என் மலர்tooltip icon

    திருப்பூர்

    • திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் இன்று விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.
    • வெள்ளகோவில் பகுதியை சேர்ந்த 150 விவசாயிகள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் இன்று விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் வெள்ளகோவில் கடைமடைக்கு பி.ஏ.பி வாய்க்கால் தண்ணீர் முழுமையாக வந்தடைவதில்லை என பலமுறை போராட்டம் நடத்திய நிலையில் போராட்டங்களின் போது மாவட்ட நிர்வாகம் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை எனவும், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு காவல்துறை சம்மன் அனுப்பியிருப்பதாக கூறியதுடன், தங்கள் கோரிக்கைக்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்தி தர வேண்டும் என வெள்ளகோவில் பகுதியை சேர்ந்த 150 விவசாயிகள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. 

    • இவரது மனைவி சத்யா (வயது 35). பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.
    • சம்பவம் நடந்த இடத்தில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து செயின் பறிப்பு ஆசாமியை தேடி வருகின்றனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் ஜெய்நகர் 4-வது வீதியை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மனைவி சத்யா (வயது 35). பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து வீட்டிற்கு நடந்து வந்து கொண்டிருந்தார்.

    அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த ஆசாமி ஒருவர் சத்யா கழுத்தில் அணிந்திருந்த 1½ பவுன் தங்க சங்கிலியை திடீரென்று பறித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சத்யா திருடன், திருடன் என்று கூச்சலிட்டார். அதற்குள் அந்த ஆசாமி அங்கிருந்து தப்பி சென்றார். இது குறித்து நல்லூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சம்பவம் நடந்த இடத்தில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து செயின் பறிப்பு ஆசாமியை தேடி வருகின்றனர்.

    • கடந்த சில நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் சாரல் மழை, அவ்வப்போது பலத்த மழை பெய்து வருகிறது.
    • அருவியில் தண்ணீரின் சீற்றம் அதிகமாக இருந்ததால் அதில் குளிப்பதற்கு கோவில் நிர்வாகம் தடை விதித்தது.

    உடுமலை:

    உடுமலையை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் திருமூர்த்திமலை உள்ளது. இங்குள்ள அமணலிங்கேஸ்வரர் கோவிலில் பிரம்மா, சிவன், விஷ்ணு சுயம்புவாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்கள்.

    கோவிலின் அடிவாரத்தில் இருந்து சற்று உயரத்தில் பஞ்சலிங்க அருவி உள்ளது. அருவிக்கு மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உற்பத்தியாகின்ற ஆறுகள், ஓடைகள் நீர்வரத்தை அளித்து வருகிறது. கடந்த சில நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் சாரல் மழை, அவ்வப்போது பலத்த மழை பெய்து வருகிறது.

    இதன் காரணமாக பஞ்சலிங்க அருவிக்கு திடீரென காட்டாற்று வெள்ளம் ஆர்ப்பரித்துக் கொட்டுவதும் பின்பு குறைந்து விடுவதுமாக உள்ளது.இதனால் பஞ்சலிங்க அருவியில் குளிப்பதற்கு அவ்வப்போது தடை விதிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று அருவியில் குளித்து மகிழ்வதற்காக சுற்றுலா பயணிகள் ஆவலோடு திருமூர்த்தி மலைக்கு வந்தனர்.ஆனால் அருவியில் தண்ணீரின் சீற்றம் அதிகமாக இருந்ததால் அதில் குளிப்பதற்கு கோவில் நிர்வாகம் தடை விதித்தது.இதனால் சுற்றுலா பயணிகள், பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

    அதைத் தொடர்ந்து கோவில் முன்பு உள்ள பாலாற்றில் குளித்துவிட்டு மும்மூர்த்திகளை சாமி தரிசனம் செய்துவிட்டு திரும்பிச் சென்றனர். 

    • முகாமிற்கு கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமை தாங்குகிறார்.
    • பல்வேறு நோய்களுக்கு இலவசமாக மருத்துவ பரிசோதனை செய்து ஆலோசனை வழங்கி மருந்து, மாத்திரைகள் வழங்குகின்றனர்.

    முத்தூர்:

    முத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட இலவச சிறப்பு மருத்துவ முகாம் வள்ளியரச்சல் ஊராட்சிக்குட்பட்ட வ.கணபதிபாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நாளை (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடக்கிறது.முகாமிற்கு கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமை தாங்குகிறார்.

