் 80 செம்மறி ஆடுகளை வளர்த்து, அதனை பராமரித்து வருகிறார்.
- 4 பேரையும் கைது செய்த போலீசார், கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
முத்தூர்:
திருப்பூர் மாவட்டம் காங்கயம் அருகே உள்ள பாப்பினி, பாலசமுத்திரம், முருங்ககாட்டுத்தோட்டம் பகுதியை சேர்ந்தவர் சிவகோகுல் (வயது 24). இவரது விவசாய தோட்டத்தில் 80 செம்மறி ஆடுகளை வளர்த்து, அதனை பராமரித்து வருகிறார். இந்த நிலையில் சம்பவத்தன்று ஆடுகளை மேய்ச்சல் முடித்து, மாலையில் அனைத்து ஆடுகளையும் தோட்டத்தில் உள்ள பட்டியில் அடைத்து விட்டு வீட்டுக்கு சென்று விட்டார்.
பின்னர் அடுத்த நாள் காலையில் வழக்கம் போல பட்டிக்கு சென்று பார்த்தவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. பட்டியில் அடைத்து வைக்கப்பட்டு இருந்த 3 செம்மறி ஆடுகள் மற்றும் 5 செம்மறி ஆட்டுக்குட்டிகள் என மொத்தம் 8 ஆடுகள் காணாமல் போயிருந்தது. உடனே அக்கம் பக்கத்தில் சென்று தேடிப்பார்த்தும், விசாரித்து பார்த்தும் எந்த தகவலும் கிடைக்கவில்லை.
மர்ம நபர்கள் ஆடுகளை திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து சிவகோகுல் காங்கயம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரை தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆடுகளை திருடிய நபர்களை தீவிரமாக தேடி வந்தனர். இந்தநிலையில் நேற்று (வியாழக்கிழமை) காங்கயம் அருகே உள்ள நத்தக்காடையூர் பகுதியில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை நடத்தினர். அதுசமயம் காரில் இருந்தவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர்.
இதனால் சந்தேகம் அடைந்த போலீசார், காரில் இருந்த 4 பேரையும் பிடித்து தீவிரமாக விசாரித்த போது அவர்கள் ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி பக்கம் உள்ள பச்சாபாளையம் கரடு பகுதியை சேர்ந்த அருண்குமார் (வயது 38), ஈரோடு, வெங்கியம்பாளையம் பகுதியை சேர்த்த விஜயகுமார் (35), ஈரோடு, கடைசி குப்பி வாய்க்கால் பகுதியை சேர்ந்த பேரறிவாளன் (24), ஹரிமுகேஷ் (21) என்பதும் இவர்கள் 4 பேரும் செம்மறி ஆடுகளை திருடியது தெரியவந்தது.
மேலும் இவர்கள் 4 பேரும் விவசாய, கூலி வேலைக்கு சென்று கொண்டு இதுபோல் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு வந்தது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து 4 பேரையும் கைது செய்த போலீசார், கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
- திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சிக்கு உட்பட்ட அய்யப்பன் கோவில் வீதியில் தனியார் நிறுவனம் உள்ளது.
- காயம் அடைந்து காணப்பட்டதால் பறக்க முடியாமல் மரத்தில் இருந்து தவறி கீழே விழுந்ததும் தெரிய வந்தது.
உடுமலை:
திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சிக்கு உட்பட்ட அய்யப்பன் கோவில் வீதியில் தனியார் நிறுவனம் உள்ளது.சம்பவத்தன்று அதன் அருகில் உள்ள மரத்தில் இருந்து அரிய வகை பறவை ஒன்று தவறி கீழே விழுந்து கத்தியது. இதையடுத்து அங்கிருந்த நிறுவன ஊழியர்கள் அதை மீட்டனர்.
அப்போது அது அரிய வகை ஆந்தை என்பதும் காயம் அடைந்து காணப்பட்டதால் பறக்க முடியாமல் மரத்தில் இருந்து தவறி கீழே விழுந்ததும் தெரிய வந்தது. அந்த ஆந்தை எங்கிருந்து வந்தது?, அது எப்படி காயம் அடைந்தது? அல்லது யாராவது வேட்டையாட முற்பட்டனரா? என்ற விவரம் தெரியவில்லை. பின்னர் இதுகுறித்து உடுமலை வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் அங்கு சென்ற வனத்துறையினர் அந்த அரிய வகை ஆந்தையை மீட்டுச் சென்றனர்.






