search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வாக்காளர் பெயர் சேர்ப்பு சிறப்பு முகாம் - 2 நாட்கள் நடக்கிறது
    X

    கோப்புபடம். 

    வாக்காளர் பெயர் சேர்ப்பு சிறப்பு முகாம் - 2 நாட்கள் நடக்கிறது

    • திருப்பூர் மாவட்டத்துக்கு உட்பட்ட 8 சட்டமன்ற தொகுதிகளிலும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
    • விண்ணப்பங்கள் அந்தந்த காலாண்டின் தொடக்கத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்படும்.

    திருப்பூர்:

    வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்தப்பணிகள் திருப்பூர் மாவட்டத்துக்கு உட்பட்ட 8 சட்டமன்ற தொகுதிகளிலும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக நாளை (சனிக்கிழமை), நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) மாவட்டத்துக்கு உட்பட்ட அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் செய்வது தொடர்பாக சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

    இந்த முகாம்களில் வருகிற ஜனவரி மாதம் 1-ந் தேதியன்று 18 வயது பூர்த்தியடையும் வாக்காளர்களும், ஏப்ரல் மாதம் 1-ந் தேதி, ஜூலை மாதம் 1-ந் தேதி, அக்டோபர் மாதம் 1-ந் தேதி 18 வயது பூர்த்தியடையும் வாக்காளர்களும் பெயர் சேர்ப்பதற்கான படிவம்-6 ஐ பூர்த்தி செய்து முன்னதாகவே கொடுக்கலாம். இந்த விண்ணப்பங்கள் அந்தந்த காலாண்டின் தொடக்கத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்படும்.

    சிறப்பு முகாம் நாளன்று வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க படிவம்-6, வெளிநாடுவாழ் வாக்காளரின் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்க படிவம் 6-ஏ, தன் விருப்பத்தின் அடிப்படையில் வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க படிவம்-6 பி, வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்க படிவம்-7, ஒரே சட்டமன்ற தொகுதிக்குள் முகவரி மாற்றம் செய்ய, ஒரு சட்டமன்ற தொகுதியில் இருந்து மற்றொரு சட்டமன்ற தொகுதிக்கு முகவரி மாற்றம் செய்ய மற்றும் வாக்காளர் பட்டியலில் உள்ள விவரங்களை, புகைப்படத்தை திருத்தம் செய்ய படிவம்-8 விண்ணப்பிக்க வேண்டும்.பொதுமக்கள் https://voters.eci.gov.in என்ற இணையதளம் மூலமாகவும், Voter Helpline App என்ற செல்போன் செயலி மூலமாகவும் விண்ணப்பிக்கலாம்.இந்த தகவலை திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×