    முகாமை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைக்கிறார்.முகாமில் மாவட்ட சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் டாக்டர்.க.ஜெகதீஷ் குமார் அறிவுரையின்படி வெள்ளகோவில் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர்.ராஜலட்சுமி தலைமையில் முத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர்கள், செவிலியர்கள் குழுவினர் நோயாளிகள்,கிராம பொதுமக்களுக்கு பல்வேறு நோய்களுக்கு இலவசமாக மருத்துவ பரிசோதனை செய்து ஆலோசனை வழங்கி மருந்து, மாத்திரைகள் வழங்குகின்றனர்.

    முகாமில் மேல் சிகிச்சை, அறுவை சிகிச்சைக்கு தேர்ந்தெடுக்கப்படும் நோயாளிகள் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் உரிய சிகிச்சை பெற மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள்.

    • திருப்பூர் மாவட்டத்துக்கு உட்பட்ட 8 சட்டமன்ற தொகுதிகளிலும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
    • விண்ணப்பங்கள் அந்தந்த காலாண்டின் தொடக்கத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்படும்.

    திருப்பூர்:

    வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்தப்பணிகள் திருப்பூர் மாவட்டத்துக்கு உட்பட்ட 8 சட்டமன்ற தொகுதிகளிலும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக நாளை (சனிக்கிழமை), நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) மாவட்டத்துக்கு உட்பட்ட அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் செய்வது தொடர்பாக சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

    இந்த முகாம்களில் வருகிற ஜனவரி மாதம் 1-ந் தேதியன்று 18 வயது பூர்த்தியடையும் வாக்காளர்களும், ஏப்ரல் மாதம் 1-ந் தேதி, ஜூலை மாதம் 1-ந் தேதி, அக்டோபர் மாதம் 1-ந் தேதி 18 வயது பூர்த்தியடையும் வாக்காளர்களும் பெயர் சேர்ப்பதற்கான படிவம்-6 ஐ பூர்த்தி செய்து முன்னதாகவே கொடுக்கலாம். இந்த விண்ணப்பங்கள் அந்தந்த காலாண்டின் தொடக்கத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்படும்.

    சிறப்பு முகாம் நாளன்று வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க படிவம்-6, வெளிநாடுவாழ் வாக்காளரின் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்க படிவம் 6-ஏ, தன் விருப்பத்தின் அடிப்படையில் வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க படிவம்-6 பி, வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்க படிவம்-7, ஒரே சட்டமன்ற தொகுதிக்குள் முகவரி மாற்றம் செய்ய, ஒரு சட்டமன்ற தொகுதியில் இருந்து மற்றொரு சட்டமன்ற தொகுதிக்கு முகவரி மாற்றம் செய்ய மற்றும் வாக்காளர் பட்டியலில் உள்ள விவரங்களை, புகைப்படத்தை திருத்தம் செய்ய படிவம்-8 விண்ணப்பிக்க வேண்டும்.பொதுமக்கள் https://voters.eci.gov.in என்ற இணையதளம் மூலமாகவும், Voter Helpline App என்ற செல்போன் செயலி மூலமாகவும் விண்ணப்பிக்கலாம்.இந்த தகவலை திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.

    • பல்வேறு துறைகளின் சார்பில் அமைக்கப்பட்ட கண்காட்சி அரங்குகளை பார்வையிட்டார்.
    • ராம்மோகன், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

     அவிநாசி:

    ]அவினாசி துலுக்கமுத்தூர் கிராமத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க வளாகத்தில் வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் சார்பில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது. முகாமுக்கு கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமை தாங்கினார்.

    சமூகநலத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்டம், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பணிபுரியும் அலுவலர்கள் துறையின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்தும், கிராமங்களுக்கு நேரடியாக சென்று கள ஆய்வு செய்து தீர்வு காண தனிக்கவனம் செலுத்த வேண்டும். கடைக்கோடி கிராமம் வரை அரசின் திட்டங்கள் சென்றுசேர அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும் என்று அதிகாரிகளுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.

    முகாமில் இலவச வீட்டுமனைப்பட்டாக்கள், இணையவழி இ-பட்டாக்கள், முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு தாட்கோ சார்பில் கடனுதவி, விலையில்லா சலவைப்பெட்டிகள், தையல் எந்திரங்கள் என மொத்தம் 160 பயனாளிகளுக்கு ரூ.87 லட்சத்து 13 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.18 வயது நிரம்பிய இளம் வாக்காளர்களை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்புக்கான விழிப்புணர்வு துண்டு பிரசுரத்தை கலெக்டர் வழங்கினார். பின்னர் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். பல்வேறு துறைகளின் சார்பில் அமைக்கப்பட்ட கண்காட்சி அரங்குகளை பார்வையிட்டார்.

    முகாமில் திருப்பூர் ஆர்.டி.ஓ. (பொறுப்பு) ராம்குமார், வேளாண்மை இணை இயக்குனர் மாரியப்பன், மகளிர் திட்டம் திட்ட இயக்குனர் வரலட்சுமி, கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் திருக்குமரன், சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டர் செல்வி, தாட்கோ மாவட்ட மேலாளர் ரஞ்சித்குமார், சமூக நல அதிகாரி ரஞ்சிதாதேவி, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அதிகாரி குமாரராஜா, அவினாசி தாசில்தார் ராம்மோகன், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

    • 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் முகாமில் பங்கேற்று கல்விக்கடன் கேட்டு உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்தனர்.
    • ஜெய்பீம், மாவட்ட முன்னோடி வங்கி அதிகாரி ரவி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

    திருப்பூர்:

    மாணவர்கள் பயன்பெறும் வகையில் கல்லூரி படிப்புக்கான கல்விக்கடன் சிறப்பு முகாம் திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. முகாமை மாவட்ட முன்னோடி வங்கி மற்றும் மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்தது.முகாமில் கனரா வங்கி, பாரத ஸ்டேட் வங்கி, யூனியன் வங்கி, இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, பாங்க் ஆப் பரோடா உள்ளிட்ட 22 வங்கிகள் பங்கேற்றன.

    300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் முகாமில் பங்கேற்று கல்விக்கடன் கேட்டு உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்தனர். நடப்பு கல்வியாண்டில் 1,500-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு ரூ.64 கோடி கல்விக்கடன் வழங்கப்பட்டுள்ளது.

    சாலையோர வியாபாரிகளுக்கான விண்ணப்பங்களை விரைந்து பரிசீலனை செய்து கடன் வழங்குமாறு வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கல்விக்கடன் கேட்டு முகாமில் பெறப்பட்ட அனைத்து விண்ணப்பங்களும் பரிசீலிக்கப்பட்டு விரைந்து கல்விக்கடன் வழங்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.முகாமில் மாவட்ட வருவாய் அதிகாரி ஜெய்பீம், மாவட்ட முன்னோடி வங்கி அதிகாரி ரவி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

    • திருப்பூர் மாவட்டத்தில் வருகிற நாடாளுமன்ற தேர்தலில், மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்படுகிறது.
    • மொத்தம் 4,500 பிரிண்டிங் ரோல்கள் அடங்கிய அட்டைப்பெட்டிகள் லாரிகள் மூலம் வந்தது.

     திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டத்தில் வருகிற நாடாளுமன்ற தேர்தலில், மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்படுகிறது. அந்த எந்திரத்தில் யாருக்கு வாக்களித்தோம் என்பதை வாக்காளர்கள் அறியும் வகையில் விவிபேட் எந்திரங்கள் பயன்படுத்தப்படுகிறது.

    விவிபேட் எந்திரங்களில் பயன்படுத்தக்கூடிய பிரிண்டிங் ரோல்கள் திருப்பூர் மாவட்டத்துக்கு வந்து சேர்ந்தது. மொத்தம் 4,500 பிரிண்டிங் ரோல்கள் அடங்கிய அட்டைப்பெட்டிகள் லாரிகள் மூலம் வந்தது.

    அவற்றை திருப்பூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள வாக்குப்பதிவு எந்திரங்கள் இருப்பு வைக்கும் ஸ்ட்ராங் அறையில் பாதுகாப்புடன் வைக்கப்பட்டன.

    • வரும் நாடாளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் புதிய நீதிக்கட்சி அங்கம் வகிக்கும்.
    • பிரதமர் யார் என்று அறிவிக்கும் சூழல் ஏற்படும் போது அந்த கூட்டணி காணாமல் போய்விடும்.

     திருப்பூர்:

    புதிய நீதிக்கட்சி நிறுவனத்தலைவர் ஏ.சி.சண்முகம் திருப்பூரில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    வரும் நாடாளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் புதிய நீதிக்கட்சி அங்கம் வகிக்கும். அந்த கூட்டணியுடன் இணைந்து தேர்தலில் போட்டியிடும். 5 மாநில சட்டமன்ற தேர்தல் வந்த உடன் இந்தியா கூட்டணியை கடந்த 3 மாதங்களாக காணவில்லை.

    5 மாநில தேர்தல்களில் பா.ஜனதா 3 மாநிலங்களை கைப்பற்றும். ஏற்கனவே ஆட்சியில் உள்ள மாநிலத்தை காங்கிரஸ் தக்க வைத்துக் கொள்ளுமா என்பது தெரியாது. அதேபோல் வரும் நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணியின் பிரதமர் யார் என்று அவர்களால் சொல்ல முடியாது.

    பிரதமர் யார் என்று அறிவிக்கும் சூழல் ஏற்படும் போது அந்த கூட்டணி காணாமல் போய்விடும். ஆனால் தேசிய ஜனநாயக கூட்டணியை பொறுத்தவரை பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மீண்டும் பா.ஜனதா ஆட்சி அமையும். தமிழகத்திலும் 20-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் பா.ஜனதா. கூட்டணி வெற்றி பெறும். பிரதமர் மோடியை தவிர நல்ல தலைவரை இந்தியா கூட்டணி மற்றும் எந்த கட்சியாலும் காட்ட முடியாது. தமிழகத்தில் யார் பிரதமர் என்று வாக்கு கேட்பார்கள் என்பதும் கேள்விக்குறிதான். இதுவே பிரதமராக மோடி 3-வது முறையாக பதவியேற்க காரணமாக அமையும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • முதல் நாளான நேற்று நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ஏ.வி.பி. கல்வி குழுமங்களின் தலைவர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார்.
    • சி.பி.எஸ்.இ. பள்ளி முதல்வர் பிரமோதினி மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் ஏ.வி.பி. கல்வி குழுமத்தில் படிக்கும் 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவ-மாணவிகள் பயனடையும் நோக்கில் உங்கள் கனவுகளை தேடி கண்டடையுங்கள் என்ற தலைப்பில் சிறப்பு உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி காந்திநகர் ஏ.வி.பி. டிரஸ்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி சார்பில் பள்ளி கலையரங்கில் 2 நாட்கள் நடைபெறுகிறது. முதல் நாளான நேற்று நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ஏ.வி.பி. கல்வி குழுமங்களின் தலைவர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார்.

    பள்ளி அறக்கட்டளை பொருளாளர் லதா கார்த்திகேயன் முன்னிலை வகித்தார். பள்ளி முதல்வர் டயானா வரவேற்றார். இதில் சென்னை ஐ.ஐ.டி.யை சேர்ந்த பகவதி, கோவை எஸ்.என்.எஸ். கலை அறிவியல் கல்லூரியை சேர்ந்த ஞானசேகரன் மற்றும் கோவையை சேர்ந்த அஸ்வின் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு பேசினார்கள். நிகழ்ச்சியில் முதன்மை விருந்தினராக கலந்து கொண்ட இஸ்ரோ விஞ்ஞானி பி.ஹெச்.எம்.தாருகேஷா நிருபர்களிடம் கூறியதாவது:-

    சந்திரயான்-3 வெற்றிக்குப் பின்னர் ஒட்டுமொத்த உலகத்தின் பார்வையும் இந்தியாவின் பக்கம் திரும்பி உள்ளது. அறிவியல் மற்றும் அதன் மூலம் மாணவர்களுக்கு ஏற்படும் நன்மையை பற்றியும், இந்த உலகத்திற்கு விஞ்ஞானிகளின் அவசியத்தை பற்றியும், இந்தியர்கள் ஏன் விஞ்ஞானி ஆக வேண்டும் என்பதை பற்றி பேச விரும்புகிறோம். ஆர்வமும் சவால்களும் நிறைந்த பல படிப்புகள் உள்ளன. அதில் ஒன்று தான் விண்வெளி ஆராய்ச்சி பொறியாளர் அல்லது விஞ்ஞானிக்கான படிப்பு.

    இந்தியாவின் லட்சிய சந்திர பயணமான சந்திரயான்-3 கடந்த ஆகஸ்டு மாதம் 23-ந்தேதி நிலவின் மேற்பரப்பில் வெற்றிகரமாக தரையிறங்கியது. இது நாட்டின் விண்வெளித் திட்டத்திற்கான ஒரு மகத்தான சாதனையாகும். இந்தியாவின் முதல் மனித விண்வெளிப் பயணமான ககன்யான் திட்டம். இந்திய விண்வெளி வீரர்களை விண்வெளிக்கு அனுப்பும் முதல் உள்நாட்டுப் பணி என்பதால் ககன்யான் முக்கியத்துவம் வாய்ந்தது. இது வெற்றி பெற்றால், விண்வெளிக்கு மனிதனை அனுப்பிய நான்காவது நாடு என்ற பெருமையை இந்தியா பெறும்.

    ககன்யானின் வெற்றி விண்வெளி பயணங்களில் இன்னும் பல சோதனைகளுக்கு வழிவகுக்கும். இது தனது சொந்த விண்வெளி நிலையத்தை அமைக்கும் இந்தியாவின் கனவுக்கும் ஒரு பூரணம் கொடுக்கும். இந்திய விண்கலத்தின் மூலம் பூமியின் தாழ் வட்டப்பாதைக்கு மனிதர்களை அனுப்பி, அவர்களை பாதுகாப்பாக மீண்டும் பூமிக்கு அழைத்து வருவது தான் இத்திட்டத்தின் நோக்கம் ஆகும். இந்த விண்கலத்தில் 3 பேர் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதற்கான சோதனை ஓட்டங்கள் நடைபெற்று வருகின்றன.ககன்யான் என்பது முழுமையான தன்னாட்சி கொண்ட 3.7 டன் எடையுள்ள விண்கலம் ஆகும். இதில் மூன்று பேர் சுற்றுப்பாதைக்கு சென்று புவிக்கு திரும்பக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    இதில் திருமுருகன்பூண்டி ஏ.வி.பி. பள்ளி முதல்வர் பிரியா ராஜா, காந்திநகர் ஏ.வி.பி. சி.பி.எஸ்.இ. பள்ளி முதல்வர் பிரமோதினி மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    • திருப்பூர் மாவட்ட சுற்றுலாத்துறை அதிகாரியாக இருந்த ஆனந்தன் கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
    • மாவட்டத்தின் சுற்றுலா வளர்ச்சிக்கு பல்வேறு திட்டங்களை மேற்கொண்டார்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்ட சுற்றுலாத்துறை அதிகாரியாக இருந்த ஆனந்தன் கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக திருப்பூர் மாவட்ட சுற்றுலாத்துறை அதிகாரியாக அரவிந்த்குமார் திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள அலுவலக அறையில் பொறுப்பேற்றுக்கொண்டார்.

    இவர் இதற்கு முன் மயிலாடுதுறை மற்றும் நாகப்பட்டினம் மாவட்டத்தை உள்ளடக்கிய பூம்புகார் சுற்றுலா அதிகாரியாக இருந்தார். கோவை, திருப்பூர் மற்றும் நீலகிரி மாவட்ட சுற்றுலா அதிகாரியாக ஏற்கனவே பணியாற்றியுள்ளார். திருப்பூர் மாவட்ட சுற்றுலா அதிகாரியாக கூடுதல் பொறுப்பு வகித்தபோது, மாவட்டத்தின் சுற்றுலா வளர்ச்சிக்கு பல்வேறு திட்டங்களை மேற்கொண்டார்.

    திருப்பூர் மாவட்ட சுற்றுலாத்துறை அதிகாரி அரவிந்த்குமார் கூறும்போது, 'ஆண்டிப்பாளையத்தில் சுற்றுலா வளர்ச்சி பணிகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. மாவட்டத்தின் முதன்மை சுற்றுலா தலங்களாக உள்ள திருமூர்த்தி மலை பஞ்சலிங்க அருவி, அமணலிங்கேஸ்வரர் கோவில், திருமூர்த்தி அணை ஆகியவற்றின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். மேலும் சுற்றுலா தொழில் ஆபரேட்டர்கள், சுற்றுலா வழிகாட்டிகளுக்கு சுற்றுலா தொழில் மூலம் வாழ்வாதாரம் பெருக்குவதற்கு உரிய அறிவுரைகள் வழங்க கூட்டம் நடத்தப்படும்' என்றார்.

    • பசுமைக்குடிலின் கட்டுமானத்துக்குள் கிளிப்புகள் ஏதேனும் இருந்தால் அதை மாற்ற வேண்டும்.
    • வாழைத்தார்களை முறையாக மூடி வைக்க வேண்டும்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    வடகிழக்கு பருவமழை மற்றும் பலத்த காற்றில் இருந்து தோட்டக்கலை பயிர்களை காக்க பசுமைக்குடிலின்அடிபாகத்தை பலமாக நிலத்துடன் இணைப்பு கம்பிகளால் இணைக்க வேண்டும்.பசுமைக்குடிலின் கதவுகள், ஜன்னல்கள் பத்திரமாக மூடி உள்பகுதியில் காற்று புகாதவாறு பாதுகாக்க வேண்டும். அருகில் மரங்கள் இருந்தால் அதன் கிளைகளை அகற்ற வேண்டும். பசுமைக்குடிலின் கட்டுமானத்துக்குள் கிளிப்புகள் ஏதேனும் இருந்தால் அதை மாற்ற வேண்டும்.

    நிழல் வலைக்குடிலில் கிழிந்து போன நிழல்வலைகளை தைத்து சரி செய்ய வேண்டும். நிழல் வலைக்குடிலின் அடிப்பாகம் பலமாக நிலத்துடன் இணைப்புகம்பிகளால் இணைக்கப்பட்டுள்ளதை உறுதி செய்ய வேண்டும். மா, பலா, முந்திரி, கொய்யா, எலுமிச்சை போன்ற பல்லாண்டு பயிர்களில் காய்ந்த மற்றும் பட்டுப்போன கிளைகளை அகற்ற வேண்டும். நல்ல காற்றோட்டம் அமையும் வகையில் கிளைகளை கவாத்து செய்வதுடன், மரத்தின் அடிப்பகுதியில் உள்ள மண்ணை அனைத்து தண்டுப்பகுதியில் மண்ணை குவித்து வைக்க வேண்டும்.

    தோட்டத்தில் தேவையான வடிகால் வசதி செய்ய வேண்டும். நோய்தடுப்பு மருந்துகள் தூர்ப்பகுதியில் நனையும்படி தெளிக்க வேண்டும். இளம் செடிகள் காற்றில் பாதிக்காத வகையில் தாங்கு குச்சிகள் கொண்டு கட்ட வேண்டும். கனமழை காற்று முடிந்தவுடன் மரங்களின் பாதிப்பு இருந்தால் உடனடியாக வேர்பகுதியை சுற்றிமண் அனைக்க வேண்டும். பாதிக்கப்பட்ட கிளைகளை அகற்றி, மரங்களுக்கு தேவையான தொழு உரம் இட வேண்டும். நோய் தடுப்பு முறைகளை பின்பற்றுவது அவசியம்.

    வாழை காற்றால் பாதிப்பு ஏற்படும் பகுதிகளில் கீழ்மட்ட இலைகளை அகற்றிவிட்டு மரத்தின் அடியில் மண் அனைக்க வேண்டும். சவுக்கு அல்லது யூகலிப்டஸ் மர கம்புகளை ஊன்று கோலாக பயன்படுத்த வேண்டும். மரங்களை சுற்றி சுத்தப்படுத்தி நல்ல வடிகால் வசதி அமைக்க வேண்டும். வாழைத்தார்களை முறையாக மூடி வைக்க வேண்டும். 75 சதவீதத்துக்கு மேல் முதிர்ந்ததார்களை அறுவடை செய்ய வேண்டும்.

    தோட்டக்கலை பயிர்களான வாழை, மரவள்ளி, வெங்காயம், மிளகாய்,தக்காளி மற்றும் கொத்தமல்லி போன்ற பயிர்களுக்கு உரியகாலத்தில் பயிர்காப்பீடு செய்ய வேண்டும். அனைத்து வயல்களிலும் அதிக நீர் தேங்காத வகையில் உரிய வடிகால் வசதி செய்ய வேண்டும். நீர்பாசனம் மற்றும் உரமிடுதல் ஆகியவற்றை தற்காலிகமாக நிறுத்த வேண்டும். காற்றால் ஏற்படும் சேதத்தை தவிர்க்க காற்று வீசும் திசைக்கு எதிர்திசையில் குச்சிகளால்முட்டுக்கொடுத்து புதிதாக நடவு செய்த செடிகள் சாயாமல் பாதுகாக்க வேண்டும்.

    மேலும் விவரங்களுக்கு வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர், தோட்டக்கலை அலுவலர், உதவி தோட்டக்கலை அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×